Pages

Monday, April 30, 2018

கிறுக்கல்கள் - 195





எப்படி சந்தோஷமா இருக்கறது?

என்ன கிடைக்குதோ அதை வெச்சுக்கொண்டு திருப்தியா இருக்க கத்துக்கொள்வதன் மூலம்.

அப்படின்னா ஒத்தர் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாதா?

படலாமே! நான் ஒரு முறை பிரசவ வார்ட்ல சந்திச்ச ஆசாமி மாதிரி மனப்பாங்கு இருந்தா ஆசைப்படலாம். அவர்கிட்ட தாதி சொன்னாங்க: "நீங்க பையனுக்கு ஆசைப்பட்டீங்க. ஆனா பெண் குழந்தை பிறந்திருக்கு.”

இவர் சொன்னார் "ஓ பரவாயில்ல. ஆண் குழந்தை பிறக்காட்டா பெண் குழந்தை பிறக்கட்டும்ன்னு எதிர் பார்த்தேன்!”

Monday, April 23, 2018

அந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை




சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறார் ஹாரீதர். சக்தி அற்றவனானால் பாத்திரத்தில் எள்ளை போட்டு இன்னொரு பாத்திரத்தில் செய்யலாம். ஆனால் மண் பாத்திரம் கூடாது. நிஷித்த காலமானாலும் அரிசி கலந்த ஜலத்தால் செய்யலாம்.
தேவர்களும் பித்ருக்களும் இந்த ஜல அஞ்சலியை விரும்புகிறார்கள். அதிகாரியாக உள்ளவர்கள் இதை செய்யாவிட்டால் நிராசையுடன் திரும்புகிறார்கள். இவர்களது சாபங்களுக்கு பாத்திரமாவான் எனக்கருத்து.
தேவ பூஜை
பூஜை செய்ய சா¢யான காலம் அவரவர் சாகையில் சொல்லப்பட்ட நித்ய கர்மாக்களை செய்து
அக்னிஹோத்ரம் முடித்த காலம். அதாவது ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், ப்ரஹ்ம யக்ஞம், ஸூர்ய நமஸ்காரம் முடித்த பிறகு எங்கிறார் ஹாரீதர்.
விக்ஞானேஸ்வரர் மாத்யான்ஹிகத்தில் தர்ப்பணம் முடித்து, சந்தனம் புஷ்பம் அக்ஷதை ஆகியனவற்றை சேகரித்துக்கொண்டு அவரவர் பக்திக்கு தகுந்தபடி ப்ரஹ்மா விஷ்ணு சங்கரன் இவர்களுள் ஒருவரை வேத மந்திரங்களாலும் நான்காம் வேற்றுமையுடன் நம: நம: என்ற சப்தத்துடன் ஆஸனம் முதலிய உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும் என்கிறார். ஆகவே காலையிலோ மாத்யான்ஹிக வேளையிலோ பூஜை செய்யலாம். ஸூர்யனிடத்தில் இருந்து ஆரோக்கியத்தையும் அக்னியிடமிருந்து செல்வத்தையும் சங்கரனிடமிருந்து ஞானத்தையும் விஷ்ணுவிடமிருந்து மோக்ஷத்தையும் வேண்டி பெற வேண்டும். தன் விருப்பப்படி ஒருவரையோ பலரையோ வைத்து பூஜை செய்யலாம்.

Sunday, April 22, 2018

திருமணம்




விஷயம் தெரிஞ்சுக்கறதுல பெரிய பிரச்சினை இருக்கு! மாறா நடக்கறப்ப கஷ்டமா இருக்கும். சில மாதங்களாவே கல்யாணம் கார்த்தின்னு போறதை தவிர்த்துட்டேன். அங்க நடக்கற விஷயங்கள் சங்கடமா இருக்கு! இன்னைக்கு காலை ஒரு திருமணம். வரலைன்னுதான் சொன்னேன். வூட்டம்மிணி அதெல்லாம் கெடயாது; போய்த்தான் ஆகணும்ன்னு பிடிவாதம். முன்னேயாவது கொஞ்சம் மறுக்கறது கஷ்டம்; இப்பத்தான் நல்ல எஸ்க்யூஸ் இருக்கேன்னு சொல்லியும் கேட்கலை.

முன்ன்ன்ன்னே ப்ரொசீஜர் சொல்லவும் நடத்தி வைக்கவும்தான் வைதீகர். மாப்பிள்ளைக்கே மந்திரம் தெரியும். இப்பல்லாம் அதுக்கு சான்ஸே இல்லை என்கிறதால வாத்தியார் சொல்லி வெச்சு கர்மா நடக்கிறது. 30- 40 வருஷம் முன்னேயாவது பரவாயில்லை. 'மம' ன்னு சொல்லிக்கோங்கோ ன்னு சொல்வார். இப்பல்லாம் அதுவும் இல்லை. வாத்தியாரே 'மம தர்ம பத்னியா ஸஹ' ன்னு சொல்லிடறார். அவரா செய்யறார்? இல்லை அவரோட தர்ம பத்னி இன்வால்வ் ஆறாங்களா? எல்லாம் அனர்த்தமா போயிண்டு இருக்கு!

இப்ப லேடஸ்ட் புரோகிதர் மைக்ல மந்திரம் சொல்லறது! ஒரு மந்திரத்தை உத்து கேட்டா மனசில அது ரிபீட் ஆகாம இராது. திருமண நேரத்தில இப்படி பலர் சொல்லறது அபத்தம் இல்லையா?
விழாவில வாத்தியம் வாசிக்கறதுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்ன்னு தோணறது! கிட்டே இருக்கறவங்க காதுல மட்டும் விழட்டும்; மாப்பிள்ளை மட்டும் திருப்பிச்சொல்லட்டும். மத்தவங்களுக்கு வாத்திய சப்தத்திலே காதுல விழாம இருக்கட்டும்! மைக்கிலே சொல்லறப்ப இது எல்லாம் வ்யக்தமா போச்சு. போதாததுக்கு மந்திரங்கள் சொல்லும் போது அரங்கத்தில இருந்த நாதஸ்வர க்ரூப்பை சைகை காட்டி நிறுத்துன்னு சொல்லிட்டாங்க!

எந்த ஹோமத்துக்கும் ஹோமகுண்டத்துக்கும் பூமிக்கு சம்பந்தம் இருக்கணும். அப்படி இல்லாம ஹோமம் செய்யறதுல பலன் இல்லை. இப்ப கட்டுற பல கல்யாண மண்டபங்களில கீழே டைனிங். முதல் மாடிக்கு கார் போறா மாதிரி ராம்ப் போட்டு அங்கேதான் கல்யாணம். இதுல பூமி சம்பந்தம் போயிடும்.

முதன் முதல்ல சுமார் 20 வருஷங்கள் முன்னே ஒரு இனிஷியேடிவ் எடுத்து 'தாலி கட்டின உடனே எல்லாரும் கவரைத்தூக்கிண்டு கை குலக்க வர வேணாம். ஸப்தபதிதான் கல்யாணத்தை உறுதி செய்யறது. மாங்கல்ய தாரணம் இல்லே. ப்ரொசீஜர் முடியற வரைக்கும் காத்திருக்கவும். இவங்களே கீழே இறங்கி வருவாங்க'ன்னு சொல்ல ஏற்பாடு பண்ணினேன். அது நல்லா நடந்துது. ஆச்சரியமா அது எப்படி பரவித்துன்னே தெரியலை. என்னைப்போல இனும் சிலரும் யோசிச்சு இருக்கலாம். இப்பல்லாம் தவறாம அது போல அறிவிப்பு இருக்கு! இன்னைக்கு பொண்ணு பிள்ளைகள் கை குலுக்க வேணாம். அவா அப்பாக்கள்தானே செலவு செய்யறா? இவங்க தலையில் அட்சதையை போட்டுட்டு அவங்க கையில் கவரை கொடுங்கன்னு சொன்னாங்க! பரவாயில்லை.

Friday, April 20, 2018

ஆத்ம குணங்கள் -10






மங்கலம் பற்றிய பதிவில் கைகேயி பற்றி எழுதக்கேட்டிருந்தேன் இல்லையா? சகோதரி கீதா சாம்பசிவம் எழுதி அனுப்பி இருக்கிறார். அவருக்கு நம்  நன்றி!


தம்பி தி.வா. அவர்கள் ஆத்ம குணங்கள் என்னும் தன் பதிவில்  https://anmikam4dumbme.blogspot.in/2018/04/7.html   மங்களங்கள் என்னும் தலைப்பில் எழுதிய கீழ்க்கண்ட விஷயங்கள் தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. மங்களங்களைப் பற்றி எழுதியவர் கடைசியில் கைகேயி தசரதரை வழிக்குக் கொண்டுவரச் செய்தது குறித்தும் யாரையானும் எடுத்துக் காட்டும்படி சொல்லி இருந்தார். நமக்குத் தான் கையும், வாயும் சும்மா இருக்கிறது இல்லையே! அதிலும் ராமாயணம் என்றால் பாய்ஞ்சுண்டு போக மாட்டோமா! கம்பராமாயணத்தில் குறிப்புக்களைக் கண்டெடுத்தேன். இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எழுத முடியலை. இன்னிக்கு எப்படியானும் முடிச்சுடணும்னு உட்கார்ந்தேன்.

ராமனுக்குப் பட்டம் கட்டப் போகும் செய்தி தெரிந்த மந்தரை என்னும் கூனி ஏற்கெனவே ராமன் மேல் கோபம் கொண்டிருந்ததாகவும் கம்பர் சொல்கிறார்.  உண்டி வில்லால் ராமன் தன்னைத் தாக்கியதை நினைவு கூர்ந்ததாகவும் சொல்கிறார். 

"தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள்--வெகுளியின் மடித்த வாயினாள்;
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்துள் உள்ளுவாள்."

என்பது கம்பர் வாக்கு. இது வால்மீகியில் காணப்படாதது. எனினும் கூனிக்கு ராமனிடம் கோபம், பொறாமை இருந்தது என்னமோ உண்மை தானே. உடனே அவள் கைகேயியிடம் போய் ராமனுக்குப் பட்டாபிஷேஹம் என்னும் செய்தியைச் சொல்ல முதலில் மகிழ்ந்த கைகேயி அவளுக்குத் தன் பரிசாக ஒரு மணிமாலையைப் பரிசாக அளிக்கிறாள். 

"ஆய பேர் அன்பு என்னும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்."

இப்படிக் குணவதியாக இருந்த கைகேயி தான் மந்தரையின் சூழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனம் மாறுகிறாள். தசரதன் மேல் கோபம் கொண்டு கோபாக்ருஹம் சென்று தரையில் படுக்கிறாள். அதுவும் எப்படி! கிழிந்த உடையை உடுத்திக் கொள்கிறாள். தலையை விரித்துப் போட்டுக் கொள்கிறாள். (தம்பி முக்கியமாய் இதற்காகவே சொல்லி இருக்கிறார் என நம்புகிறேன்.) ஆபரணங்களை எல்லாம் கழட்டி மூலைக்கு ஒன்றாகத் தரையில் வாரி வீசுகிறாள். தரையில் படுத்துக் கொண்டு கோபத்துடன் பெருமூச்சு விடுகிறாள். இதைக் கம்பர் சொல்வது எப்படி எனில்

கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.1


விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.


தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3


நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4

கூனியை வெளியே அனுப்பிய கைகேயி அழகான சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்கள் தூவப்பட்டுப் படுத்திருந்தவள் இறங்கிக் கீழே விழுந்து கொண்டு தலையில் சூடி இருந்த பூக்களைப் பிய்த்து எறிந்து, இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசி,க் கால்களின் ஒலி எழுப்பும் சலங்கை ஒலிகளைக் கொண்டக் கிண்கிணிகள், மற்றும் கைவளையல்கள் ஆகியவற்றையும் கழற்றி எறிந்த்தோடு நிற்கவில்லையாம். நெற்றிச் சிந்தூரத்தையும் அழித்துக் கொண்டு தலையை விரித்துப் பரத்தித் தரையில் படும்படி படுத்துக் கொண்டு அழுத வண்ணம் அழகு, மங்கலம் அனைத்தையும் நீக்கிப் பின்னால் தனக்கு வரப்போகும் கைம்மைக் கோலத்தை முன் கூட்டியே மேற்கொண்டதாகக் கம்பர் சொல்கிறார்.

வால்மீகி சொல்லுவதென்ன எனில் விஷம் பொருந்திய அம்பால் தாக்கப்பட்ட கின்னரப் பெண்களைப் போல் கைகேயி கீழே விழுந்தாளாம். தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு தீர்மானித்தவளாக நிதானமாக மந்தரையிடம் அதை விளக்கி விட்டுத் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் அந்தக் காரியத்தைச் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கிய கைகேயி அப்போது கடும் விஷம் உள்ள பெண் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதைப் போல் காட்சி அளித்தாள் என்கிறார். 

தன் புருவங்களை நெரித்துக் கொண்டு கோபத்துடன், விம்மிக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் கிடந்தாளாம் கைகேயி. அவளால் கீழே வீசி எறியப்பட்ட ஆபரணங்களிலிருந்து கிளம்பிய ஒளி அந்த அறையின் அந்தகாரத்தில் நக்ஷத்திரங்களைப் போல் சுடர் விட்டதாம்.  தன் தலையை ஒற்றை முடிச்சாகப் போட்டுக்கொண்டு மண்ணால் நாசம் அடைந்த துணிகளை அணிந்து கொண்டு ஓர் இறந்த கின்னரப் பெண்ணைப் போல் காட்சி அளித்தாளாம்.

இதைப் படிக்கும்போதே தெரியவரும். தலையை விரித்துப் போட்டுக் கொள்ளுதல், பூக்களை ஒதுக்குதல், நெற்றித் திலகம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது, வளையல்களைப் போடாமல் இருப்பது, போன்றவை நம் நாட்டுப் பெண்களுக்கு ஏற்றது அல்ல என்பது. இது தான் அந்தக்குறிப்பிட்ட பதிவில் திரு தி.வா. சொல்ல நினைத்தது.

Thursday, April 19, 2018

ஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா





அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. பல பிரச்சினைகளின் மூல காரணம் ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டறதுதான் ரொம்பவும் அசாத்தியமாயிருக்கு.
தன் பொருளா இருந்தாலும் சரி, மத்தவங்க பொருளா இருந்தாலும் சரி அதுல பற்று வைக்கக்கூடாது. எது நமக்கு கிடைச்சு இருக்கோ அதை வைத்துக்கொண்டு சந்தோஷமா இருக்கணும். தனக்கோ தன்னை சார்ந்தவங்களுக்கோ பணக்குறைவு வசதிக்குறைவு அதனால கஷ்டம் - இதால எல்லாம் இது கிடைச்சா நல்லா இருக்குமே என்பது போல ஆசையை வளத்துக்கக்கூடாது. மத்தவங்ககிட்ட இருக்கற ஒரு பொருளைப்பாத்து இது அழகா இருக்கே, நல்லா இருக்கே இது போல எனக்கும் வேணும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.
ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து பயிற்சி பண்ணிக் கொண்டு போகும்போது கடேசில இந்த ஆசையின்மை, பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’ என்பது பூர்த்தியாக அநுபவத்தில வரும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்கிறது திருக்குறள்.
இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டா மட்டும் போறாது. அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரிச்சு விடணும்’ன்னு இன்னும் ஒருபடி மேலே போய்ட்டார் திருமூலர்:
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
இந்த குணங்கள் உசந்தது என்கிறதால தேவ குணம்ன்னு சொல்லலை. ஆத்ம குணம்ன்னே சொல்லி இருக்கு. அதனால இதை எல்லாம் கிடைக்கப்பண்ணிக்கொண்டால் ஆத்ம சொரூபத்தை அடைய ஹேதுவா ஆகும்; இதெல்லாம் ஆத்மாவுக்கு இயற்கையா அமைஞ்சு இருக்கு என்பது தெரியறது.

Wednesday, April 18, 2018

ஆத்ம குணங்கள் -8 - அகார்ப்பண்யம்





அகார்ப்பண்யம் ஏழாவது. '' போட்டா எதிர்மறைன்னு இப்ப தெரிஞ்சிருக்கும். கரெக்ட். கார்ப்பண்யம் இல்லாம இருக்கறது அகார்பண்யம். அது சரி, இது என்னது?
கிருபணனின் குணம் கார்ப்பண்யம். அப்படி இல்லாமலிருப்பது அகார்ப்பண்யம். கிருபணன் என்றால் லோபி, கருமி. லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம்.
ஏழ்மையில இருந்தாலும் சத்பாத்திரத்துக்கு சக்திக்கு ஏற்ற அளவில தானம் செய்யணும். ஒரு வேளை பகவான் நிறைய கொடுத்து இருந்தால் மனஸார வாரிக் கொடுக்கிற குணம் இருக்கணும்.
இந்த வார்த்தை பகவத் கீதையை படிச்சவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.
அர்ஜுனன் ரொம்பவும் மனம் தளர்ந்து போய் தேர்த்தட்டிலே உட்கார்ந்துகொண்டு, ‘சண்டை போட மாட்டேன் ’ ன்னு அழுதான். அப்ப அவனுக்கு ‘கார்ப்பண்ய தோஷம்’ ஏற்பட்டதா கீதையில் சொல்லியிருக்கு. அந்த இடத்தில் ‘தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய் விட்டவன்’ என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம். அகார்ப்பண்யம் என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது. என்ன கஷ்டம் வந்தாலும் தைரியமா இருக்கறது.
அடுத்து ஆத்ம விசாரம் செய்யறதும் அகார்பண்யம்தான். ஆயிரம் விஷயங்கள் உலக நடப்புக்கு இழுக்கறப்ப தைரியமா செய்யற விஷயம் இல்லையா? கொடுக்கப்பட்ட ஜன்மாவை வீணாக்காமல் ஜீவனுக்கு பல வழிகளிலேயும் நன்மை தேடறதும் அகார்பண்யமே.

Tuesday, April 17, 2018

ஆத்ம குணங்கள் - 7- மங்களம்





மங்களம் ஆறாவது.
அழுக்கில்லாத கிழியாத ஆடம்பரமில்லாத அவசியம் அணிய வேண்டிய ஆடை ஆபரணங்களை அணிதல்; நெற்றிக்கு திலகம் போன்றவற்றை இட்டுக்கொள்வது; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது, சுபமான சொற்களையே சொல்லுவது; சாத்திரங்களில் விதித்த சிறந்த ஆசாரங்களை கைக்கொள்ளுவது, துன்பம் வரும் வேளைகளிலும் 'ஐயோ, எழவு, சனியன்' போன்ற சொற்களை கூறாமல் 'சிவசிவ, நாராயணா, க்ருஷ்ண க்ருஷ்ண' போன்ற பகவன் நாமாக்களை கூறுவது; அநாவசியமாக கேசத்தை வளர்க்காமல் இருப்பது;பெண்கள் கேசத்தை முடிந்தே வைத்திருப்பது, வெகு நேரம் ஈர உடையுடன் இருப்பதை தவிர்ப்பது ஆகியன மங்களம்.
தொல்லைகாட்சிகளில் வெள்ளிக்கிழமை மாலைக்குன்னு சில காட்சிகள் சிறப்பாக காட்டப்படும். குறைந்த பக்ஷம் ஒரு அழுகை. 'உன்ன என்ன செய்யறேன் பாருடி' ன்னு ஆரம்பிச்சு பல வசவுகள் நிறைந்த காட்சிகளே நிறைய தென்படுகின்றன என்று சொல்கிறார்கள்!
நெற்றிக்கு இட்டுக்கொள்வது பட்டிக்காட்டுத்தனமாக ஆகிவிட்டது, பெண்கள் கூந்தலை வெட்டி விட்டுக்கொள்வது, முடிந்து கொள்ளாமல் விரித்துபோட்டுக்கொள்வது ஆகியன சர்வ சாதாரணமாகிக்கொண்டு இருக்கின்றன. உடை பற்றியோ கேட்கவே வேண்டாம். கிழிந்து போன ஜீன்ஸ்தான் மஹா ஸ்ரேஷ்டம்! ராமாயணத்தில் தசரதரை வழிக்குக்கொண்டு வர கைகேயி போடும் வேஷம் பற்றி படித்தால் எது அமங்கலம் என்று சுலபமாக புரிந்து கொள்ளலாம். யாரானா கோட் பண்ணுங்களேன்!

Monday, April 16, 2018

ஆத்ம குணங்கள் - 6 - அநாயாஸம்





அநாயாஸம் ஐந்தாவது.
ஆயாஸம் கேள்விப்பட்டு இருக்கலாம். சோர்வு. இப்படி சோர்வாகாமல் இருக்கறது அநாயாஸம். ஜஸ்ட் லைக் தட் ஒரு பெரிய காரியத்தை செய்தவர்களைப்பத்தி அநாயாஸமா செஞ்சுட்டான் என்பதுண்டு.
பலரும் பசி தாகம் பாராம கடுமையா உழைச்சு ஒரு விஷயத்தை முடிக்கறதை பெருமையா நினைக்கிறாங்க. அப்படி செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம். ஐடி துறையில ராப்பகலா வேலை செஞ்சு ஹார்ட் அட்டாக் வந்து டெஸ்கில சாஞ்ச கேஸ் பத்தி கேல்விப்பட்டு இருக்கேன். பொதுவா அப்படி செய்யக்கூடாதுன்னு எல்லாரும் ஒப்புக்கொண்டாலும் இன்னமும் நடக்கத்தான் நடக்கிறது! :(
சிலர் கடுமையான விரதங்கள் இருப்பாங்க. என்னதான் மயக்கம் போட்டாக்கூட விரதம்ன்னு சொல்லி சாப்பிடாம இருக்கறது, வேர்த்து விறு விறூக்க கை கால் சோர்ந்து போகும்படி வேலை செய்யறது, ஒரு காரியத்தை செய்ய தன் சக்திக்கு மீறி செலவு செய்யறது....
சாகிறது முன்னே எல்லாம் சுலபமான காரியமா இருந்தது. பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்பும் இருக்கத்தானே வேணும்? அப்படி இது ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பல்லாம் அப்படி இல்லே. உடனே 108 ஐ கூப்பிடு; ஊரிலேயே இருக்கற பிரபல காஸ்ட்லி ஆஸ்பத்திரிக்குப்போ; என்ன செலவானாலும் பரவாயில்லை டாக்டர்.
சில பல நடுத்தர வசதி உள்ள குடும்பங்கள் இதால சீரழிஞ்சதை கேள்விப்பட்டு இருக்கேன். சேவையா இருந்த மருத்துவத்துறை வணிகமாகி பல வருஷங்கள் ஆயாச்சு. இப்ப இருக்கற நிலையில இந்த 'என்ன செலவானாலும் பரவாயில்லை' ன்னு காதுல விழுந்துட்டா காசு இனிமே தேறாதுன்னு ஸ்பஷ்டமா தெரியற வரை இழுத்தடிக்க முடியும். இத்தோட நிறுத்திக்கறேன். சொல்ல வந்தது சக்திக்கு மீறி எதையும் செய்யாதே.
தனக்குன்னு மட்டும் இல்லை; பிறருக்கு மிகுந்த சிரமங்களை தரும் காரியங்களையும் செய்யலாகாது.

Friday, April 13, 2018

ஆத்ம குணங்கள் 5 - சௌசம்





நாலாவதா சௌசம். சரியா எழுத ஶௌசம். ஶுசியாக அதாவது சுத்தமாக இருத்தல். உடல் வாக்கு மனம் மூன்றுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் இல்லையா?
இதில் நாட்டமுள்ளவர்கள் அடிக்கடி குளிப்பார்கள். எனக்கு நாளுக்கு 3 முறை குளிக்க வேண்டி இருக்கிறது. உண்ணும் உணவில் தூய்மையை பார்க்க வேண்டும். அசுத்தமான உணவு, உண்ணத்தகாதன, தீட்டானது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் பல் துலக்குவது, ஜல மலம் கழித்த பின் சுத்தம் செய்து கொள்வது, சொல்லப்பட்ட நேரங்களில் ஆசமனம் செய்வது, வாய் கொப்பளிப்பது, வீட்டுக்குள் நுழையும் முன்பே கால்களை சுத்தம் செய்து கொள்வது, அநாசாரமான இடத்துக்கு போகாமல் இருப்பது போன்ற பலதும் புறத்தூய்மை.
நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுமே உண்மையானதாக இருக்க வேண்டும். மங்கலமானதாக இருக்க வேண்டும். கடும் சொற்களை சொல்லலாகாது. பிறரை திட்டக்கூடாது. எல்லோருக்கும் ப்ரியமானதையும் ஹிதமானதையுமே பேச வேண்டும்.
பிறருக்கு தீங்கை மனதாலும் நினையாதிருக்க வேண்டும். மனதாலும் பிறர் பொருளை அனுபவிக்கக்கூடாது. ஒரு பொருளை வாங்க நேர்ந்தால் அதற்கான விலையை கொடுத்துவிட வேண்டும். கடனாக வாங்குவதை குறித்த நேரத்தில் திருப்பிக்கொடுத்து விட வேண்டும். அக்கிரமமான வழியிலோ பிறரை ஏமாற்றியோ பணம் சம்பாதிக்கக்கூடாது. இன்று பரவலாக காணும் விளம்பரங்கள் என்ன செய்கின்றன?
பொதுக்காரியத்துக்காக வஸூல் செய்ததை உரிய கணக்குடன் வெளிப்படுத்த வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் தனக்கு பயன்படுத்தக்கூடாது.

Thursday, April 12, 2018

ஆத்ம குணங்கள் - 4 - அநஸூயா





மூணாவது அநஸூயா. பெண்மணி பேரா இருக்கு இல்லே?

அஸூயை இல்லாம இருக்கறது அநஸூயா. அஸுயை என்கிறது பொறாமை.
ஊர்ல ஒத்தர் இருக்கார். அவர் நிறைய நல்ல காரியங்களை செய்யறார். நம்மால அப்படி எல்லாம் செய்ய முடியலை அல்லது செய்ய மனசில்லை. இவன் பாட்டுக்கு நல்ல பேர் தட்டிகிட்டு போறானே? ன்னு மனசு சகிக்கறதில்லை! பொறாமைப்பட்டு "ஹும்! உள்ளுக்குள்ள கெட்ட மனசு. ஊர் பணத்தை கொள்ளை அடிச்சான். எல்லாத்தையும் மறைக்க இப்படி வேஷம் போடறான்' னு சொல்லிண்டு இருந்தா அது அஸூயை. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் ன்னு இவங்களைப்பத்தித்தான் நரிவெரூஉத் தலையார்  சொன்னாங்க.

நல்லது செய்தல் ஆற்றிர் ஆயினும்
அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமா ரதுவே”

அவரவர் செய்த நல்ல கர்மாவின் வாசனையில் நல்ல காரியங்கள் செய்கிறார்கள். இதை உணர்ந்து பாராட்டுவதுதான் அநஸூயா.
எங்கே யார் நல்ல காரியங்கள் செஞ்சாலும் ஆஹா ஆஹா நல்லதுன்னு நினைக்கணும்.

Wednesday, April 11, 2018

ஆத்ம குணங்கள் - 3 - க்ஷமா





க்ஷமா அல்லது ஶாந்தி என்கிறது அடுத்தது.
சமூக வலைத்தளங்களில அடிக்கடி பார்க்கலாம். யாரானா நம்மைப்பத்தி எதாவது சொன்னா நமக்கு சுர்ர்ர்ர்ன்னு கோவம் வருது; திருப்பித்திட்டறோம். இது கூட பரவாயில்லை. தான் சார்ந்திருக்கற / ஆதரிக்கற கட்சி பத்தி தலைவன் பத்தி ஏதாவது யாரான சொல்லிட்டாலும் கோவம் வருது. லபோ திபோன்னு அடிச்சுக்கறோம்! இதுல நமக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லே!
நம்மை யாரும் திட்டினாலோ அடித்தாலோ மத்த வழிகளில தீங்கு செய்தாலோ அவங்க மேல கோபப்படாம பொறுமையா இருக்கறதுதான் க்ஷமா. இவற்றுக்கு மனசாலும் உடலாலும் வாயாலும் எதிர்வினை ஆற்றாம இருக்கறதுதான் க்ஷமா.
இப்படி இல்லாம ஏதோ ஒரு வகையில் எதிர்வினை ஆற்றுவது சாதாரண மனித குணம்.
அது சரி! எப்படி இந்த மாதிரி பொறுமையா இருக்கிறதுன்னா...

புத்தர் கதைன்னு ஒண்ணு சொல்லுவாங்க. ஒத்தன் புத்தரை திட்டு திட்டுன்னு திட்டித்தீத்தானாம். புத்தர் பொறுமையா இருந்துட்டார். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு! மெதுவா ஏன் உங்களுக்கு கோவமே வரலைன்னு கேட்டான். புத்தர் சொன்னார்: தோ பார் நீ எனக்கு ஒரு பொருளை கொடுக்கறே. ஆயிரம் ரூபான்னு வெச்சிக்கோயேன். அதை நான் ஏத்துக்கலை; வேணாம்ன்னு சொல்லிட்டேன். அந்த பணம் யாருது?
இது என்ன கேள்வி? என்னுதுதான்.
அதேப்போலத்தான் நீ சொன்ன திட்டு எதையும் நா ஏத்துக்கலை!

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ் முது மொழி. இதைத்தான் கர்மா தியரின்னு சொல்றாங்க. நாம் எதோ செஞ்சோம்; அதுக்கு எதிர்வினையாத்தான் இப்ப நமக்கு எதிரா ஏதோ நடக்குது. எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்னு சொல்லுவாங்க இல்லையா? நாமத்தான் அம்பை போட்டோம். அது நம் மேலயே இப்ப பாயுது. அம்பை திட்டி இப்ப என்ன புண்ணியம்? இப்படி சரியா எடுத்துக்க பயிற்சி அவசியம். உணர்வு சார் நுண்ணறிவு பத்தி நான் எழுதினதை படிச்சு இருப்பீங்க. அதுதான் வேணும். என்ன படிக்கலையா? முதல்ல போய் படிங்க!

Tuesday, April 10, 2018

ஆத்ம குணம் - 2 - தயை





தயை எட்டு ஆத்ம குணங்களிலேயும் முக்கியமானதும் முதலாவதும். இது என்னன்னா துன்பப்படற மத்த உயிர்களைப்பாத்து இரக்கம் கொள்வது; ஐயோ பாவம்ன்னு வருந்தி துன்பம் தனக்கே வந்தாப்போல உணர்வது(empathy); முடிஞ்ச வரை உதவி செய்வது; அவங்களுக்கு ஹிதமா பேசறது; அவங்க நல்லா இருக்கணும்ன்னு நினைக்கறது. துன்பம் நீங்கினப்ப சந்தோஷப்படறது.

இது போல... புரிகிறதில்லையா?

இது மத்த ஜனங்களுக்குத்தான்னு இல்லை. மத்த எல்லா உயிரினங்களுக்கும்தான். இன்னும் பார்க்கப்போனா உயிரில்லாததுக்கும்தான்

மனித நேயம் என்கிறதை பெரிசா சிலர் சொல்லிகிட்டு இருக்காங்க. இது அதையும் தாண்டினது என்கிறதை உணரணும்

இந்த தயைக்கு ப்ரீ கண்டிஷன்ஸ் இல்லை. என்னதான் கெட்டவன்னு தெரிஞ்சாலும் கூட தயை இருக்கவே இருக்கும்! இங்கேதான் மத்தவங்களிலிருந்து இந்த சாதகர் வித்தியாசப்படறார். சாதாரணமா நமக்கு மத்ததுகிட்ட இருந்து துன்பம் வராத வரைக்கும் இந்த தயையை காட்டிடலாம். ஆனா நமக்கு ஒரு துன்பம் விளைவிச்ச நபர்/ உயிர்/ வஸ்து ன்னு இருந்தா தயை காட்டறது கஷ்டம். ம்ம்ம்ம்.. நல்லா வேணும்; நீ அன்னைக்கு அப்படி செஞ்ச இல்ல? இப்படி செஞ்ச இல்ல? இப்ப கஷ்டப்படுன்னு நினைக்கிறவர் தயை என்கிற ஆத்ம குணத்தை இன்னும் சம்பாதிக்கலை.