Pages

Wednesday, June 7, 2017

அந்தணர் ஆசாரம் - 16 ஹோமங்கள்




ஹோமம் செய்யும் விதி
நதியில் ஸ்நானம் சந்த்யா முடித்த க்ருஹஸ்தன் வீட்டில் எல்லா பொருட்களையும் ப்ரோக்ஷம் செய்ய ஜலத்தை க்ரஹித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து அந்த ஜலத்தில் வீட்டையும் எல்லா பொருட்களையும் ப்ரோக்ஷம் செய்து ஆசமனம் செய்து வேதம் விதித்த கர்மாக்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும். சூர்யநமஸ்காரம் செய்து முடித்து காலையிலும் மாலையிலும் விவாஹ அக்னியில் ஔபாசனம் செய்ய வேண்டும்.
ஹோமம் செய்யும் இடத்தை சுத்தப்படுத்தி (தெற்கில் ஆரம்பித்து வடக்காக வரிசையில்) மேற்கு கிழக்காக 3 முறை கீறி, அடுத்து (மேற்கில் ஆரம்பித்து கிழக்காக வரிசையில்) தெற்கு வடக்காக மூன்று முறையும் கீறி ப்ரோக்ஷித்து மிகுந்த ஜலத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அக்னியை பிரதிஷ்டை செய்து பலப்படுத்த வேண்டும். இந்த மிகுந்த ஜலத்தை கிழக்கில் கொட்டி விட்டு புதிதாக ஜலத்தை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். இது அக்னியை பிரதிஷ்டை செய்யும் முறை.
அக்னியை பரிசேஷனம் செய்து அரிசி அல்லது யவையால் இரண்டு ஹோமம். முதல் ஹோமம் காலையில் சூரியனுக்கும், மாலையில் அக்னிக்கும். அடுத்த ஹோமம் ஸ்விஷ்டக்ருதுக்கு. ஹோமத்தை கையாலேயே செய்ய வேண்டும். இப்படி கையாலேயே செய்யும் ஒரு சில ஹோமங்களில் இதுவும் ஒன்று. மற்றவற்றில் ஹோம கரண்டியாலேயே செய்ய வேண்டும்.
யஜமானனே முக்கிய அதிகாரி. அவனால் செய்யமுடியாது போனால் அவனது பத்தினி மந்திரமில்லாமல் செய்யலாம். இது எட்டு வேளை வரை செல்லுபடியாகும். அவளாலும் செய்ய முடியாவிட்டால் புத்திரன், கன்னிகா, ருத்விக், சிஷ்யன், குரு, சகோதரன், மருமகன், மாப்பிள்ளை ஆகியோர் செய்யலாம்.
யஜமானன் ச்ரௌத்த காரியங்களை த்ரேதாக்னியிலும் வைதிக கர்மாக்களை ஔபாசன அக்னியிலும் செய்ய வேண்டும். த்ரேதாக்னி வைத்து இருப்பவர் இப்போது அருகிவிட்டனர். ஸ்ராத்தம், ஸ்தாலீபாகம் போன்ற கர்மாக்களை இந்த ஔபாசன அக்னியிலேயே செய்ய வேண்டும். பத்னி இல்லாதவர்கள் லௌகிகாக்னியில் செய்வர். அதே போல க்ருஹஸ்தன் சிலருடன் சேர்ந்து ஹோமம் செய்வாரேயானால் லௌகிகாக்னியில் செய்ய வேண்டும். ஔபாசனாக்னியில் அல்ல.
க்ருஹஸ்தன் க்ஷண நேரமும் ஔபாசன அக்னியில்லாமல் இருக்கக்கூடாது என்கிறார்கள். அக்னி இல்லாமல் இருப்பவன் பதிதன், வ்ராத்யன் என்பர். அவர்கள் வீட்டில் சாதுக்கள் உணவருந்த மாட்டார்கள். அப்படி ஆனால் அவன் வீணாக சமைத்தவன் ஆவான். (விதாபாகன்)
க்னி நஷ்டமாகி மீண்டும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் எவ்வளவு நாள் ஹோமம் செய்யவில்லையோ அவ்வளவு நாளுக்கான ஹோம த்ரவ்யத்தை ப்ராம்ஹனனுக்கு தானம் செய்து மீண்டும் ஸந்தானம் செய்து கொள்ள வேண்டும். ஒரு வருஷத்துக்கு 60 படி அரிசி, 3 படி நெய் என்று காத்யாயனர் கணக்கு சொல்கிறார்.
ஜனனாசௌசம், மரணாசௌசம், சக்தியின்மை, ஸ்ராத்த போஜனம், வெளியூர் பயணம் முதலியன ஔபாசனத்தை விட்டுவிட காரணங்கள் ஆக மாட்டா. வேறு ஒருவரை விட்டு ஹோமம் செய்ய வேண்டும்.

No comments: