Pages

Friday, April 10, 2015

ரமணர் அடியார்கள் - முருகனார் -3



ஆசிரம ஆரம்ப காலங்களில் அதிக கூட்டம் இல்லததால் பகவானுடன் தனித்து பழக பலருக்கும் சுலபமாக இருந்தது. அடியார்கள் காட்டுக்குச் சென்று இலை பறித்து வந்து தைத்து அதில் சாப்பிடுவர். இலை பறிக்க பகவானும் போவார்.
ஒரு நாள் இலை பறிக்க செல்லும்போது பகவான் முருகனாரை பார்த்து கண் ஜாடை காட்டிவிட்டு தனியே சென்றார்.
முருகனாரும் பின் தொடர்ந்தார். மற்றவர்களுக்கு வேலை இருந்ததால் அவர்கள் நிதானமாகவே புறப்பட்டார்கள்.
பகவான் காட்டுப்பாதையில் நுழைந்து காட்டுச் சோணைக்கருகில் ஓடும் ஓடைக் கரையில் மணல் திட்டில் அமர்ந்தார். முருகனாரையும் எதிரில் உட்காரச் சொன்னார்.
அது வரை முருகனாரும் பகவானுடன் தனியே சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தாலும் இப்போது அது பயமாகி விட்டிருந்தது.
பகவான் முருகனாரை கண் இமையாமல் நோக்கினார்.
இப்போது முருகனரின் தனித்தன்மையை இழக்கும் பயம் அகன்றது. முருகனாருக்கு இறை அனுபவம் கைகூடியது.
பகவான் எழுந்து ஆசிரமத்துக்கு வந்துவிட்டார்.
பொழுது சாய்ந்தது. பகவான் அடியவர் ஒருவரை கூப்பிட்டு “காட்டுச்சோணைக்கு லாந்தர் எடுத்துக்கொண்டு போ... அங்கே முருகனார் இருப்பார்; கூட்டிக்கொண்டு வா” என்றார்.
முருகனார் அனுபவம் முடிந்து எழுந்தார். அருணாசலத்தை நமஸ்கரித்தார். அடியாருடன் திரும்பினார்.

ஆசிரமத்தில் அம்மா கோவிலில் பூஜை செய்ய ஒருவரும் இல்லாத பொது சின்னசுவாமி முருகனாரை பூஜை செய்யச்சொன்னார். தவிர்க்க முடியாமல் இவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் அது சுலபமான காரியமாக இல்லை.
லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது ஏற்கெனெவே இருக்கும் எண்ணைப்பிசுக்கை போக்க குடம் குடமாக நீரைக்கொட்டுவார். லிங்கத்தை சுற்றியும் மீண்டும் மீண்டும் நீர் விட்டு கழுவிக்கொண்டே இருப்பார். இப்படி வேலை செய்யும்போது ஒரு நாள் பகவான் பின்னால் வந்து நின்று கொண்டு கவனித்துவிட்டு, “நீர் தேய்க்கிற தேய்ப்பை பார்த்தால் லிங்கமே கொஞ்ச நாள்ள காணாமப்போயிடும் போலிருக்கே!” என்றார்!
இன்னொரு நாள் கற்பூர ஹாரத்தி காட்டும்போது முருகனாருக்குத் தெரியாமல் பகவான் வந்து நின்றார். ஹாரத்தி தட்டை சுற்றிக்கொண்டே மணியையும் அடிப்பது ஒரு கலை! முருகனாருக்கு அது கைவரவில்லை! தட்டு சுற்றினால் மணி அடிப்பது நின்றுவிடும்! மணி அடித்தால் தட்டு சுற்றுவது நின்றுவிடும்! எப்படித்தான் இதை செய்கிறார்களோ என்று நினைத்துக்கொண்டு ஹாரத்தி காட்டும் போது பகவான் “போதும் போதும்! நீர் பூஜை பண்ணற லக்‌ஷணம் பிரமாதம். ஹாரத்தி காட்டுகிற போது மணி அடிக்கிற நேர்த்தி ரொம்ப அழகுதான்.” என்றார்.
முருகனார் திடுக்கிட்டு, பின் “ இனிமே என்னால பூஜை செய்ய முடியாது. சின்னஸ்வாமிகிட்டே சொல்லிடறேன்”என்றார்.
பகவான் “சரி சரி! பூஜைக்கு மோக்‌ஷம் கொடுத்தாச்சு” என்றார்!

No comments: