Pages

Friday, May 20, 2016

அத்வைதம் - 8



இப்படி இல்லாததை இல்லை இல்லைன்னு தள்ளி கடைசியில மிஞ்சறது எதுவோ அதுவே நானா இருக்க முடியும். அதுவே ஆன்ம தரிசனம்.
இப்படி விசாரிச்சு தெரிஞ்சுக்கறதை ஞான மார்க்கம்ன்னு சொல்கிறாங்க. பக்தி மார்க்கமோ கர்ம மார்க்கமோ ஓரளவுக்கு ஆசாமியை உயர்த்திவிடும். இதனால் சித்தம் சுத்தமாகும். கண்ட கண்ட விஷயங்களில மனசு அலை பாயாது. நம்மை நாம் சரியா உணராம ஏமாத்தறது இந்த பாழும் மனசுதான். உள்ளே குவிக்கப்பாத்தா பிச்சுண்டு வெளி விஷயங்களில இழுத்து போறது இதுதான். அலை பாயற மனசு சாந்தமாயிட்டா மனம் குவியும். இந்த சாத்வீகமான மனசால நான்யார் ந்னு விசாரிக்க விசாரிக்க முன்னேற்றம் உண்டாகும். மனசு/ புத்தி ஒரு ஸ்டேஜுல செயலிழக்கும். அப்ப ஆன்மா என்கிறது மட்டுமே தானே பிரகாசிக்கும். இந்த நான் யார் பத்தி பத்தி பத்தியாபதிவு எழுதி இருக்கேன். அதனால இங்கே விவரிக்கலை.
இறுதி கட்டத்தில எப்படி இருக்கும்?
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!
முழுக்க ப்ரம்மத்தோட ஐக்கியப்படுத்திக்கொண்டவங்க இந்த லோகத்துக்கு வரதில்லை. உடம்போட கர்மா தீரும் வரை மோனத்தில இருந்து போய் சேந்துடுவாங்க.
அப்படின்னா அது பத்தி எப்படித்தான் தெரியுமாம்?
மேலே சொன்ன நிலைக்கு போகும் முன்னே அந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் ஆழ்வதும், வாசனைகள் திருப்பி பிடிச்சு இழுத்துக்கொண்டு வருவதுமா சடு குடு நடக்கும். அப்ப சகஜ நிலையில இருக்கறவங்க அனுபவிச்சதோட ஒரு துளியை பகிர்ந்து கொண்டு இருக்காங்க. அவரவர் பார்த்தபடி அதை பகிர்ந்து கொண்டு இருக்காங்க. ஆதி சங்கர பகவத்பாதாள் பார்த்தது அத்வைதம். அதனாலத்தான் இந்த சங்கர ஜயந்தியை ஒட்டி அத்வைதம் என்கிற தலைப்பில எழுத ஆரம்பிச்சேன்.
மற்ற ஆசாரியார்களுக்கு கிடைத்த தரிசனம் வேறு. அதனால அவங்க சொன்னது வேறு.
இந்த ஆன்மாவை உணர்ந்த பிறகு அங்கே இருக்கிறது ஆன்மா, கடவுள்ன்னு ரெண்டா இல்லை என்கிற அத்வைதமா? கடவுள், ஆன்மான்னு ரெண்டா த்வைதமா? ஆன்மா, உள்ளே உறைகிற கடவுள்ந்னு விசிஷ்டாத்வைதமா ந்னு கேட்டா….
ரமண பகவான் இந்த த்வைத- விசிஷ்டாத்வைத, அத்வைத சர்ச்சையை வெகு எளிதா தீர்த்து வெச்சுட்டார். அதையேதான் நானும் சொல்ல விரும்பறேன்.

No comments: