Pages

Thursday, July 16, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 39


ரங்கநாயகி அம்மாள் பகவானின் பக்தை. தெலுங்கு பேசும் குடும்பம். நன்கு படித்தவள்; ஆங்கிலத்தில் நன்கு உரையாடுவாள். ஏனோ பகவானை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு ஓடிப்போய் அவரை கட்டிக்கொள்ளத்தோன்றும்! அடக்க முடியாது செயல்படுத்தவும் ஆரம்பித்தாள்! சேவகர்கள் தடுத்தனர். இது தொடர் கதை ஆகிவிட்டது. அதனால் அவளை ஆசிரமத்திலேயே அனுமதிக்க மறுத்தனர்.
அவள் நேராக சென்னைக்குச் சென்று ஒரு வக்கீலை அணுகினார். ஆசிரமத்தின் மீது வழக்கு போட்டு மீண்டும் பகவானை தரிசிக்க அனுமதி பெற்றுக்கொடுக்கும்படி கேட்டார். வக்கீல் அவளிடம் ஏன் அனுமதி மறுக்கிறார்கள்? என்று கேட்டார்.
நான் பைத்தியக்காரியாம்!”
நீங்கள் உண்மையில் அப்படியா?”
பார்த்தால் அப்படியா தெரிகிறேன்?”
ரமண மகரிஷி என்பவர் யார்?”
அடுத்து அரை மணி நேரம் அவரைப்பற்றி உயர்வாக அவள் விவரித்தாள்.
வக்கீலுக்கு அவரது உயர்வு புரிந்தது. இவளின் பக்தியும் புரிந்தது. ஆனாலும் பகவானைப்பார்த்து அவருடன் பேசிய பிறகே கேஸை எடுத்துக்கொள்ளலாமா இல்லையா என்று முடிவு செய்வேன் என்று கூறினார். அவளும் உடனே போகலாம் என்றாள். இருவரும் ரயிலில் கிளம்பினர். அதி காலை திருவண்ணாமலையை அடைந்தனர். ரயில் நிலைய அதிகாரி இவரை விசாரித்து விட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தார். வேண்டாத வேலை என்றார்.
குதிரை வண்டியில் ஆசிரமம் செல்லும்போதும் வண்டிக்காரன் பகவானைபற்றி உயர்வாக பேசிக்கொண்டே வந்தான். ஆசிரமம் வந்து சேர்ந்தார். வரவேற்று ஒரு அறையை ஒதுக்கினர். குளித்து முடித்து பகவானை பார்க்கச்சென்றார். நமஸ்கரித்தார். பகவான் தன் சேவகரிடம் இவரைக்காட்டி மெதுவாக ஏதோ கூறினார். அவர் வந்து வக்கீலை அழைத்துச் சென்று இட்லியும் காப்பியும் உணவருந்தக் கொடுத்தார். உணவருந்திவிட்டு மீண்டும் ஹாலுக்கு போனார். பகவான் உட்காரும்படி சைகை செய்தார். சிறிது நேரம் சென்றபின் பக்கத்தில் இருந்த ஒருவர் வக்கீலிடம் நீங்க வக்கீல்ன்னு நினைக்கிறேன், ரங்கநாயகி அம்மாளுக்காக கேஸ் போட வந்தீங்களா? அவங்க பைத்தியம்ன்னு உங்களுக்கு தெரியுமா?” என்றார். இவர் நான் வக்கீல். என் பெயர் சீனிவாசராவ்என்றார். அவர் நான் டாக்டர்என்றார். “அப்படியானா அவங்க பைத்தியம்ன்னு ஒரு சர்டிபிகேட் கொடுக்க முடியுமா என்றார் வக்கீல். பதில் இல்லை. பின் வக்கீல் பகவானிடம் தான் வந்த விஷ்யத்தை விளக்கினார். பகவான் அமைதியாக முழுக்க கேட்டுக்கொண்டார். பின் இங்கே உக்காருவாளே, அவளா? என்று தன் முன் முதல் வரிசையில் ஒரு இடத்தை காட்டினார். பின் எங்கே அவள்என்று கேட்டார்.
ஆசிரம வாசலில் இருக்கிறார்.”
இப்போ அங்கே இருப்பாளா?”
வக்கீல் ஆம் என்று சொல்லி தானே சென்று அவளை கூட்டிவந்தார். ரங்கநாயகி அம்மாள் வக்கீலின் பின்னே நடந்து வந்தார். ஹாலுக்குள் நுழைந்த உடனே ரமணா, ரமணாஎன்று கத்தியபடி பகவானை நோக்கி ஓடலானாள்.
வக்கீல் அப்படி செய்யலாகாது என்று கடிந்து அவரை உட்கார வைத்தார்.
பகல் உணவு முடிந்தது.
பகவான் வக்கீலிடம் நிறைய புகைப்படங்களை காட்டினார். பசு லக்‌ஷ்மி பற்றி பேசினார்.
மாலை ரயிலுக்கு ஊர் திரும்ப உத்திரவு கேட்டார் வக்கீல். பகவான் இரவு உணவு முடித்து போகலாம் என்றார்.
இரவு உணவுக்கு போய் பந்தியில் கோடியில் அமர்ந்தார். சாப்பிடத்துவங்கும் முன் ஒரு சேவகர் வந்து இவரை அழைத்துப்போனார். பகவான் அருகில் ஒரு இலை போட்டு இருந்தார்கள். அங்கே உட்காரச்சொன்னார்கள்.
சாப்பிடும் போது நான் பேசலாமா?” என்று வக்கீல் கேட்டார்.
தாராளமா என்றார் பகவான். பேசறதே உங்களுக்கு பிடிக்காது ந்னும் சாப்பிடும்போது உங்களோடு பேசக்கூடாதுன்னும் சொல்லித்தான் கூட்டி வந்தார்கள் என்றார் வக்கீல்.
பரவாயில்லை, என்ன கேட்கணுமோ கேளுங்கோ!” என்றார் பகவான்.
ஆசிரமத்திலே இருக்கிறவங்க ரங்கநாயகி அம்மாள் பைத்தியம் என்கிறாங்க. ஆனா அவங்களோ உங்க எதிரே நார்மலாத்தான் இருக்காங்க. உண்மை என்ன?”
பகவான் சொன்னார்” “ சிலர் கால் பைத்தியமா இங்கே வர்றா! அரை பைத்தியமா திரும்பிப்போறா! சிலர் அரைப்பைத்தியமா வந்து முழு பைத்தியமா திரும்பிப்போறா! வெகு சிலர் முழு பைத்தியமாவே வந்து பைத்தியம் தெளிஞ்சு மீண்டுடறா! எல்லாமே ஆச்சரியம்தான்! இது எப்படின்னு சொல்ல முடியாது!”
 

No comments: