Pages

Sunday, December 1, 2013

கடவுளுடன் லிங்க்- ஜபம் -2

எபக்டிவ்வா ஜபம் செய்ய முதல்ல சரியா உட்காரணும். தரையில் உட்கார பலருக்கு பழக்கம் போய்விட்டது இல்லையா? எல்லாம் சேர், சோஃபா என்றாகிவிட்டது. இதனால் புது பிரச்சினகளும் வர ஆரம்பித்துவிட்டன. போகட்டும்.

வெறும் தரையில் உட்காருவது கூடாது. நம் ஆன்மீக ஆற்றலை இது இழுத்துக்கொண்டு விடும் என்கிறார்கள். உட்காரும் இடம் சுத்தமாக இருப்பதை கவனிக்க வேண்டும். கீழே சிறு கம்பளம், பாய்,  மரப்பலகை (மணை), பாய், கர்சீப், துண்டு கூடப்போதும்.  சில்க் கர்சீப் வெகு சின்னதாக மடியும். எடுத்துச்செல்ல சௌகரியம்.
தர்ப்பை ஆசனம் வெகு உன்னதமானது. தர்பையால பாய் முடைஞ்சு விற்கிறாங்க. அதை பயன்படுத்தலாம். ஒரு 6 மாசம் வரும். காசி போன்ற இடங்களிலே சுலபமா கிடைக்கும்.

நம் உடலை தசைகள் எல்லாம் பாலன்ஸ் செய்கின்றன. அப்படியே உட்காருகிறோம். உட்காரும்போது அவை தளராமல் அப்படியே இறுக்கத்தில் இருந்துவிடுகின்றன. இதுதான் கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்காரமுடியாமல் இப்படியும் அப்படியுமாக அசைய வேண்டிய கட்டாயத்துக்கான காரணம்.

எப்படி இதை  சரி செய்வது?
வழக்கம் போல உட்கார்ந்துவிடுங்கள். அப்புறம்  இடுப்பில் இருந்து முன் பக்கமாக வளையுங்கள். குனிஞ்சு தலையால தரையை தொட முயற்சி செய்யறாப்போல. இப்போது இடுப்பு அருகில் உள்ள தசைகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும். அப்படியே நிமிர்ந்தா முடிஞ்சது! அவ்வளோதான்! எத்தனை சுலபம் பாத்தீங்களா?
இதே எஃபக்ட் கைகளை பக்கத்தில் ஊன்றிக்கொண்டு உடலை அவற்றின் பலத்தில் தூக்கி கீழே இறக்கினாலும் கிடைக்கும். வயதானவர்களுக்கு கொஞ்சம் கடினம்.

அடுத்து கவனிக்க வேண்டியது முதுகு எலும்பு நிமிர்ந்து நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். இது பலருக்கும் கஷ்டமாக தோன்றும். ஆனால் முன்னே சொன்ன படி உட்கார்ந்த பிறகு இது சுலபமே என்று தெரியவரும். சரியாக உட்காராத போது தசைகள் இறுக்கத்தில் இருப்பதால் முதுகு வளைந்தால்தான் பாலன்ஸ் கிடைக்கும். அதனால் முதுகை வளைத்தே உட்காருகிறோம். அப்போது அதுதான் சௌகரியமாக இருக்கும். ஆனால் தசைகள் இந்த நிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நேரத்தில் வலிக்க ஆரம்பித்து விடும். முதுகு எலும்பை நேராக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் இது தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது. பளு எலும்புகள் வழியா கீழே இறங்கிடும். அதனால் வலிக்காது.

ஆரம்பத்தில் பழக்கமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் செய்ய வேண்டி இருக்கும். நாளடைவில் பழகிவிடும். இயல்பாகவே சரியாக உட்காருவோம்.
இப்படி செய்தும் நிமிர்ந்து உட்காரமுடியாமல் இருந்தால் வஜ்ராசன் பழக்கிக்கொள்ள வேண்டும். அதில் இயல்பாகவே நிமிர்ந்துதான் உட்கார முடியும். பாதங்கள் மடங்குவது பழகிவிட்டால் இதுவும் நன்றாகவே உட்கார உதவும்.

குருவின் கட்டளை வேறாக இல்லாத பட்சத்தில் ஜபம் செய்ய சுகாசனமோ (வழக்கமாக உட்காருவது) சித்தாசனமோ (இது ரமணரோட பரிந்துரை), பத்மாசனமோ சிறந்தது. பத்மாசனம் உடனடியாக முடியாது போனால் அர்த்த பத்மாசனத்தில் சில நாள் பழகலாம். அது ஒரு பக்கம் மட்டுமே பத்மாசனம் போல காலை வைத்துக்கொண்டு உட்காருவது.
இதெல்லாம் ஆரம்பத்துல கஷ்டமானாலும் போகப்போக பழகிவிடும் சமாசாரம்.

No comments: