Pages

Friday, June 14, 2013

புத்து மாரியம்மன்

 
புற்றைத்தேடிக்கொண்டு போனோம். பையர் அக்னிஹோத்ரம் செய்யும் போது பாலை காய்ச்சிக்கொண்டு இருக்கையில் ஏடு படிந்தயிற்றா என்று பார்த்துக்கொண்டு இருந்த குழந்தையின் தலைமுடி பாலில் பட்டுவிட்டது. விதிப்படி அது அசுத்தம் என்பதால் வேறு பாலை 'கறந்து' காய்ச்சி ஹோமம் செய்யப்பட்டது. அசுத்தமான பாலை என்ன செய்வது? மகரிஷிகள் ஏறக்குறைய எல்லா தவறுகளுக்கும் ப்ராயச்சித்தங்கள் வைத்து இருக்கிறார்கள். நாம் என்னவெல்லாம் தவறு செய்வோம் என்று அவர்களுக்கு தெரியும் போலிருக்கிறது. த்ரிகால ஞானிகள் அல்லவா?
அசுத்தமான பாலை மந்திரம் சொல்லி ஒரு புற்றில் விட வேண்டும். அதற்காகத்தான் புற்றை தேடிக்கொண்டு போனோம். இந்த புற்று கடற்கரைக்கு செல்லும் பாதையில், இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது கடற்கரைக்கு நடந்து செல்கையில் சாலை ஓரமாக இருந்த இதை பார்த்து இருக்கிறேன். அப்போது அது வெறும் புற்றுதான். பின்னால் அருகில் இருந்த அலுவலகத்தில் வேலை செய்வோர் இங்கே ஒரு கோவில் கட்டி புற்று மாரியம்மன் வந்துவிட்டாள். இப்போது தினசரி பலர் வந்து செல்கின்றனர்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பலரே கூட இப்படி இருப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். வெறும் புற்று, வெறும் கல் இதில் எங்கே இறைவனின் சாந்நித்தியம் வந்தது என்று அவர்களது எண்ணம்.
ரொம்ப சிம்பிள்! எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் இறைவன் இதில் இல்லாமல் போவானா?
வேதம் புற்றை ப்ரஜாபதியின் பிரதிநிதியாக சொல்கிறது.

பொதுவாகவே வட இந்தியாவில் இருப்போருக்கு தென் இந்தியர்களை விட இறை நம்பிக்கை அதிகம். அழகான சிற்பங்களையும் அருமையான அலங்காரங்களையும் பார்த்து பழகிய நம் கண்கள் நொட்டை நொள்ளை சொல்லிக்கொண்டு இருக்கும். அங்கேயோ தும்பிக்கை மாதிரி கொஞ்சம் தெரிந்தாலும் கணபதி பப்பா என்று உருகிவிடுவார்கள். புரி ஜகன்நாத் கோவிலுக்குப் போனபோது அங்கே சந்நிதியில் கொஞ்சம் ஏமாற்றமே. ஆனால் அங்கே வரும் வட இந்தியர்களை பார்த்தால்..... நமக்கெல்லாம் பக்தியே கிடையாது என்று தோன்றியது.
எதிலும் இறைவனை காண்பது ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை. இந்த சிலையில் படத்தில் மட்டும் இறைவன் இருக்கிறான் என்று நினைப்பது கொஞ்சம் தாழ்ந்த நிலையானாலும் ஆரம்ப அடியார்களுக்கு அது நல்லதே. அந்த நம்பிக்கையை கெடுக்க வேண்டாம்.

No comments: