Pages

Saturday, May 30, 2015

உள்ளது நாற்பது -28

 

நானென்றித் தேக நவிலா துறக்கத்து
நானின்றென் றாரு நவில்வதிலை நானொன்
றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்
கெழுமென்று நுண்மதியா லெண்.

நான் என்று இத் தேகம் நவிலாது உறக்கத்து
நான்இன்று என்றுஆரும் நவில்வதுஇலை நான் ஒன்று
எழுந்தபின் எல்லாம்எழும் இந்தநான் எங்கு
எழும்என்று நுண்மதியால் எண்.

இந்த தேகம் நான் என்று சொல்வதில்லை. அது ஜடம். மனதின் தாக்கம் இல்லாமல் அது தன்னை நான் என்று சொல்ல இயலாது. நாம் ஆழ்ந்து உறங்கும் போது அகங்காரம் இருப்பதில்லை. அப்போது நான் இருக்கவில்லை என்று யாருமே சொல்வதில்லை. நான் நன்றாக உறங்கினேன்; சுகமாய் இருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். விழிப்பு வர நான் என்னும் அகங்காரம் எழ மீதி எல்லாம் எழுகிறது. எல்லா பொருட்களும் தோன்றுகின்றன. ஆகையால் இந்த அகங்காரத்தால் தோன்றும் நான் எழும் இடம் எது என்பதை நுட்பமான புத்தியால் ஆராய வேண்டும்.
(அகங்காரத்தால் எழும் 'நான்' உம், உண்மையான 'நான்' உம் வெவ்வேறானவை)

न वक्ति देहोऽहमिति प्रसुप्तौ न कोऽपि नाभूवमिति प्रवक्ति ।
यत्रोदिते सर्वमुदेति तस्य धियाऽहमः शोधय जन्मदेशम् ॥ २५ ॥
ந வக்தி தே³ஹோ()ஹமிதி ப்ரஸுப்தௌ ந கோ()பி நாபூவமிதி ப்ரவக்தி |
யத்ரோதி³தே ஸர்வமுதே³தி தஸ்ய தியா()ஹம: ஶோதய ஜன்மதே³ஶம் || 25 
                               

Friday, May 29, 2015

அடியார்கள் - வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள்



வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள் நிறைய விரதம் இருப்பார், அளவுக்கு மீறி இப்படி இருப்பதை பார்த்து பகவான் இப்படி இருக்கத்தேவையில்லை என்றார். அவளோ சாஸ்த்திர புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள். அதில் தேகத்தையும் போஷித்து தன்னையும் உணர விரும்புபவன் முதலையை தெப்பம் என நினைத்து ஆற்றை கடக்கப்பவன் போல்என்று இருந்தது.
பகவான் அதுக்கு இப்படி பட்டினி இருக்கணும்ன்னு அர்த்தமில்லை. உடம்பை வருத்தக்கூடாது. அதுக்கு அர்த்தம் உடம்புக்கு தேவைக்கு மேலே தரக்கூடாது. மனசுக்கு விரதத்தை கொடு. உடம்புக்கு தேவையானதை கொடுத்து அது ஒரு தடையா இல்லாம இருக்கச்செய்யணும். அதுக்கு மிதமான சாத்வீக ஆகாரம் போதுமானதுஎன்று கூறினார்.

வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாவுக்கு நிறைய படிக்கப்பிடிக்கும். ஒரு சமயம் பக்த விஜயம் படித்துக்கொண்டு இருந்தார், அதில் நாமதேவர் பாண்டுரங்கனிடம் பேசிக்கொண்டு இருப்பார்; சேர்ந்து சாப்பிடுவார் என்றெல்லாம் எழுதி இருந்தது. இதெல்லாம் உண்மைதானா என்று சந்தேகம் எழுந்தது. பகவானிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தார்.
 ஒரு நாள் காலை பகவான் உணவு முடித்து சாவதானமாக அமர்ந்திருந்த போது அவருக்கு வெந்நீர் கொடுத்துவிட்டு பகவானே! நாமதேவர் பாண்டுரங்கன் கூட உக்காந்து பேசி சாப்டு எல்லாம் செஞ்சிருக்காராமே? உண்மையா?” என்று கேட்டார்.
பகவான் ஆமா! அப்படித்தான் எழுதி இருக்கா! இப்ப நீயும் நானும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அதுவும் உண்மை!என்றார். இது நிஜம்னா அதுவும் நிஜம்தான். இது பொய்ன்னா அதுவும் பொய்தான்! எல்லாம் பாவனைதான்! ஆனாலும் அப்படிச்சொல்லப்படாது. பக்தியோட ரசம் போயிடும். பக்தியே பாவனைதானே? பக்தியின் முதிர்ச்சிலே பக்தனுக்கு தான் வேறு பகவான் வேறுன்னு தோணாது. ஆனாலது வரைக்கும் பகவான் இப்படி எல்லாம் தன்னை வெளிப்படுத்திக்க வேண்டி இருக்கு! என்ன செய்யறது? பக்தன் கேட்கிறதை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. நான் யார்ன்னு தெரிஞ்சா இப்படி எல்லாம் பாவனை தோன்றாது. பார்க்கிற நாமளேதான் பார்க்கப்படுவது எல்லாமும்! பார்க்கிறவரைத்தவிர எதுவும் உண்மையில்லை!என்றார்.


Thursday, May 28, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 25



1940 களில் அம்மாவின் கோவில் கட்டப்பட்டு வந்தது. பணப்பற்றாக்குறை. வேலை தடங்கி நின்றது. இன்னும் ஐம்பது ஆயிரம் தேவைப்பட்டது.

அப்போது வட நாட்டிலிருந்து சகன்லால் யோகி என்றோரு அன்பர் பகவானை முதன் முதலாக தரிசிக்க வந்து இருந்தார். சின்னசாமிக்கு அவரைப்பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது. அவர் டி.பி. ராமசந்திரஐயரிடம்எனக்கு யோகியை அறிமுகப்படுத்தி வைங்கோ. நாம மூணு பேரும் ஜம்னாலாலை போய்ப்பார்த்தா பணம் கிடைக்கும். கோவிலை கட்டிவிடலாம்என்றார். இத்திட்டம் சகன்லால் யோகிக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் தர்மசங்கடம் என்பதால் ஒத்துக்கொண்டார். அடுத்து பெரிய தடை ஒன்றை கடக்க வேண்டும்! ஆமாம், பகவானிடம் இதற்கு உத்திரவு வாங்க வேண்டும்!

சின்னசாமிக்கு பகவானை நேரில் எதையும் கேட்க எப்போதுமே பயம். எதையும் வேறு யாரையும் விட்டு கேட்கச்சொல்வார். டி.பி. ராமசந்திர ஐயரை போய் இது பற்றி சொல்லச்சொன்னார். ராமசந்திரஐயர் இதை நான் எப்படி பகவான்கிட்டே சொல்லறது? நீங்களும் வாங்கோ!” என்றார். சின்னசாமி ஒத்துக்கொள்ளவில்லை. பின் மதிய வேளையில் ராமசந்திரஐயர் வேறு சிலருடன் பகவானை பார்க்கச்சென்றார். பகவான் இவர்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. பார்க்க விரும்பாதவர் போலவே இருந்தது. யாருக்கும் பேசவும் தைரியமில்லை. ஒரு வழியாக மௌனசாமி பகவானிடம் விஷயத்தை சொன்னார். நீண்ட நேரம் பகவான் பதிலே கொடுக்கவில்லை. கடைசியில் அவர்களை பார்த்து சொன்னார்: “ என் பேரை சொல்லி யாரிடமும் யாசிக்காதீங்கோன்னு பல முறை சொல்லிட்டேன். திரும்பவும் சொல்லறேன். இருக்கறதிலே திருப்தியா இருங்கோ! நடக்கிறது நடக்கும். அருணாசலத்துக்கிட்டே உங்களுக்கு எப்படி நம்பிக்கை இல்லாம போச்சு? அது வேண்டியது எல்லாம் கொடுக்கும் என்று மலையை நோக்கி கைகாட்டினார்.

இப்போ போய் பணம் கேட்டா கொடுக்கறவா கேப்பாளே? பகவான் உத்தரவிலேதான் வந்தேளான்னு? அப்ப என்ன பதில் சொல்லுவீங்க?” என்றார் பகவான்.
சகன்லால் கண்டிப்பா கேப்பாங்க. உத்திரவு இல்லேன்னு தெரிஞ்சா பைசா கூட கொடுக்க மாட்டாங்க!” என்றார்.
ஒவ்வொருவராக வெளியே சென்றுவிட்டனர். ராமசந்திரஐயர் மட்டும் மிஞ்சினார்.

இந்த ஆசிரமும் இந்த கட்டடங்களும் யாசகம் கேட்டா வந்தது? என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது நடந்தே தீரும். எதுவும் நம்ம முயற்சியிலே இல்லே. அம்மா விதேகமான போது, இருட்டினப்பறம் சப்தமில்லாம கொண்டுபோய் யாருக்கும் தெரியாம ஆள் அரவம் இல்லாத இடத்திலே புதைச்சுட்டு வந்துடுன்னு சொன்னேன். அப்படியா நடந்தது? எது எப்படி நடக்கணுமோ அப்படித்தான் நடக்கும்! பாத்தியோ? விடியறதுக்குள்ளே சத்தமில்லாம புதைக்கசொன்ன இடத்துலே எத்தனை கட்டிடம் சுத்தி வந்துடுத்து? நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தா போறும். என்னென்ன நடக்க வேண்டி இருக்கோ அத்தனையும் தானா நடக்கும்என்றபோது பகவான் முகம் கம்பீரமாக தோன்றியது!
 

Wednesday, May 27, 2015

உள்ளது நாற்பது -27


மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற்
பதித்திடுத லன்றிப் பதியை மதியான்
மதித்திடுத லெங்ஙன் மதி.

மதிக்கு ஒளிதந்து அம்மதிக்குள் ஒளிரும்
மதியினை உள்ளே மடக்கி பதியில்
பதித்திடுதல் அன்றி பதியை மதியால்
மதித்திடுதல் எங்ஙன் மதி.

பதி என்பது ஆன்ம ஸ்வரூபம். இது ஜடமாகிய புத்திக்கு பிரகாசம் கொடுக்கிறது. அந்த புத்தியிலேயே பிரகாசிக்கிறது. இந்த புத்தியை உள்ளே திருப்பி அந்த ஆன்ம ஸ்வரூபத்தில் லயிக்க செய்வதே இயலுகின்ற காரியம். அப்படி இல்லாமல் புத்தியால் ஆன்ம ஸ்வரூபத்தை அறியவோ நினைக்கவோ முயன்றால் அது இயலாது என அறிவாயாக.
புத்தியாலோ மனத்தாலோ நாம ரூபம் அற்ற ஆன்ம ஸ்வரூபத்தை அறிய இயலாது. அப்படி அறிய முயற்சிக்கும் அறிவே அதற்கு தடையாக இருக்கும். இந்த அறிவு/ மனது செயலற்று நாசமாகிப்போனால்தான் ஆன்ம ஸ்வரூபத்தை உணரலாம்.

धिये प्रकाशं परमो वितीर्य स्वयं धियोऽन्तः प्रविभाति गुप्तः ।
धियं परावर्त्य धियोन्तरेऽत्र संयोजनान्नेश्वरदृष्टिरन्या ॥ २४ ॥
தியே ப்ரகாஶம்ʼ பரமோ விதீர்ய ஸ்வயம்ʼ தியோ()ந்த: ப்ரவிபாதி கு³ப்த: |
தியம்ʼ பராவர்த்ய தியோந்தரே()த்ர ஸம்ʼயோஜனான்னேஶ்வரத்³ருʼஷ்டிரன்யா || 24 ||

Tuesday, May 26, 2015

அடியார்கள் - முருகனார், பலராமரெட்டி



முருகனாரின் தேகம் 1975 இல் நலிவுற்றது.ஆசிரமத்தில் டிஸ்பென்சரி அருகில் உள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார். அமாவாசை அன்று உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. அன்பர்கள் வந்து தரிசித்தனர். ஆக வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். ஆசிரம அன்பர் ஆஞ்சநேயலுவை கூப்பிட்டு சமாதி குழிக்கான இடத்தை தேர்வு செய்யும்படி பணித்தனர். உயிர் அடங்கியது. குழி வெட்ட ஆட்கள் வந்தனர்.
முதல் முறை காட்டில் சோண தீர்த்தத்தில் பகவான் பார்வையில் அவர் சிவத்துடன் கலந்த போது அவரும் அண்ணாமலையாரும் வெளிவந்தனர். வெளி வந்ததும் அண்ணாமலையை வணங்கினர்.
இப்போது சிவத்தில் கலந்தவர் சிவமாகவே நின்று தான் வெளி வந்ததை பார்த்தார்.
முருகனார் கண் விழித்தார் என எல்லாரும் ஆனந்தமடைந்தனர். இருப்பிடம் திரும்பினர்.
ஆஞ்சநேயலு நேரே முருகனாரிடம் சென்றவர் என்ன சாமி! உங்களுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணி இடத்தை மார்க் பண்ணி வெச்சு தோண்ட ஆரம்பிச்சா இப்படி எழுந்து வந்துட்டீங்களே?” என்று உரிமையுடன் கேட்டார்.
முருகனார் கவலைப்படாதே! அடுத்த வருஷம் இதே நாள் உனக்கு வேலை இருக்கு!என்றார்.
அடுத்த ஆண்டு சரியாக அதே ஆவணிமாத அமாவாசை அன்று உடலைவிட்டார். நான் வந்தாலும் போனாலும் வருபவனும் போகிறவனும் நான் இல்லைஎன்பதை மீண்டும் மெய்ப்பித்தார்.



பலராம ரெட்டி திருவண்ணாமலையிலேயே தங்கி வாசம் செய்ய ஆரம்பித்த பிறகு தினசரி அதி காலையிலேயே ஆசிரமத்துக்கு வந்துவிடுவார். ஓல்ட் ஹாலின் கதவு திறக்க காத்திருப்பார். திறக்கப்படும் போது பகவானை தரிசித்து அவர் இரவு போர்த்தி இருந்த சால்வையை மடித்து வைப்பார். இந்த சிறிய சேவையை பகவான் அனுமதித்தார். மதியமும் இதே போல பலராம ரெட்டி தயாராக இருப்பார். பகவான் முன் த்யானத்தில் அமர்ந்து இருப்பார். சில நாட்கள் சென்றன. பக்தர்கள் பலர் மதியம் மூன்றரைக்கே வர ஆரம்பித்தனர். பலராம ரெட்டிக்கு இது கஷ்டமாக இருந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலேயே மதிய த்யானத்தை செய்ய நினைத்து மதியம் ஓல்ட் ஹாலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
2-3 நாட்கள் ஆயின. ஜி.வி சுப்பராமையா மதியம் ஆசிரமத்துக்கு வந்தார். பலராமரெட்டி எங்கே என்று பகவானிடம் விசாரித்தார்.
அடுத்த நாள் காலை சால்வையை மடித்துக் கொண்டு இருந்த போது பகவான் இது பற்றி பலராமரெட்டியிடம் கூறினார். பகவான்  மறைமுகமாக எப்போதும் போல மதியம் வரச்சொல்லுகிறார் என்று அவருக்கு தோன்றினாலும் மதியம் ஒல்ட் ஹாலுக்கு போகவில்லை. அடுத்த நாள் காலை சால்வையை மடிக்கச்சென்ற போது பகவான் அதை அவரிடம் தரவில்லை; தானே மடித்துக்கொண்டார்.
தன் முன்னேற்றத்துக்காக அவரது அருகில் இருப்பதை பகவான் விரும்புகிறார் என்று உணர்ந்து மீண்டும் மதிய வேளைகளில் பகவான் எதிரில் அமர்வதை தொடர்ந்தார். சால்வை மடித்து வைக்கும் பாக்கியமும் கிடைத்தது!


அடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி - 4

 


அண்ணாமலை ஸ்வாமி ஓய்வு எடுப்பதை பகவான் விரும்பியது இல்லை. ஒரு நாள் அண்ணாமலை ஸ்வாமியின் காலில் வலி கண்டது. சுருக் சுருக் என்று ஆணியால் அடிப்பது போல இருந்தது. ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அன்று பகவான் எக்கச்சக்க வேலைகளை செய்யச்சொன்னார். வலியை பொறுத்துக்கொண்டு அண்ணாமலை எல்லா வேலைகளையும் முடித்தார், ஒன்றைத்தவிர. அதை பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார். பகவானிடம் போய் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டதாக சொன்னார். பகவான் அவர் செய்யாத வேலையை குறிப்பிட்டு அதை முடித்தாயிற்றா என்று வினவினார்.
அண்ணாமலை வலி காரணமாக செய்யவில்லை என்றும் வலி சரியானதும் செய்து முடிப்பதாகவும் சொன்னார்.
பகவானோ முதல்லே போய் அந்த வேலையை முடி. வேலையை ஆரம்பிச்சா வலி சரியாகும்என்றார்.
அண்ணாமலையும் போய் அந்த வேலையை துவக்கினார், வலியும் போய் விட்டது!

அண்ணாமலைஸ்வாமி கடப்பாரையால் குழி தோண்டிக்கொண்டு இருந்தார். பகவான் அங்கே வந்து நீயே இதை செய்யறியா? இல்லை யாரேனும் செய்யச்சொன்னாங்களா?” என்று கேட்டார். அண்ணாமலை சின்னஸ்வாமி செய்யச்சொன்னதாக சொன்னார். பகவான் முகம் மாறியது. அவன் வேலை கொடுக்கறானா? ஏன்?” என்று சொல்லியபடியே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் சென்று வந்தா யோகி ராமையா அண்ணாமலை ரொம்ப வேலை பாக்கறார். இளைச்சுட்டார். அவருக்கு ஓய்வு கொடுக்கணும்என்றார். பகவான் சரி, ஓய்வு கொடுக்க வேண்டியதுதான்என்றார்.
இரு நாட்கள் சென்றன. பகவான் குளிக்கும்போது அண்ணாமலைஸ்வாமியும் மாதவஸ்வாமியும் உதவிக்கு இருந்தனர். குளியல் முடிந்த பிறகு மாதவஸ்வாமி கஞ்சா லேகியம் சாப்பிடறவங்க ஆனந்தம்ன்னு சொல்லறாங்களே! அது எப்படி இருக்கும்? ஆத்மானந்தமும் அதுவும் ஒண்ணா? என்று கேட்டார்.
பகவான் அது தப்பான பழக்கம்என்று சொல்லிவிட்டு கஞ்சா லேகியம் சாப்பிட்டவர்கள் செய்வது போல அண்ணாமலைஸ்வாமியை கட்டிப்பிடித்து ஆனந்தம் ஆனந்தம்என்றார். இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்தார். அண்ணாமலை உணர்வற்றுப்போனார். உணர்வு திரும்பிய போது பகவானும் மாதவஸ்வாமியும் சாப்பிடப்போய்விட்டனர்! அண்ணாமலைக்கு மணி அடித்ததோ இவர்கள் சாப்பிடப்போனதோ தெரியவே இல்லை!
அண்ணாமலை சென்று உணவு உண்டார். பின் பகவானை தேடிப்போனார். அவர் மலையில் ஒரு பாறை மீது உட்கார்ந்து இருந்தார். நான் ஆசிரமத்தைவிட்டு போயிடலாம்ன்னு இருக்கேன். பலாக்கொத்தில் இருந்து கொண்டு தியானம் பண்ணாலாம்ன்னு இருக்கேன்!என்றார். பகவானும் ஆஹா! ரொம்ப நல்லது, ரொம்ப நல்லது!என்றார்.
அண்ணாமலை தன் பொறுப்புக்களை ஆபீசில் ஒப்படைத்துவிட்டு பலாக்கொத்தை நோக்கி நடந்தார்!

அண்ணாமலைஸ்வாமி மலைக்குகையில் நாளெல்லாம் தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஒரு குகையை கண்டு பிடித்து வசிப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்தார். அதி காலையிலேயே விழித்துக்கொண்டு உணவு தயார் செய்து கொண்டு குகைக்குச் சென்றார். அது என்னவோ சரிப்படவில்லை. யாரேனும் வந்து தொந்திரவு கொடுத்தப்படி இருந்தார்கள். தவம் தடைப்பட்டதால் பகவான் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்தார்.
பகவானிடம் போய். யாரும் வராத இடத்திலே இருந்துகொண்டு தபஸ் பண்ணப் பாக்கிறேன். கொஞ்சம் உணவு என் முயற்சியே இல்லாம கிடைக்கணும். எந்நேரமும் கண்ணை மூடி உலகத்தை பாக்காம தியானம் செய்யணும். இப்படி ஒரு ஆசை உள்ளே வளந்துகொண்டே இருக்கு. இது சரியா பகவானே?” என்று கேட்டார்.
பகவான் நிதானமாக பதில் சொன்னார். இப்படி ஆசை எல்லாம் பட்டா அதுக்குன்னு ஒரு ஜன்மா வரும். எங்கே வசிக்கிறே என்கிறது முக்கியமில்லே. மனசு ஆத்மாவிலே இருக்கணும். அவ்வளோதான். ஆத்மாவுக்கு அந்நியமா ஒரு இடமும் இல்லை. நினைப்புன்னு ஒண்ணு இருந்தா குகை கூட ஜனக்கூடம் இருக்கிற இடமே.
கண்ணை மூடித்தான் தியானம் பண்ணனும்ன்னு ஒண்ணுமில்லே. மனசை மூடணும். மனசே உலகம். நியாய வழியிலே போறவா இப்படி எல்லாம் ப்ளான் பண்ண மாட்டா. கடவுள் விட்ட வழியிலே போவா. கடவுள் நம்மை உலகத்துக்கு அனுப்பும் முன்னே இவனுக்கு இன்னதுன்னு நிர்ணயம் பண்ணிதான் அனுப்பறார்.என்றார்.

பலாக்கொத்திலேயே தங்கி இருந்த அண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்து போகும் வழியை முட்களை அகற்றி சீர் செய்தார். பாதை சுத்தமாயிற்று. அன்றிரவு பகவானைப் பார்க்கப்போனார்.
பகவான் பலாக்கொத்து பாதையை யார் சுத்தம் பண்ணா?” என்று கேட்டார்.
வழி எல்லாம் முள்ளா இருந்ததாலே நாந்தான் செய்தேன்என்றார் அண்ணாமலை.
செஞ்சா அத்தோட அதை மறந்துடணும். நான் செஞ்சேன், நான் செஞ்சேன்ன்னு ஏன் அதையே மனனம் செஞ்சுண்டு இருக்கே?” என்று கடுமையுடன் கேட்டார் பகவான்.
பகவானுக்கு சேவை செய்தோம் என்ற பெருமிதம் இருந்ததோ என்னவோ!
தொடர்ந்து செஞ்சதை அப்பவே மறந்துடணும்; திரும்பிப் பார்க்கப்படாது. அப்படி இருந்தா உனக்கு நல்லது நடக்கும்என்றார் பகவான்.

அண்ணாமலை இரவு சென்று பகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அது மிகவும் பிடித்து இருந்தது. பகவானும் எப்போதுமில்லாத கருணையுடன் இருப்பார்.
சில நாட்கள் சென்றன. அண்ணாமலை போகும்போது பகவான் வழக்கத்துக்கு மாறாக ஒரு துண்டால் தலையை மறைத்துக்கொண்டு இவரை பார்ப்பதை தவிர்த்தார். இதே போல தொடர்ந்து நடந்தது. மூன்றாம் நாள் பொறுக்க முடியாமல் அண்ணாமலை கேட்டேவிட்டார். பகவான் ஏன் இப்படி முஸ்லிம் பெண்பிள்ளைகளைப்போல நான் வரும்போதெல்லாம் முகத்தை மூடிக்கிறீங்க?”
நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்! நீ ஏன் பேசறே?”
அண்ணாமலை திகைத்துப்போனார். ஹாலை விட்டு வெளியேறி மரத்தடியில் நின்றார். ஒன்றுமே புரியவில்லை.
சற்று நேரத்தில் பகவான் அழைப்பதாக வந்து சொன்னார்கள். உள்ளே வேறு யாருமில்லை. பகவான் கேட்டார்: நீ நாஸ்திகனா?”
ஏன் இப்படி கேட்கிறார்? புரியவில்லை.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகன் நிறைய பாபம் செய்யலாம். அதனால துன்பம் அனுபவிப்பான். நீ பக்குவமானவன். பக்குவமான பின் கடவுள் வேறே நீ வேறே ந்னு நினைக்கிறது பெரிய பாபம். நாஸ்திகனுக்கு சமம். அவனுக்கு ஏற்படும் கதியே உனக்கும் ஏற்படும்.
நீ இனிமே இங்கே வர வேண்டாம். நீ வேற, இது வேறங்கிற நினைப்பை போக்கிக்கோ!

அத்துடன் அண்ணாமலை ஆசிரமத்துக்கு வருவது நின்று போனது.

 

Monday, May 25, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 24



1926 இல் அருணாசலம் பிள்ளைக்கு கனவு ஒன்று வந்தது. அடுத்து பிறக்கப்போகும் கன்றுக்குட்டியை ரமணாசிரமத்துக்கு விடச்சொல்லி உத்திரவாயிற்று.
அருணாசலம் பிள்ளையும் அதே போல தாயையும் கன்றையும் ஆசிரமத்துக்கு கொண்டு வந்தார்.
இதெல்லாம் எங்களுக்கு எதுக்கு?” என்றார் பகவான்.
சாமி! உத்திரவுன்னு படகு ரயில்ன்னு சிரமப்பட்டு ஏத்தி கொண்டு வந்திருக்கேன். ஏத்துக்கணும் என்றார்.
அதான் கொடுத்தாச்சே! இப்போ பகவானுதுன்னு நினைச்சு கொண்டு உம்மிடமே வைத்துக்கொள்ளும்!”
அருணாசலம் மனந்தளர்ந்தார்.
இங்கே யார் பாத்துப்பா?”
ராமநாத ப்ரம்மச்சாரி முன் வந்தார். வெள்ளிக்கிழமை வந்ததால் லக்‌ஷ்மி எனப்பெயரிட்டனர்.
தினசரி பகவான் தரிசனத்துக்கு அவள் வரும்போது அவ்வளவு வேகமாக வருவாள். வழியில் யாரும் இருந்துவிட்டால் அவ்வளவுதான்! வந்ததும் பகவான் கால்களில் தலையை வைப்பாள்.
ஆசிரமத்தில் விசேஷம் என்றால் லக்‌ஷ்மிக்கு விருந்து ஓல்ட் ஹாலிலேயே தரப்படும். சமயத்தில் கொட்டிலுக்கே கூட சென்று கொடுத்துவிட்டு வருவார்.

ஒரு நாள் ஆசிரமத்து பசுமாடு லக்‌ஷ்மிக்கு தீவனம் இல்லாமல் போயிற்று. இதை தெரிந்து கொண்ட பகவான் அன்றைக்கு மதிய உணவுக்குச் செல்லவில்லை. “எனக்கு உள்ளதை லக்‌ஷ்மிக்கு கொடுங்கோ என்றார். விஷயம் அறிந்து கொண்ட நிர்வாகத்தினர் கடையில் இருந்து தீவனம் தருவித்து லக்‌ஷ்மிக்கு கொடுத்தனர். அதன் பின்னரே பகவான் உணவுண்டார்.

1948 ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம் போல லக்‌ஷ்மிக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கழுத்தில் மாலை சார்த்தி இருந்தனர். அவள் காலை பரப்பி படுத்து இருந்தாள். வெங்கடரத்தினம் விசிறிக்கொண்டு இருந்தார். அவளுடைய இறுதி காலம்.
பகவான் கோசாலைக்கு வந்தார். தலைமாட்டில் அமர்ந்தார். அவளுடைய முகத்தை கைகளால் ஏந்தி என்னம்மா என்ன?’ என்றார். கால் மணி நேரம் கழித்து இங்கேயே இருந்தேன்னா எல்லாரும் இங்கே வந்துடுவா. அப்புறம் அம்மாவுக்கு ஆனது போல உன்னைச்சுத்தி எல்லாரும் இருப்பா. அதெல்லாம் எதுக்கு? நான் போகட்டுமா?” என்று கேட்டார்.
லக்‌ஷ்மி அமைதியாக இருந்தாள்.
என்னம்மா என்ன சொல்றே?” என்று மீண்டும் அன்புடன் கேட்டார். பின் புறப்படத்தயாரானார். “வாய்க்குள்ளே ஈ போகாமே யாராவது பாத்துக்கணும் என்றார்.
சற்று நேரத்தில் அவள் அடங்கினாள். பகவானுக்கு தகவல் போயிற்று. அவர் வந்து அருகில் அமர்ந்து ஒரு குழந்தையை சீராட்டுவது போல தலை துக்கிப்பிடித்து என்னம்மா லக்‌ஷ்மி! லக்‌ஷ்மி!’ என்று கூப்பிட்டார்.
கண்களில் நீர் கோர்த்திருந்தது! “இவளாலேதான் இந்த சம்சாரம் இவ்வளவு பெரிசாச்சு!” என்றார். எழுந்து லக்ஷ்மிக்கு நல்ல சமாதி கட்டணும்ன்னு ராமக்ருஷ்ணன் சொல்லிண்டே இருக்கான்என்று சொல்லியபடி வெளியேறினார்.
 

Friday, May 22, 2015

அடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி -3




 அண்ணாமலைஸ்வாமியின் அடுத்த பணியாக கோசாலை கட்டும் பணி தரப்பட்டது. அப்போது ஆசிரமத்தில் லக்‌ஷ்மி மட்டுமே இருந்தாள். ஆகவே சின்னசாமி ஒரு சிறிய 10*10 அளவுக்கு கோசாலை அமைக்க திட்டமிட்டார்.
பகவான் விருப்பம் அதுவாக இல்லை. பூமி பூஜை ஆயிற்று. எல்லாரும் சென்றுவிட்டனர். பகவான் அண்ணாமலைஸ்வாமியிடம் வரும் காலங்களிலே நெறைய பசுமாடு வரப்போறது. பெரிசா கட்டு, நீயே முன்னிருந்து கட்டணும்!” என்றார். பின் கைத்தடியால் எங்கிருந்து எது வரை என்று காட்டிக்கொடுத்தார். 48 அடிக்கு 48 அடி, சரியா என்றார். கடைசியாக இதெல்லாம் நீயே செய்யறதா இருக்கட்டும். நான் சொன்னதா சொல்லாதே!” என்றார். அருணாசலம் விளையாடியது. குரு குதிஎன்றதும் சீடனும் மலை உச்சியில் இருந்து உடனே குதித்தான்.
அஸ்திவாரம் தோண்டுதல் ஆரம்பித்தது. சின்னசாமி அருகில் இல்லை. வேலை மள மள என்று நடந்தது. மதியம் சின்னசாமி வந்து பார்த்த போது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அண்ணாமலையை பார்த்து பெரிசா இருக்கே? நீதான் ப்ளானை மாத்தினியா? மாத்த உனக்கு என்ன அதிகாரம்? நீ யார் ப்ளானை மாத்த?” என்று கோபமாக கேட்டார்.
அண்ணாமலை நாந்தான் மாத்தினேன். பெரிசா கட்டினாத்தான் நன்னாயிருக்கும் என்றார்.
சின்னசாமி என்கிட்டே கேட்காம ஏன் மாத்தினே? இங்கே நாந்தானே சர்வாதிகாரி? நான் இந்த ஆசிரமத்தை நல்லா கொண்டு வரணும்ன்னு நினைக்கிறேன். ஆளுக்கு ஆள் தன்னிஷ்டத்துக்கு பண்ணா எப்படி? நீயே இதை நடத்து; நான் போறேன்என்று இரைந்தார்.
அண்ணாமலை ஆட்களிடம் உங்க வேலையை பாருங்கஎன்று சொல்ல வேலை தொடர்ந்தது.
சின்னசாமியை யாரும் அது வரை அப்படி எதிர்த்தது இல்லை. கோபத்துடன் வெளியேறி ஒரு பாறை மீது அமர்ந்தார்.
ஏன் என்று வந்து கேட்டவர்களிடம் அவனே ஆசிரமத்தை நடத்தட்டும்; நான் எங்கேயாவது போறேன்என்றார்.
டி.கே.சுந்தரேசஐயர், ராமக்ருஷ்ணஸ்வாமி, முனகால வேங்கட ராமையா ஆகிய மூவரும் வந்து நடந்ததை கேட்டு அறிந்தார்கள். அவர்களிடம் சின்னசாமி அவனை வெளியே அனுப்புங்கோ நான் உள்ளே வரேன் என்றார்.
நேரம் கழிந்தது. வேறு வழியின்றி அவர் உள்ளே வந்தார்.
அன்று மாலை எல்லா பக்தர்களையும் கூட்டிக்கொண்டு பழைய ஹாலுக்கு வந்தார். தன் ப்ளானுக்கும் அண்ணாமலை ப்ளானுக்கும் இருக்கும் வித்தியாசம்; அதனால் ஏற்படக்கூடிய அதிகப்படி செலவு எல்லாவற்றையும் எடுத்துக்கூறி நியாயம் கேட்டார்.
பகவான் மௌனமாகவே இருந்தார்.
மற்ற பக்தர்கள் எல்லாரும் சிறிய கோசாலையே சரி என்றனர்.
சின்னசாமி இதை ஓட்டுக்கு கொண்டு வந்தார். எல்லோரும் சின்ன கோசலைக்கே ஓட்டளித்தனர்.
பகவான் அண்ணாமலையைப் பார்த்து உன் ஓட்டு எதுக்கு? என்று கேட்டார்.
பெரிய கோசாலை, இப்ப தோண்டி இருக்கற அஸ்திவாரத்திலேயே கட்டணும்என்றார் அண்ணாமலை.
பகவான் நடு நாயகமாக இருப்பதாக காட்டிக்கொண்டார். “ரெண்டு கட்சியா பிரிஞ்சு நிக்கறேள். என்ன நடக்கறதோ பார்ப்போம்!” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல மலையை சுற்ற கிளம்பிவிட்டார்.
பகவானின் குறிப்புணர்ந்த அண்ணாமலை பணியை தொடர்ந்தார்.
மெதுவாகவே சின்னசாமிக்கு அதன் பின்புலம் தெரியவந்தது. வேலை தொடர்ந்தது.
அப்போதைய காலத்தில் லக்‌ஷ்மிக்கு கட்டப்பட்ட கோசாலையே மிகப்பெரிய கட்டிடம். அப்போது அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.
ஒரு நாள் பகவான் கட்டிட வேலையை மேற்பார்வை இடும் போது லக்‌ஷ்மிக்கு பெரிசா கோசாலை கட்டினா பெரிய டைனிங் ஹால், அம்மா கோவில், புஸ்தகாலயம் எல்லாம் கட்ட புண்ணியம் கிடைக்கும்!” என்றார்.
கோசாலை பணி இனிதே நிறைவுற்றது!