Pages

Thursday, March 24, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 7


இந்த மாயை மாயைங்கிறது என்னங்க?
என்னன்னு நினைக்கிறப்பா?
இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைக்கிறது…
சரிதான்.
நீங்க நான் இந்த டீக்கடை எல்லாம் மாயையா?
புன்முறுவல் மட்டுமே பதிலாக வந்தது.
எப்படி நாம பாக்கிற ஒண்ணு, தொடற ஒண்ணு, மோந்து பாக்கிற ஒண்ணு மாயையா இருக்க முடியும்?
தோ பாரு!
டீக்கடை பக்கத்தில் புதிதாக ஒரு தற்காலிக கடை உருவாகி இருந்தது. மண்ணை பிசைந்து பிள்ளையார் பொம்மைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தது ஒரு எளிய குடும்பம்.
களி மண் மிதித்து பக்குவமாக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு அச்சில் அதை அடைத்து அமுக்கி வெளியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் பொம்மைக்காரன். அவனது பெண்சாதி அதை எடுத்து மாவு பூசி அழகாக அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். இந்த அழகை சில நொடிகள் பார்த்தனர்.
அந்த வழியாக இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே போனார்கள். இது என்னடி புது டிசைன்ல செயின்? ரொம்ப அழகா இருக்கு! மற்றவள் பெருமையுடன் சொன்னாள்: ஆமாண்டி! முன்னேயே என்கிட்ட ஒரு பழைய காசு மாலை இருந்தது இல்ல? அத அழிச்சு பண்ணது!

இளைஞன் கவனத்தை பெரியவர் திருப்பினார். இதோ வரிசையாக அடுக்கி வைச்சிருக்கே, அது என்ன?
இதென்ன கேள்வி? அது பிள்ளையார்!
பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒரு சிலையை எடுக்கும்போது அது விண்டு விழுந்தது, அந்த பெண் விழுந்ததை எடுத்துக்கொடுக்க அவன் அதை பிசைந்து வைத்து இருந்த மண்ணோடு வீசி எறிந்தான்.
பெரியவர் சிரித்தார். கொஞ்ச நேரம்முன்னே பிளையாரா இருந்தது, இப்ப என்ன?
ஏன் மண்ணு?
ஆமா, மண்ணா இருந்தது பிள்ளையாரா ஆச்சு, இப்ப திருப்பி மண்ணாயிடுத்து இல்ல?
ஏன் நடுவிலேயும் அது மண்ணாத்தான் இருந்திச்சு?
ஆமா, அப்படித்தான். ஆனா நீ தானே அது பிள்ளையார்ன்னு சொன்னே? சரி விடு. போன வாரம் மும்பை போயிருந்தேன். என் நண்பர் ஒத்தர் ந்யூக்ளியர் பிஸீக்ஸ்ல ஆராய்ச்சி செய்யறாரு. அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப அவர் சொன்னாரு, புதுசா ஒரு எலமெண்ட் கண்டு புடிச்சாங்களாம்.
அட, அப்படியா?
ஆமாம் ரெண்டு எலமெண்ட்களை மோத விட்டு உருவாக்கினாங்களாம்; அது 0.000000035 வினாடி இருந்திச்சாம்!”
இளைஞன் சிரித்தான். ”அதுக்கு அது இல்லாமலே இருக்கலாம்.”
ம்ம்ம் சரி, ப்ரபஞ்சத்தோட வயசு என்னன்னு தெரியுமா?
ம் நானும் சயன்ஸ் படிச்சிருக்கேனே? ஏறத்தாழ 14 பில்லியன் வருஷமாவது இருக்கும் என்கிறாங்க.
அந்த 14 பில்லியன் வருஷத்துல நூறு வருஷம் எவ்வளோ?
பிசாத்து! ஒண்ணுமே இல்லே!
நாம வாழற வாழ்க்கை அதிக பட்சம் நூறு வருஷம்ன்னு வெச்சுக்கலாமா? இப்ப சொல்லு பிரபஞ்சத்தோட ஒப்பிடா நாம வாழறது ஒண்ணுமே இல்லைதானே?
பேச்சற்றுப்போனான் இளைஞன்.
இதோ இங்க பிள்ளையாரா கொஞ்ச நேரம் இருந்த மண் நமக்கு பிள்ளையாரா தெரிஞ்சது. அதான் மாயை. காசு மாலையா இருந்தது தங்கமாகி திருப்பி இன்னொரு செய்ன் ஆயிடுத்து. இதுல எது நிரந்தரம்? எது தற்காலிகம்? தங்கமே எப்பவும் இருக்கு. செய்ன், காசு மாலை என்கிறதெல்லாம் மாயை.
பிரபஞ்சக்கணக்குலே கொஞ்சமே கொஞ்ச நேரம் இருக்கற நாம ஏதோ எப்பவும் இருக்கறதாவும் இதை செய்யறதாவும் அதை செய்யறதாவும் நினைக்கிறோமே, அது மாயை.
எது முன்னே இருந்ததோ இப்ப இருக்கோ அப்புறமும் இருக்குமோ அதுவே மாயை அல்லாதது. இந்த மூணு காலத்தில ஏதேனும் ஒரு காலத்திலாவது இல்லாம போகுமானால் அது தற்காலிகம்தானே? சயண்டிஸ்ட் உருவாக்கின மூலகம் மாதிரி. அதனால அது மாயை. இப்படித்தான் ஆன்மீக கணக்கு.
இதை ஆங்கிலத்துல இல்யூஷன்னு மொழி பெயர்த்ததாலேயோ என்னவோ வந்த வினை மாயைன்னா இல்லாததுன்னு நிறைய பேர் நினைக்கறாங்க.
பிள்ளையாரா இருந்தது கொஞ்ச நேரமே. ஆனா மண்ணா முன்னேயும் இருந்தது. நடுவிலேயும் இருந்தது; இப்பவும் இருக்கு. மண்ணே சத்தியம். பிள்ளையார் சிலை மாயை. அதே போல தங்கம் மட்டுமே எப்பவும் இருக்கு. அதுவே சத்தியம். அது செய்னா தெரியறதோ அல்லது காசுமாலையா தெரியறதோ மாயை.
சரி, இப்ப நாம இருக்கோம். ஏதோ ஒரு நாள் இல்லாம போயிடுவோமா இல்லையா? அப்ப எது சத்தியம்?
இளைஞன் யோசிக்க ஆரம்பிக்க பெரியவர் மெதுவாக எழுந்து போனார்.

No comments: