Pages

Thursday, July 9, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 37


ஒரு முறை ராமசாமிப்பிள்ளை தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை இரும்புத் துரட்டி போட்டு பறித்துக்கொண்டு இருந்தார். மலைக்கு கிளம்பிய பகவான் அதை பார்த்துவிட்டு இரும்பு துரட்டிக்கு பதிலா மூங்கில் குச்சியை கட்டி போடக்கூடாதா? இரும்புத்துரட்டி மரத்தை காயப்படுத்தறது பாரு! அது பாவமய்யா! நீர் கேக்காமலே இளநீர் தரது. அதைப்போய் இப்படியா பண்ணறது?” என்று சொன்னார்.
ஆனால் ராமசாமிப்பிள்ளை பகவானுக்கு ஆன்மீகம் மட்டும்தான் நல்லாத்தெரியும். இந்த மாதிரி விஷயங்கள் அவ்வளவா தெரியாது. மூங்கில் துரட்டி போட்டா மூங்கில் சீக்கிரம் உடஞ்சிடும். நிறைய காய்கள் பறிக்க வேண்டியிருக்கு. அதுக்கு இரும்புத்துரட்டிதான் சரி என்று நினைத்துக்கொண்டு தன் வேலையை அப்படியே தொடர்ந்தார்.
பகவான் மலைக்கு போய் திரும்பிய போது ராமசாமிப்பிள்ளை வேலை செய்து கொண்டு இருந்தார். பகவான் கிட்டே வந்த போது ஒரு தேங்காய் நேராக ராமசாமிப்பிள்ளையின் முகத்தில் விழுந்து மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
பகவான் சொன்னப்ப கேக்கலை. இப்ப புரியறதா? நாம் செய்யற பாபம் நமக்கே திரும்பி வரும்ன்னு தெரியறதா?” என்றார்.

பகவானை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்து இருந்தார். ஆசிரமத்தில் தங்கினார். அதிகாலையிலேயே பகவானிடம் வந்து ராத்திரி எல்லாம் நாய் குரச்சிண்டே இருந்தது! ஒரே சத்தம். த்யானம் பண்ணவே முடியலைஎன்று புகார் கூறினார்.
பகவான் எந்த நாயும் குரைக்கலே ஓய்!உங்க மனசுதான் குரைச்சது!” என்றார்.

ஒரு நாள் வெளிநாட்டவர் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்தார். அவருக்கு கீழே உட்கார்ந்து பழக்கமில்லை. அதனால் உட்கார சற்றே உயரமான மடக்கு கான்வாஸ் நாற்காலியை கொண்டு வந்திருந்தார். அதை பகவானுக்கு எதிரே சற்று தள்ளி பிரிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார். இதைப் பார்த்த சேவகர் ஒருவர் அவரிடம் சென்று பகவானுக்கும் உயரமாக அமர்வது மரியாதை இல்லை என்று பணிவுடன் தெரிவித்தார்.
அவர் அந்த ஆசனத்தை மடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டார்.
சோஃபாவில் அமர்ந்து இருந்த பகவான் இதை கவனித்தார். அந்த சேவகர் திரும்பி வந்ததும் ரொம்ப பெரிய காரியம் பண்ணிட்டு வந்தேளாக்கும்! கீழே உட்கார சிரமப்பட்டு உசரமா ஒரு ஆசனம் கொண்டு வந்தா அதை தடுத்து அனுப்பிட்டேள். இங்கே இன்னொருத்தர் அதைவிட உசரமான ஆசனத்துலே ஒத்தர் உக்காந்து இருக்காரே! அவரை என்ன பண்ணுவீங்க?” என்று மேலே காட்டினார். அங்கே பகவானுக்கு நேர் மேலே ஒரு பெரிய மந்தி உட்கார்ந்து இருந்தது! அது வரை யாரும் அதை பார்க்கவில்லை!
கீழே என்ன மேலே என்ன, இதுலே என்ன இருக்கு? எல்லாம் நினைப்புதான்!” என்றார் பகவான்!
 

No comments: