Pages

Saturday, February 6, 2016

நான் யார்? - 19



தீவிரமான ஆத்ம சாதகர் புத்தகங்களை படிக்கிறதால பிரயோசனம் உண்டா?

எந்த புத்தகத்தை படிச்சாலும் முக்திக்கு மனசை அடக்கணும்ன்னுதானே சொல்லி இருக்கு? இதை புரியற வரைக்கும் படிக்கலாம். அதுக்கு அப்புறம் மேலும் மேலும் புத்தகங்கள் படிச்சு பிரயோசனம் இல்லை. மனசை நாசம் செய்யறதுக்கு நாம யார்ன்னு அறியணும். அதுக்கு நான்யார்ன்னு விசாரிக்கணுமே தவிர எந்த புத்தகத்தையும் படிச்சு பிரயோசனமில்ல. அந்த புத்தகத்தில எப்படி விசாரிக்க முடியும்? நாமேதான் நம்மை ஞானக்கண்ணால கண்டு அறியணும்.

புத்தகத்தை படிக்கிறோம். அதாவது எழுத்துக்களை கண்ணால பார்க்கிறோம். பார்க்கிறதுக்கு மனசு ஒரு அர்த்தம் கொடுத்து சில நினைவுகளை தோற்றுவிக்குது. ஓஹோ! இது இப்படி ந்னு அறியறோம். இங்க வேலை செய்யறது அன்னத்தால் ஆன இந்த உடம்பில இருக்கிற சில கருவிகளும், விஞ்ஞான மய கோசத்தில இருக்கிற சில புலன்களும், மனோ மய கோசத்தில இருக்கிற மனம்/ அறிவு - இவ்வளவுதான். ஆனா ‘தான்’ என்கிறது இந்த கோசங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கு. இந்த அஞ்சு கோசங்களையும் கடந்து போகும் வரைக்கும் அதை உணர முடியாது. இந்த அஞ்சு கோசங்களில சிலது இல்லாம நூல்களால நமக்கு எதையும் உணர்த்த முடியாது. ஆகவே நூல்களால ஒரு நிலைக்கு மேல பிரயோசனம் இல்லை. அந்த நிலையில் உண்மையில கத்துக்கிட்டது எல்லாத்தையும் மறந்து புறம் தள்ள வேண்டி இருக்கும்!


23. முமுக்ஷுக்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜனமுண்டா?
எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை.
மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல், எப்படி நூல்களில் விசாரிப்பது? தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற் றானே யறிய வேண்டும். 'தான்' பஞ்ச கோசங்களுக்குள் ளிருப்பது; நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை. ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.

No comments: