Pages

Monday, July 15, 2013

ரமணர் - பரதேசி!

 
ரமணாஸ்ரமத்தில் பக்தர்கள் முனைந்து அருமையான செடிகளை எல்லாம் கொண்டுவந்து தோட்டம் அமைத்து இருந்தார்கள். அது குறித்து அவர்களுக்கு பெருமை இருந்தது.
ஒரு நாள் ஆஶ்ரமத்தில் கோசாலையில் இருந்த பசுக்கள் இந்த தோட்டத்துக்குள் நுழைந்து செடிகளை மேய்ந்து விட்டன. இதை கண்ட பக்தர்களுக்கு வருத்தம் உண்டாயிற்று. பல காலமாக பாடுபட்டு வளர்த்த அரிய செடிகள் பாழாய் போயினவே என்று வருந்தினார்கள். சில நிமிட நேரத்தில் அழித்த இந்த பசுக்கள் மீது கோபம் வந்தது. ஆரவாரமும் கலகமும் உண்டாயின.
விஷயம் பகவான் காதுக்கு போயிற்று. எல்லாரும் மாடுகள் அழித்துவிட்டன என்றே சொன்னார்களே தவிர வேறு வித சிந்தனையே எழவில்லை. இவர்களுடைய சிந்தனையை வேறு விதமாக திருப்பினார் பகவான்.
"பசு மாடுகள் அழித்துவிட்டன என்று சொல்கிறீர்களே! அவற்றுக்கு இங்கே இதை எல்லாம் மேயக்கூடாது என்று தெரியுமா? பச்சையாக ஏதும் விளைந்து இருக்கும் இடங்களில் மேய்வது அவற்றின் சுபாவம். நாம்தானே தோட்டம் போட்டோம்? மாடுகள் தோட்டத்துக்கு வரக்கூடாது என்றூ நமக்குத்தான் தெரியும். பசு மாட்டுக்குத் தெரியாது. அப்படி தெரியச்செய்யவும் முடியாது. அதனால் மாடுகள் நுழையாதபடி நாம்தான் வேலி போட்டு பாதுகாத்து இருக்க வேண்டும். அப்படி வேலி இருந்து இருந்தால் அவை உள்ளே நுழைந்து இருக்குமா? நாம் எதை செய்யவில்லையோ அதை யோசிக்காமல் மாடுகள் மீது கோபப்படலாமா? செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது குற்றம் இல்லையா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஒரு சமயம் ஆஶ்ரமத்தில் ஏதோ விசேஷம். ஆராதனை முடிந்து சாப்பாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்தன. அளவுக்கதிகமான கூட்டம் அன்று. எல்லாரும் முண்டி அடித்துக்கொண்டு சாப்பிடப்போனார்கள். கூட்டத்தை சமாளிப்பது கஷ்டமாக போய்விட்டது.
ஒரு ஆஶ்ரமவாசி கோபத்தில் பரதேசிகள் யாரும் இப்போது வர வேண்டாம். அப்புறம் ஆகட்டும் என்றார். அதனால் பரதேசிகள் பந்தியில் உக்கார முடியவில்லை.
சாப்பிடும் இடத்துக்கு மற்றவர்கள் வந்து அமர்ந்தார்கள். இலையும் போட்டாகிவிட்டது. ஆனால் பகவானை காணவில்லை. ஶ்ரமத்தில் வழக்கமாக இருக்கும் இடங்கள் எங்கேயும் காணோம். ரமண பகவான் இல்லாமல் எப்படி சமாராதனை நடக்கும்? ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடலானார்கள்.
கடைசியில் நெடுந்தூரத்தில் ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஶ்ரமத்தை சேர்ந்தவர்கள் அவரிடன் போய் "பகவான் ஏன் இங்கே உட்கார வேண்டும்? அங்கே சாப்பிடுவதற்கு எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்களே!” என்றூ சொன்னார்கள்.
ரமணர் அமைதியாக "பரதேசிகள் யாரும் இப்போது வர வேண்டாம் என்று சொன்னார்களே? நானும் பரதேசிதானே?” என்றார்.
கேட்டவர்கள் தம் பிழைக்கு வருந்தினார்கள். பகவானுக்கு இனியார், இன்னார் என்று யாருமில்லை. அப்படியே எல்லாரும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் இல்லை. தம் செயலாலேயே உணர்த்துவார்.
கி.வா.ஜ எழுதிய 'ரமண மாமுனிவர்' என்னும் புத்தகத்தில் இருந்து...


No comments: