Pages

Friday, March 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 1



”என்னப்பா இன்னைக்கு கோவமா இருக்கே?” ன்னு கேட்டார் டீக்கடைக்காரர்.
”ஹும்! நேத்து சிவராத்திரியா? கோவிலுக்கு போனேன். திரும்பி வந்து பாத்தா என் பைக்கை காணலை. இங்க கோவில்ல வேண்டிக்கலாம்ன்னு வந்தா … அங்க பாருங்க!” என்றான் இளைஞன்.

’அப்ப வரேங்க’ என்றவாறு விடை பெற்றுக்கொண்டு இருந்தனர் போலீஸ் ஏட்டும் ஒரு காவலரும். “கோவில்லேயே திருட்டு! தன் சொத்தையே காப்பாத்திக்க தெரியாதவர என் சொத்த காப்பாத்தி கொடுக்கப்போறாரா? சாமிக்கு சக்தி இருக்கான்னே சந்தேகமா இருக்கு!”

”இது என்ன கோவில்?” கேள்வி வந்தது ஒரு வயதான பெரியவரிடம் இருந்து. வழுக்கைத்தலை. இருந்த கொஞ்சம் முடியும் வெள்ளிக்கம்பி போல இருந்தது, படித்துக்கொண்டு இருந்த பேப்பரை தாழ்த்திக்கொண்டு கேட்டார்.

பிள்ளையார் கோவில்!
உள்ளே சாமி இருக்கா இல்லையா?
இருக்குன்னுதான் இவ்ளோ நாள் நினைச்சுகிட்டு இருந்தேன்.
அதோ அங்கே இருக்கற கோவில்?
துர்கை. சக்தி வாஞ்ச அம்மன். இப்ப அங்க போலாமான்னுதான் யோசிக்கிறேன்.
ஓஹோ. அது பக்கத்திலேயே எதோ கோவிலாட்டம் இருக்கே?
நீங்க வெளியூரா? அது பெருமா கோவில்.
அங்கே எல்லாமும் சாமி இருக்கா?
ஆமா அதுல என்ன சந்தேகம்?
அப்ப சாமி இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு, அதுக்கு பக்கத்திலேயும் இருக்கு? அதெப்படி?
என்ன சொல்றீங்க? சாமி இல்லாத எடம் இருக்கா என்ன?
! அதான் கேட்டேன். பேரு, உருவம் வேற ஆனாலும் அது ஒரே சாமிதான். இப்ப இங்க என்ன காணாமப்போச்சாம்?
இது சின்ன கோவில். பெரிசா ஒண்ணுமில்லே. பூச சாமான் பொக போடறது மணி தட்டு… இப்படி பலது காணாமப்போச்சாம்.
! அப்ப கோவில் நிர்வாகம் பண்ணறவங்க கொஞ்சம் பாவம்தான். அதெல்லாம் திருப்பியும் வாங்கணும். ஆமா, அதுல பிள்ளையாருக்கு என்ன நட்டம்?
என்ன கேக்கறீங்க?
சாமி இங்கேயும் இருக்கு அங்கேயும் இருக்கு. அது இல்லாத இடம் இல்லைன்னு சொன்ன இல்லையா? இப்ப காணாமப்போன பொருள் எல்லாம் அந்த சாமியோட ராஜ்யத்த தாண்டி எங்கேயாவது போச்சா என்ன?
இளைஞன் யோசனையில் ஆழ்ந்தான். ம்ம்ம்ம்… காணாம போனத திருடன் என்ன பண்ணுவான். எங்கயானா விப்பான். வாங்கறவங்க என்ன செய்வாங்க? பொக போடற கரண்டி, மணி எல்லாத்தையும் என்னதான் செய்ய முடியும்? அது எல்லாம் வேற இடத்தில சாமிக்கு பயன்படுத்துவாங்க இல்லியா?

நீங்க சொல்லறது... என்று ஆரம்பித்த இளைஞன் திரும்பிப்பார்த்தான். காலி பெஞ்சில் பேப்பர் படபடத்துக்கொண்டு இருந்தது!

No comments: