Pages

Thursday, January 5, 2017

அந்தணர் ஆசாரம்- 10




வஸ்த்ரம் தரித்தல்:
ஜலத்திலிருந்து கரையை அடைந்த பின் இரண்டு வெளுப்பான துணிகளை உடுத்த வேண்டும். (க்ருஹஸ்தன் என்பதால் 2. ப்ரம்மச்சாரிக்கு ஒன்றே.) மண் கலந்த ஜலத்தால் கால்களை அலம்ப வேண்டும். தலை மயிரை உதறக்கூடாது.
நதி குளங்களில் ஸ்னானம் செய்தால் மேலே காய்ந்த வஸ்திரத்தை சுற்றிக்கொண்டு ஈர ஆடையை கழட்டி கீழே விட வேண்டும். கிணறு போன்ற இடங்களில் ஸ்னானம் செய்தால் உத்தரீயத்தை தலையில் சுற்றிக்கொண்டு கீழ் ஈரத்துணியை மேலாக எடுத்து போட வேண்டும். பூணூலை காதில் சுற்றிக்கொண்டு வஸ்திரம் தரிக்க வேண்டும்.
எந்த வஸ்திரத்தை தரிக்கக்கூடாது?
சிவப்பு நீலம் கருப்பு ஆகிய அதிக சாயமேற்றிய வஸ்திரங்கள்; ஈரமான வஸ்திரம்; நீல கருப்பு கரை போட்ட வஸ்திரம் ஆகியன விலக்கப்பட வேண்டும்.
கச்சமில்லாதவனும், வஸ்திரத்தின் நுணி பாகத்தை ஒரு பக்கம் செறுகிக்கொண்டு மற்றதை விட்டு வைக்கிறவனும், தலைப்பை விட்டு நடுவில் செறுகுகிறவனும்,மேல் தூக்கியோ அரைஞாண் கயிற்றிலோ கச்சம் கட்டியவனும் துணி உடுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள். அதே போல் அரைஞாண் கயிறு கட்டாதவனும் துணி உடுத்தாதவனே. இது இல்லாமல் ஒருவன் செய்யும் கர்மா நிஷ்பலனாகும். தட்டுச்சுற்று வேட்டியும் உகந்ததல்ல. எப்படியோ இது தமிழ்நாட்டில் ப்ரம்மச்சாரிகளுக்கு தேசாசாரமாக ஆகியிருக்கிறது. இவர்கள் செய்யும் கர்மா ஆசுரமாகும்; அதாவது அசுரர்களுக்கு உவப்பளிக்கும்.
உலர்ந்த வஸ்திரம் இல்லாத போது ஆபத் தர்மமாக ஈர வஸ்திரத்தை ஏழு முறை உதறி கட்டிக்கொள்ளலாம்.

சுசீவஹ என்ற மந்திரத்தால் புரோக்ஷித்து; தேவஸ்யத்வா என்ற மந்திரத்தால் எடுத்து; அவதூதம் என்ற மந்திரத்தால் உதறி; தரணி அலல்து உதுத்யம் என்ற மந்திரங்களால் சூரியனிடம் காண்பித்து; ஆவஹந்தி என்ற மந்திரத்தால் தரித்துக்கொள்ள வேண்டும்.

No comments: