Pages

Friday, July 25, 2014

இன்ஸ்டின்க்ட் என்னும் உள்ளுணர்வு!

 
இன்ஸ்டின்க்ட் என்கிறது என்ன?

அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். நமக்கே கூட அனுபவம் இருக்கும். ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலதை சொல்லுவோம் அல்லது செய்வோம்!
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, அந்த பஸ்ல போகலை. அப்புறம்தான் அந்த பஸ் ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னு தெரியவந்தது!....
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, இந்த பையன் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். எல்லாரும் என்னடா இப்படி சொல்லறயே, நல்ல வேலை நல்ல சம்பளம் நல்ல குடும்பம் ன்னு சொன்னாங்க. இருந்தாலும் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அந்த பையன் அடுத்த வருஷமே செத்துப்போயிட்டான்.....
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, இன்னைய பேப்பரை திருப்பியும் எடுத்துப்பாத்தா எனக்கு தோதான வீடு வாடகைக்கு வருதுன்னு விளம்பரம் பாத்தேன்......

ராத்திரி ஏறக்குறைய தூங்கிட்டேனா? அப்ப தோட்டத்துல டமால்ன்னு சத்தம். ஆத்துக்காரரை எழுப்பினா தென்னை மரத்து மட்டை விழுந்து இருக்கும், பேசாம படுன்னு சொன்னார். ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, திருடன் வந்து இருக்கான்னு. எதுக்கும் பாத்துடலாம்ன்னு தோட்டத்து விளக்கை போட்டு ஜன்னலை தெறந்து பாத்தா திருடன் மதில் ஏறிக்குதிச்சு ஒடறான்.....

இது போல பலதும் கேள்விப்பட்டு இருப்போம். நமக்கே கூட அப்படி நடந்து இருக்கும்.
இதை நாம் இன்ஸ்டின்க்ட் என்கிறோம். தமிழ்ல உள்ளுணர்வு.
அதாவது இது புத்தியால செய்வது இல்லை. மனசாலேயும் இல்லை. இதுல லாஜிக்கும் இராது. இருந்தாலும் சில சமயம் இது படி செய்து நல்ல பலனை பெறுவோம்.
இப்படி சில சமயம் நடந்துவிட்டால் நமக்கே எதோ சக்தி இருப்பதாக தோன்றிவிடுகிறது! யாராவது சொல்லவும் செய்வார்கள்.... நீ அப்பவே அப்படி சொன்னயா? அதே போல நடந்தது. பிறகு நம்மை இதுக்கு என்ன செய்யலாம், அதுக்கு என்ன செய்யலாம் என்கிற ரீதியில் கன்சல்ட் பண்ண ஆரம்பிக்க நமக்கும் நாம் ஏதோ பெரிய ஆள் என்று தோன்றிவிடுகிறது!
பிறகு காக்கை உட்கார பனம் பழம் கதையாக, லா ஆஃப் ஆவ்ரேஜ் படி, சொல்வது 50 சதவீதம் பலிக்க இந்த மாயை பலப்பட்டுவிடும்.
அல்லது இப்படி நாம் சொல்வதெல்லாம் சரி வருவதில்லை என்று நமக்கே புரிந்து சும்மா இருந்துவிடுவோம்.
இதெல்லாம் என்ன சமாசாரம்?
இந்த உள்ளுணர்வு என்ன? இந்த சொல்லே உணர்த்துவது போல இது உள்ளிருந்து வருகிற உணர்வு. இந்த உள் என்கிறது என்ன?

சிலர் ஆழ் மனம் என்பர்.
சிலர் இது மனச்சாட்சி, இறை உணர்வு என்பர்.
எல்லாம் ஒன்றே. என்னைப்பொறுத்தவரை இதை இறை உணர்வு என்றழைக்கிறேன்! இது எப்போதுமே இருந்து கொண்டுத்தான் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி செய் அப்படி செய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. நமக்குத்தான் காது கேட்பதில்லை! நாம் பாட்டுக்கு மனசால் தூண்டப்பட்டோ, புத்தியால் ஆலோசித்தோ எதையும் செய்து கொண்டு இருக்கிறோம். செய்ய வேண்டியதை சரியாக சொல்லும் இதை ‘நான்’ ‘எனது’ என்கிற அகந்தை அடித்துப்போட்டு விடுகிறது.
சில சமயம் மனசோ புத்தியோ வேலை செய்யாமல் இருக்கிறது. அப்போது இது வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது! குறைந்தது முயற்சி செய்தால் இதை மெலிதாக கேட்கவாவது முடியும்!
இது எப்போதும் நமக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தகவல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அதை அடமடக்க கொஞ்ச நாளில் ‘நமக்கு ஏன் விடு’ என்கிற ரீதியில் விட்டுப்போய்விடுகிறது.
இந்த மனசோ புத்தியோ வேலை செய்யாமல் இருப்பது அரிதினும் அரிது! புத்தி அடிக்கடி வேலை செய்கிறதில்லை என்கிறது தெரிஞ்ச சமாசாரம்தான்! ஆனா இந்த மனசு வேலை செய்யாமல் இருப்பதே இல்லை. அலைந்து கொண்டே இருக்கிறது
 
இது இரண்டும் ஓய்வு எடுப்பது ஆழ் துயில் என்னும் சுஷுப்தியில்தான்! . பின் திருப்பியும் கனவு காணும் வகையில் மனம் எழுகிறது. இந்த சுழுத்தியும் கனவும் மாறி மாறி வருகிறது. சுழுத்தியில் நாம் இறைக்கு வெகு அருகில் இருக்கிறோம். இதனால்தான் நாம் தூங்கி எழும்போது ப்ரெஷ்ஷாக இருக்கிறோம். சில பிரச்சினைகளுக்கு ‘ஸ்லீப் ஆன் இட்’ என்பார்கள். தூங்கி எழுந்ததும் நமக்கு விடை கிடைத்துவிடும்! இது நடப்பது இறை உணர்வால்தான்!
நம்மால் மனசையும் புத்தியையும் அடித்துப்போட முடிந்தால் இந்த இறை உணர்வை வெளிக்கொண்டு வரலாம். ஸ்வீட் செஸ்ட்நட் (Sweet Chestnut) என்கிற ப்ளவர் மெடிசின் இப்படி செயல் படுவதாக சொல்கிறார்கள். எங்கே 'நான்' இல்லையோ அங்கே இந்த இறை உணர்வு வெளிப்படுகிறது. ஆன்மீகத்தில் உயர் நிலைக்கு சென்றவர்கள் இப்படி இருக்க முடிவதால்தான் அவர்கள் மூலம் இறைசக்தி வெளிப்பட்டு பல விஷயங்கள் நடக்கிறது. அவர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடிகிறது. அவர்கள் சொல்வது பலிக்கிறது

இதேதான் நமக்கும் சிறிய அளவில் நடக்கிறது. ஆனால் இதன் விளைவாக 'நான்' சொல்வது பலிக்கிறது என்று எப்போது தோன்றிவிடுகிறதோ அப்போது அகந்தை எழுவதால் இந்த உள்ளுணர்வும் காணாமல் போய் விடுகிறது!
ஆகவே நமக்கு இந்த இன்ஸ்டின்க்ட் இருக்கிறது என்றால் அது இறை அருள் என்று உணர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்வோம்!


 

No comments: