Pages

Wednesday, March 2, 2016

ஜீவனின் சரித்திரம் - 8


அனைத்து போகங்களையும் தரும் அந்த நகரியின் காவலன் பஞ்சநகன் இப்போது தளர்ந்து இருந்தான். காலகன்யையின் யவன வீரர்கள் பல திக்குகளில் இருந்து உட்புகுந்தனர். ஒரு வாயில் விடாமல் பிளந்து உட்புகுந்து கண்டதை எல்லாம் நாசம் செய்தனர்.
இப்போதுதான் ஜீவா விழித்துக்கொண்டான். தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் கவலை கொண்டான். தொடர்ந்து கந்தர்வர்களாலும் யவனர்களாலும் தாக்கப்படும் நகரைக்கண்டான். அவன் மனைவி மதி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவனது மகன்களோ பேரன் பெயர்த்திகளோ யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆதரவற்றவனானான். வேண்டா வெறுப்புடன் நகரை விட்டு நீங்க எண்ணினான்.
அபோது ப்ரஜ்வாரம் நகரை அணுகி அதை எரிக்கத்தொடங்கினான். ஜீவாவின் எல்லா சொந்தங்களும் - மனைவி, புத்திரர், பேரன் பெயர்த்திகள், - நகரவாசிகளும் சொல்லொண்ணாத்துன்பம் அனுபவித்தனர். எஞ்சியிருந்த ஒரு சில வீடுகள், களஞ்சியம் இவற்றை தனதாக்கிக்கொண்டு ஆயுட்காலம் முடியும் தருவாயிலும் கூட தன் மனைவியைத்தான் நினைத்தான்.
நான் இறந்து பரலோகம் போனால் இவள் என்ன செய்வாள்? இவள் எனக்கு உணவிடாமல் தான் உண்ண மாட்டாளே! எனக்கு மேல் அவளுக்கு யாருமில்லையே! நான் கோபித்தால் வருந்துவாள்; திட்டினால் பயந்து பேசாமலிருப்பாள்; தவறு செய்தால் திருத்துவாள்; வெளியூர் சென்றால் விரகத்தால் துன்புறுவாள். அவளது புத்திரர்கள் பெரும் வீரர்கள்தான். இருந்தாலும் நானில்லாமல் அவள் உயிருடன் இருக்க மாட்டாளே! என் பெண்கள் மகன்கள் என்ன ஆவர்?” இப்படி சிந்தித்துக்கொண்டு இருக்கையிலேயே யவனர்கள் அவனை பிடித்துவிட்டனர்.
ஒரு ஆட்டை கட்டி எடுத்துச்செல்வது போல அவனை கட்டி இழுத்துச்சென்றனர். அவனது குடும்ப சேவக பரிவரங்களும் அவனைத்தொடர்ந்து பிடி பட்டு பின் போயினர்.
டேய் ஜீவா, இப்போது கூட உன் நண்பனான பரமாவை நீ நினைக்கவில்லையே! உன்னை என்ன செய்ய முடியும்! அப்போதே சொன்னான், உன் கூடவே இருப்பேன், ஆனால் நீ என்னை நினைக்க வேண்டுமே என்று. நீதான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
ஹும்!

No comments: