Pages

Tuesday, November 26, 2013

இன்னொரு கோளாறான சிந்தனை - 4



கடவுள் எங்கும் நிறைந்தவர்தான். ஆனால் வெளிப்படாமல் இருக்கிறார். ஏன் என்றால் அவரைப்பொருத்த வரை அது ஒரு விளையாட்டு. மனிதனுக்கு அகங்காரம் தான் என்கிற ஒரு உணர்வை கொடுத்து இருக்கிறார். இந்த தான் என்கிற உணர்வே நான் எனது என்றும் விரிந்து பல பிரச்சினைகளை உண்டு பண்ணிக்கொண்டு இருக்கிறது. இதனாலேயே வாழ்கை வித்தியாசமாகவும் ரசமாகவும் இருக்கிறது.

இந்த 'தான்' எப்போது கழன்று விழுகிறதோ அப்போதே நம்மில் உள்ள உண்மையான  இறை சக்தி வெளிப்படும். ஆனால் இந்த 'தான்' என்கிற உணர்வு லேசில் போவதில்லையே! தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதே முதலில் தோன்றுவது இந்த தான்என்ற உணர்வாக இருக்கிறது! அப்புறம்தான் நாம் எங்கே இருக்கிறோம் முதலியன.

அப்போது தான் போகும் வரை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? இந்த மாபெரும் சக்தியை நாம் பயன்படுத்த முடியாதா? கொடுத்திருக்கிற வரையறையை பார்த்தால் இதன் ஒரு சின்னஞ்சிறு பகுதி சக்தி கூட பெரும் காரியங்களை சாதித்து விடுமே?

ஆமாம். சாதித்துவிடும். அப்படி ஒரு சிறு பகுதியை நம்மால் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
நான் எனது என்பதில் உள்ள நாட்டத்தை விட்டுவிட்டு எங்கும் இருக்கும் இந்த மாபெரும் சக்தியுடன் ஒரு சிறு இழை தொடர்பை வைத்துக் கொண்டாலேயே போதும்.

அந்த லிங்க் ஐ எப்படி உருவாக்குவது?

எந்த தெய்வத்தைப் பற்றி யார் சொன்னாலும் பொதுவாக இருப்பது இறைவனையே நினை. இந்த இறைவனுக்கு நீ எந்த பெயரை வேண்டுமானாலும் கொடுத்து இருக்கலாம். எந்த உருவத்தை வேண்டுமானாலும் கொடுத்து இருக்கலாம். இறைவனின் உண்மை ஸ்வரூபத்தை காண முடியாதாகையால் நமக்கு தெரிந்த ஒரு உருவமாகவே உருவகப்படுத்த வேண்டி இருக்கிறது.

அந்த வஸ்துவை ஒரே பெயர் கொண்டு அழைத்தாலும் சரிதான். மனது ஒரே பெயரை திருப்பித்திருப்பி உச்சரிக்க சோர்ந்து போய் புல் மேயப்போய்விடும் என்றால் விதவிதமாக நாமாக்களை இதற்காகவே உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஒன்று எட்டாகி, எட்டு 108, 1008 என்று பல்கிப்பெருகி விட்டது! ஆகம சாத்திரத்தில் அர்ச்சனை என்று சொன்னது 8 நாமாக்களை சொல்லச்சொல்லித்தான்! சமீபத்தில் சிவனாருக்கு பத்தாயிரம் நாமாக்கள் என்று ஒரு புத்தகமும் கிடைத்து இருக்கிறது.

சரி ஒரே பெயரையோ அல்லது பல பெயர்களையோ அதற்கு என்று ஒரு நேரம் ஒதுக்கி திருப்பித்திருப்பி சொல்வதையே ஜபம் என்கிறார்கள். இந்த ஜபத்தை விடாமல் செய்து வர நாளடைவில் அது எப்போதுமே ஓட ஆரம்பித்துவிடும். மனது வெளி விவகாரங்களில் ஈடு படும்போது கூட அப்படி ஓடும். தேவையான நேரத்தில் வெளிப்படும்.

என் நண்பர் ஒருவர் ஒரு முறை லிப்டில் மாட்டிக்கொண்டார். மின் சப்ளை நின்று போய்விட்டது. அந்த சமயத்தில் நாம ஜபம் உதவிக்கு வந்த கதையை சில பதிவுகளுக்கு முன்   சொல்லி இருக்கிறேன்.

இப்படி ஜபம் அஜபா ஜபமாக ஆகிவிட்டால் இறைவனுடன் நமக்கு ஒரு லிங்க் கிடைத்துவிட்டது.

அதை மேலும் வலுவாக்கிக்கொள்ளலாம்!


No comments: