Pages

Wednesday, August 27, 2014

தெ க்ரேட் எஸ்கேப்!




(இது கொஞ்சம் பெரிய பதிவா போயிடுத்து! மன்னிக்க!)

உங்க கடமை தவறலைன்னா, சில சமயம் நாம செய்யக்கூடிய ரொம்ப நல்ல செயல் பிரச்சினை இருக்கும் இடத்திலேந்து நகர்வது. சூழ்நிலையை பொருத்து இது ச்சும்மா 10 செகண்ட் கண்களை மூடி கவனத்தை திருப்புவதிலிருந்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு ரூமிலிருந்து வெளியே போவது; சாரி, அப்புறம் சந்திக்கிறேன்ன்னு சொல்லிட்டு 20 நிமிஷம் நடைபயிற்சிக்கு போவது; விடுமுறை எடுத்துக்கொண்டு வெளியூர் போவது என்று இருக்கலாம். நாம் நேரடியா ஈடுபட்டு இருக்கிற விவாதம் சூடாகி வார்த்தைகள் தடித்துப்போனால் 20 நிமிஷம் நடைக்கு போவதே சரி. ஏன்? கெமிகல்ஸ் ரத்தத்திலிருந்து அகன்று  நம் மனசு சமநிலைக்கு திரும்ப அவ்வளவு நேரம் ஆகும். இப்படி விலகுவதால நாம் உணர்ச்சிவசப்படாமல் திருப்பி நிலமையை பாரபட்சமில்லாம புத்தியால பார்க்க இயலும். பின்னால வருத்தப்படும்படி ஏதேனும் சொல்லிவிடுவதையும் தடுக்கும். பாட்டரி ரீசார்ஜ் செய்கிறாப்போல இது!

இப்படி உணர்ச்சி கொந்தளிக்க வாக்கிங் போகும் போது கவனம் தேவை. ட்ராபிக்ல போய் மாட்டிக்காதீங்க! அப்படி போய் ட்ராபிக்கை கவனிக்கறதால கவனம் திரும்பும்ன்னா சரி. ஆனா உணர்ச்சில ட்ராபிக்கை கவனிக்காம ஏதேனும் விபத்து நடக்கும் வாய்ப்பு அதிகமாவே இருக்கு!  மைதானம், பார்க் போல இடஞ்சல் இல்லாத இடங்களே உசிதம்!

யோகா (சவாசனம்), ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்தல், படுத்துக்கொண்டு தசைகளை தளர்த்துதல், சாந்தமளிக்கிற இசையை கேட்பது போல பல அமைதி உண்டாக்கும் விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் நாம் தினசரி நடத்தையிலேயே கொண்டு வந்து விடலாம். எதுக்காக பிரச்சினை வரும் வரை காத்துக்கொண்டு இருக்கணும்? மனசை முன்னேயே அமைதியாக்கிகொண்டு விட்டால் பிரச்சினை தோன்றும் வாய்ப்பே குறைவாக இருக்கும்! இதுக்கெல்லாம் ஏது சார் நேரம் எனக்கு ந்னு சொல்லறீங்களா? நாம காபி, டீ குடிக்கப்போறேன்னு எஸ்கேப் ஆகிற நேரம், வெட்டியா இண்டர்நெட்ல இருக்கிற நேரம்,  அழுவாச்சி சீரியல் படிக்கிற நேரம் எல்லாத்தையும் கணக்கு பண்ணா இது நல்லா செலவழிக்கிற நேரம்தான்!

சில ரிலாக்ஷேஷன் முறைகளை பார்க்கலாம். வெகு எளிது. வேண்டியது எல்லாம் படுக்க இடம், ஒரு விரிப்பு அவ்வளோதான். முக்கியமான குறிப்பு: தூங்கிடாதீங்க!
காலணிகளை கழட்டி விட்டு, உடைகளை தளர்த்திவிட்டு மல்லாக்க படுங்க. கண்களை மூடிக்கொள்ளவும்.
3 முறை ஆழ்ந்த மூச்சு எடுத்துவிடவும்.
கைகள் பக்கவாட்டில் இருக்கட்டும். கால்களை தேவையானால் கொஞ்சம் அகட்டிக்கொள்ளலாம்.
கைகளை பத்து வினாடிகள் இறுக்கவும். அந்த இறுக்கத்தில் கவனத்தை செலுத்தவும். பின் தளர்த்தவும். கைகளில் உணர்வு வித்தியாசப்படுவதை கவனிக்கவும்.
இதே போல வரிசையாக முன் கை, மேற்கை, தோள் ந்னு இறுக்கி தளர்த்தி அந்த வித்தியாசத்தை கவனிக்கவும்.
இதே போல மார்பு, வயிறு, முதுகு..
பின் தொடை, முழங்கால், கால், கால்விரல்கள்….
ஐடியா புரிஞ்சுடுத்து இல்லையா? உடம்பின் தசைகளை பகுதி பகுதியாக இறுக்கி தளர்த்தி பயிற்சி செய்யவும்.
பின் உடம்பு  முழுக்க தளர்த்திவிட்டு அப்படியே கொஞ்சம் நேரம் படுத்து இருக்கவும்.
கண்களை மூடிய படியே வலது பக்கம் புரண்டு எழுந்திருக்கவும். அமைதியாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்து பின் மெதுவாக கண்களை திறக்கவும்.

இதெல்லாம் கடினம் என்றால் மாற்றாக மூச்சு கவனிப்பு செய்யலாம்.
முன் சொன்னது போல படுத்துக்கொண்டு… . கண்களை மூடிக்கொள்ளவும்.
மெதுவாக ஆழ்ந்த மூச்சு எடுக்கவும். கஷ்டப்படாமல் …. மூச்சை பிடித்துக்கொள்ளாமல்….
(இப்படி செய்வது எப்போது கடினமாக தோன்றினாலும் இயல்பு நிலைக்கு திரும்பவும்.)
உள்ளே வெளியே …. உள்ளே வெளியேஉள்ளே வெளியே
இப்படி செய்யும்போது மூச்சை கவனிக்கவும். அது உள்ளே செல்வதுபரவுவது. வெளியே வருவது. கூடவே எண்ணிக்கொண்டு வாருங்கள்.ஓண்ண்ண்ண்ண்ண்……..ணூ
ரெண்ண்ண்ண்ண்ண்……. டு
மூஊஊஊஊஊஊ ….. ணூ
கஷ்டப்படாமல் செய்யவும். மொத்தம் 32 வரை செய்யலாம்.
எங்கோ கவனத்துடன் செய்து கொண்டு நாப்பத்தி …. நாலு, நாப்பத்தி அஞ்சு  என்று எண்ணிக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்தால்…. கீழிறங்கு வரிசையில் எண்ணவும். ஒன்றுக்கும் கீழே எண்ணிக்கொண்டு போவது அரிது!

இன்னொரு வழி வயிற்றால் மூச்சு விடுவது. காற்று வாத்தியக்கருவிகளை இசைப்போர் இப்படிதான் செய்கிறார்களாம்.
சாதாரணமாக மூச்சு விடுவதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று மார்பு விரிந்து சுருங்குவது. இரண்டாவது வயிறு விரிந்து தளர்ந்து சுருங்குவது. இரண்டுமே மூச்சு விடும் வழி என்றாலும் சாதாரணமாக மார்பு விரிந்து அடங்குவதே அதிகமாக இருக்கும். இப்படி மூச்சு விடுவது உணர்ச்சிவசப்படும்போது அதிகமாகும். இது இதயத்துடிப்பையும் அதிகரித்து நமக்கு படபடப்பை உண்டாக்கும்.

மாற்றாக வயிறு உள்ளே வெளியே செல்கையில் ஏற்படும் மூச்சு நம்மை தளர்த்தும்.
இப்போதே சொல்லிவிடுகிறேன்; வயிற்றில் உணவோ பானமோ  இருந்து வயிறு நிறைந்து இருக்கும் சமயம் இதை செய்ய வேண்டாம்!

முன் போலவே படுத்துக்கொள்ளலாம். . கண்களை மூடிக்கொள்ளவும்.
ஒரு கையை மார்பு மீதும் மற்றதை வயிற்றின் மீதும் வைக்கவும்.
இயல்பான மூச்சு விட்டு…. மார்பு, வயிற்றுடன் கைகள் எப்படி அசைகின்றன என கவனியுங்கள்.
இப்போது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்; மார்பு விரியாமல் அப்படியே இருக்கட்டும். வயிற்றுபகுதி வெளியே நகருவதால் மூச்சு உள்ளே போகட்டும்.
வாயை சற்றே திறந்து மூச்சை மெதுவாக  வெளியேற்றவும்; மார்பு அசைய வேண்டாம். . வயிற்றுப்பகுதி தளருகையில்  மூச்சு வெளியே போகட்டும். நுரையீரல் தானே சுருங்கும் தன்மை உடையதால் காற்று தானாக வெளியேறும்.

இந்தப்பயிற்சியில் இருக்கும் ஆதாயம் என்னவென்றால் பயிற்சி கிடைத்து புரிந்த பின்னர் இதை எங்கே எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். படுத்துத்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நிற்கிறோமோ நடக்கிறோமோ உட்கார்ந்து இருக்கிறோமோ அந்த நிலைகளிலும் செய்யலாம். கண்களை மூடிக்கொள்ளாவிடில் எதிரே ஏதோ ஒரு புள்ளியில் பார்வையை நாட்டி செய்யலாம்.

டென்சன் அதிகமாக இருக்கும் போது அதை குறைக்க இன்னொரு எளிய வழியை சொல்கிறார்கள். கட்டைவிரல் ஆள்கட்டிவிரல்களுக்கு நடுவே சதைப்பற்றான இடம் இருக்கிறதல்லவா? இரண்டுக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் அல்ல. இன்னும் ஒரு இன்ச் கீழே சதைஆங்.. அதேதான்! சந்தேகமிருந்தா படத்தை பாருங்கள்!


மற்ற கையின் கட்டைவிரல் ஆள்கட்டிவிரல் நுனிகளுக்கு நடுவால் இந்த இடத்தை பிடித்து அழுத்தவும். (இது அக்குபங்சர் முறையில ’ஹோகு’ என்கிற பாய்ண்ட்!) கொஞ்சம் வலிப்பது போல இருக்கும்! பரவாயில்லை. ஐந்து வினாடிகள் அழுத்தி விட்டுவிடுங்கள். அடுத்து இதே போல கை மாற்றி செய்யவும். இதை இன்னும் இரண்டு முறை இரு பக்கமும் செய்யவும். அவ்ளோதான்!

நிகழ் காலத்தில் இருப்பது என்பது இன்னொரு சற்றே மாற்றிய பயிற்சி!
காலா காலமா நாம சொல்லிக்கிட்டு இருக்கிற பயிற்சியை புது தொன்னையில வெளிநாட்டினர் கொடுத்து இருக்காங்க!  இதுக்கு மைண்ட்புல்னஸ்ன்னு பேராம்!

படுத்துக்கொள்ளலாம். அல்லது நாற்காலியில அமரலாம்.
கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்துட்டு (ஹும்! அவ்வளோ லேசான காரியமா அது? ன்னு கேட்கிறது இங்க தெளிவா கேட்குது!) இந்த கணத்தில மனசை குவியுங்க. எவ்வளோ நேரம் முடியுமோ அவ்வளவு நேரம்.
மனசை எதில குவிக்கிறது? மூச்சில குவிக்கலாம். முன்னே சொன்ன மாதிரிதான். மூச்சு உள்ளே வெளியே போவதை கவனிக்கலாம்.
பின்னர் நம் புலன்களை ஒரு டூருக்கு அழைச்சு போகலாம். கண்களை திறந்திருந்தா மெதுவா சுழட்டி ரூமில் இருப்பதை கவனிக்கலாம்.
கண்களை மூடி வெளியிலிருந்து சப்தங்களை கேட்கலாம். தெருவில் ஓடும் ஆட்டோ, கார், எங்கோ தூரத்தில் கூவும் குயில், அடுத்த ரூமில் இருக்கிற கடிகாரம், நாலாவது வீட்டில் இருப்பவர்கள் பேசுகிற பேச்சு.... பல விஷயங்கள் இதெல்லாம் இருக்குன்னு இப்பதான் கவனத்துக்கே வரும். நம்ம வீட்டு பக்கத்தில கிளி கூடவா இருக்கு? ன்னு ஆச்சரியமா இருக்கும்.
அடுத்து சுவை.... வாய் ஏன் கசக்குது?
அடுத்து தொடுதல். நாம் படுத்து இருக்கிற பாயோட சுரசுரப்பு.... தரையில் பட்டு இருக்கிற குதிகாலில் குளிர்ச்சி.... ஜன்னல் வழியா வர காத்தோட வெம்மை....
இந்த மாடர்ன் வாழ்க்கையில் நாம் ஓடற ஓட்டத்துல பல உணர்ச்சிகளே காணாம போயிருக்கும்! ட்யூன் அவுட் செய்திருப்போம். அதெல்லாம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!
இப்படி மனசை/ உணர்ச்சிகளை கவனிக்கறப்ப மனசு கொய்யட் ஆகும்ன்னு முன்னேயே பாத்திருக்கோம்!
இப்படி செய்கிறப்ப மனசுக்குதிரை எங்கான புல் மேயப்போயிடுத்துன்னா ... கவலை வேண்டாம். திருப்பி கவனத்தை மூச்சுக்கு கொண்டு வாங்க. அவ்ளோதான்!
நாளாக ஆக இந்த உணர்ச்சிகளை எல்லாம் சும்மா பதிவு செய்யணும். அவ்ளோதான். அதைப்பத்தி எண்ணத்தை ஓட்டக்கூடாது!  சத்தம் கேக்கும்போது ... பாத்திரம் விழுற சத்தம் கேக்குதா? உடனே இன்னார்தான் பாத்திரத்தை கீழே போட்டு இருப்பாங்க ன்னு ஆரம்பிச்சா திருப்பி வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்! வெறும் சாட்சி பாவனையோட இதை எல்லாம் பார்க்கணும்! பயிற்சி செய்யச்செய்ய நல்ல பலனை தரும் இது!


No comments: