Pages

Friday, April 4, 2014

பரசுராமர் செய்த கர்மா



கொஞ்சநாளாவே நொச்சூர் வெங்கட் ராமனின் பகவத் கீதை பாகவதம்ன்னு சொற்பொழிவு கேட்டுக்கொண்டு இருக்கேன். ஏதாவது சுவாரசியமா கதை அகப்படும்! அதை கொஞ்சம் இங்கே ஷேர் செய்து கொள்ள ஒரு சின்ன ஆசை. அவருக்கு நம் நமஸ்காரங்கள்!
-------------------------------------------------------------------
பரசு ராமருக்கு ஒரு தாபம் இருந்தது. தன் அப்பா ஜமதக்னி முனிவரின் கட்டளைக்கு உட்பட்டு தன் அம்மாவை வெட்டிக்கொன்றுவிட்டார் அவர். பின்னால் ஜமதக்னி அவளை உயிர்பித்துவிட்டார். இருந்தாலும் பரசுராமருக்கு தான் பெரிய குற்றம் செய்ததாக ஒரு உணர்ச்சி இருந்தது.
பரசுராமர் இப்படி தவித்துக்கொண்டு இருந்த போது கானகம் சென்று முனிவர்களை கண்டு தன் தவிப்பை சொல்லி ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டினார். அவர்கள் ப்ராயச்சித்தம் என்று ஏதும் சொல்லாவிட்டால் இவரது மனம் அமைதி அடையாது என்று கண்டு ப்ராயச்சித்தத்தை சொன்னார்கள்.
ஒரு வருடத்துக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். ஆனால் முன் நாட்களில் பூஜை செய்த அதே பூவை திருப்பி பயன்படுத்தக்கூடாது. அதாவது ஒரு முறை மல்லிகையை பயன்படுத்தி இருந்தால் அதையே திருப்பி ஒரு நாள் பயன்படுத்தக்கூடாது. இதே போல ஒரு நாள் செய்த நிவேதனப்பொருளை திருப்பி இன்னொரு நாள் நிவேதனம் செய்யக்கூடாது. புதிதாக வேறு செய்ய வேண்டும். தினமும் புதிய முத்திரைகளை கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும். இதே போல தினமும் புதிதாக ஒரு மந்திரம் கற்றுக்கொண்டு உருப்போட வேண்டும். தினமும் புதிதாக ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அதில் முன்னே பயன்படுத்திய ஹோம த்ரவ்யத்தை பயன்படுத்தாமல் புதிதாக ஒரு த்ரவ்யத்தை பயன்படுத்த வேண்டும்.
இதை ஏற்றுக்கொண்டு பரசுராமர் கர்மாக்களை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் உற்சாகமாக போனாலும் நாளடைவில் சிக்கல் அதிகமாயிற்று. எதுவுமே புதுசாக இருக்க வேண்டும், முன்னே செய்தது கூடாது என்னும் போது எவ்வளவு நாள்தான் புதுசு புதுசாக கண்டு பிடிக்க முடியும்! கஷ்டப்பட்டு ஒரு வருடத்தை கடத்திய பின் முனிவர்களிடம் போய் நம்ஸ்காரம் செய்து ப்ராயச்சித்தம் பூர்த்தி ஆயிற்றா இல்லையா என்று கேட்டார். அவரது தவிப்பு இப்போது அம்மாவை கொன்றோமே என்பதாக இல்லை. இன்னும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடப்போகிறார்களே என்றே இருந்தது!
முனிவர்கள் பாபம் தீர்ந்தது என்று சொல்ல அப்பாடா என்று சந்தோஷமாக கிளம்பினார் பரசுராமர்.
இப்படியாக கர்மாவின் நோக்கம் சித்த சுத்தி. அதுவே முடிவு இல்லை. மனம் தூய்மை ஆகாமல் வெத்து கர்மாவை செய்து கொண்டு கோப தாபங்களுடன் இருப்பதில் பலனே இல்லை!

 

No comments: