Pages

Monday, September 4, 2017

வேதம் - 9





அலௌகீகம், லௌகீகம் என்பது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்
 
லௌகீக திருஷ்டி என்ன? உலகத்தை பஞ்ச பூதங்களால் ஆனதாக பார்ப்பது. அதில் பூதாத்மா என்கிற ஆத்ம சைதன்யம் இருக்கிறது. உயிரில்லாத ஜடப்பொருட்கள் உள்ளன. இவற்றில் ஆற்றல் உள்ளது. காலம் இருக்கிறது, இடம் இருக்கிறது. இந்த ஆறின் கூட்டுப்பொருளாக…. காலம், இடம், உயிரினம், மனம் அல்லது எண்ண ஆற்றல், பருப்பொருள், பொருள் ஆற்றல் இந்த ஆறையும் காண்பதே லௌகீக திருஷ்டி
 
இதை தாண்டியது அலௌகீக திருஷ்டி இதை எல்லாம் தேவதாத்மகமாக காண்பது. அபி⁴மானிவ்யபதே³ஶஸ்து விஶேஷானுக³திப்⁴யாம் (பி.சூ 2.1.6) வாயு என்றால் வாயுவை ஏன் கும்பிடுகிறாய்?
சிலர் சொல்கிறார்கள் .. அறியாமையால், அச்சத்தால், தான் கண்டறிய முடியாமல், தன்னால் திசை காண முடியாத பொருட்களை கண்டு அஞ்சி மனிதன் வணங்கினதாக சொல்கிறார்கள். அது வேறு நாகரீகமாக இருக்கலாம். அவற்றின் உட்பொருளாக உள்ள தெய்வங்களையும் தெய்வங்களுக்கும் உட்பொருளாக உள்ள பிரம்மத்தையும் கண்டறிந்து அந்த காட்சியால் பூரித்துப்போய் போற்றி கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள். நாகரீகத்தின் துவக்கத்தை சொல்வோர் இதைத்தான் சொல்கிறார்கள். கடவுள் வழிபாடு அச்சத்தில் பிறந்தது. அறியாமையில் இருந்து பிறந்தது. தான் புரிந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாததை பார்க்கும் போது அதற்கு பணிந்து போவது மனிதனுடைய பலஹீனம். அதன் வெளிப்பாடு இந்த வழிபாடு. பலஹீனத்தில் இருந்து கடவுளும் அவரிடம் இருந்து மதம், பக்தி வந்ததாக சொல்கிறார்கள் சில அறிவாளிகள். ஆனால் இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அஞ்சி அழிந்தவர் பலர். அவர்களிலே நாம் இல்லை. இருப்பதை இல்லாததாக நினைத்து மருண்டு அதை இழந்தவர்களிலே இது இருக்கிறது என்று தாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் காட்டுபவர்களாக , நெறி வல்லுனர்களாகவே நாம் இருக்கிறோம்.  

ஆகவே தேவதாத்மகமான ஒரு பிரபஞ்சத்தை நாம் பார்த்து, நெருப்பு என்றால் நெருப்பு இயக்குகின்ற ஒரு சைதன்யம் இருக்கிறது, ஒரு அறிவாற்றல். அதன் சேதனத்தில் அக்னி என்னும் ஒரு தெய்வம் இருக்கிறது. இது எல்லாம் நமக்கு எப்படி காட்டப்படுகிறது? நானோ ஸ்பெக்டராலாஜிலே? நுண் நோக்கியிலே? ஜீவ அணு மரபியலிலே? உலகியலே? கோளியலில்? அண்ட புவியியலிலே? ஆழ் கடலியலிலே? எந்த இயலிலும் தெரியாது, இறையியலிலே மறையியலிலே, உணர்வியலிலே மட்டும் தெரியும். அதை காட்டிகொடுத்ததாலே இதற்கு அலௌகிகஹா என்று பெயர்.

அதையும் மீறி மூன்றாவதாக இத்தனை தெய்வங்களிலும் வைத்து எல்லோருக்கும் இன்னருள் சுரந்து இந்த தெய்வங்களுக்கெல்லாம் உள்ளுறை பொருளாய் இருந்து இயக்குகின்றவன் யார்? இதைத்தான் தெய்வ மீமாம்சையில் சொல்கிறார்கள். 'ச விஷ்ணுஹு ஆஹஹி; தம் ப்ரம்மேத்யா சக்ஷதே தம் ப்ரம்மேத்யா சக்ஷதே' என்று இதைத்தான் இரண்டு விதமான சூத்திரங்களாக சொல்லி இருக்கிறது அவர்தான் பிரம்மம் எனப்படுகிறார். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு பிரம்மமே உள்ளுறை பொருளாக இருக்கிறது என்று. இந்த உலகை 'சர்வம் கல்விதம் ப்ரம்ஹ தஜ்ஜலான் இதி ஶாந்த உபாசீத'. எல்லாமே அவனில் இருந்து உண்டாகி அவனாலே நிலைநாட்டப்பட்டு அவனையே அடைவதாலே இது எல்லாம் அவனே; அவனே எல்லா பொருளாகவும் இருப்பவன் என அறிந்து தானும் அமைதியுற்று நிரந்ஜனாக 'பரம ஶாந்த உபைதி, ஶாந்த உபாசீத', 'ஞாத்வா மாம் ஶாந்தி ம்ருச்சதி'(.கீ 5.29 ) என பல இடங்களிலே பார்க்கிறோம். மேலான நிலையை அடைகிறான்; ஒன்று படுகிறான்; நிலை விளக்கம் பெறுகிறான். தன்னிலை விளக்கம் பெறுகிறான். இப்படி வேதங்களிலே பிரம்மாத்மகமாக - அதற்கும் மீறி சென்று எல்லா பொருட்களையும் பிரம்மாத்மகமாக பார்க்கக்கூடிய திருஷ்டி, இந்த இரண்டு த்ருஷ்டிதான் வேதத்தின் தனிப்பெரும் பெருமை.

No comments: