Pages

Tuesday, August 30, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 12





மிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
”என்னப்பா அப்படி குழப்பம்?” என்று கேட்டவாரே டீக்கடைகாரருக்கு ஜாடை காட்டினார் பெரியவர்.
நீண்ட மூச்சு விட்டான் இளைஞன்.
”அடுத்த வாரம் குல தெய்வத்தோட கோவிலுக்கு போகணும். அத நினைச்சு குழப்பமா இருக்கு.”
அட! இதுல என்ன குழப்பம்?’
எங்க வீட்டுப்பழக்கம் அங்கே போய் கிடா வெட்டி படைச்சுட்டு வரது.”
சரிதான். போய் வாயேன்?”
என்ன இவ்வளோ சுலபமா சொல்லிட்டீங்க? அது பாபம் இல்லையா? எங்க தாத்தா எல்லாம் அசைவம் சாப்டுகிட்டு இருந்தாலும் எங்க அப்பா சைவத்துக்கு மாறிட்டாரு. எங்க வீட்டில அசைவம் சமைக்கறதும் இல்லே; சாப்பிடறதும் இல்லே! கிடா வெட்டறது பாபம் இல்லையா?”
கடைக்காரர் கொடுத்த டீயை சற்று நிதானமாகவே உறிஞ்சினார் பெரியவர்.
இல்ல!”
என்னது? இல்லையா? என்னங்க பெரியவர் நீங்க போய் இப்படி சொன்னா…...”
என்ன தப்புன்னு நீ சொல்லேன்!”
உசிரு போயிரும்!”
ஆமா!”
என்ன ஆமா? அது தப்பில்லையா?”
ஆமா, உங்க வீட்டில நாய் வளக்கறயோ?”
ஆமா”
அதுக்கு சாப்ட என்ன போடறே?”
சோறு மட்டும்தான்”
அது மாமிசம் சாப்டாதா?”
போடறதில்லே! போட்டாக்கூட சாப்டாது!”
பூனை வளக்கறயோ?”
இல்ல. ஆனா ரெண்டு பூனைங்க அது பாட்டுக்கு வரும் போகும். ஏதாவது எப்பவாவது யாரான்னா போட்டா தின்னுட்டுப்போகும்”
அது அசைவம் சாப்பிடுமோ?’
சாப்பிடுமே! வீட்டில இருக்கற எலி எல்லாத்தையும் அதுக பிடிச்சிட்டு போய் சாப்டும். அதுக்குத்தானே வீட்டுக்குள்ள அனுமதிக்கறோம்.”
சரி. சிலர் - ரொம்பவே அரிதா - புலி சிங்கம் வளப்பாங்க. அவங்க மிருகங்கள் மேல ரொம்பவே அன்பு செலுத்தறவங்க. எதேனும் ஜூ ல வேலை பாத்துகிட்டு இருக்கலாம்.”
ஆமா. அந்த மாதிரி சிலர் பத்தி பத்திரிகைல படிச்சு இருக்கேன்.”
அவங்க அந்த புலிக்கோ சிங்கத்துக்கோ என்ன போடுவாங்க? தயிர் சாதமா?”
உரக்கச்சிரித்தான் இளைஞன். “தயிர் சாதமா? ஹாஹ்ஹாஹ்ஹா! நிச்சயமா இல்லே. மாமிசம்தான் போடுவாங்க.”
ஏன்?”
அதுங்களுக்கு அதுதான் பழக்கம்.”
அதே மாதிரிதான் உங்க குல தெய்வத்துக்கும் பழக்கம்!”
திகைத்துப்போய் அமர்ந்திருந்தான் இளைஞன்!
நம்ம கற்பனை ப்ரம்ம லெவலுக்கு போகலை. நம்ம கால் இந்த பூமிலத்தானே இருக்கு? அப்ப இந்த பூமியோட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கணும். இந்த குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த, முக்காலத்திலும் இருக்கும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் இல்லை. தேவதைகள். இவங்க நம்ம மாதிரி இன்னொரு படைப்பு. இவங்களுக்கு கோப தாபங்கள் உண்டு. அதனால கருணை வாய்ந்த தெய்வம் ஏன் இப்படி கேக்குதுன்னு கேள்வி கேக்க முடியாது! இவங்களுக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு தேவதையையும்வழி பட ஒவ்வொரு ரூல்! தேவதைகளை நம்பி அவற்றுக்கான சட்ட திட்டங்களை கடை பிடிச்சுத்தான் வழிபாடு செய்யணும். குல வழிபாடுகளை அவ்வளோ சுலபமா விட்டுடக்கூடாது. இன்னைக்கு நிறைய பேருக்கு வர பிரச்சினைகள் எல்லாம் முன்னோர்களுக்கு சரியா திதி கொடுக்காததாலேயும் குல தெய்வ வழிபாடு செய்யாததாலேயும்தான் வருது. நீயும் அதுல மாட்டிக்காதே”

சற்று நேரத்தில் இளைஞனின் திகைப்பு நீங்கி அவன் சுற்றும் முற்றும் பார்க்கும் போது பெரியவர் எப்போதோ கிளம்பி விட்டு இருந்தார்.

No comments: