Pages

Thursday, June 6, 2013

அதனாலென்ன - 3

 
ரிஸ்க் பத்தி சொல்லி முடிக்கு முன் இந்த இறப்பைப்பார்த்து அஞ்சாமல் இருக்கிறதைப்பத்தி கொஞ்சம் சொல்லணும். இது பத்தி முன்னேயே எழுதி இருந்தாலும்....

சாவை நினைச்சு பயப்படுறதுல லாஜிக் இல்லை.
இதை அனலைஸ் செய்யும் முன்னே மறு பிறவி பத்தி ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கலாம். ஒண்ணு நமக்கு மறு பிறவி இருக்கு. இரண்டாவது இல்லை. இந்த இரண்டு கருத்துதான் இருக்க முடியும்.
மறு பிறவி இருக்குன்னா பயப்பட என்ன இருக்கு? அதான் திருப்பி பிறப்போமே? ஸ்லேட்டை துடைச்சு புதுசா ஆக்கிகிட்டு திருப்பி எழுதறா மாதிரி. புது உறவுகள், புது இடங்கள், புது பழக்கங்கள்...... சுவாரசியமாத்தானே இருக்க முடியும்?
மறு பிறவி இல்லைன்னா.... சரி நாமே இருக்க மாட்டோம்ன்னா யார், எதை பாத்து பயப்படணும். உயிர் இருக்கும் வரை சாவு வரவில்லை என்பதால் பயமில்லை. போன பிறகு பயப்பட நாம் இருக்க மாட்டோம். சிம்பிள்!
அதான் லாஜிக் இல்லைன்னு சொன்னேன்.

சாவு என்கிறதுக்கு யாரும் உண்மையில் பயப்படவில்லை. அதன் விளைவை கற்பனை செய்துதான் பயப்படுகிறார்கள். Fear of unknown! நான் செத்து போனால் எங்கே போவேன்? என்ன ஆவேன்? புராணங்களில சொல்லி இருக்கிற மாதிரி நரகத்துக்கு போவேனோ? தண்டனைகள் அனுபவிப்பேனோ! ஒழுங்கா இருக்கிற ஆசாமி ஏன் இதுக்கெல்லாம் பயப்படணும்? அப்புறம் ஏன் அடுத்த உலகைப்பத்தி கற்பனை? இந்த உலகிலேயே நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று நிச்சயமில்லை! இதை ரிசால்வ் செய்துவிட்டு, அப்புறம் தெரியாத புரியாத உலகைப்பத்தி யோசிக்கலாம்.

அடுத்து நான் செத்துப்போனால் என் பிள்ளைக்குட்டி என்ன ஆகுமோ! மனைவி /கணவன் என்ன செய்வார்களோ என்ற ரீதியில் மனக்கவலை ஏற்படுகிறது. என்னமோ தான்தான் குடும்பத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறதாக நினைப்பு! உண்மையில் இறைவனே அவரவர் கர்மாவைப்பொருத்து படியளக்கிறான். இன்றைக்கு என் மூலமாக படியளப்பவன் நாளைக்கு நான் இல்லை எனும்போது வேறு வழியில் படியளப்பான். அதுக்கு அவனுக்கு சாமர்த்தியம் இல்லையா என்ன?
ரைட்! இதை யோசித்து புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் சாவைக் குறித்த பயம் போய்விடும். அதுவே எல்லாருக்கும் பெரிய பயமாக இருக்கக்கூடியது. அதுவும் கடந்துவிட்டால் அப்புறம் ஒண்ணுமே பெரிசில்லை.

அதனாலென்ன என்கிற கேள்வி கேட்பதில் உள்ள சின்ன ரிஸ்க், செயலின்மை. ஒரு வேலை செய்ய வேண்டுமென்று இருக்கிற போது செய்ய மாட்டேன், அதனாலென்ன, நடப்பது நடக்கும் என்று மனப்பாங்கு வந்துவிட்டால் அதற்கேற்ற பலன்களே கிடைக்கும். செயலால் காரியம் நடப்பது போல 'செயலின்மையாலும் கெடும்' என்று பெரியவர்கள் சொல்லி இருப்பதை நினைவில் வைக்க வேண்டும். எப்போதுமே நம் கடமையில் இருந்து தவறக்கூடாது. அதை செய்த பின் நம் முயற்சி, நம் கர்மா, காலம், இறையருள் பொருத்து பலன் கிடைக்கும். அது எதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மனப்பக்குவம் வர வேண்டும். 'அதனால் என்ன' என்ற ஆய்வு காரியங்களை செய்ய முனைகையில் ஏற்படும் மன இறுக்கத்தை குறைக்கவே! மன இறுக்கம் இல்லை என்றால் தேவை படாமலும் போகலாம்.
 அதனாலென்ன!

No comments: