Pages

Thursday, March 31, 2016

கிறுக்கல்கள்! - 95


மாஸ்டர் ஆன்மீக சொற்பொழிவுகள் என்று ஏதும் நிகழ்த்துவதில்லை. சாப்பிடுவது, வேலைகள் செய்வது சீடர்களுடன் அரசியல் முதல் லேட்டஸ்ட் அசைவ ஜோக் வரை ஆயிரத்தெட்டு விஷயங்கள் குறித்து பேசுவது என்று இருப்பார்.
விருந்தினர் ஒருவர் கேட்டார்: அதெப்படி கடவுளைப்பத்தி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஜோக்கடிப்பதில விருப்பம் இருக்கிற உங்கள் மாஸ்டர் உங்களூக்கு எதையும் கத்துத்தர முடியும்?
ஒரு சீடர் பதில் சொன்னார் : கற்றுத்தருவதில் பல வழிகள் இருக்கின்றன. பேச்சு மூலம்தான் கற்றுத்தர வேண்டும் என்று ஒன்றுமில்லை!

Wednesday, March 30, 2016

கிறுக்கல்கள்! -94


பல மக்கள் ஏன் ஒரு மத அமைப்பில சேருகிறாங்கன்னா அது குற்ற உணர்ச்சி இல்லாம தன் மத கடமைகளை நிறைவேத்திடலாம்ன்னுதான்.” என்றார் மாஸ்டர்.
மாஸ்டருக்கு ஒரு பெண் சீடர் இருந்தார். அவர் ஒரு வியாபார பிரதிநிதியை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர் என்ன ரொம்ப அழகானவரா?
இல்லை குருவே!
நிறைய பணம் சொத்து இருக்குமோ?
இல்லை அப்படி இருந்தாலும் அதை செலவழிக்க மாட்டார். கஞ்சப்பிசுநாரி!
ஏதேனும் கெட்ட பழக்கங்கள் உண்டோ?
ம்ம்ம் நிச்சயமா புகை பிடிக்கிறார். அவர் குடிக்கறது அளவுக்கு மிஞ்சித்தான்.
ம்ம்ம் புரியலையே? பின்னே ஏன் அவரை திருமணம் செஞ்சுக்க நிச்சயம் செஞ்சு இருக்கீங்க?
அவரோட வேலை ஊர் ஊரா போய் அவரோட கம்பனி பொருட்களை விற்கிறது. அதனால வீட்டுல பல நாட்கள் இருக்க மாட்டார். அதனால் எனக்கு திருமணம் ஆயிடுத்து என்கிற பெயரோட, ஒரு கணவனோட வழக்கமான தொல்லைகளும் இல்லாம இருக்கும்!

Tuesday, March 29, 2016

கிறுக்கல்கள்! -93


 “எங்க ஊர் கோவில் பூசாரி கோவில்ல மட்டும்தான் சாமி கும்பிடணும்ன்னு சொல்லறார்.”
மாஸ்டர் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்துல அபிப்ராயம் கேட்க கோவில் பூசாரி சரியான நபர் இல்லை.”
ஆனா அவர் அதுல எக்ஸ்பெர்ட் இல்லையா?”

பதிலுக்கு மாஸ்டர் சொன்ன கதை:
மாஸ்டர் ஒரு முறை வெளிநாட்டுக்கு போயிருந்தார். இரண்டு கைட் புத்தகங்களை வாங்கி பார்த்து கொண்டிருந்தார். அவரோட கைட் அதைப்பார்த்துவிட்டு ஒரு புத்தகத்தைக்காட்டி இதுதான் நல்ல புத்தகம் என்றார். “ஏன், இதுல இன்னும் விவரஙக்ள் இருக்கா?” “இல்லை. அதுல கைடுக்கு ஐம்பது செண்ட் டிப்ஸ் கொடுன்னு போட்டு இருக்கு. இதுல அஞ்சு டாலர் கொடுன்னு போட்டு இருக்கு!”

Monday, March 28, 2016

கிறுக்கல்கள்! -92


மாஸ்டர் பக்தி என்று எந்த செயலையும் செய்து யாரும் பார்த்ததில்லை.
இதைப்பற்றி கேட்ட போது அவர் சொன்னது:
எந்த விளக்கையும் சூரியனுடன் ஒப்பிட்டால் அதன் வெளிச்சம் ஒன்றூமே இல்லை என்றாகிவிடுகிறது. மிக உயரமான கோபுரம் கூட இமாலயத்தின் பக்கத்தில் சிறு துரும்பு போல தோன்றுகிறது!”

Thursday, March 24, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 7


இந்த மாயை மாயைங்கிறது என்னங்க?
என்னன்னு நினைக்கிறப்பா?
இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைக்கிறது…
சரிதான்.
நீங்க நான் இந்த டீக்கடை எல்லாம் மாயையா?
புன்முறுவல் மட்டுமே பதிலாக வந்தது.
எப்படி நாம பாக்கிற ஒண்ணு, தொடற ஒண்ணு, மோந்து பாக்கிற ஒண்ணு மாயையா இருக்க முடியும்?
தோ பாரு!
டீக்கடை பக்கத்தில் புதிதாக ஒரு தற்காலிக கடை உருவாகி இருந்தது. மண்ணை பிசைந்து பிள்ளையார் பொம்மைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தது ஒரு எளிய குடும்பம்.
களி மண் மிதித்து பக்குவமாக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு அச்சில் அதை அடைத்து அமுக்கி வெளியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் பொம்மைக்காரன். அவனது பெண்சாதி அதை எடுத்து மாவு பூசி அழகாக அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். இந்த அழகை சில நொடிகள் பார்த்தனர்.
அந்த வழியாக இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே போனார்கள். இது என்னடி புது டிசைன்ல செயின்? ரொம்ப அழகா இருக்கு! மற்றவள் பெருமையுடன் சொன்னாள்: ஆமாண்டி! முன்னேயே என்கிட்ட ஒரு பழைய காசு மாலை இருந்தது இல்ல? அத அழிச்சு பண்ணது!

இளைஞன் கவனத்தை பெரியவர் திருப்பினார். இதோ வரிசையாக அடுக்கி வைச்சிருக்கே, அது என்ன?
இதென்ன கேள்வி? அது பிள்ளையார்!
பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒரு சிலையை எடுக்கும்போது அது விண்டு விழுந்தது, அந்த பெண் விழுந்ததை எடுத்துக்கொடுக்க அவன் அதை பிசைந்து வைத்து இருந்த மண்ணோடு வீசி எறிந்தான்.
பெரியவர் சிரித்தார். கொஞ்ச நேரம்முன்னே பிளையாரா இருந்தது, இப்ப என்ன?
ஏன் மண்ணு?
ஆமா, மண்ணா இருந்தது பிள்ளையாரா ஆச்சு, இப்ப திருப்பி மண்ணாயிடுத்து இல்ல?
ஏன் நடுவிலேயும் அது மண்ணாத்தான் இருந்திச்சு?
ஆமா, அப்படித்தான். ஆனா நீ தானே அது பிள்ளையார்ன்னு சொன்னே? சரி விடு. போன வாரம் மும்பை போயிருந்தேன். என் நண்பர் ஒத்தர் ந்யூக்ளியர் பிஸீக்ஸ்ல ஆராய்ச்சி செய்யறாரு. அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப அவர் சொன்னாரு, புதுசா ஒரு எலமெண்ட் கண்டு புடிச்சாங்களாம்.
அட, அப்படியா?
ஆமாம் ரெண்டு எலமெண்ட்களை மோத விட்டு உருவாக்கினாங்களாம்; அது 0.000000035 வினாடி இருந்திச்சாம்!”
இளைஞன் சிரித்தான். ”அதுக்கு அது இல்லாமலே இருக்கலாம்.”
ம்ம்ம் சரி, ப்ரபஞ்சத்தோட வயசு என்னன்னு தெரியுமா?
ம் நானும் சயன்ஸ் படிச்சிருக்கேனே? ஏறத்தாழ 14 பில்லியன் வருஷமாவது இருக்கும் என்கிறாங்க.
அந்த 14 பில்லியன் வருஷத்துல நூறு வருஷம் எவ்வளோ?
பிசாத்து! ஒண்ணுமே இல்லே!
நாம வாழற வாழ்க்கை அதிக பட்சம் நூறு வருஷம்ன்னு வெச்சுக்கலாமா? இப்ப சொல்லு பிரபஞ்சத்தோட ஒப்பிடா நாம வாழறது ஒண்ணுமே இல்லைதானே?
பேச்சற்றுப்போனான் இளைஞன்.
இதோ இங்க பிள்ளையாரா கொஞ்ச நேரம் இருந்த மண் நமக்கு பிள்ளையாரா தெரிஞ்சது. அதான் மாயை. காசு மாலையா இருந்தது தங்கமாகி திருப்பி இன்னொரு செய்ன் ஆயிடுத்து. இதுல எது நிரந்தரம்? எது தற்காலிகம்? தங்கமே எப்பவும் இருக்கு. செய்ன், காசு மாலை என்கிறதெல்லாம் மாயை.
பிரபஞ்சக்கணக்குலே கொஞ்சமே கொஞ்ச நேரம் இருக்கற நாம ஏதோ எப்பவும் இருக்கறதாவும் இதை செய்யறதாவும் அதை செய்யறதாவும் நினைக்கிறோமே, அது மாயை.
எது முன்னே இருந்ததோ இப்ப இருக்கோ அப்புறமும் இருக்குமோ அதுவே மாயை அல்லாதது. இந்த மூணு காலத்தில ஏதேனும் ஒரு காலத்திலாவது இல்லாம போகுமானால் அது தற்காலிகம்தானே? சயண்டிஸ்ட் உருவாக்கின மூலகம் மாதிரி. அதனால அது மாயை. இப்படித்தான் ஆன்மீக கணக்கு.
இதை ஆங்கிலத்துல இல்யூஷன்னு மொழி பெயர்த்ததாலேயோ என்னவோ வந்த வினை மாயைன்னா இல்லாததுன்னு நிறைய பேர் நினைக்கறாங்க.
பிள்ளையாரா இருந்தது கொஞ்ச நேரமே. ஆனா மண்ணா முன்னேயும் இருந்தது. நடுவிலேயும் இருந்தது; இப்பவும் இருக்கு. மண்ணே சத்தியம். பிள்ளையார் சிலை மாயை. அதே போல தங்கம் மட்டுமே எப்பவும் இருக்கு. அதுவே சத்தியம். அது செய்னா தெரியறதோ அல்லது காசுமாலையா தெரியறதோ மாயை.
சரி, இப்ப நாம இருக்கோம். ஏதோ ஒரு நாள் இல்லாம போயிடுவோமா இல்லையா? அப்ப எது சத்தியம்?
இளைஞன் யோசிக்க ஆரம்பிக்க பெரியவர் மெதுவாக எழுந்து போனார்.

Tuesday, March 22, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 6



சார்! அன்னிக்கு கடந்த காலத்தைப்பத்தி அலட்டிக்காதேங்கற மாதிரி சொன்னீங்க. ரெண்டு நா முந்தி எதிர்காலத்தப்பத்தி ரொம்ப கவலைப்படாதேன்னு சொன்னாங்க!”
அப்படியா? யாரு?” புன்முறுவலுடன் கேட்டார் பெரியவர்,
யாரோ! அந்த நேரத்துல அது ரொம்ப பெரிய உண்மைன்னு தோணிச்சு”இளைஞன் குரல் கம்மியது.
எதிர்சாரி வீட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தனர். இரு சிறு குழந்தைகள் சண்டயிட்டுக்கொண்டு இருந்தன. ஒரு குழந்தையின் கையில் பந்து ஒன்று இருந்தது. அதுதான் பிரச்சினை போலும். வீட்டுக்குள் இருந்து ஒரு அம்மா வந்து குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றார்.
சரி, சரி! இருக்கட்டும். அப்பறம்?”
கடந்த காலமும் வேணாம், எதிர்காலமும் வேணாம்ன்னா எந்த காலத்தில இருக்கறது?”
ஏன்? அதுல என்ன சந்தேகம்? நிகழ்காலம்ன்னு ஒண்ணு இருக்கே?”
ம்ம்ம்ம்ம், இந்த நிகழ் காலம் என்கிறது என்ன?”
ஏன்பா ஸ்கூல சொல்லித்தரலையா? நிகழ்கின்ற காலம் நிகழ்காலம்ன்னு?”
அதில்ல சார்? அது என்ன ஒரு மாசமா, வாரமா? இல்ல ஒரு நாளா? ஒரு மண்ணேரமா?”
அது உன்னப்பொறுத்தது!”
உம்ம்ம்ம்ம்?”
அது உன் மனசப்பொறுத்து ஒரு நாளோ ஒரு மணி நேரமோ இல்ல ஒரு நிமிஷமோ கூட இருக்கலாம்.”
என்னது? ஒரு நிமிஷமா? அது யாராலேயும் முடியுமா என்ன?”
பெரியவர் இளைஞனையே பார்த்துக்கொண்டு இருந்தார். இளைஞன் எதிர்சாரி வீட்டை திரும்பிப்பார்த்தான். அங்கே சிரிப்புச்சத்தம் கேட்டது! குழந்தைகள் இரண்டும் உற்சாகமாக பந்தை எறிந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.
இந்த குழந்தைகள் இப்போத்தானே சண்டை போட்டு அழுதன? இப்போ சிரித்துக்கொண்டு விளையாட்டா? ஆமா. குழந்தைகள் பலதையும் மனசுல வெச்சுக்கறதில்ல. அப்பப்ப என்ன தோணுதோ அப்படி இருந்துட்டு போறாங்க. வயசான பிறகு இதுகளே எப்படி எப்படி எல்லாம் மாறுதுங்க? யார் மாத்தறா? நாம்மளேதான் கெடுக்கறோம் போல இருக்கு! பெரியவங்களப் பாத்துத்தானே இதுங்கள்ளாம் கத்துக்குதுங்க! இந்த குழந்தைங்க மாதிரி நாம் இருக்க முடியுமா? ஏன் முடியாது? முடியணும்.
காலி பெஞ்சில் மடித்து வைத்து இருந்த பேப்பரை திரும்பிப்பார்த்தான் இளைஞன்.

Monday, March 21, 2016

வித்தியாசமான நிகழ்வுகள் - 41


திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மஹாத்மா காந்தி வந்திருந்தார். அப்போது காங்கிரஸ் அரசியல் கட்சியாக முன் வைக்கப்பட்டது. காந்திஜி ரமணரை சந்திப்பாரா என்று பரவலாக விவாதிக்கப்பட்டது. எல்லாருக்கும் பொதுவான ரமணர் ஒரு அரசியல் கட்சி தலைவரை சந்திப்பதோ ஆதரவு தெரிவிப்பதோ நடக்காது என்றனர் சிலர். யார் வேண்டுமானால் பகவானை பார்க்க முடிகிறது, காந்திஜி ஏன் பார்க்க முடியாது என்று சிலர்.
அந்த காலகட்டத்தில் பகவானின் சகோதரரின் மகன் திருவண்ணாமலையில் இருந்தார். தீவிர காங்கிரஸ் தொண்டராகவும் இருந்தார். இவர் பகவானையும் காந்திஜியையும் சந்திக்க வைக்க முயற்சி எடுத்தார். பகவான் ஏதும் சொல்லவில்லை. வேண்டாம் என்று சொல்லைவில்லையே என்று இவருக்கு திருப்தி. காந்திஜியுடன் பேசியதில் அவர் பகவானை சந்திக்க ஒப்புக்கொண்டு விட்டார். மாலை ஐந்து மணி போல் சந்திக்கச்செல்வதாக ஏற்பாடு செய்தார்கள்.
இவர் வெகு உற்சாகமாக ஆசிரமத்தில் தோரணங்கள் கட்டவும் கொடிகளை கட்டவும் முனைந்தார். மாலை நான்கு மணிக்கு பகவான் வழக்கம் போல மலையில் உலாவச்செல்ல வெளியே வந்தார். இவருக்கு குலை நடுங்கிவிட்டது. ஏனெனில் இப்படி வரவேற்பு கொடுப்பதற்கெல்லாம் பகவானின் இசைவை பெறவில்லை! பகவானோ அமைதியாக இதை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த கொடி இங்கே வேண்டாம், அங்கே கட்டினால் இன்னும் பார்வையாக இருக்கும் என்ற ரீதியில் சில திருத்தங்களை சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு மலைக்குப் போய்விட்டார்!
காந்திஜி வரும் சமயத்தில் பகவான் ஆசிரமத்தில் இல்லை என்றால் என்ன செய்வது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கையை பிசைந்து கொண்டு இருந்தார்கள். நேரம் போய்க்கொண்டு இருந்தது. பொழுது சாயப்போகிறது; என்னேரமும் காந்திஜி வந்துவிடுவாரே பகவானை இன்னும் காணோமே என்று கவலை அதிகரித்தது!
காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து தகவல் வந்தது. மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஏதோ செய்தி வந்து காந்திஜி மாலை ட்ரெய்னில் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக!

Friday, March 18, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 5


காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
அவர் வரலியா?
யாரு? ” என்றார் டீக்கடைக்காரர்.
அதான்..… அந்த பெரியவர்! ”
ம்ம்ம்ம் என்னவோ காணலை.”
யாருங்க அவரு?”
தெரியாது. அவர் வரப்ப நல்லா வியாபாரம் ஆகும். அவ்ளோதான் தெரியும்.”
ஏன், நீங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கலியா?”
பிடி கொடுக்க மாட்டாரு… பேப்பரை எடுத்து முகத்தை மறச்சுக்கிட்டார்ன்னா அவ்ளோதான்!. என்னவோ உங்ககிட்ட மட்டும்தான் வலிய வந்து பேசறாரு!”
இளைஞனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
இன்னைக்கு என்னவோ ரொம்ப கவலையோட இருக்கீங்க!” டீயை கொடுத்தபடி கடைக்காரர் சொன்னார்.
ஆமாம். வருஷ கடைசி. ஆபீஸ்ல இன்னும் டார்கெட் அடையலைன்னு உசிரெடுக்கறாங்க. தற்காலிகமா வேலை பாத்துகிட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு வேலை போயிடுச்சு. அவ ஒரு வேலைய பாத்துக்கொடுன்னு உசிரெடுக்குறா. போதாக்கொறைக்கு எங்க வீட்ல தங்கி படிச்சுகிட்டு இருக்கிற என் அண்ணன் பொண்ணு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குன்னு பொலம்பி டென்ஷனை ஏத்திகிட்டு இருக்கு! எங்க திரும்பினாலும் கஷ்டம்தான். நானும் ரொம்ப ட்ரை பண்ணறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது!” அங்காலாய்த்தபடியே தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.
காலை முதல் இங்கும் அங்கும் உலவிய கரு மேகங்கள் சட்டென்று திரண்டன. வானம் இருண்டது. சட சடவென காலம் தப்பிய மழை பலமாக அடிக்கத்துவங்கியது. ஜனங்கள் ஓடி வந்து இளைஞன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கும் எதிர் பெஞ்சுக்கும் நடுவே இருந்த இடைவெளியில் தஞ்சம் புகுந்தனர். ஆளுக்கு ஆள் சள சள என்று பேசிக்கொண்டு இருந்ததை தொடர்ந்தனர். கைகளில் கூடைகளை வைத்து இருந்த இரு கிராம பெண்கள் இளைஞனின் பக்கத்தில் நின்று கொண்டு தங்கள் உரையாடலை தொடர்ந்தனர்.
அதான் அக்கா கவல. நானும் எத்தனையோ முயற்சி செஞ்சு பாக்கறேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது.”
ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோடி. உனக்கு கெடைக்கணும்ன்னு இருந்தா அது நிச்சயமா கெடைக்கும். யாரும் அத தட பண்ண முடியாது. ஆமா! கெடைக்கக்கூடாதுன்னு இருந்தா நீ என்னதான் முக்கி மொனகினாலும் கெடைக்காது. நீ பாட்டுக்கு நீ செய்ய வேண்டியத செய்யி. ஆமா! புரிஞ்சுதா?”
வந்த வேகத்தில் மழை நின்றது. ஜனங்களும் தம் வேலையை தொடர வெளியேறினர்.

இளைஞன் உறைந்து போயிருந்தான். சாதாரண கிராம பெண்கள்…. என்ன ஒரு ஞானம்! எவ்வளவு நிச்சயத்துடன் பெரிய உண்மை ஒன்றை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டு போகிறாள்! இந்தியாவை ஞான பூமி என்று சிலர் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது!
ஒருவருக்கு டீ ஊற்றி கொடுத்த படியே தன்னை பார்த்து ஏதோ உணர்த்த முயன்று கொண்டு இருந்த டீக்கடைக்காரரை பார்த்தான் இளைஞன். குறுக்கே இருந்த சிலர் நகரவே இளைஞன் கிட்டே போய் என்ன வென்று கேட்டான். “அவர் வந்திருந்தாரே பாத்தீங்களா?”
பெரியவரா?” கண்கள் கடையை துழாவின. “இல்லையே!”
மழ ஆரம்பிச்சப்ப வந்தாரு. நின்னப்ப போயிட்டாரு!”
பளிச் என்று நிர்மலமாக இருந்த ஆகாயம் மட்டுமே இப்போது தெரிந்தது!

Thursday, March 17, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் -4


 “இன்னைக்கும் கோவமாத்தான் இருக்கீங்க!” என்றவாறு டீயை கொடுத்தார் கடைக்காரர். அதை வாங்கிக்கொண்ட இளைஞன் ”ஆமாம்!” என்றான்.
துரோகம் துரோகம் பச்சை துரோகம்! அவனுக்கு எவ்வளோ நல்லது செஞ்சேன்? பதிலுக்கு சரியான நேரத்தில காலை வாரிட்டான்.”
சிரித்துக்கொண்டே கடைக்காரர் அடுத்த நபரை கவனிக்க ஆரம்பித்தார்.
டீயை உறிஞ்சிய இளைஞன் பக்கத்தில் அமர்ந்து பேப்பரை படித்துக்கொண்டு இருந்த பெரியவரை திரும்பிப்பார்த்தான்.
ஏன் நீங்க எதுவும் கேக்கலை?”
ஏன்? எதுவும் கேக்கணுமா என்ன?” என்றார் பேப்பரில் இருந்து பார்வையை திருப்பாமலே.
ஆமாம்!”
உம்! பழைய கால நினைவுகள் போலிருக்கு!”
ஆமா. எனக்கு எவ்வளோ கோவம் வரது தெரியுமா? அந்தப்பய என்னை கஷ்டப்படுத்தியதுக்கு அளவே இல்லை!”
உம்! இப்ப என்ன செய்யறார்?”
இப்பவா? போய் சேந்துட்டான். முப்பது வயசிலேயே ஹார்ட் அட்டாக்!”
ரொம்ப புத்திசாலி போலிருக்கு!”
என்னது!”
ரொம்பவே சாமர்த்தியம்!”
என்ன சொல்லறீங்க?”
செத்துப்போனப்பறம் கூட உன்னை கஷ்டப்படுத்த முடியறதே!”
இதுல அவன் சாமர்த்தியம் என்ன இருக்கு? நானேதான்….”

நானேதான் என்னை கஷ்டப்படுத்திக்கறேன். பின்னே அவந்தான் உயிரோட இல்லையே! நடந்து போனதோட நினைவுகள்தான் என்னை கஷ்டப்படுத்தறது. நினைவுகள் என்னோடது. அப்ப நடந்ததை நினைச்சு கஷ்டப்படறதோ அல்லது அதை உதாசீனம் செய்யறதோ என் சாய்ஸ்! நாம இப்படித்தான் நடந்து போனதைப்பத்தி நினைச்சு நினைச்சு கஷ்டப்பட்டு, மருகி…. என்ன ஒரு முட்டாள்தனம்! நடந்து போனதை இப்ப மாத்த முடியுமா என்ன? பின்ன கடந்த காலத்தை நினைக்கிறதுல அர்த்தமே இல்லையா?

அவனது மன ஓட்டத்தை உணர்ந்தவர் போல பெரியவர் பேசினார். “ கடந்த கால நினைப்பிலிருந்து நமக்கு ப்ரயோசனமாகறது அது கத்துத்தர பாடங்கள்தான். ஒத்தருக்கு உதவி செஞ்சோம். அப்படி செஞ்சா பதிலுக்கு எதுவும் கிடைக்கும்ன்னு நினைச்சா செஞ்சோம்? அப்ப செய்யத்தோணினது, செஞ்சோம். சமயத்துல காலை வாரி விட்டாரா? இப்படித்தான் சிலர் இருப்பாங்க. இது ஒரு பாடம். அவர் திருப்பி ஒரு உதவி செய்வார்ன்னு எதிர்பார்த்து உதவி செஞ்சோமா? அது தப்பு. இது இரண்டாவது பாடம். எப்பவுமே இப்படித்தான் நடக்கும்ன்னு எதையும் எதிர்பார்க்காதே. நாம எப்பவும் மாறிகிட்டேத்தான் இருக்கோம். ஒரே ஆசாமி முன்னே நடந்து கொண்டது போல எப்பவும் நடந்துப்பார்ன்னு எதிர்பாராதே! அதுக்கு சான்ஸ் அதிகம். அவ்ளோதான். கடந்த கால அனுபவத்தில இன்னார் இன்னின்ன சிச்சுவேஷன்ல இப்படி நடந்துக்க வாய்ப்பு அதிகமிருக்குன்னு புரிஞ்சுக்க. இந்த அனுபவத்தோட பின்னணில இன்னை செய்யற விஷயங்களை முடிவு பண்ணிக்கோ. அவ்ளோதான்”

பெரியவர் சொன்னதை அசை போட்ட இளைஞன் திரும்பிப்பார்க்கவில்லை. பெஞ்ச் காலியாக இருக்கும் என்று அவனுக்கு தெரியும்!

Wednesday, March 16, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 3



தர்ம அடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக போலீஸ் வந்து எல்லாரையும் சிரமப்பட்டு விலக்கியது. பைக் ஓட்டி வந்தவனை ஜீப்பில் ஏற்றி அழைத்துப்போனார்கள். திட்டிக்கொண்டே கூடி இருந்த மக்கள் அனைவரும் கலைந்து போனார்கள்.
திட்டிக்கொண்டே இளைஞன் டீக்கடைக்குள் நுழைந்தான்.
என்னப்பா ஆச்சு இவ்ளோ கோபமா இருக்கே?” கேள்வி வந்தது பெஞ்சில் அமர்ந்து இருந்த முதியவரிடமிருந்து.
எல்லாம் இந்த தறுதலைங்கலால. கண்ணு மண்ணு தெரியாம பைக் ஓட்ட வேண்டியது. அதுவும் இந்த பல்சார் வண்டிய ஏன் அப்பா அம்மா வாங்கித்தராங்கன்னு புரியல.இந்த அழகுல யார் வேகமா ஓட்டறாங்கன்னு போட்டி வேற நடத்துறாங்களாம்!
சின்ன குழந்த சார். எல்கேஜி யூகேஜி படிச்சுகிட்டு இருக்கும் போலிருக்கு. ஆயா கைய விட்டு உதறிட்டு அது ஓடின ஒரு செகண்டுல இந்த பாவி வந்து மோதிட்டான். @$*#%# தூக்கி எறிஞ்சு…. ஒரே ரத்தம். கை கால் கோணல்மாணலா இருக்கு. உசிர் இருக்க இல்லைன்னு தெரியலே!”
பாவம்! ”
என்ன சார் பாவம்ன்னு சர்வ சாதாரணமா சொல்றீங்க? எப்படி சார் இப்படி நடக்குது? சாமி எப்படி சார் இதை எல்லாம் அனுமதிக்குது? இதை அனுமதிக்கறா சாமியும் ஒரு சாமியா சார்?”
பெரியவர் பொறுமையாக பதில் சொன்னார். தீதும் நன்றும் பிறர் தர வாரான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்ல?”
மத்தவங்க தராம தானா வருதா சார்? என்ன கேட்டா இந்த பயல….”
உம் இந்த பயல?”
கண்ணுக்கு கண் வாங்கற மாதிரி இந்தப்பயல அந்த குழந்த வண்டி கொண்டு வந்து மோதி சாவடிக்கணும்!”
அந்த குழந்த எப்படி இருக்கோ! இருக்கோ இல்லையோ!”
செத்துப்போனாக்கூட அடுத்த ஜன்மத்துல பொறந்து இந்த பயல வண்டியால மோதி……” இளைஞன் ஏனோ நிறுத்தினான்.
ரொம்ப கரெக்டா சொன்னே!”
யோசித்தான். எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்குமே? ஒத்தன் என்ன அடிச்சா நா திருப்பி அடிக்கறேன். இன்னைக்கு முடியாட்டாலும் நாளைக்கி. என்னால முடியாட்டாலும் ஆளு வெச்சி… இல்ல போலீஸ்ல சொல்லி… எப்படியாவது அவனுக்கு திருப்பி கெடுதல் பண்ண பாக்கறேனே! எவ்வளவு சர்வ சகஜமா இந்த குழந்த பொறந்து அவனை மோதி சாகடிக்கணும்ன்னு தோணுது! அப்பறம் அவன் பொறந்து இவனை வண்டியால மோதி சாகடிச்சு அடுத்த ஜன்மாவுல இவன் அவனை சாகடிச்சு இவன் அவனை சாகடிச்சு …. இது எவ்வளோ ஜன்மம் தொடரும்? இது எப்பத்தான் நிக்கும்?
சார் …. “என்றபடி திரும்பி பார்த்த போது பெஞ்ச் காலியாக இருந்தது!

Tuesday, March 15, 2016

தேஹம் நாஹம்


 பகவான் ரமணரின் அடியார்களில் ஒருவர் குர்ரம் சுப்பராமையா. வருடா வருடம் ரமணாஸ்ரமத்துக்கு வந்துவிடுவார். இரு சிறு குழந்தைகளும் அவருடன் வருவர். வந்திருக்கும் அடியார்களில் சிலர் எதையேனும் எழுதி கொண்டு வந்து பகவானிடம் காட்டுவது உண்டு. அதில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொடுக்க வேண்டுவர்கள். அவரும் அதை பார்த்து திருத்தி கொடுப்பார். இதை பார்த்த சுப்பராமையாவின் சின்னக்குழந்தை தன் பள்ளி நோட்டுப்புத்தகத்தை கொண்டு பகவானிடம் கொடுத்தது. கூடியிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆனா பகவான் மற்றவர்கள் கொடுத்ததை வாங்கியது போலவே இதையும் வாங்கி குழந்தை எழுதியதை திருத்தி நோட்டுக்கு அட்டை போட்டு கொடுத்தார்.
இந்தக்குழந்தையை கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பார்.
இது துண்டு. இது பகவானோட துண்டு.
சரி.
துண்டு பகவான் ஆகுமோ?
ஆகாது.
இது என்ன?
கை.
இது பகவானோட கை. இந்த கை பகவானாகுமோ?
ஆகாது.
குழந்தையின் சட்டையை காட்டி இது என்ன என்பார். அது சட்டை என்று சொல்லும்.
இது யாரோட சட்டை?
இது என் சட்டை.
இது உன் சட்டை; ஆனா சட்டை நீயாகுமோ?
இல்லை.
இது என்ன?
இது என் கை.
இது உன் கை; ஆனா இந்தக்கை நீயாகுமோ?
இல்லை.
இது உன் உடம்பு; ஆனா இந்த உடம்பு நீயாகுமோ?
இல்லை.
இதே போல திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுப்பார்.
அப்புறம் சொல்லிக்கொடுத்தது:
தேஹம் நாஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
கோஹம் ஸோஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
( தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் + உடம்பு நான் அல்ல. நான் யார்? அதுவே நான்.)
இதையே திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுத்தார்.
மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் எவ்வளோ பெரிய விஷயம். குழந்தைக்கு என்ன புரியும்?
சுப்பராமையா ஊருக்கு செல்லும் நாள் வந்தது. பகவானிடம் சொல்லிக்கொண்டு போக வந்தார்கள். பகவான் மலைக்குப்போக கிளம்பிக்கொண்டு இருந்தார். குழந்தையை பார்த்து "எங்கே நான் சொல்லிக்கொடுத்ததை சொல்லு பார்க்கலாம்?”என்றார்.
தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் . குழந்தை திருப்பிச்சொல்லியது.
ரொம்ப சரி. இதையே தினமும் சொல்லிக்கொண்டே இரு! தன் கையில் இருந்த தடியால் அதன் தலையில் தட்டி சொன்னார் “ நான் என் வீட்டுக்குப்போறேன். நீயும் உன் வீட்டுக்குப்போ!”
ஓரிரு மாதங்களில் குழந்தை இறந்துவிட்டது. அதன் சமாதியில் கல்வெட்டு ஒன்று வைத்தார்கள். தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம்.

Monday, March 14, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் -2



சாமி ஊர்வலம் வந்து கொண்டு இருந்தது. ஒரே சத்தம்! தாரை தப்பட்டை. தாளம் ஆட்டம் பாட்டம். வருகிற ஊர்வலத்தில் ஒரு ஆசாமி ஆடிக்கொண்டே உயிருடன் இருந்த கோழி கழுத்தை கடித்தார். ரத்தம் உறிஞ்சி துப்பினார்.
காட்டானுங்க! ச்சேச்சே! என்று அலுத்துக்கொண்டான் இளைஞன். இதெல்லாம் ஒரு வழிபாடு. கொஞ்சம் கூட நாகரிகமில்ல. இதெல்லாம் அனுமதிக்கற சாமியும் ஒரு சாமியா?”
கண்ணப்பர பத்தி கேள்விப்பட்டு இருக்கியாப்பா?” என்ற குரல் எழுந்தது. இளைஞன் திரும்பிப்பார்த்தான். முன்னே பார்த்த அதே பெரியவர்தான். வழக்கமான பேப்பர் கையில் இருந்தது.

ம்! கேள்விப்பட்டு இருக்கேன். வேடந்தானே?”
ஆமா. அவரேதான். அவர் செஞ்ச பூஜை பத்தி தெரியுமா?”
ம்ம்ம் லேசா தெரியும். நீங்க சொல்லுங்க!”
அவருக்கு திண்ணன்னு பேரு. அவர் மலை மேல ஏறினப்ப சின்ன கோவில் ஒண்ணுல ஒரு சிவ லிங்கத்தை பாத்தார். உடனே ஈர்ப்பு வந்துடுத்து. மெய் மறந்து போனார். பூஜை பண்ணனும்ன்னு தோணித்து. இருக்கறதோ மலை உச்சில! கீழே போய் தேடி வேட்டையாடி மாமிசத்தை பக்குவப்படுத்தி எடுத்துகிட்டார். இன்னொரு கைல காட்டுப்பூ பறிச்சு எடுத்துகிட்டார், ம்ம்ம் குளிப்பாட்டுவாங்களே? ரெண்டு கைலேயும் ஏதோ இருக்கே? சரின்னு வாய்ல தண்ணி உறிஞ்சி எடுத்துகிட்டார். மலை மேலே சிரமப்பட்டு ஏறி தண்ணிய சிவலிங்கத்து மேல துப்பினார். அப்பறம் தொடச்சு காட்டுப்பூ எல்லாம் சாத்தினார். மாமிசத்தை படையலா வெச்சார். ராத்திரிக்கு காவலா நின்னார். அப்பறம் காலை கீழே இறங்கி வேட்டையாட ஆரம்பிச்சுட்டார். அங்கே சிவ கோச்சரியார்ன்னு பூஜாரி ஒத்தர் பூஜை செஞ்சு கொண்டு இருந்தார். அவர் வந்து பாத்து நடுங்கி போயிட்டார். யார் இப்படி அபசாரம் செஞ்சதுன்னு நல்லா திட்டிட்டு அப்புறம் சுத்தம் பண்ணி பூஜை பண்ணிட்டு நைவேத்தியம் செஞ்ச சோற எடுத்துக்கிட்டு போயிட்டார். வேடன் திருப்பியும் வந்தான். முந்தா நா செஞ்ச மாதிரியே பூஜை செஞ்சான். காவல் நின்னான். காலையில போயிட்டான். அடுத்த நாள் பூஜாரி வந்து பாத்து பதைச்சு போனார்.
இப்படியே அஞ்சு நாள் நடந்தது. பூஜாரிக்கு தாங்கலை. ‘கடவுளே! ஏன் இப்படி நடக்கறது’ ன்னு புலம்பி முறையிட்டுட்டு போனார். அன்னைக்கு இரவு கனவில சிவன் வந்து ’நடக்கறத மரத்தடியில் ஒளிஞ்சு இருந்து பாரு’ ந்னு சொல்லிட்டுப் போனார். பூஜாரியும் அதே மாதிரி காலை சீக்கிரமாவே கிளம்பி மரத்துப் பின்னால் ஒளிஞ்சு நின்னார். திண்ணன் வந்தார். பாத்தா சிவலிங்கத்து மேல கண்ணு மாதிரி ரெண்டு இருந்தது, அதில வலது கண்ணிலேந்து ரத்தம் வந்தது. கலங்கிப்போன திண்ணன் கண்ணுக்கு கண் என்கிற காட்டுவாசி எண்ணப்படி தன் கண்ணை அம்பால அகழ்ந்து அதை லிங்கத்து மேலே வெச்சு அமுக்க ரத்தம் வரது நின்னு போச்சு. ஆஹான்னு ஆனந்த கூத்தாடினான் திண்ணன். அப்ப இன்னொரு கண்ணுலேந்து ரத்தம் வர ஆரம்பிச்சது. உடனே திண்ணன் அம்பை எடுத்து தன் இன்னொரு கண்ணையும் தோண்டத் தயாராயிட்டார். ஆமா அடுத்த கண்ணும் போசுன்னா எங்கே கண்ணை வெச்சு அமுக்கறதுன்னு தெர்யணுமே? கொஞ்சம் கூட தயங்கலை. தன் காலை எடுத்து சிவலிங்கத்து மேல- அந்த கண் மேல வெச்சுக்கிட்டார். அம்பை எடுத்துட்டார். அப்ப சிவபெருமான் நில்லு கண்ணப்ப, நில்லு நில்லு! என்று நிறுத்தி ஆட் கொண்டார்.”
பெரியவர் கதை சொல்லும் போது கண்களில் நீர் துளித்ததை இளைஞன் பார்த்தான். அவனுக்குமே மனம் உருகிவிட்டது. பின் இளமைக்கே உரித்தான துடுக்கு மீண்டும் தலை எடுத்தது.
அது சரிங்க. அவருக்கு அவ்ளோ பக்தி இருந்தது. இவங்களுக்கு எல்லாம் என்ன பக்தி இருக்கு?”
பெரியவர் பார்வை கடையில் இயங்கிக்கொண்டு இருந்த டிவி மேல் பதிந்தது. ”அட! அது யாருப்பா?”
நம்ம நாட்டு பிரதமர். இது தெரியாதான்னா உங்களூக்கு?”
என்ன செய்யறங்க?”
வெளி நாடு போயிருக்காரு. அங்க ராணுவ மரியாதையோட வரவேற்கறாங்க! ”
உம் நிறையவே நடைமுறை சமாசாரம் இருக்கு போலிருக்கே?”
ஆமா! பின்ன ஒரு நாட்டு பிரதமர்ன்னா சும்மாவா?”
சரீஈஈ… இவர் திடீர்ன்னு உங்க வீட்டுக்கு வந்துட்டா நீ என்ன செய்வே?”
வாங்க வாங்கன்னு வரவேற்பேன்.”
ம் ...அப்பறம்?”
உள்ள கூட்டிப்போய் உக்கத்தி வெச்சு காபி சாப்படறீங்களா டீயான்னு விசாரிப்பேன்.”
ம்ம்ம்ம் அப்பறம்?”
என்ன விஷயமா வந்தீங்கன்னு கேப்பேன்.”
அவ்ளோதானா? இதோ இந்த நாட்டில எவ்வளோ மரியாதை செய்யறாங்க?”
என்ன இவ்ளோ முட்டாத்தனமா பேசறீங்க? என்னால முடிஞ்சபடி, எனக்குத் தெரிஞ்சபடிதானே நான் செய்ய முடியும்?”
அதானே! ரொம்ப கரெக்டு!”

இளைஞன் திடீரென்று யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஜனங்கள்… காட்டு ஜனங்கள்… நாகரிகம்ன்னு எல்லாம் ஒண்ணுமே இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும்? தெரிஞ்சது அவங்க குலத்தில பாரம்பரியமா என்ன செஞ்சுகிட்டு வராங்க என்கறதுதான். அப்படித்தானே சாமி கும்பிட முடியும்?

நீங்க சொல்லறது….” என்று ஆரம்பித்த இளைஞன் திரும்பிப்பார்த்தான். பெஞ்ச் காலியாக இருந்தது!