Pages

Tuesday, May 23, 2017

ஆன்மீக விசாரம் - 11


என்னால இன்னும் முடியும்ன்னு நினைக்கறவங்க மனசை புத்தியால கண்ட்ரோல் பண்ணப்பார்க்கலாம். ரெண்டும் ஒண்ணுதானே? ஆமாம். புத்தி என்கிறது ஸ்திரமான ரூபம்; மனசு என்கிறது சலனப்படற ரூபம். இதுல ஒரே நேரத்துல ரெண்டு ஸ்திதியிலேயும் இருக்க முடியுமா? ம்ம்ம்ம்…. முடியலாம். இருந்தாலும் ஒண்ணுதான் டாமினெண்ட்டா இருக்கும். அது மனசா இல்லாம புத்தியா இருக்கும்படியா பாத்துண்டா போதும்.
இதுக்குப்பார்வை மாறணும். நம் வாழ்க்கையை வேத்து மனுஷனா பார்க்கக் கத்துக்கணும். இதைத்தான் சாட்சி பாவம் என்கிறாங்க. இப்படி நடக்கறதா? ஐயோ இப்படி நடக்கறதே இது எனக்கு சௌகரியமில்லையேன்னு புலம்பறது மனசு. ஓஹோ! இப்படி நடக்கறதா? அது எனக்கு சௌகரியமில்லை. மாத்த முடியுமா? முடியும்னா எப்படி? இந்த ரீதியில போகிறது புத்தி. இதுல உணர்ச்சிகள் மேலோங்காது என்கிறதால பிரச்சினைகள் குறையும். ஆனா பொதுவா மனிதனுக்கு இந்த உணர்ச்சிகள் இல்லாம இருக்கறது பிடிக்கறதில்லை. என்ன இது, மெஷின்தனமான வாழ்க்கை என்பாங்க!
இன்னொரு வழி எண்ணங்களை படிப்படியா குறைத்துக்கொண்டே போவது. கடைசியா அடைய வேண்டிய நிலை மனமில்லா சாந்த நிலை.
மனசு ரொம்பவே பவர்புல் என்பார் ஸ்வாமி சிவானந்தர். நினைத்தது நடக்கும்.
'ஹாஹ்ஹாஹ்ஹா! எத்தனை நினைச்சு இருப்பேன்? ஒண்ணு கூட நடக்கறதில்லை' ன்னு பலரும் ஆட்சேபனை சொல்லலாம். பிரச்சினை என்னன்னா நினைப்பு ஒண்ணா மட்டும் இருக்கறதில்லை! ஒண்ணை விரும்பின மாத்திரத்தில் அடுத்தது க்யூவில் வந்து நிக்கும். சின்மயானந்தா சொல்லுவார் ' உன் மனசில் அது வேணும்ன்னு நினைக்கிறாய். ரைட், அதை கொண்டு வரேன்னு மனசு கிளம்பும். அது கொஞ்ச தூரம் போகிறதுக்குள்ள எனக்கு இது வேணும்ன்னு இன்னொரு ஆசை வரது. சரி அதை விட்டுட்டு இதை கொண்டு வரேன்னு மனசு திசை திரும்பறது. சீக்கிரமே அடுத்த ஆசை வந்துடும். இதனால மனசு சுத்திண்டே இருக்குமே ஒழிய அதால எதையும் சாதிக்க முடியாமப் போகும்.'
உண்மைதானே! நமக்கு ஆசைகள் கொஞ்சமா நஞ்சமா? லோகத்தில பார்க்கிற எதானாலும் அது எனக்கு வேணும்ன்னு தோணிண்டே இருக்கும்! காந்தி சொல்லுவார் 'இந்தியாவில குறைந்த பட்ச தேவைகளை எல்லாருக்கும் நிறைவேத்த முடியும். அத்தனை வளம் இருக்கு. ஆனா ஒத்தனோட எல்லையில்லாத எல்லா விருப்பங்களையும் நிறைவேத்த இந்த உலகமே போறாது!'
அதனால நம்மோட விருப்பங்களை குறைக்க குறைக்க அது நிறைவேறும் சாத்தியம் அதிகமாகும்.
அதே போல எண்ணங்களை குறைக்கக்குறைக்க அவை வலுப்பெறும். ஒரு பார்வையில் பார்க்கிறதோட சாதக பாதகங்கள் புரிந்துபோகும். என்ன செய்யணும் என்கிறது தெளிவா இருக்கும். படிப்படியா எண்ணங்களை குறைத்து எண்ணங்களில்லாத நிலைக்கு போவதே நோக்கம். மாறாக நாம என்ன செய்யறோம்? நமக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்களையும் போட்டுக்குழப்பிக்கறோம். ட்ரம்ப் என்ன செய்தால் நமக்கு என்ன? டீம் ஏ ஜெயிச்சா என்னா தோத்தா என்ன? இன்னார் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டா என்ன? பல விஷயங்கள் நமக்கு சம்பந்தமே இல்லாதவை. சிலது அப்படி இருந்தாலும் நம்மால எதுவும் செய்ய முடியாதவை. உலகத்தைப்பார்த்து இது இப்படி இருக்கே அது அப்படி இருக்கேன்னு புலம்பறவங்க ஒண்ணுத்தையும் சாதிக்கப்போறதில்லை. சமூக வலைதளங்களில சர்வ சாதாரணமா இதை பார்க்கிறோம். ஏதோ ஒரு சம்பந்தமில்லாத சின்ன விஷயத்தை வெச்சுக்கொண்டு குடுமிப்பிடி சண்டையே நடக்கிறது. நடப்பு சமாசாரமா இருந்தாக்கூட பரவாயில்லே. குலோத்துங்க சோழன் இப்படி செஞ்சானா இல்லையா? அது சரியா தப்பா? யோவ்! தெரிஞ்சு இப்ப என்ன செய்யப்போறே?
ரைட் ரைட் இத்தோட நிறுத்திக்கலாம். எடுத்த விஷயம் புரிய இது போதும். மனசை வீணா அலைக்கழிக்க வேண்டாம்.

Monday, May 22, 2017

ஆன்மீக விசாரம் - 10

அடிப்படையில ஆன்மீகம் மனசை கையாளுவதுதான். மனசுன்னு ஒரு திரை முன்னே இருக்கும் வரை உள்ளே இருக்கிற தெய்வீகம் ஒளி விடறது இல்லை. அஹங்காரம் இருக்கிற வரை 'ஜீவன்'னும் அஹங்காரம் போய்விட்டதை 'பரம்'ன்னும் சொல்கிறோம். அதாங்க ஜீவாத்மா பரமாத்மா. ஜீவன் நான்னு நினைச்சுண்டே இருக்கும் வரைதான் பிரச்சினைகள் எல்லாம். நான் போய் விட்டா பலதும் சரியாகப்போயிடும். இதுக்குத்தான் ரமணர் எப்பவும் கேள்வி கேக்கற நீ யாரு? என்கிற ரீதியில பதில்களை கொடுப்பார்.
ஆனா அது அவ்வளவு சுலபமாவா இருக்கு?
இமாலயத்துல சாது ஒத்தர் யாத்திரை போனார். போகிற வழி எல்லாம் சிவோஹம் சிவோஹம்ன்னு சொல்லிண்டே போனாராம். மேலே போகப்போக குளிர் தாங்கலை. சிவோஹம்ன்னு சொல்லிண்டு இருந்தவர் இப்ப ஜீவோஹம் ஜீவோஹம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்!
ரொம்ப முன்னேறினவர்களுக்கே இந்த கதிதான்.
ஸோ என்ன செய்யலாம்?
முதல் படியா மனசை மடை மாத்தி விடக்கத்துக்கலாம். எப்பவுமே வெளி உலகத்தையே சுத்தி வந்துகிட்டு இருக்கும் இந்த மனசை பகவான் பக்கம் செலுத்தி விடலாம். கோப தாபங்கள் நம்மை அவ்வளோ சுலபமா விட்டு போகிற மாதிரி இல்லை. ஆசாபாசங்கள் எப்பவும் இருக்கவே இருக்கு. ரைட். இது எல்லாத்தையும் பகவான் பக்கமே திருப்பிடுவோம். இது பக்தி மார்க்கம். சண்டை போடணுமா? பகவான் கூட சண்டை போடு. எனக்கு இப்படி ஏன் நடக்கலை அப்படி ஏன் நடக்கலை, இது ஏன் கிடைக்கலைன்னு இருக்கற எல்லா தாபங்களையும் அவன்கிட்டேயே சொல்லு. (கொடுத்தாலும் கொடுத்துடுவான், ஜாக்கிரதை! அது நம்ம நல்லதுக்கு இல்லாம இருக்கலாம்.) சின்ன வயசில ஒரு சினிமா பார்த்தது. ரங்காராவ் பெருமாள்கிட்ட 'இன்னைக்கு மாடு கன்னு போட்டுது' ரீதியில எல்லாத்தையும் ரிபோர்ட் பண்ணுவார். அது போல! என்ன படம்ன்னு கேக்கறீங்களா? யாருக்கு நினைவு இருக்கு? சினிமா எக்ஸ்பெர்ட் கீக்காவுக்கு இருக்கலாம்.
ஏதோ ஒரு ஸ்டேஜ்ல ச்சே! இப்படி எல்லாமா பகவான்கிட்ட கேக்கறதுன்னு தோணலாம். அப்புறம் நாம் கேக்கற விஷயம் மாறிப்போகலாம். சுய நலம்ன்னு இல்லாம பொது நலத்துக்கு கேட்கலாம். மெதுவா அதுவும் குறைஞ்சு போய் 'அவனுக்குத்தெரியாதா என்ன எப்போ வேணும்ன்னு' அப்படின்னு தோணிப்போய் கேக்கறதையே நிறுத்திடலாம். அவன் பக்கம் கவனத்தை திருப்பிட்டாப்போதும்; காலப்போக்கில மெதுவா நாம முன்னேறிடுவோம். என்ன கிடைக்கறதோ அது பகவத் ப்ரசாதம்ன்னு ஏத்துண்டு இருப்போம். இது ஒரே ஜன்மாவிலேயும் நடக்கலாம்; சில ஜன்மாக்கள் ஆனாலும் ஆகலாம். அவரவர் கர்மாவை பொருத்தது.
வேற என்ன செய்ய முடியும்?

Friday, May 19, 2017

ஆன்மீக விசாரம் - 9

இந்த பிரச்சினைகள் எப்ப வரும்?
ஒருவன் பிறக்கும் போதே எந்த நேரத்தில் என்ன நடக்கும்ன்னு நிர்ணயம் ஆயிடும்ன்னு கடலங்குடி நடேசையர் சொல்லறார். அதாவது 20 வயசிலா 80 வயசிலா என்கிறது போல. படிப்புக்கு அனுகூலமான நேரம் பத்து வயசில வராம 50 வயசில வந்து என்ன பிரயோசனம்? பணம் சம்பாதிக்க யோகம் 20 -30 ல வராம 60 ல வந்து என்ன பிரயோஜனம்? அதைப்பத்தி கவலைப்படாம அந்த அந்த நேரம் வந்து போகும். நல்ல ஜோசியர்கள் இதை கணிக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வழி காட்ட முடிகிறது. கூடவே ப்ராயச்சித்தங்களால தீருமா இல்லையான்னு அவங்களால சொல்ல முடியும்ன்னு நினைக்கிறேன். ரீடிங் எல்லாம் சரியா இருந்தாலும் டிவைன் இன்டர்வென்ஷன்னு ஒண்ணு இருக்கவே இருக்கு; ப்ரெடிக்ட் பண்ணதுக்கு மாறா நடக்க முடியும் என்கிறார் நண்பர் ஸ்வாமி ஓங்கார். இதையும் நினைவு வெச்சுக்கலாம்.
போகிற போக்கில…. 'நடக்கறதுதான் நடக்கும்ன்னா, பின்ன எதுக்கு ஜோசியம்?’ ன்னா ...
மனசை திடப்படுத்திக்க பிரயோஜனமாகும். ஒண்ணு இது நடக்காது விடுன்னோ அல்லது சீக்கிரம் சரியாயிடும்ன்னோ மனசு ஆறுதல் அடையலாம். தட்டுத்தடுமாறி டிகிரி முடிச்சவனை மேலே படிக்க வைக்கிறதா இல்லை பிசினஸ் வெச்சுக்கொடுக்கறதா போன்ற சிலதுக்கு பிரயோஜனமாகும். பசு மாட்டை கட்டி இருக்கும் கயிறு அனுமதிக்கும் அளவுன்னு ஒரு தியரி பாத்தோமில்லையா? அது படி சில வரையறைக்குள்ள நம் வாழ்க்கையை கொஞ்சம் சீரமைச்சுக்கலாம்.
ப்ராயச்சித்தங்கள் பத்தி லிஸ்ட் கேட்டாங்க. இங்கே எதுக்கு அதுன்னு தோணித்து. எந்த டிவி சானலும் காலையில அது போல ஒரு ப்ரோக்ராம் போடுது. எந்த ஆன்மீக பத்திரிகையை எடுத்துக்கொண்டாலும் அது மாதிரி ஏதாவது எழுதறாங்க. மேலும் எல்லா பத்திரிகையும் ஒரு ஆன்மீக மலர் வெளியிடுது! அங்கே கிடைக்கும்.

Thursday, May 18, 2017

ஆன்மீக விசாரம் - 8

போன ஜன்மத்திலே நாம் பாபமே பண்ணலைன்னா இப்ப பிறந்தே இருக்க மாட்டோம். இதை எல்லாம் படித்துக்கொண்டு இருக்கவும் மாட்டோம். இதை படித்துக்கொண்டு இருக்கோம் என்கிறதே நாம ஏதோ பாபங்கள் செய்து இருக்கோம் என்பதை காட்டுது. அதை ஒண்ணு அனுபவிச்சு தீர்க்கணும். அல்லது ப்ராயச்சித்தம் செய்து தீர்க்கணும். பலமானது எல்லாம் அனுபவிச்சே ஆகணும். அவ்வளவு பலமில்லாததை அனுபவிக்க ஆரம்பிக்கும் போது அடடா, ஏதாவது ப்ராயச்சித்தம் செய்யலாமான்னு தோணலாம். அப்ப ப்ராயச்சித்தம் செய்தா தீர்ந்து போகும். அப்ப நம்ம கையில் ஒரு சாய்ஸ் இருக்கும், அனுபவிக்கறதா அல்லது ப்ராயச்சித்தம் செய்யறதான்னு.
ஆனா நமக்கு வர பிரச்சினை இதுல எதுல சேர்த்தின்னு கண்டு பிடிக்கறது? கஷ்டம்தான்.

காஞ்சி மஹா பெரியவரை பார்க்க ஒத்தர் வந்தார். அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போகிறவர்தான். அவருக்கு நாட்பட்ட தோல் வியாதி ஒண்ணு இருந்தது. பெரியவர் தரிசனம் ஆகிறப்ப திடீர் என்று பெரிவா அவரிடம், “மடத்துக்கு நீ எவ்வளோ நாளா சேவை செய்யற! உனக்கு இருக்கிற பிரச்சினை தெரியும். இதுக்கு ஒரு அசாதாரண ஹோமம் செய்தால் சரியாயிடும். அது தெரிஞ்சவா அதிகம் கிடையாது. சரியான நாளும் அமையணும். இன்னைக்கு அப்படிப்பட்ட நாள். உன் நல்ல காலம் அதை செய்யக்கூடியவர் இன்னைக்கு இப்ப மடத்தில இருக்கார். நீ சரின்னு சொல்லு; இப்பவே செய்ய ஏற்பாடு செய்யறேன்" என்றார். அவரோ தயங்கிக்கொண்டு "வீட்டில் கேட்டு வந்து அப்புறம் சொல்கிறேன்!” என்றார். பெரியவா மீண்டும் வற்புறுத்தி சொன்னார். அப்போதும் அதே பதில்தான் வந்தது.
அவர் போன பிறகு பக்கத்தில் இருந்த சிஷ்யர்கள் ஆச்சர்யத்துடன் "பெரிவா, இப்படி கேட்காம எதையும் சொல்ல மாட்டீர்களே!” என்றார்கள்.
ஆமாம். விதியைப்பத்தி, ப்ராயச்சித்தம் பத்தி இங்கே விவாதம் நடந்தது இல்லையா? இப்ப பாருங்கோ" என்றார்.
"இந்த ப்ராயச்சித்தம் செஞ்சா இவருக்கு வ்யாதி குணமாயிடுமா?”
பின்னே? ஆகாட்டா சொல்லுவேனா?”
இவர் செஞ்சுப்பாரா?”
! இது நல்ல கேள்வி. செஞ்சுக்க மாட்டார்! அவரோட விதி அவரை விடாது!”
அதே போல அவர் திரும்பி வந்து மறுப்பு சொல்லி விட்டு போய்விட்டார். பெரிவா சொல்லை தட்டாதவர் இப்போது அவர் வலியுறுத்தியும் கேட்கவில்லை!

இதே போல ஒரு இஞ்சினீயருக்கு பெரியவா ஒரு வேலை செய்யச்சொன்னார். குறிப்பிட்ட கோவிலுக்கு போய் வரச்சொன்னார். அவ்வளவுதான். எதுக்கு என்றார் அவர்.
அங்கே உனக்கு நடக்க வேண்டியது ஒண்ணு பாக்கி இருக்கு என்றார் பெரியவா.
எனக்கு ஒண்ணுமே வேண்டாம். உங்க ஆசீர்வாதம் இருக்கு; போறும். எனக்காகன்னு ஒண்ணும் செஞ்சுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
சில வாரங்கள் கழித்து அலுவல் நிமித்தம் ஜீப்பில் மஹாராஷ்ட்ரா எல்லையருகே வேற்றூர் போக நேர்ந்தது. வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது, கூட வந்தவர்கள் வழியில் வேறு எங்காவது போகலாமா என்று விவாதித்துக்கொண்டு இருந்தனர். இவர் திடீரென்று வண்டியை இந்தப்பக்கம் விடு என்று வழி சொன்னார். இவரது பேச்சே மாறிவிட்டது. சரளமாக முன்னே பின்னே அறிமுகம் கூட இல்லாத மராத்தியில் ட்ரைவருக்கு முன் பின் தெரியாத இடத்தில் வழி சொல்லிக்கொண்டே போனார். ஒரு சிற்றூர் வந்தது. ஒரு கோவில் வந்தது. இவர் இறங்கிப்போனார். விழுந்து நமஸ்கரித்தார். காதில் ஏதோ மந்திரம் ஓதப்பட்டது. திரும்பிவிட்டார். அவ்வளவுதான். ஆபீஸுக்கு திரும்பலாம் என்றார். பழையபடி ஆகிவிட்டார். நடந்தது ஒன்றுமே தெரியவில்லை.
எதுக்கு சொல்ல வந்தேன்னா நடக்கணும்ன்னு இருந்தா அது நிச்சயம் நடந்துடும். நடக்க முடியாதது என்ன முயற்சி பண்ணாலும் நடக்காது. இதைத்தானே ரமணர் சொன்னார்?

Wednesday, May 17, 2017

ஆன்மீக விசாரம் - 71/2

சிந்தனைகள் அறுபட்டு இருக்கு. நேற்று முழுக்க ஓஎஸ் மாற்றும் வேலையில இருந்துட்டேன்.
நடுவில் ப்ராயச்சித்தங்கள் பத்தி சில கேள்விகள் வந்திருக்கு.
முன்னேயே இதே பக்கங்களில ஸ்லோகங்கள் என்கிற தலைப்பில இங்கே துவங்கி  சிலது இருக்கு,
பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் என்கிற தலைப்பில இங்கே துவங்கி சிலது இருக்கு.
நாளைக்கு சிந்தனைகள் தொடர்ந்தாலும் தொடரும்.

Tuesday, May 16, 2017

ஆன்மீக விசாரம் - 7

இப்படி மத்தவங்க பிக்சர்ல இல்லாம நாமே செய்யறது நல்லது. கண்ட்ரோல் இன்னும் அதிகமா இருக்கும். ஆனா ஒண்ணு! பலிக்கலைன்னா திட்டறதுக்கு வேற ஆள் இருக்காது! நம்மை நாமேத்தான் திட்டிக்கணும்! :-)
தனியா ஹோமம் செய்ய முடியும். அதைவிட ஜபம் சுலபம். ஆனா ஹோமத்துக்கே பலம் அதிகம்.
எந்த தேவதையை உபாசிக்கிறோம் என்பதில கொஞ்சம் சமாசாரம் இருக்கு. உக்கிர தேவதைகளோட ரூட் வேற. பலன் அதிகமா இருந்தாலும் சட்ட திட்டங்கள் அதிகம். தப்பா போச்சுன்னா அதுக்கு தண்டனைகளும் கிடைக்கும், இதன் பக்கம் போகமலே இருக்கறது நல்லது.
மாறா ஸௌம்ய தேவதைகள் இன்னும் கொஞ்சம் மன்னிச்சுடும். பலனும் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். இருந்தாலும் இதுவே தேவலை.

நமக்கு வேண்டியது கிடைகிறதுல தடைகள் இருக்கலாம்ன்னு பாத்தோம் இல்லையா

தடைகளை நீக்க பிராயச்சித்தங்கள் சொல்லப்பட்டு இருக்கு. தர்ம சாஸ்திரத்துல பிராயச்சித்த காண்டம்ன்னு ஒண்ணு தனியாவே இருக்கு. ஆனா யாரும் அதை பார்க்கிறதில்லை. ஜோஸ்யர்கள் ஏதாவது சொல்லி இங்கே போ அங்கே போ இதை பண்ணு அதைப்பண்ணுன்னு சொல்வாங்க. நாமும் ஊர் ஊரா இதுக்காக சுத்துவோம்! முன்னே ஈ ஓட்டிக்கொண்டு இருந்த இடங்கள் சிலது எப்படி வளர்ச்சி அடைஞ்சு இருக்குன்னு பாத்தா ஆச்சரியமா இருக்கும். எல்லார் ஜோஸ்யர்களின் அருட்பார்வை பட்டதே காரணம்

சில இடங்கள் சில ப்ராயச்சித்தங்களுக்கு பெயர் பெற்றவை. அங்கே இருக்கிற தேவதைகள் அப்படி விசேஷ பலம் வாய்ந்தவை. அப்படி ஒரு ஏற்பாடு செஞ்சு இருக்கறதும் ஈஸ்வரன்தான். நம்பிக்கையுடன் சொல்லியதில் காம்ப்ரமைஸ் செய்யாம பிராயச்சித்தத்தை நிறைவேற்றி பலனை கண்டவர்கள் இருக்காங்க. 

Monday, May 15, 2017

ஆன்மீக விசாரம் - 6

சரி, வாசன ஒழியறது எல்லாம் நாளாகும்; அது நடக்கறப்ப நடக்கட்டும். அது வரைக்கும் லௌகீகமா வேண்டியது கிடைக்க என்ன செய்ய? ன்னு கேட்டா......
கேட்டு வாங்கிக்கோ!
எதை செஞ்சா எது கிடைக்கும்னு ஒண்ணு இருக்கில்லையா? உப்பு தின்னா தண்ணி குடிக்கணும். ஒரு செயலுக்கு ஒரு ரிசல்ட் இருக்கவே இருக்கும். அது எப்பவுமே அப்படி இருக்காது என்கிறதே பிரச்சினை.
உதாரணமா தலை வலிக்கறது; சரின்னு ஒரு மாத்திரை எடுத்து போட்டுக்கறோம். போன வாரம் இப்படி போட்டுண்டப்பக்கூட நல்ல நிவாரணம் இருந்தது. ஆனா இப்ப இல்லை. ஏன்? தெரியாது!
லோகத்தில நடக்கற ஆயிரக்கணக்கான விஷயங்களில சிலது அப்படியே எப்பவுமே நடக்கும். உப்பை எப்போ எங்கே தண்ணில போட்டாலும் கரையும். சிலது பெரும்பாலும் நடக்கும். வெடி பட்டாசை கொளுத்தினா பெரும்பாலும் வெடிக்கும். ஒண்ணு ரெண்டு புஸ் ஆகும்! இப்படி ஒரு முழு ஸ்பெக்ட்ரம் இருக்கும்.
ஆனா நமக்கு வேண்டியது நடக்கணுமே!
இயற்கை சக்திகள் மேலே தேவதைகளுக்கு கண்ட்ரோல் இருக்கு. நமக்கு வேண்டியது மழை வெயில் என்கிறது போல இயற்கை சமாசாரம்ன்னா தகுந்த படி குறிப்பிட்ட தேவதையை வேண்டிப்பெறலாம். அதுக்கு சாபமோ ஹோமமோ தானமோ பயன்படலாம். இதோட ரிசல்ட் இப்படி அப்படித்தான் இருக்கும். ஏன்?
முன்னே பாத்தது போல கயிறு கட்டி இருக்கே! மாட்டு எவ்வளோ மேயும் என்கிறது கட்டுப்படுத்தி இருக்கு. நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது ன்னு ரமணர் சொன்னது போல.
சரி அது நடக்க வாய்ப்பு இருக்குன்னு வெச்சுப்போம். அப்ப?
அப்ப வாய்ப்பு இருக்கு சரி. ஆனா இந்த காலத்தில அதுக்கு தடங்கல்கள் அதிகம்.
ஜபம் செய்ய உக்காந்தா மனசு அதுல லயிக்கறது கஷ்டமா இருக்கு.
ஹோமம் செய்யலாம்ன்னா அதுக்கு கூட இன்னும் சிலர் வேண்டி இருக்கு. அவங்க எப்படி நடந்துக்கறாங்க என்பதை பொருத்து ரிசல்ட் மாறிப்போகிறது. இந்த காலத்தில் மனம் ஒன்றி கருத்தா ஹோமம் செய்யறவங்களை தேடினாக்கூட கிடைக்கறது சிரமமே! கனபாடிகள் கூட காலப்போக்கில மந்திரங்களை சரியா உச்சரிக்கறதுல கவனம் செலுத்தறதில்லை. செய்கை லட்சியம்; உணவு கட்டுப்பாடு போறாமை; பிரம்மச்சரியத்தை கடைபிடிக்காமை; ஹோம திரவியங்களில குறைகள் … ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்க இயலும். அதனாலும் பல சமயங்களில் ரிசல்ட் கிடைக்காம் போகிறது.
அப்ப இதை எல்லாம் செய்ய வேணாமா?
செய்யுங்க செய்யுங்க.
ஒண்ணு வேண்டிய ரிசல்ட் கிடைக்கும். இல்லைன்னா இதெல்லாம் சரிப்படாது; பகவானே நீ பாத்துக்கோன்னு சரணாகதி அடையத்தோணும். ரெண்டுமே நல்லது!

Friday, May 12, 2017

ஆன்மீக விசாரம் - 5

ஸோ செய்ய வேண்டியது இதை ஒழிக்கறது. எதையா? ஓ அது போன போஸ்டா? சரி சரி. வாசனையை ஒழிக்கணும்.
வாசனையை ஒழிச்சா சோறு நல்லா இருக்காதே ருசிக்காதேன்னு யாரோ கேக்கறாங்க. அது வேற வாசனை.
ரைட், இந்த வாசனை என்னது?

புதுசா ஒரு செயலை செய்யறோம். ரொம்ப கவனமா செய்வோம். புதுசு இல்லையா? அதை திருப்பித்திருப்பி செய்யறோம். செய்ய செய்ய அது பழகி போயிடும். அப்பறம் அசால்டா ஆட்டோமேடிக்கா செய்வோம். பழக்கம். ரொம்பவே பழக்கப்பட்டுட்டா அது வாசனை.
உதாரணமா ஒரு திருடன் இருக்கான். முதல் தரம் திருடப்போறான். பயந்துண்டே தயங்கி தயங்கி செய்வான். நாலஞ்சு தரம் ஆனா பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்சுடும். ஆனா இப்பவும் கொஞ்சம் கவனத்தோடத்தான் செய்வான். இதுவே இன்னும் பல தரம் திருடின பிறகு ஒரு அலட்சியமே கூட இருக்கும்! கை ஆட்டோமேடிக்கா திருடும்!
ரிப்ளெக்ஸ்ல செய்யறது, இன்ஸ்டின்க்ட்ல செய்யறது எல்லாம் வாசனையோட விளைவுதான்.

சரி சரி, புரிஞ்சுடுத்து. அதை ஒழிக்கறது எப்படி?

ம்ம்ம் ரொம்ப நாளா இது கஷ்டம்ன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்ப அவ்ளோ கஷ்டம் இல்லைன்னு தோணறது.
இந்த ஆட்டோமேடிக் செயலை நிறுத்தணும்.
அதுக்கு எந்த செயலையும் உடனடியா செய்யறதை நிறுத்தி கொஞ்சமே கொஞ்சமாவது யோசிச்சு செய்யணும். இதைப் பத்தி பேசிக்கொண்டு இருந்த போது ஒத்தர் சொன்னார். ஏதானாலும் முதல்ல நோ ன்னு சொல்ல பழகணும். (மனசுக்குள்ளத்தான்!) அப்பறமா நல்லது கெட்டது யோசிச்சு வேலை செய்யணும்!

இதையேத்தான் உசாநு என்கிற எமோஷனல் இன்டெலிஜன்ஸ் பத்தி பேசறப்பவும் சொல்லறாங்க. தானியங்கி செயல் சொல் வேணாம்; புத்தி பூர்வமா செயலும் சொல்லும் இருக்கட்டும். இது பழக்கத்துக்கு வர கொஞ்ச நாளாகும்; பரவாயில்லை

Thursday, May 11, 2017

ஆன்மீக விசாரம் - 4

சரி. ஏதும் செஞ்சாத்தானே பிரச்சினை? நா ஒண்ணுமே செய்யாம இருக்கட்டுமான்னா…. அதுவும் தப்புதான். முழுக்க சரணாகதி செய்யாமல் இருக்கறப்ப செயலற்று இருக்கிறது தப்பு. செய்யாமையானும் கெடும்ன்னு வள்ளுவர் சொல்லி இருக்காரில்லே?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும்(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)
நாம செய்ய வேண்டியது பலதும் இருக்கு. தர்மசாஸ்திரம் செய்யச்சொல்லி விதிச்சது சிலது. லௌகீக வாழ்க்கை வற்புறுத்துவது சிலது. இதை செய்யாம விட்டாலும் பிரச்சினை வரும்.
குடும்பக்கடமை இருக்கிற க்ருஹஸ்தன் சும்மா செயலத்து இருக்கேன்னு ஆரம்பிச்சா என்ன ஆகிறது? வேலை செய்து குடும்பத்தை காப்பாத்தற கடமைன்னு அவனுக்கு ஒன்று இருக்கில்லையா? அதை செய்யாமையானும் கெடும்.
பின்ன சும்மா இருக்கக் கூடாதா? சும்மா இருன்னு நிறைய பேர் சொன்னதா சொல்லறாங்களேன்னா...
யார் பகவானிடம் முழுக்க முழுக்க சரணடைஞ்சுட்டாங்களோ அவங்க சும்மா இருக்கலாம். என்ன நடக்கணுமோ அதை பகவானே பாத்துப்பார் என்கிற கான்பிடன்ஸ் இருக்கும்.
அப்ப அவர் என்ன தனியா உக்காந்து கொண்டு விட்டத்தை பாத்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாம கிடைப்பாரா?
இல்லை; அப்படி இல்லை.
 நான் செய்யறேன் என்கிற நினைப்பு இல்லாம அப்பப்ப என்ன தோணுகிறதோ அதை அவர் செஞ்சு கொண்டு இருப்பார். எதை எப்ப எப்படி செய்யணுமோ அதை அப்ப அப்படி செய்ய பகவான் தூண்டி விடுவான். இவரும் செய்து விடுவார். கர்மா புதுசா ஒட்டாது!

இது ரொம்ப முதிர்ந்த நிலை. இந்த அளவுக்குக்கூட போக வேணாம். இந்த பாதையில அடி எடுத்து வெச்சுட்டால் கொஞ்ச நாளில செய்ய வேண்டியது / போக வேண்டிய பாதை தானா முன்னே வந்து நிக்கும். அப்ப கேள்வி கேக்காம அந்த வழியில போக தெரிஞ்சுக்கணும். நான் இந்த வழியில போகணும்ன்னு நீ நினைக்கறயா? ரைட்டு! ன்னு போய்கொண்டே இருக்கணும். மாட்டவே மாட்டேன் எனக்கு இதுதான் வேணும், இப்படித்தான் போவேன்னு சில சமயம் அடம் பிடிப்போம்; அதுக்குத்தக்க ரிசல்ட் கிடைக்கும்! அப்ப சரணாகதி செயலில் இல்லை; அஹங்காரமே இருக்கு. அதான் பிரச்சினை. ரிசல்டை பாக்கிறப்ப அடடா தப்பு பண்ணிட்டோமேன்னு நொந்துப்போம். அப்பவாவது அடுத்த முறை அடம் பிடிக்காம இருக்கத் தோணுமா? தோணாது! ஏன்னா அதுதான் வாசனை என்கிறது, ரொம்ப பலமானது! 

Wednesday, May 10, 2017

ஆன்மீக விசாரம் - 3

எதையும் நீ செய்யலை; அவன்தான் செய்விக்கிறான் என்கிறதுக்கு நான் சப்போர்ட் பண்ணாலும்… அது ஒரு ஆட்டிட்யூட். எதையாவது செஞ்சுட்டு அது நல்லா நடந்தா நா செஞ்சேன்னு சொல்கிறதும் தப்பா போனா நான் என்ன செய்ய? எல்லாம் அவன் செயல்ன்னு சொல்லறதும்… அதுல கொஞ்சம் நேர்மை காணலை! அப்படி இருக்கற வரை இது சரிப்படாது. செய்ய தூண்டப்படறதை செஞ்சுட்டு விட்டுட்டு. ரிசல்ட் என்னவா வேணா இருக்கட்டும். கவலைப்படாதே! இப்படி இருக்க முடிஞ்சா ரைட்!

அப்படி இருக்க முடியலையே! புத்திக்கு தெரியறது; மனசுக்கு தெரிய வேணாமோ? தெரியறதில்லை. என்ன செய்யலாம்?

விவகாரத்துக்கு அடுத்து பார்க்கிற பிலாசபி சரிப்படும்.

புல்வெளியில முளை அடிச்சு ஒரு மாட்டை கட்டி இருக்காங்க. அது எவ்வளவு தூரம் மேயலாம்? கயிறு கட்டி இருக்குமே அது அனுமதிக்கிற தூரம் மேயலாம். இந்த தூரத்துக்குள்ள மேயவோ மேயாம இருக்கவோ சுதந்திரம் இருக்கு. இப்படித்தான் நமக்கும் ஓரளவு ஒரு எல்லைக்குள்ளே சுதந்திரம் இருக்கு. இதுக்குள்ள செயல்பட்டு கிடைக்கிற கஷ்ட நஷ்டம் உன்னோடதே. கூடவே ஏற்படர கர்ம பலனும் உன்னுதே!
இத இன்னும் கொஞ்சம் விசாரிக்க நடுவில ஏதேனும் புதர், பெரிய கல்லுன்னு தடைகள் இருந்தா அது கயிறை கட்டுப்படுத்தி முழுக்க மேய விடாம தடுக்கும். இதை நீக்கிட்டா முழுக்க மேயலாம். இந்த தடைகள் நம்மோட கெட்ட கர்மா. தடை நீக்கம் பிராயச்சித்தம்.
இது வொர்கிங் பிலாசபி

Tuesday, May 9, 2017

ஆன்மீக விசாரம் - 2
கர்ம மார்கத்தில இன்னும் அதிக பிரச்சினை.

எது நம்மோட கர்மா என்கிறதிலேயே இந்த காலத்தில நிறைய பிரச்சினை. பல காலமா பழக்கத்தில இருந்த குலத்தொழில் என்கிறது காணாமப்போனதுல இந்த குழப்பம். கர்மா என்கிறதும் நாம் சொத்துக்காகவும் சோத்துக்காவும் செய்யற வேலை இல்லை. நம்மோட ஒவ்வொரு செய்கையும் நாம் செய்கிற கர்மாத்தான்.
இது நாம் செய்யவேண்டியதுக்கு இசைவா இருக்கா என்கிறது பெரிய கேள்வி. அதுக்குள்ளே இப்ப போக வேண்டாம்.
செய்கிற காரியத்தை ஒரு அர்ப்பண மனோ பாவத்தோட செய் என்கிறாங்க. இதுக்கு கடனை செய்; பலனை எதிர் பாராதே ன்னு கோட் செய்யறாங்க.
பகவான் சொன்னது அப்படி இல்லையே! ஆனாலும் இது எப்படியோ மிகவும் பரவலா ஆயிடுத்து. கர்மாவை செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு; பலன் இப்படித்தான் இருக்கணும்னு நீ சொல்ல முடியாது, அதுக்கு எப்பவுமே உனக்கு அதிகாரம் இல்லை. இப்படித்தான் பகவான் கிருஷ்ணர் சொன்னார். இதை தப்பா சொல்லப்போக "யோவ்! எதையும் எதிர்பார்க்காம யார்தான் எந்த காரியமும் செய்வாங்க?” ன்னு எள்ளி நகையாடும் நிலை வந்துடுத்து.
கர்மாவை செய்ய என்ன அதிகாரம் இருக்கு? இதையே கேள்வி கேக்கிறவங்களும் இருக்காங்க. எதுவும் அவனின்றி அசையாது; நீ என்ன செஞ்சாலும் அவன் ஸ்கீம்ல இல்லைன்னா நடக்காது; எதையும் நீ செய்யலை; அவன்தான் செய்விக்கிறான் - இப்படி பல பார்வைகள் இருக்கு. யோசிச்சுப்பாத்தா இதுல முரண் இல்லைன்னாலும் வியவகாரத்தில பல சிக்கல்கள் வருதே!
ஒரு வேலையை நாம் செய்யலாம்; செய்யாம இருக்கலாம்; வேறு விதமா செய்யலாம். இதுக்கு மனுஷனுக்கு ஒரு சாய்ஸ் இருக்குன்னே பெரியவங்க சொல்றாங்க.
அதே போல கிடைக்கிற ரிசல்ட் நாலு விதமா இருக்கலாமாம்.
நினைச்சது போல நடக்கலாம்.
நினைச்சதை விட இன்னும் நல்லாவே நடக்கலாம்.
நினைச்சது நடக்காமல் போகலாம்.
நினைச்சதை தவிர்த்து வேறு விதமா நடக்கலாம்.
உதாரணமா ரயில் ஏறி அடுத்த ஊருக்கு போக நினைக்கிறோம். ஸ்டேஷனுக்கு போறோம். அது போலவே நடக்கலாம். ஸ்டேஷனுக்கு போய் இறங்கினா நண்பர் ஒத்தர் அட, எப்படி இருக்கீங்க? கார்ல போலாமேன்னு சொகுசா கொண்டு விடலாம். ட்ரெய்னை தவற விடலாம். போற வழில ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரிக்கு போகலாம்!
ஆக என்ன செய்யலாம் என்கிறதுக்கு உன் சாய்ஸ் இருக்கு. அது எப்படி நடந்து முடியும் என்கிறது உன் கையில இல்லை. உன் கையில இல்லாத பல விஷயங்கள் அதுல இன்வால்வ் ஆயிருக்கு. கிளம்பி ஸ்டேஷன் போகிறது உன் கையில இருக்கு. ஆனா போகிற வழில நடக்கிற திடீர் பந்த் உன் கையில் இல்லை

Monday, May 8, 2017

ஆன்மீக விசாரம் - 1
சில விஷயங்கள் திருப்பித்திருப்பி அசை போட்டாலும் அது உள்ளே போறது கொஞ்சம் கஷ்டம்தான். ஹிந்து பிலாசபில ஒரு தர்சனம் - பார்வையா இல்லை. அதுவே அதோட சிறப்பும் கூட. அவரவர் புரிதல் மட்டத்துக்கு தகுந்தபடி சில விஷயங்கள் புலப்படும். அது புரிஞ்ச பிறகு அடுத்த லெவல்லேந்து யோசிக்கணும். இந்த விசாரம் ஒரு தொடர் கதை. ஒரு ஜன்மத்தில முடியற விஷயமும் இல்லை. ஒவ்வொருவரோட ஆன்மிக முன்னேற்றமும் அடுத்த ஜென்மத்துக்கு எடுத்துப்போகப்படும். அதனால பிரச்சினை இல்லை.

கடவுள் இருக்கார்னும் அவரை கெஞ்சி கேட்டா கேட்டதை கொடுப்பார்னும் நம்பறது அடிப்படை லெவல். இது பாமர லெவல்ன்னும் சொல்லலாமோ என்னவோ. பல சமயம் பாமரர்கள் பேசறது பெரிய ஞானி பேசறா மாதிரிக்கூட இருக்கும்! அது டிஎன்ஏ ல இருக்கு!
இது பய பக்தி. இதுவேத்தான் தப்பு பண்ணா சாமி கண்ணை குத்தும் ரீதில நினைக்க வைக்கிறது. அது அந்த அளவுக்கு நல்லதே. ஆனா சிந்திக்கிற திறன் இருக்கறவங்க இதை தாண்டனும். பல நாத்திகர்களும் திட்டற இந்த வணிக உறவை தாண்டி அப்பப்ப ஏதேனும் வேணும்ன்னு கேட்டாலும் அது இல்லாதப்பவும் பக்தி பண்ணிக்கொண்டு இருக்கணும். இன்னும் மேலே போக நீ எது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சரி. கொடுத்தா அது உன் ப்ரசாதமா எடுத்துக்கறேன்னு மனசு பக்குவம் ஆயிட்டா - ஆஹா அதுவே பக்தி மார்கத்தில வேண்டுவது! இதெல்லாம் சரியா புரிஞ்சவங்க ஆன்மிகம் வியாபாரம் ன்னு சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க. (அதையே வியாபாரம் ஆக்கலாம் என்கிறது வேற விஷயம்!) கடவுள்கிட்ட இதை கொடு அதை தரேன்னு பேரம் பேசறவங்க அடி மட்ட லெவல்ல இருக்காங்க அவ்ளோதான்.


கர்ம மார்கத்தில இன்னும் அதிக பிரச்சினை.

Friday, May 5, 2017

கிறுக்கல்கள் - 213

மாஸ்டரின் சீடர்களில் ஒருவர் பெரிய தவறு செய்துவிட்டார். மற்ற சீடர்கள் எல்லோரும் மாஸ்டர் எப்படி கடிந்துகொண்டு முன் உதாரணமான தண்டனை தருவார் என்று பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஒன்றுமே நடக்காமல் ஒரு மாதம் கடந்தது.

ஒருவருக்கு பொறுக்கவில்லை. நேரடியாக மாஸ்டரை அணுகி தவறு செய்தவரை கூப்பிட்டு விசாரித்து தண்டனை கொடுக்குமாறு கேட்டார். ‘இதுக்கெல்லாம் சும்மா பாராமல் இருக்க முடியாது. கடவுள் கண்களை கொடுத்து இருக்கிறார் அல்லவா?”

மாஸ்டர் சொன்னார்; “ஆமாம். கூடவே கண் இமைகளையும்!”


Thursday, May 4, 2017

கிறுக்கல்கள் - 212

நான் ஒத்தர் நடத்தையை மிகச்சரியா கணிச்சுடுவேன்!

ம்ம்ம்ம்! அது பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமா?

இல்லையா?


நல்லா கணிக்கறவருக்கும் மோசமா கணிக்கறவருக்கும் பொதுவா ஒரு தப்பு இருக்கு! கணிக்கிறதுதான் அது!

Wednesday, May 3, 2017

கிறுக்கல்கள் - 211
யாரோ ‘என் மனைவி வேற மாதிரி இருந்தா எனக்கு இன்னும் அதிகமா பிடிக்கலாம்’ ந்னு சொல்வது மாஸ்டர் காதில் விழுந்தது! கடலில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த தருணத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

ஆஹா! என்ன அழகான சூரிய அஸ்தமனம்!”

பக்கத்தில் இருந்த கப்பல் சக பயணி சொன்னார் ‘ம்ம்ம்! இடது பக்கம் இன்னும் கொஞ்சம் ஆரஞ்சு கலரா இருக்கலாம் இல்லே?’


மாஸ்டர் சொன்னார்: “மத்தவங்க எப்படி இருக்கணும் என்கிற உங்க மஞ்சள் கண்ணாடியை கழட்டிட்டு பாத்தா எல்லாருமே அழகா தெரிவாங்க!”

Tuesday, May 2, 2017

கிறுக்கல்கள் - 210

தத்துவ ஞானி பாரபட்சமில்லாத உண்மை பற்றி நீண்ட ப்ரசங்கம் செய்தார்.

மாஸ்டர் சொன்னார்நீங்க சொல்கிறது உண்மையில் சத்தியம் இல்லை. அது நீங்க ப்ரபஞ்சத்தை பார்க்கிற பார்வை. நீங்க உணருவது இந்த ப்ரபஞ்சத்தை இல்லை; உங்களோட மனநிலையைத்தான்.

அப்ப யாராலும் சத்தியத்தை உணர முடியாதா?

முடியுமே! எண்ணங்களை கடந்தவங்களால முடியும்!

அட! என்ன மாதிரி மனுஷங்க இவங்க?


தான்/ நான் என்கிற அஹங்காரத்தை இழந்தவங்க. அதுதான் ஒரு ப்ரொஜக்டர் போல வேற படத்தை காட்டிகிட்டு இருக்கு. அது இல்லைன்னா ப்ரபஞ்சத்தை உள்ளது உள்ளப்டி பார்க்கலாம்!

Monday, May 1, 2017

ஶங்கர ஜயந்தி அனுபவம்!

சில சமயம் ’பகவானே இதுக்குக்கூடவா இப்படி அனுக்ரஹம் செய்வே’ ந்னு கேட்கிற
அளவுக்கு பகவான் செய்துடுவான்.

நேத்திக்கு ங்கர ஜயந்தி. எங்கூர்ல இருக்கிற ங்கர பக்த ஜன சபாவில ஒவ்வொரு வருஷமும் சாயங்காலம் வேத கோஷத்துடன் ஊர்வலம் உண்டு. இந்த வருஷமும் கலந்துக்கச்சொல்லி கோரிக்கை இருந்தது. ஞாயிறு ட்ரைவர் லீவு என்கறதால நண்பர் ஒத்தரை அழைத்துப்போகச்சொல்லி இருந்தேன். அவரும் சரியாக வந்துவிட்டார். சரியான நேரத்துக்கு போய்விட்டோம். ஆனால் அந்த கட்டிடம் பூட்டி இருந்தது. சரி என்று பாடசாலைக்கு போனோம். போகிற வழியில் நிர்வாகி வந்து கொண்டு இருந்தார். காரை நிறுத்திவிட்டு ஹாலுக்குப்போனோம். நிர்வாகி தவிர நாங்கள் இரண்டு பேர்தான் இருந்தோம். ‘ கிடக்கட்டும்ப்பா ஊர்வலம் ஆரம்பிக்கும் வரை பாராயணம் செய்வோம்’ என்று வேத பாராயணத்தை ஆரம்பித்தோம். இன்னும் இரண்டு பேர் சேர்ந்தார்கள். உபநிஷத் இரண்டு பகுதி முடியும் போது ஊர்வலத்துக்கு ரெடி என்றார்கள். ‘என்ன இவ்வளவு பேர்தான் இருக்கிறோம்?’ என்றார் நண்பர். வேதம் முழங்க எண்ணி 4 பேர், ஊர்வலத்துடன் போக/ பூஜை செய்ய 2 பேர், ஜீப் ட்ரைவர் உதவியாளர்- இவ்வளோதான். நண்பரிடன் பகவத் கீதை பாராயணத்தை கேட்க 2 பேர்தான் இருந்தார்கள் என்று குறை பட்டுக்கொண்ட வித்வானிடம் ‘பகவானுக்கு அர்ஜுனன் ஒத்தந்தான் இருந்தான் உனக்கு 2 பேர் இருந்தார்களா? பரவாயில்லையே!’ என்று சமாதானப்படுத்திய மஹா பெரியவர் கதை சொன்னேன்.
பின் ஊர்வலத்தில் செல்ல இடத்தை பார்த்தோம். படங்களை ‘ஏளப்பண்ணி இருந்த’ ஜீப்புக்கு முன்னாலா பின்னாலா என்று கேட்டதற்கு முன்னால் என்றார் நிர்வாகி. முன்னே போய் நின்றால் அங்கே கூம்பு ஒலிபெருக்கி வைத்து கட்டி இருந்தது. எதுக்கு என்றால் இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலி பரப்புவோம் என்றார். அப்போ நாங்க சொல்லறது எங்களுக்கே கேட்காதே! பின்னால் போகிறோம் என்று பின்னால் போனோம். அங்கே பார்த்தால் ஜெனெரேட்டர் வண்டி!
இவ்வளவுதான் வேத சப்தத்துக்கு மரியாதையா என்று நொந்து கொண்டேன். சரி, பகவான் இதைத்தான் கொடுத்து இருக்கிறான். 20 -30 அடி இடைவெளி விட்டு பின்னே போவோம் என்று சொல்லி போக ஆரம்பித்தோம். ஆங்காங்கே வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்து பூஜை செய்து ப்ரசாதம் வாங்கிக் கொண்டார்கள்.
நாங்கள் அது வரை சந்தித்து இராத அனுபவம் ஏற்பட்டது. பூஜை முடித்துக்கொண்டவர்கள் வேத பாராயண கோஷ்டியைதனியாக வலம் வந்து தெருவில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்! ஆண்டவா, நான் சொன்னதை ஒரு பெரிய முறையீடாக எடுத்துக்கொண்டாயா? என்று தோன்றியது. வழக்கமாக அதிக பட்சம் ஓரிரு இடங்களில் கைகூப்புவார்கள். அதுதான் இது வரை நடந்து இருக்கிறது. இப்போது? வழி நெடுக இதேதான்! வலம் வந்த அரை மணியில் ஏழெட்டு இடங்களில் இது நடந்தேறியது! இது எனக்கல்ல; வேதத்துக்கு கிடைத்த மரியாதை என்று திருப்பித்திருப்பி கவனத்துக்கு கொண்டு வந்து கொண்டேன்!

இறைவன் பெரும் கருணையாளன்!

related facebook posting by our friend Sri.Jayaraman