Pages

Monday, October 30, 2017

கேள்வி





நண்பர் ஒருவர் எழுதுகிறார்.
ஏதோ தோன்றி தெரிந்தவர் ஒருவருக்கு யாரும் ஏதும் சொல்லாமலேயே வலியச் சென்று உதவுகிறார். பிறகுதான் தெரிகிறது அவர்கள் பெரும் பண முடையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று
 
பிறகு மாலையில் ஸ்டாக் நிலவரம் பார்க்கிறார். செய்திருந்த முதலீட்டில் லாபம் அன்று அவர் கொடுத்த தொகையை விட நான்கு மடங்காக இருக்கிறது.

இதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் அவதானிப்பை எழுதுங்களேன்.

Friday, October 27, 2017

கிறுக்கல்கள் -165





இரண்டு யூதர்கள் வறுமையில் வீழ்ந்தனர்.

ஒருவர் சொன்னார் கவலைப்படாதே! எல்லாம் அவர் கொடுப்பார்.

மற்றவர் சொன்னார்: உண்மைதான். அவர் எல்லாம் கொடுக்கும் முன் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

Thursday, October 26, 2017

கிறுக்கல்கள் -164





சீடர் ஒருவரிடம் புதிதாக வந்த ஒருவர் கேட்டார் "எனக்கு மாஸ்டர் புனிதமாகிவிட்டாரா என்று இப்போதே தெரிய வேண்டும்.

சீடர் கேட்டார் "எதற்கு? அதனால் என்ன ஆகப்போகிறது?”

அவரே புனிதத்தை அடையவில்லை என்றால் நான் ஏன் அவரை பின் பற்ற வேண்டும்?”

அவர் புனிதராகி இருந்தால் மட்டும் ஏன் நீங்கள் அவரை பின் பற்ற வேண்டும்? அவர் அடிக்கடி சொல்லுவார் 'நீ என்றைக்கு ஒருவரை பின் பற்ற ஆரம்பிக்கிறாயோ அன்றே உண்மையை பின் பற்றுவதை நிறுத்திவிட்டாய்!”

சற்று நேரம் கழித்து சொன்னார்: “பாபிகளும் சமயத்தில் உண்மை பேசுகின்றனர். புனிதர்களும் சமயத்தில் மக்களை திசை திருப்பி விடுகின்றனர். என்ன சொல்லுகிறார்கள் என்பதை கவனி. சொல்லுபவரை அல்ல!”

Wednesday, October 25, 2017

கிறுக்கல்கள் -163




ஒரு நாள் ஒரு சீடர் மாஸ்டரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். நீங்கள் புனிதர் ஆகிவிட்டீர்களா?

மாஸ்டர் சொன்னார், எனக்கு எப்படித்தெரியும்?

உங்களுக்கே தெரியாது என்றால் யாருக்குத்தான் தெரியும்?

மாஸ்டர் சொன்னார்: சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் போய் நீ சாதாரணமாக இருக்கிறாயா என்று கேள்; ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார். அப்படியே பைத்தியக்காரர் ஒருவரிடம் போய் கேள். அவரும் ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார்!

குறும்பு சிரிப்புடன் தொடர்ந்தார்: நீ பைத்தியம் என்று உனக்குத்தேரிந்தால் நீ அவ்வளவு ஒன்றும் பைத்தியம் இல்லை அல்லவா? அதே போல நீ புனிதனா என்று யோசிக்க வேண்டுமானால் நீ அவ்வளவு புனிதன் இல்லை சரியா? புனிதத்துவம் எப்போதும் அகங்காரம் போவதில் இருக்கிறது.

Tuesday, October 24, 2017

தீபாவளி சிந்தனைகள் - 2





சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா?
தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

சொல்வது Ranganatha Vadhyar:

மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.

"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...

*"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:*

*உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"*
उल्का-हस्ता-नराःकुर्युः-पितृ என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி.

'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை.

இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.

காரணம் என்ன? "பித்ரூணாம்" என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.

பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் முன்னேறிச் செல்வார்கள்.

இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக "ப்ரதோஷ-காலத்தில் *"உல்காதானம்"* செய்வோம்.

உல்கா=நெருப்புடன்-கூடிய-கட்டை; (தற்காலத்தில்=மத்தாப்பு)

மேலும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

*"நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா"*

என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

*-"दीपैर्नीराजनादत्र-सैषा-"दीपा

ஆக வெடிகள் வெடிக்கிறோமோ இல்லையோ மத்தாப்புகள் கொளுத்த வேண்டும் எனலாம்.
அது சரி ஏன் டாக்டர்கள் பற்றி எழுதினேன்?

டாக்டர்கள் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். அதனால் அவரகளை கட்டுப்படுத்துவது டெக்னிகல் அறிவு இல்லாத நபர்களிடம் போய்விட்டது. இப்போ ஸ்டீல் ப்ளேட் வெச்சா அப்படியே கரைஞ்சுபோயிடும்ன்னு சொன்னாங்க என்று ஒரு வாதத்துடன் கோர்ட்ல கேஸ் எடுத்துக்கறாங்களேன்னு புலம்பி பலனில்லை.
அது போல ஹிந்துக்களே தம்மை இப்போதே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் "செக்யூலர்" மனிதர்களிடம் இது போய் விடும்.
உடனடியாக பட்டாசுகள் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம்.புகை குறைவாக சத்தம் இவ்வளவுதான் இருக்கலாம், தொடர் வெடிகள் இவ்வளவுதான் இருக்கலாம் என்பது போல. சிறு வயதில் நாங்கள் அதிகம் தொடர் வெடிகள் வாஅங்க மாட்டோம். அந்த காசுக்கு ஒத்த வெடி வாங்கினால் இன்னும் அதிக நேரம் வெடிக்கலாமே என்று லாஜிக்! நிறைய காசு வைத்திருப்பவர்களோ அல்லது அப்படி காட்டிக்கொள்ள நினைப்பவர்களோதான் அப்படி அதிகம் வெடிப்பார்கள். இப்போதெல்லாம் நிறையா பெர்ர் கையில் நிறைய காசு இருக்கிறது போலிருக்கிறது.
இதில் சத்த கட்டுப்பாடு இப்போதும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். இன்னும் தீவிரமாக்கலாம். நச்சுப்புகை எதில் அதிகம் வருகிறது? தடை செய்யலாம். பட்டாசு வெடிக்கும் நேரத்தை கட்டுப்படுத்தலாம். ஒரே அல்லது இரண்டே நாட்களில் என்று இல்லாமல் அதிக நாட்கள் குறைந்த நேரம் என்று இருக்கலாம்.
அதே சமயம் காற்று மாசை குறைக்க மற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். எத்தனை கார் வேணுமானாலும் ஓடட்டும்; தெருக்கள் புழுதியுடன் இருக்கட்டும், சுத்தம் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டு தீபாவளிக்கு மட்டும் பட்டாசு தடை என்றால் யார் ஏற்றுக்கொள்வார்கள்? பட்டாசு கட்டுப்பாடு மாசு கட்டுப்பாட்டின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும்.

கிறுக்கல்கள் -162




மாஸ்டர் ஒரு நாள் திடீரென்று "தீவினையை எதிர்த்து போராட நீங்கள் தயாராக மாட்டீர்கள், அது செய்யும் நல்லதை பார்க்க முடியும் வரை!” என்றார்.

தீவினை நல்லதா என்று குழம்பினர் சீடர்கள். ஒரு நாள் முழுதும் மாஸ்டர் இதை கண்டுகொள்ளவே இல்லை.  

அடுத்த நாள் இரண்டாம் உலகப்போரின் ரேவன்ஸ்ப்ருக் யூத ஜெயில் முகாமில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஒரு பிரார்த்தனையை வெளியிட்டார். ஒரு புத்தகத்தின் அட்டையில் எழுதப்பட்டிருந்த அதில் பின் வருமாறு கண்டு இருந்தது.

இறைவா! நல்லதையே நினைக்கும் ஆண்கள் பெண்களை மட்டுமல்ல கெட்டதையே நினைக்கும் நபர்களையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் எங்களுக்கு இழைத்திருக்கும் தீங்குகளை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம். அதனால் எங்களிடம் உருவாக்கி இருக்கும் நல்லதையும் நினைத்துப்பாருங்கள்: எங்கள் நட்பு, விசுவாசம், தன்னடக்கம், எங்கள் தைரியம், பெருந்தன்மை, விசாலமான ஹ்ருதயம்... தீர்ப்பு சொல்லும் நாளில் இவை அனைத்தின் பலன்களும் அவர்களுக்கு வெகுமதியாகவும் மன்னிப்பாகவும் இருக்கட்டும்.”

Monday, October 23, 2017

தீபாவளி சிந்தனைகள் - 1





ரைட்! இப்ப தீபாவளி முடிஞ்சாச்சு என்கிறதால அடுத்த வருஷத்துக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க இப்பவே ஒரு போஸ்ட்.

நான் டாக்டர். டாக்டர்கள் தவறு செய்ததா பேஷண்ட் அல்லது உறவினர்கள் நினைச்சா அவங்க ஐஎம்ஏ அதாவது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்னுக்கு புகார் கொடுக்கணும்; அவங்க விசாரிக்கணும்ன்னு ஒரு நடைமுறை உண்டு. ரொம்ப டெக்னிகலான விஷயம் என்கிறதால இப்படி. இதை சரியா கடைபிடிக்கலை. இதனால பின் நாட்களில இந்த புகாரும் நடவடிக்கையும் டாக்டர்கள் கையை விட்டு கோர்டுக்கு போயிடுத்து. இப்ப சகட்டு மேனிக்கு கேஸ்களும் இதுக்காக டிபென்ஸிவ் ப்ராக்டிஸும் களத்தையே கெடுத்தாச்சு. இருக்கட்டும்.

தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசுகள் பத்தி ஆட்சேபணை வருது. பல வருஷங்களா செஞ்சுகிட்டு இருக்கோமே, இதுல மத்தவங்க என்ன தலையிடறதுன்னு ஆரம்பிச்சு ஒருபக்கம் பல வாதங்கள் இருந்தாலும் சில விஷயங்களை யோசிக்கணும். சுற்றுப்புற சூழலை நாளுக்கு நாள் நாம கெடுத்துகிட்டு இருக்கோம்.முன்னே மாதிரி வீடுகளா இல்லை. மச்சு வீடுகள் அப்பல்லாம் குறைவே. இப்போதோ பல அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்தாச்சு. ஒரு அலகு இடத்தில இப்ப வாழும் மனிதர்கள் பல மடங்கு அதிகம். குறிப்பா நகரங்களிலேயும் அதிலும் குறிப்பா தலைநகர்கள் - புது தில்லி உள்பட- இங்கே ஏற்கெனவே இருக்கிற காற்று மாசு மிக மிக அதிகம். ஆபத்தான அளவு என்கிறதை பல இடங்களில தாண்டி இருக்கு. இந்த நிலையில் பட்டாசுகள் ஏற்படுத்தற மாசை நாம் ஏற்றுக்கொள்ளுவது கஷ்டம். அது ஒரு நாள் ரெண்டு நாள்ன்னு இருந்தாலும். ஏறத்தாழ நாடு முழுவதுமே ஐப்பசி மாசம் கனமான அட்மாஸ்பியர். மேகங்கள் சூழ்ந்து இருக்கும். நகர மாசு வெளியேறுவது கடினம். எப்பவும் காற்றடிக்கும் எங்க ஊர் மாதிரி இடங்களில பிரச்சினை இல்லை.

ஆனா இது எங்க உரிமை. நீங்க எப்படி கை வைக்கலாம்? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறது காலம் காலமா நாங்க செய்கிற விஷயம் ன்னு சிலர் சொன்னா, எந்த சாஸ்திரத்தில சொல்லி இருக்கு? அது இடையில ஆரம்பிச்ச பழக்கம்ன்னு சொல்றாங்க
 
ஆனா அப்படி சொல்லி இருக்கு.
அடுத்த பதிவில பார்க்கலாம்.

கிறுக்கல்கள் -161





ஆன்மிகத்தில் விசுவாசத்துடன் இருப்பதைவிட உண்மையாக இருப்பதே நல்லது என்றார் மாஸ்டர்.

என்ன வித்தியாசம் என்று கேட்டார் ஒருவர்.

உண்மையாக இருப்பதென்றால் எப்போதும் உண்மைக்கு திறந்த மனத்துடன் இருப்பது. விசுவாசத்துடன் இருப்பதென்றால் தன் பிரசாரத்தை தானே முழுக்க நம்புவது.

Saturday, October 21, 2017

கிறுக்கல்கள் -160




ஆன்மிகத்தில் செயலைவிட சரணாகதிக்கு அதிக மதிப்பிருக்கிறது என்றார் மாஸ்டர்.
நீந்தத்தெரியாத ஒருவன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான். அவன் நான் முழுகிவிடுவேனோ என்று பயந்து கை காலை ஆட்டிக்கொண்டு இருந்தால் பதட்டத்தில் தண்ணீரை குடித்து கடைசியில் முழுகியும் விடுவான். மாறாக தன் எண்ணங்களையும் செயல்களையும் சரணாகதி செய்து சும்மா இருந்து உடல் கீழே செல்ல அனுமதித்தால் அது தானாக மேலே வந்துவிடுகிறது! அது போலத்தான் ஆன்மீகத்திலும்!

Friday, October 6, 2017

கிறுக்கல்கள் -159





யாரோ மாஸ்டரை கேட்டார்கள்: ஏன் மதங்கள் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையுடன் இருக்கிறீர்கள்? அது மனிதர்களுக்கு கிடைத்த மிக நல்ல சொத்து அல்லவா?

ஆமாம். மிக நல்லதும் அதுதான். மிகக் கெட்டதும் அதுதான்!

கெட்டதா? என்ன சொல்லுகிறீர்கள்?


பொதுவாக மனிதர்கள் மற்றவர்களை வெறுக்கப்போதுமான அளவு மதத்தை கற்றுக்கொள்ளுகிறார்கள்; மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் அளவு கற்றுக்கொள்வதில்லை.

Thursday, October 5, 2017

கிறுக்கல்கள் -158




தன் உரையில் மாஸ்டர் பழங்கால புலவர் ஒருவரை மேற்கோள் காட்டினார்

உரை முடிந்தபின் அவரை சந்தித்த ஒரு இள வயதான மாது " மனிதர்களை ஏன் மேற்கோள் காட்டுகிறீர்கள்? ஆகமங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம் அல்லவா? அந்த மனிதருக்கு கடவுளை தெரியும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

மாஸ்டர் சொன்னார்: பெண்ணே! கடவுள்தான் ஆகமங்களை உருவாக்கியது என்று நினைத்தால் அதற்கு பல காலம் முன்பே அவர் படைப்பு என்று ஒன்றை உருவாக்கிவிட்டார்

Wednesday, October 4, 2017

கிறுக்கல்கள் -157




கவர்னர் மாஸ்டரை பார்க்க வந்தபோது பத்திரிக்கைகள் மீது செயல்படுத்தப்பட்ட தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தன் ஆட்சேபணையை மாஸ்டர் தெரிவித்தார்.

சமீபகாலமாக பத்திரிகைகள் எவ்வளவு ஆபத்தானவையாக மாறிவிட்டன என்று உங்களுக்குத்தெரியாது என்றார் கவர்னர்.


எப்போதும் தடை செய்யப்பட வார்த்தைகள்தான் ஆபத்தானவை என்றார் மாஸ்டர்.

Tuesday, October 3, 2017

கிறுக்கல்கள் -156





ஒரு வியாபார நிறுவன செயலர் மாஸ்டரிடம் கேட்டார்: வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன?

மாஸ்டர் சொன்னார்: தினமும் ஒருவரையாவது மகிழ்ச்சி அடையச்செய்!

ஒரு நிமிடம் கழித்து சொன்னார்: அந்த ஒருவர் நீயாக இருந்தாலும் பரவாயில்லை.


இன்னொரு நிமிடம் யோசித்துவிட்டுச்சொன்னார்: அந்த ஒருவர் குறிப்பாக நீயாக இருந்தால் மிக நல்லது!

Monday, October 2, 2017

கிறுக்கல்கள் -155




மாஸ்டரின் கருத்தில் உலகில் நிறைய பேர் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் பலரும் கஷ்டப்படுவதில் ரகசியமாக இன்பம் காண்பதுதான்!

அவருடைய நண்பர் தன மனைவியைப்பற்றி சொன்னதை மேற்கோள் காட்டினார்: நண்பர் சொன்னார்: அன்பே நீ ஏன் ஊரை விட்டுப்போய் நல்லபடியாக பொழுதை கழிக்கக்கூடாது?

மனைவி சொன்னார்: ம்க்கும். உனக்கு நல்லாவே தெரியும்; நான் நல்லபடியாக பொழுதை கழிப்பதில மகிழ்ச்சி அடையறது இல்லே!