Pages

Saturday, May 11, 2013

இந்திரன்தான் காரணம்!

 
ஒரு ஊரில் ஒரு ப்ராம்ஹணர் இருந்தார். கடும் உழைப்பாளி. ஒரு தோட்டம் வைத்து இருந்தார். அதில் கடுமையாக உழைத்து பல காய் கனி மரங்கள், செடிகள், பூச்செடிகள் என்று அருமையாக வைத்து இருந்தார். இந்த தோட்டமே இவர் உயிர் போல.

ஆனால் குணமோ … சரியான கருமி! யாருக்கும் ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டார். தோட்டத்தில் விளைவதை விற்பாரே தவிர யாருக்கும் இலவசமாக எதையும் கொடுக்க மாட்டார்! அதனால் கிராம மக்கள் இவர் மீது அத்ருப்தி கொண்டு இருந்தனர்.

ஒரு நாள் ஒரு பசு மாடு எப்படியோ இவரது தோட்டத்தில் நுழைந்து விட்டது. அது பாட்டுக்கும் பிடித்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. சற்று நேரத்தில் அங்கே வந்த ப்ராம்ஹணர் இதை பார்த்துவிட்டு கடும் சினத்துடன் அதை துரத்தினார். மாடு சுற்றி சுற்றி ஓடி தோட்டம் இன்னும் பாழாயிற்று. இன்னும் ஆத்திரம் அதிகமாகி ஒரு வழியாக அதை மடக்கி கழியால் அடி அடி என்றடித்ததில் மாடு இறந்து விட்டது.
ப்ராம்ஹணருக்கு அப்புறம்தான் தான் செய்த செய்கை புரிந்தது. இதற்குள் கிராம ஜனங்கள் அங்கே கூடிவிட்டனர். எல்லோரும் ஆத்திரம் தீர அவரை திட்டித்தீர்த்தனர். பின் பசுவை கொன்றதற்கு ஈடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இவரோ சரியான கருமி ஆயிற்றே! எப்படி இதில் இருந்த தப்பிக்கலாம் என்று பலமாக யோசனை செய்தார். ஒரு வழி தோன்றியது.
"இதோ பாருங்கள் மாட்டை நான் அடிக்கவில்லை. இந்த கைதான் அடித்தது" என்றார். "அப்போது அந்த கைக்கு உரியவரிடம்தானே கேட்டக் வேண்டும்?” என்றனர் மக்கள்.
"ஆமாம். கைக்கு அதி தேவதை இந்திரன்தான். அவனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்றார் இவர்.
இவரோ சாஸ்திர வல்லுனர். இதை மறுத்து பேச முடியாமல் மக்கள் கலைந்து சென்றனர்.

நடந்ததை இந்திரன் கவனித்துக்கொண்டு இருந்தான். ஓஹோ அப்படியா சேதி என்று சொல்லிக்கொண்டு அன்று மாலை ஒரு கிழ ப்ராம்ஹணர் வேடம் தாங்கி கீழே இறங்கி வந்தான். தோட்டத்தின் அருகே சென்றான். ப்ராம்ஹணர் தோட்ட வேலை செய்து கொண்டு இருந்தார்.
என்ன ஓய் பார்க்கிறீர்?
இந்த தோட்டம் யாருடையது?
ஏன்? என்னுடையதுதான்.
இல்லை, இந்த தோட்டம் இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ரசிக்கிறேன்!
எல்லாம் என் உழைப்பு!
இந்த பூச்செடிகளில்தான் என்ன அழகான வாசனையான பூக்கள்!
நானேதான் பார்த்து இந்த கைகளாலேயே செடி நட்டு, தண்ணீர் விட்டு, வளர்த்தேன்!
இந்த பழ மரங்கள் எல்லாம் பழுத்து குலுங்குகின்றன. மிகவும் சுவையான பழங்களாக இருக்க வேண்டும்.
ஆமாம், எல்லாமே தரமான வகை மரங்கள். பார்த்து பார்த்து நானே வாங்கி வந்து என் கைகளாலேயே நட்டிருக்கிறேன்.
அப்போது இதெல்லாமே உங்களால்தான்!
ஆமாம் ஐயா, எல்லாம் என் உழைப்புதான். இந்த கைகால்களால் உழைத்து கிடத்த பலன்தான்!

இதற்குள் என்ன சமாசாரம் என்று கிராமத்தார் கூடிவிட்டனர்.
உரத்த குரலில் கிழவர் கேட்டார். ஓஹோ! கைகளால் உழைத்து கிடைத்ததன் பலனை நீங்கள் ஏன் அனுபவிக்கிறீர்கள்? அது உங்கள் சொல்படி இந்திரனுக்குத்தானே சேர வேண்டும்? ஏதேனும் லாபம் என்றால் அது உங்களுடையது, நஷ்டம் என்றால் இந்திரன் மீது பழியை போடுவதா?

ப்ராம்ஹணர் தலையை தொங்கபோட்டுக்கொண்டு ஊரார் விதிக்கும் தண்டனையை ஏற்கிறேன் என்றார்.

No comments: