Pages

Wednesday, June 29, 2016

கிறுக்கல்கள்! - 135



தான் சந்தித்த சிந்தனையாளர் ஒருவரைப்பற்றி சொன்னார்:
இது கிறுக்குத்தனமான உலகம். பணக்காரர்களிடன் நிறைய பணம் இருக்கிறது; ஆனால் அவர்களுக்கு கடனுக்கு பொருட்களை விற்கிறார்கள். ஏழைகளிடம் பணம் இல்லை; ஆனால் அவர்களுக்கு கடன் கிடையாது, அவர்கள் பணம் கொடுத்தே எதையும் வாங்க வேண்டும்.”
ம்ம்ம்.. அப்படியானால் என்ன செய்யலாம்?”
அப்படியே மாற்றவேண்டும். பணக்காரர்கள் காசு கொடுத்து பொருட்களை வாங்கட்டும். ஏழைகளுக்கு கடனில் பொருட்களை கொடுக்கலாம்.”
அப்படி கடனுக்கு பொருள் கொடுக்கும் கடைக்காரர் சீக்கிரமே ஏழை ஆகிவிட வேண்டியதுதான்.”
ரொம்ப நல்லது! அப்புறம் அவரும் கடனுக்கு பொருட்களை வாங்கலாம்!”

Tuesday, June 28, 2016

கிறுக்கல்கள்! - 134


கிருத்துவ பிரசங்கி ஒருவர் மாஸ்டரை எப்படியும் கடவுள் நம்பிக்கை குறித்த தெளிவான கருத்தை சொல்ல வைத்து மாட்டி வைத்துவிட வேண்டும் என்று முடிவுடன் வேலையில் இறங்கினார். மாஸ்டரை சந்தித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்.
கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?”
இதென்ன கேள்வி? ஆமாம்.”
அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார். அதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?”
ஆமாமாம். நிச்சயமாக!”
கடவுளை படைத்தவர் யார்?”
நீங்கள்தான்!”
என்னது? நீங்க நாந்தான் கடவுளைப்படைத்தவன் என்று நிஜமாக என்கிட்ட சொல்கிறீர்களா?”

மாஸ்டர் அமைதியாக சொன்னார். “நீங்க எப்ப பாத்தாலும் யாரைப்பத்தி நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கீங்களோ அவரை- ஆமாம் நீங்கதான் படைத்தீங்க!”

Saturday, June 25, 2016

கிறுக்கல்கள்! - 133


மனித பிரச்சினைகள் கொள்கை அளவில் தீர்வுகள் காண்பதை கடுமையாக புறக்கணிப்பவை.

மனித உரிமை போராளி ஒருவர் மாஸ்டரை அழைத்துப்போய் ஒரு மண் தோண்டும் இயந்திரத்தைக்காட்டினார். “பாருங்கள்! இது நூறு மனிதர்களின் வேலையை முழுங்கிவிட்டதுஇதை சுக்கு நூறாக்கிவிட்டு நூறு பேரை மண் வெட்டியுடன் வேலையில் இறக்க வேண்டும்.”

மாஸ்டர் சொன்னார்: “ரொம்ப சரி! ஆயிரம் பேரை கையில் ஒரு ஸ்பூனுடன் வேலையில் இறக்கினால் இன்னும் நல்லது!”

Friday, June 24, 2016

அந்தணர் ஆசாரம் - 3


வாய்க்கொப்பளித்தலும் ஆசமனமும்:

சௌளம் செய்த பிறகு கைகால்களை மண் நீர் ஆகியவற்றால் கழுவி சிகை, கச்சம் ஆகியவற்றை சரியாக கட்டிக்கொண்டு வாய் கொப்பளித்து ஆசமனம் செய்ய வேண்டும்.
ப்ராம்ஹணனுடைய வலது பக்கம் தேவதைகள் இருக்கிறார்கள். ஆகவே வாய் கொப்பளித்து நீரை இடது பக்கமாகவே உமிழ வேண்டும். மலம் கழித்த பின் 12 முறையும், சிறுநீர் கழித்தபின் 4 முறையும் உணவுக்குப்பின் 16 முறையும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
ஒரு நாளில் பல முறை செய்யக்கூடிய ஆசமனத்தை சரியான தெரிந்து கொண்டு செய்தல் நலம். பலரும் தவறாகவே செய்கிறார்கள்.

முதலில் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ குக்குடாசனத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அதாவது பாதங்கள் பூமியில் அழுந்த உட்கார்ந்து, கைகள் முழங்கால்களுக்கு நடுவில் இருக்க வேண்டும். பூணூல் உபவீதியாக இருக்க வேண்டும். தோளை வஸ்திரத்தால் மறைத்து இருக்கக்கூடாது. சிகை பிரிந்து இருக்கக்கூடாது. தெற்கு, மேற்கு பார்த்து ஆசமனம் செய்தால் ஸ்னானம் ப்ராயச்சித்தமாகும்.

வலது கையை குவித்துக் கொண்டு, அதில் மத்தியில் உள்ள இரண்டு ரேகைகளும் முழுகும்படி (உளுந்து மூழ்குமளவிற்கு என்றும் சொல்வதுண்டு) நீர் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் இவற்றை நீட்டி கையை குவித்துக்கொண்டு; உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல், மணிக்கட்டை வாய் அருகில் படாமல் வைத்து கையை விரல்கள் மேலே போகும்படி உயர்த்தினால் நீர் வாய்க்குள் போய்விடும். இதுவே ஆசமனம் எனப்படும். இப்படி 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் இது எச்சில் என்பதால் கையால் நீரை தொட்டுக்கொள்ள வேண்டும்.

ஆசமனம் செய்ய முடிந்த வரை சுத்தமான நீரே வேண்டும். வென்னீர், நுரை உள்ள நீர், உப்பு கலந்த நீர் ஆகியன கூடாது. குளித்தபின் கிணற்றில் எடுப்பதோ ஆற்றில் ஓடும் தண்ணீரில் எடுப்பதோ உசிதம். கடல் தண்ணீரில் எப்போதும் ஆசமனம் செய்யக்கூடாது.

உணவு உண்ணல், ஹோமம், தானம், பக்‌ஷணம் தின்பது, தானம் வாங்குதல் ஆகியவற்றில் ஆசமனம் இரு முறை செய்யச்சொல்லி இருக்கிறது. பழங்கள், கரும்புத்துண்டு, தாம்பூலம் ஆகியவற்றை உட்கொண்ட பின் ஆசமனம் செய்யத்தேவையில்லை.

Thursday, June 23, 2016

கிறுக்கல்கள்! - 132


ஒரு சீடன் ஆர்வத்துடன் கேட்டான்: ஞானம் பெற நான் செய்ய வேண்டியதென்ன?
உள்ளதை உள்ளபடி பார்ப்பது.
சரி. அதற்கு நான் செய்யக்கூடியது என்ன?
மாஸ்டர் புன்னகைத்தார். உனக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு!
கெட்ட செய்தியை சொல்லுங்க.
உள்ளதை உள்ளபடி பார்க்க நீயா ஒண்ணும் செய்ய முடியாது. அது ஒரு வெகுமதி!
ம்ம்ம் சரி நல்ல செய்தியை சொல்லுங்க.
உள்ளதை உள்ளபடி பார்க்க நீயா ஒண்ணும் செய்ய முடியாது. அது ஒரு வெகுமதி!

Wednesday, June 22, 2016

அந்தணர் ஆசாரம் - 2


அடுத்து சௌசம். சௌசம் என்றால் சுத்தி செய்து கொள்ளுதல். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். பின் ஆசமனம் செய்ய வேண்டும். அதற்குப்பின் காலை கடன்களை முடிக்கப்போகலாம். அந்த காலத்தில் பூமியில்தான் ஜலத்தையோ மலத்தையோ விடுவதை செய்தார்கள். இந்த காலத்தில் மண் கிடைப்பதே பெரும் பாடாக இருக்கிறது. சௌகரியம் போல செய்யவும். ஜலத்தையோ மலத்தையோ விடும் போது காறித்துப்பக்கூடாது. ஒரு துணியால் தலையை மூடிக்கொள்ள வேண்டும். பகலில் வடக்கு பார்த்து உட்கார வேண்டும். இரவில் தெற்கு. ஈரமான உடையுடன் செய்யலாகாது. அப்படி செய்துவிட்டால் தலை குளிக்க வேண்டும். எண்ணை தேய்த்துக்கொள்வது, வாந்தி எடுத்த பிறகு போன்ற காரியங்களுக்குப்பின் அவற்றுக்கான சுத்தியை செய்து கொண்ட பிறகே ஜலத்தையோ மலத்தையோ விடலாம்.

முன் காலத்தில் இதற்கு முன் கூட்டியே ஜலத்தையும் சுத்தமான மண்னையும் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இந்த காலத்தில் மண்ணால் சுத்தி செய்து கொள்வது அனேகமாக இல்லை. அதற்கு தகுந்த மண்ணும் இல்லை. கங்கை கரையில் மண்ணை பார்த்து இருப்போருக்கு எப்படிப்பட்ட மண் தேவை என்று புரியும். அப்படிப்பட்ட மண் கிடைத்தால் அதனால் சுத்தி செய்து கொள்ளுவது சிலாக்கியமே.

சாலை, சாம்பல், மாட்டுக்கொட்டில், வாயு, அக்னி, சூரியன், சந்திரன், ப்ராம்ஹணன், பசு ஆகியோர் எதிரில் இதை செய்யலாகாது. மலை உச்சி, ஆற்றுப்படுகை ஆகிய இடங்களிலும் கூடாது. இப்படி செய்தால் விவேக புத்தி நசித்துவிடும்; பைத்தியம் ஆவார்கள் என்பது சாஸ்த்திரம்.

முக்கியமாக இந்த ஜல மல விசர்ஜன காலத்தில் பூணூலை நிவீதியாக தரித்துகொண்டு வலது காதில் சுற்றிக்கொள்ள வேண்டும். இதை மறந்து போனால் வேறு பூணூலை தரித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இவை அனைத்தும் தனது விஷயத்தில். பிறருடைய கழிவுகளையோ மனித எலும்பு, ரத்தம் ஆகியவற்றையோ தொட நேர்ந்தால் அவற்றை நனறாக கழுவிவிட்டு தலை குளித்து சுத்தி அடையலாம்.

இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறவர்கள் இருக்கலாம். அப்படி இல்லை. முயன்றால் முடியும். அவற்றை செய்வதால்தால் ப்ராம்ஹணனுக்கு பெருமை இருக்கிறது. சௌசம் ஆசாரம் இல்லாதவனுடைய காரியங்கள் எதிர்ப்பார்த்தப் பலனை தரா.

Tuesday, June 21, 2016

கிறுக்கல்கள்! - 131


மடாலயத்தின் முன் ஒரு கும்பல் கூடி மாஸ்டரை நோக்கி பாடல்களை பாடிக்கொண்டு இருந்தது. அவர்கள் கைகளில் “ஏசுவே பதில்” என்னும் வாசகம் தாங்கிய பதாகைகள். அவர்களுள் சிடுசிடுவென்று இருந்த ஒருவரை அணுகி மாஸ்டர் கேட்டார்: "சரிதான்; ஆனா கேள்வி என்ன?"

அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு “ஏசு கேள்விக்கு பதில் அல்ல; நம் பிரச்சினைகளுக்குத்தான் பதில்” என்றார்.

மாஸ்டர் “ ஓஹோ! சரிதான். அப்படியானால் பிரச்சினைதான் என்ன?” என்று கேட்டார்!

பின்னால் சீடர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார்: “நிஜமாகவே ஏசுதான் பதில் என்றால் ஏசு என்பதன் அர்த்தம் இதுதான்; யார் பிரச்சினையை உருவாக்குகிறார்கள், எப்படி என்பதன் தெளிவான புரிதல்.”

Monday, June 20, 2016

அந்தணர் ஆசாரம் - 1


இந்த தொடருக்கு அந்தணர் ஆசாரம் என்று தலைப்பு கொடுத்து இருந்தாலும் யாரும் அனுசரிக்கக்கூடியவையே. ஹைஜீன் என்று சொல்லப்படும் பல விஷயங்களும் இதில் அடங்கும். சிலவற்றுக்கு காரணம் வெளிப்படையாக தெரியும். சிலவற்றுக்குத்தெரியாது.
தர்ம சாஸ்த்ரம் என்று ரிஷிகள் தொகுத்தவையாதலால் ஏன், எதற்கு, காரணம் தெரிந்தால்தான் அனுஷ்டிப்பேன் என்று சொல்லாமல் ரிஷிகள் சொன்னவை நமக்கு நலம் பயப்பனவாகவே இருக்கும் என்ற தெளிவுடன் அணுகுதலே சிறப்பு.
-----

முதலில் நாம் தினசரி செய்யும் வேலைகளைக் குறித்து பார்த்துவிடலாம்.
காலை எழுந்திருக்கிறோம். எப்போது எழுந்திருக்க வேண்டும்? ப்ராம்ம முஹூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். அது எப்போது? அது ’ஏர்லி மார்னிங்க் எய்ட் ஓ க்ளாக்’ இல்லை! ஒரு நாழிகை என்பது 24 நிமிஷங்கள். இரண்டு நாழிகை ஒரு முஹூர்த்தம். காலை சூர்ய உதயத்துக்கு முன் இருக்கும் முஹூர்த்தம் ரௌத்ரம். அதுக்கு முந்தைய முஹூர்த்தம்தான் ப்ராம்ம முஹூர்த்தம். அதாவது காலை ஆறு மணிக்கு சூர்ய உதயம் இருந்தால் காலை மணி 4-24 முதல் 5-12 வரை. இது கணக்குக்கு பொதுவாக சொன்னது. கால நிலையை அனுசரித்து இரவு நேரம் அதிகமாகவோ (குளிர்நாட்கள்) குறைவாகவோ (வெயில் நாட்கள்) ஆகும் இல்லையா? இரவு நேரத்தை நாலாக பிரித்தால் ஒரு பகுதி ஒரு யாமம். ஒரு யாமத்தில் மூன்றே முக்கால் முஹூர்த்தம். இதுவே சரியான கணக்கு.

காலை எழுந்தவுடன் நேற்றைய தினத்தில் என்ன என்ன தர்மங்களை செய்தோம்; என்ன நியாயமாக சம்பாதித்தோம்; இன்று செய்ய வேண்டிய தர்மங்கள் என்ன; இன்றைக்கு மற்றவர்களுக்கு கெடுதல் ஏற்படாமலும் நமக்கு பாபம் சம்பவிக்காமலும் என்ன சம்பாதிக்கலாம்; நாளாக ஆக மரணம், வ்யாதி, சோக மோஹங்கள் அதிகமாகிவிடுமே, அப்போது என்ன செய்வோம் என்பன குறித்து யோசிக்க வேண்டும்.
பின் இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

இறைவனின் நாமாக்களை உரக்கச் சொல்ல வேண்டும். இதனால் பாபங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும். சிலர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் வேத அத்யயனம் செய்தவன் பாக்கியசாலி. பசு, அக்னி, தீக்‌ஷிதர் ஆகியோரை தரிசனம் செய்தவன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் விடுபடுவான், ஆபத்துகள் வரா எனப்படுகிறது.

Friday, June 17, 2016

கிறுக்கல்கள்! - 130



மக்கள் தமக்கு என்று ஒரு கடவுளில் நம்புகிறார்களா இல்லையா என்பது பற்றி மாஸ்டருக்கு கவலையே இல்லை என்பது அவரது சீடர்களுக்கு பெரிய உளைச்சலாக இருந்தது.

மாஸ்டர் ஒரு நாள் மேற்கோள் காட்டினார்: “ நாம் நம்புவதை நிறுத்தும் நாள் கடவுள் இறந்துவிடுவதில்லை. ஆனால் எது இதன் மூலம் என்றே புரியாத, எப்போதும் புதுப்பிக்கப்படும் பேராச்சரியமான ஒரு ஒளி வெள்ளத்தால் நாம் என்றைக்கு ஒளிரச்செய்யப்படவில்லையோ அன்றே நாம் அழிந்துவிடுவோம்!”
 -  டாக் ஹம்மர்ஹுவேல்ட்


Thursday, June 16, 2016

கிறுக்கல்கள்! - 129


கடவுள் என்கிற டாபிக் எப்போது எழுந்தாலும் மாஸ்டர் சொல்லுவார் கடவுள் உண்மையில் மனித மனதுக்கு அகப்படாதவர். ஒரு புதிர். கடவுளைப்பற்றி யார் எது சொன்னாலும் அது மக்களாக அர்த்தம் செய்து கொண்ட கருதுகோளே தவிர அது உண்மை என்று சொல்ல முடியாது.
ஒரு நாள் விளக்க முற்பட்டார். கடவுளைப்பத்தி ஒண்ணுமே சொல்ல முடியாது. அவர் சொற்களுக்கு அப்பாற்பட்டவர். அதனால அவர் உலகை உருவாக்கினார்ன்னோ கடவுள் நம்மை நேசிக்கிறார்ன்னோ கடவுள் கிரேட்ன்னோ ஒண்ணுமே சொல்ல முடியாது. வேணுமானா கடவுள் என்கிற நம்முடைய கருதுகோள் உலகை உருவாக்கித்து; நம்மை நேசிக்கிறது; க்ரேட் ன்னு சொல்லிக்கொள்ளலாம்.
ஒரு சீடன் கேட்டான், அப்ப கடவுள் பத்திய நம் கருதுகோள்களை எல்லாம் தூக்கிப்போட்டுடணுமா?
மாஸ்டர் சொன்னார்: நீ அதை உருவாக்காம இருந்தா தூக்கிப்போட வேண்டிய அவசியமே வந்து இருக்காது!

Wednesday, June 15, 2016

கிறுக்கல்கள்! - 128



மாஸ்டர் தன்னுடைய இந்த கதையை தானே சொல்லுவதை பெரிதும் விரும்புவார்.
முதல் குழந்தை பிறந்தது. ஒரு நாள் குழந்தையின் தொட்டில் இருந்த அறைக்கு போன போது தன் மனைவி தொட்டில் அருகில் பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டார். அவர் முகத்தில் ஒரு பிரமிப்பு; அவநம்பிக்கை; பரவசம்; புளகாங்கிதம்!
மாஸ்டருக்கு ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது!
சத்தமில்லாமல் மெதுவாக மனைவியை அணுகி முணுமுணுத்தார் “ டியர்! நீ என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை மிகச்சரியாக நான் அறிவேன்!”
சற்று திகைத்த மனைவி சொன்னார். ஆமாம்! தொட்டில் எப்படி இவ்வளோ குறைச்சலான விலையில கிடைச்சதுன்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கேன்!

Tuesday, June 14, 2016

கிறுக்கல்கள்! - 127



ஞானம் எப்படி வரும் என்று மாஸ்டர் விளக்கினார். உள்ளதை உள்ளபடி மக்கள் பார்ப்பதில்லை. பார்ப்பது எதுவானாலும் தாமே தம் சௌகரியதுக்கு விளக்கம் கொடுத்துக்கொள்கிறார்கள். அப்படி இல்லாமல் உள்ளதை உள்ளபடி பார்த்தால் ஞானம் பிறக்கும்.
சீடர்கள் விளக்கச்சொன்னார்கள்.
பதிலுக்கு வழக்கம் போல ஒரு கதை வந்தது.
இரண்டு கத்தோலிக்கர்கள் ஒரு சாலையில் கடுமையான சீரமைப்பு வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அந்த இடத்துக்கு அருகில் ஒரு விலைமாதர் குடியிருப்பு இருந்தது.
மாலை ஆன போது ஒரு ராபி அந்த குடியிருப்புக்குள் போவதை பார்த்தார்கள் “ ஹும் பாத்தியா? வேறென்ன செய்வாங்க! இவங்க இப்படித்தான்.”
கொஞ்ச நேரத்தில் ஒரு ப்ராடஸ்டண்ட் பாதிரி உள்ளே போனார்.
ஒண்ணும் ஆச்சரியமில்லே! இவங்களும் இப்படித்தான்!”
இன்னும் கொஞ்ச நேரமாயிற்று. உள்ளூர் கத்தோலிக்க பாதிரி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முக்காடு போட்டுக்கொண்டு உள்ளே போனார்.
பாத்தியா? ஐயோ பாவம். யாரோ சாகிற தறுவாய்ல இருக்காங்க!”

Monday, June 13, 2016

கிறுக்கல்கள்! - 126



மாஸ்டரின் சிஷ்யன் புத்தமதத்தினன்.
புத்தரின் மனது என்பதென்ன மாஸ்டர்?
என்? நீ உன்னைப்பத்தியோ உன் மனதைப்பத்தியோ கேளேன். ஏன் யாருடையதையோ பத்தி கேக்கணும்?
அப்ப சரி! நான் என்பது என்ன மாஸ்டர்?
! அதுக்கு ஒரு ரகசிய செயலை கத்துக்கணும்!
சிஷ்யன் பரபரப்பானான். அது என்ன மாஸ்டர்?
இதுதான் பாத்துக்க என்ற மாஸ்டர் கண்களை மூடித்திறந்தார்!

Friday, June 10, 2016

கிறுக்கல்கள் - 125


ஞானம் பெறுவது சுலபமா கஷ்டமா?
கண் எதிரே பார்ப்பது போல கஷ்டம்  அல்லது சுலபம்!
கண் எதிரே பார்ப்பது எப்படி கஷ்டமா இருக்க முடியும்?
குட்டிக்கதை சொன்னார்.
ஒரு பெண்ணுடைய காதலன் வந்தான். பெண் சொன்னாள்: எங்கிட்ட என்ன வித்தியாசம்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்?
புது ஆடையா?
இல்ல.
புது காலணியா?
இல்ல.
ம்ம்ம்ம். முடில. நீயே சொல்லிடு.
நான் முகமூடி அணிஞ்சு இருக்கேன்!

Thursday, June 9, 2016

கிறுக்கல்கள் - 124


உண்மையைத்தேடி நான் எங்கே வேணுமானாலும் போகத்தயார்! என்றான் ஒரு சீடன்.
குருவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
எப்போ கிளம்பப்போறாய்?
நீங்க சொன்ன உடனே!
ரைட்! கிளம்பு!
எந்தப்பக்கம்?
உன் மூக்கு இருக்கற பக்கம்.
எப்போ நிக்கணும்?
எப்போ வேணுமானாலும்!
அப்ப உண்மை என் எதிரே இருக்கு.
நிச்சயமா! மூக்குக்கு வெகு அருகில்; உன் பார்க்காத கண்களின் எதிரேஉன்னை வெறித்து பார்த்துக்கொண்டு!

Wednesday, June 8, 2016

கிறுக்கல்கள்! - 123


முன்னோடிகளின் சிந்தனை அந்த காலத்திய ஏனைய மக்களின் சிந்தனையைக்காட்டிலும் வேறாகத்தான் இருக்கும். எல்லாரும் அது தவறு என்றுதான் சொல்லுவார்கள். மாஸ்டர் சொன்னார்: உண்மை என்பது புத்தகத்தில் இருந்து பார்த்து எழுதிக்கொள்ளக்கூடிய ஒரு பார்முலா இல்லை. அது தனிமை என்னு விலை கொடுத்து வாங்கப்பட்ட வேண்டியது. நீ உண்மையை பின் பற்ற நினைத்தால் தனியாக நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

Tuesday, June 7, 2016

கிறுக்கல்கள்! - 122


எல்லா மக்களுமே ஏறக்குறையா ஒரே போல நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்றார் மாஸ்டர்.
புனிதர்களையும் பாபிகளையும் எப்படி ஒரே தட்டில் வைத்து உங்களால் பார்க்க முடிகிறது ? என்றூ ஆட்சேபித்தார் ஒரு சீடர்.
ஏனென்றால்… எல்லாரும் சூரியனிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கிறோம். நீ போய் உலகிலேயே உயரமான கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டால் அது தூரத்தை வெகுவாக குறைத்து விடுகிறதா என்ன?

Monday, June 6, 2016

கிறுக்கல்கள்! - 121



ஒழுக்க வீறாப்பு வாய்ந்த பிரசங்கி மாஸ்டரை கேட்டார் : உங்க கருத்தில எது பெரிய பாபம்?

பதில் வந்தது: மற்ற மக்களை பாபிகள் என்று நினைப்பவருடைய எண்ணமே!

Friday, June 3, 2016

கிறுக்கல்கள்! - 120


மடத்துக்கு பக்கத்து நாட்டு அரசர் வரப்போகிறார் என்று செய்தி பரவியது. எல்லாரும் பரபரப்புடன் இருந்தனர்…. மாஸ்டரைத்தவிர!

அந்த நாளும் வந்தது. அரசர் வந்து மாஸ்டருக்கு தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தினார். பின்னர் சொன்னார் “நீங்கள் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறியவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் அதன் சாரத்தை உங்களிடம் கேட்க வந்தேன்.”

கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?”

என் இருப்பின் இயல்பை விசாரித்து அறிய வேண்டும். அப்படி அறிந்தால் நான் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்; என் நாட்டு மக்களையும் கட்டுப்படுத்த முடியும். அதன் மூலம் நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்!”

நல்லது. ஆனால் இப்போதே எச்சரிக்கிறேன். அந்த விசாரணையில் நீங்கள் நல்லிணக்கம் கட்டுப்பாட்டால் வருவது அல்ல; சரணாகதியால் வருவது என்று தெரிய வரலாம்! ”