Pages

Monday, April 18, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 10



பெருங்குழப்பத்துடன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். சுட்டெரிக்கும் வெயில்தான். ஆனாலும் டீக்கடைக்கு வருவோர் பெருமளவில் வந்து கொண்டுதான் இருந்தார்கள். டீக்குடிக்கத்தான் அங்கே போக வேண்டும் என்று யார் சொன்னது!
ஆச்சரியமாக ”ஐஸ் டீ குடிக்கிறீங்களா சார்?” என்று டீக்கடைக்காரர் கேட்டார்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் தலை அசைத்தான்.
ஜிஞ்சர் லெமன்?
மீண்டும் தலை அசைப்பு..
டீயை உறிஞ்சியபடி அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் இளைஞன்.
ஹும், ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த சாமிங்க எல்லாம் கையில் கத்தி கபடான்னு வெச்சுகிட்டு இருக்குங்க? கருணையே வடிவம் கடவுள்ன்னா எதுக்கு அதெல்லாம்? அந்தப்பய கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல முடியலியே என்னால? சாமி! உனக்கு நா பூஜ பண்ணறேன்; உண்டில காசு போடறேன்; மொட்ட அடிச்சுக்கறேன் - நீ எனக்கு இத இப்படி செஞ்சுதான்னு கேக்கறது வியாபாரம் இல்லையான்னு கேக்கறான். அதுவும் சரிதானேன்னு தோணுது.
இப்படி எல்லாம் இருந்தா அது என்ன சாமி?”
நல்ல சாமி”” என்று பக்கத்தில் இருந்து குரல் வந்தது!
திடுக்கிட்டுக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான்.
பெரியவர் சிரித்துக்கொண்டே பேப்பரை மடித்தார். நம்ம தொகுதில….. கட்சி சார்பா நல்லசாமி போட்டிப்போடறாராம்!” என்றார்.
! நான் நினைச்சுகிட்டு இருந்ததுக்கு பதில் வந்ததோன்னு நினைச்சேன்!”
அப்படி என்ன நினைச்சுகிட்டு இருந்தேப்பா?”
சொன்னான்.
ம்ம்ம்ம்.. நல்ல கேள்விதான். இது எல்லாம் உனக்கே தோணித்தா இல்ல, யாரும் உன்ன கேட்டாங்களா?”
ஒரு ஆசாமி கூட ஆர்க்யூமெண்டு!”
ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ! விவாதம் எல்லாம் நல்லதுதான். ஆனா ஆரம்ப நிலையில இல்லே. விவாதம் என்கிற பேர்ல குழப்ப நிறையவே ஆசமிங்க இருக்காங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!
ரொம்பவே முன்னேறின ஆசாமிக்கு கடவுள் ஒத்தரே கூட தேவையில்லை! நாம அந்த நிலைக்கு நேரா போக முடியுமா? நீ என்ன படிச்சே?”
பிஎஸ்சி”
நேரா காலேஜ் போயிட்டையா ஸ்கூல் படிச்சு போனியா?”
ஸ்கூல்ல படிச்சுட்டுத்தான். ஸ்கூலுக்கு எல்கேஜி யூகேஜின்னு எல்லாம் படிச்சுட்டுத்தான் போனேன்!”
நல்லது! உடனடியா ஆன்மீகத்தில மேல் லெவலுக்கு போக முடியாது என்கிறது அது போலத்தான்.” கீழ் மட்டத்தில சில பல விஷயங்களை புரிஞ்சுகிட்டுத்தான் மேல் லெவலுக்குப் போகணும்.
ஒண்ணுமே எதிர் பார்க்காம பக்தி செய்யறது உசந்த லெவல்! கீழ் மட்டத்தில நம்ம நிலமை என்ன? ஏதாவது வேணும்; அல்லது எதை குறிச்சோ பயமா இருக்கு. சாமிகிட்ட பக்தி செய்யறவன் என்ன செய்வான்? சாமியை கும்புட்டு இப்படி வேணும்ன்னு கேப்பான். அப்ப அவன் பாக்கிற சாமி உருவத்தில என்ன தெரியுது? அனேகமா நாலு கை தெரியும். ஒண்ணு அபயம்ன்னு காட்டற கை.... பயப்படாதே நா இருக்கேன்! இன்னொண்ணு வர ஹஸ்தம் என்கிற கொடுக்கும் கை. மீதி ரெண்டு கையில ஏதாவது ஆயுதம் இருக்கும். இந்த ஆயுதத்தாலே உன்னை கஷ்டப்படுத்தறதை விரட்டிடுவேன்; கவலைப்படாதே!” ந்னு சொல்லறா மாதிரி இருக்கும். அதானே சாமி கும்பிடறவனுக்கு வேண்டியது?”
இப்படியே கொஞ்ச நாள் போன பிறகு பக்தன் சாமி இத கொடு அத செய்யறேன்; அதக்கொடு, இத செய்யறேன் ந்னு கேப்பான். இது வணிகம் மாதிரி இருக்கு இல்லே? ஆமாம். வியாபாரமேதான்! ஆனா நேர்மையான வியாபாரம்தானே? அதுல என்ன தப்பு? இருந்தாலும் கடவுளோட நோக்கம் உன்னை இப்படியே வெச்சு இருக்கறது இல்லே. அடுத்த படியா எதையும் எதிர் பார்க்காம பக்தி செய்யணும். எனக்கு வேணும்ன்னு கேக்காம மத்தவங்களுக்கு நல்லது செய்யறதுல நாட்டம் இருக்கணும். இப்படி முன்னேறணும். ஆனா லோகத்தில பலரும் அப்படி இல்லே என்கறது வருத்தமான விஷயம்தான். ஆனா என்ன செய்யறது? இந்த ஸ்டேஜை தாண்டித்தான் பலரும் போயாகணும்!”
இப்படி பலரும் ஆன்மீகத்தில முதல் சில படிகளில இருக்கறவங்க. இவங்களை வெச்சா ஆன்மீகத்தை எடை போடணும்?”
கண்களை மூடிக்கொண்டு பெரியவர் சொன்னதை அசை போட்ட இளைஞன் கண்களை திறந்து பார்த்த போது……
 

No comments: