Pages

Tuesday, March 31, 2015

ரமணர்- அடியார்கள் -மணவாசி ராமசாமி ஐயர்





ஒரு கார்த்திகை திருநாளன்று மணவாசி ராமசாமி ஐயரும் அவரது தந்தையும் பகவானை பற்றி கேள்விப்பட்டு அவரை தரிசிக்க விரூபாக்‌ஷ குகைக்கு வந்தனர். குகையின் வாசலில் நின்று இருந்த ஒருவர் ப்ராம்மண சாமியை யாரும் இப்போ தரிசிக்க முடியாது; தொந்திரவு பண்ணாதீங்கோ!” என்றார். ராமசாமி நீ யார் இப்படி சொல்ல?” என்று கோபமாக கேட்டார்.
அப்போது பகவான் யதேச்சையாக வெளியே வந்தார். பகவானை தரிசித்த மாத்திரத்தில் தன்னையும் அறியாமல் ஸ்வாமி, உடம்பும் மனசும் எப்பவும் துன்பத்திலேயே இருக்கு. இது எப்போதான் சரியாகும்?” என்று கேட்டார். பகவான் கடந்து போய்க்கொண்டே நான் வைத்தியரோ ஜோசியரோ இல்லை!” என்றார்.
ஸ்வாமி நீங்க பெரிய ஸ்திதியில இருக்கேள்ன்னு கேள்விப்பட்டு வந்தோம். எங்களுக்கு இன்னும் நேரம் வரலை போலிருக்கு!” என்றார்.
பகவான் சட்டென்று நின்று ஐயரை நோக்கினார். “மன உறுதியோட எல்லாத்தையும் ஏத்துக்க பழகணும். அப்புறம் உன்னை எதுவும் ஒண்ணும் செய்யாது!” என்றார்.

பின் ஒரு நாள் ஒரு பண்டிகை காலத்தில் ராமசாமி குகைக்கு வெளியே அமர்ந்து இருந்தார். மனம் நொந்துகிடந்தது. குகையில் இருந்து வெளியே வந்த பகவான் இவரைப்பார்த்து என்ன இப்படி உக்காந்து இருக்கேள்?” என்றார். ராமசாமி என்னத்தை சொல்லறது பகவானே? வீடு முழுதும் மருந்து பாட்டில்தான் இருக்கு! ஜீரணமும் ஆகிறதில்லை. தூக்கமும் வரதில்லை, எப்படி வாழப்போறேனோ தெரியலை!” என்றார்.
பகவான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருக்க அவருக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.
பண்டிகை ஆனதால் எச்சம்மாள் நிறைய பட்சணங்கள், மற்ற உணவு வகைகளை கொண்டு வந்தார். எல்லாரும் பக்கத்தில் இருந்த நீர்நிலைக்கு உணவு உண்ண போனார்கள்.
மிக அழகான மாலைப்பொழுதும் அருமையான ரம்மியமான சூழ்நிலையும் இருந்தாலும் ராமசாமிக்கு அது ஒட்டவில்லை. வாழ்வே சுமையாக உணர்ந்தார்.
இவர் உணவு உண்ண வராததைக்கண்டு பகவான் வாசுதேவ சாஸ்த்ரியை அழைத்து அவரை அழைத்து வரச்சொன்னார். இவரோ போக மறுத்தார். “கஞ்சியே ஜீரணமாகலை; எண்ணை பண்டத்தை எங்கே சாப்பிடற்து?” என்றார். அப்போது பகவான் கை அசைத்து கூப்பிடுவது தெரிந்தது.
உடனே சென்று பகவான் அருகில் அமர்ந்தார். இலை போடப்பட்டு பல திண்பண்டங்கள் வைக்கப்பட்டது. பகவான் சாப்பிடுங்கோ!” என்றார். எல்லா பயமும் கணத்தில் நீங்கின. பல வருடங்கள் கழித்து வயிறார சாப்பிட்டார். அன்றிரவு நன்றாக தூங்கினார்.
காலை எழுந்த போது புத்துணர்வுடன் இருந்தார். புதிய வாழ்கை பிறந்தது!

ஒரு நாளிரவு விரூபாக்‌ஷ குகைக்கு வந்த சாது ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்துச்சென்றார்.
அதைக்கண்ட மணவாசி ராமசாமி ஐயர் மிகுந்த கோபத்துடன் இதை யார் இங்கே வைத்தது என்று கூறி வெளியே வீசிவிட்டார்.
அதை கவனித்த பகவான் சாதுக்கள் சொத்து அது! உனக்கு ஏன் சாதுக்கள் பொல்லாப்பு வீணாக? அது வேணும் என்கிறவர் உபயோகப்படுத்தறா. நீ ஏன் அவா பொருளை வீசி எறியறே? உன் பொருளை வீசி எறிஞ்சா அப்போ உனக்குத் தெரியும்என்றார்.
அன்றிரவே காரணமின்றி அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது.

  

No comments: