Pages

Friday, April 19, 2013

ஹாப்பி ராம நவமி!


சில மாதங்கள் முன் ஒரு பெரியவரிடம் கேட்ட கதை. அயோத்தி நாட்டில் ஒரு ஏழை ப்ராம்ஹணர் இருந்தார். (அந்த காலத்து கதைகள் முக்காலே மூணு வீசம் இப்படித்தான் ஆரம்பிக்கும்!) குடிசை போட்டுக்கொண்டு எளிய வாழ்க்கை. அவர் பாட்டுக்கு வேதங்கள், சாஸ்த்ரங்கள் அத்யயனம் செய்து கொண்டு, சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல்..... தினசரி ஜீவனம் ஓடிக்கொண்டு இருந்தாலும் நாளையை பற்றிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்.... அவர் பொறுத்த வரை நிம்மதியாக இருந்தாலும் அவரது மனைவி நிம்மதியாக இல்லை. "இந்த ஆண்களுக்கு எங்கே இருக்கிறது பொறுப்புணர்ச்சி? இத்தனை குழந்தைகள் இருக்கின்றனவே அத்தனயும் கடை தேற வேண்டாமா? கவலையே இல்லாம இருக்கிறாரே இந்த மனுஷன்! என்ன செய்யலாம்" என்று சிந்தனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஊரில் பரப்பரப்பாக பேச்சு எழுந்தது. தசரதர் ராமனை காட்டுக்கு போகச்சொல்லி விட்டாராம். அவரும் தன் உடமை எல்லாவற்றையும் தானம் செய்து விட்டு காட்டுக்கு போகப்போகிறாராம்! பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்து இருக்கும் போது இப்படி ஒரு திருப்பம்!
இந்த ஸ்திரீக்கும் 'கொக்குக்கு மீன் மீதே குறி' என்பது போல மக்கள் பேசிக்கொண்டதில் ஒன்று நன்றாக மனதில் பதிந்தது. ராமர் அவரது சொத்தை தானம் செய்துவிட்டு.... ஆஹா! நம் வறுமை நீங்க இதோ ஒரு உபாயம் கிடைத்துவிட்டது! உடனே போய் தன் கணவனின் கவனத்தை அவரது சாஸ்த்ர படனத்தில் இருந்து இழுத்தார்.
"ஓய் ப்ராம்ஹணா! நீர் பாட்டுக்கு குடும்பத்தின் கவலை ஏதும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீரே! வரிசையாக ஏழு பெண்கள் திருமணத்துக்கு நிற்பதை பாரும். கல்யாணத்தை வெறும் கையாலா செய்ய முடியும்? போய் ஏதேனும் பொருள் சம்பாதிக்கும் வழியை பாரும்! ராமர் காட்டுக்கு போகிறாராம். தன் சொத்தை எல்லாம் தானம் செய்துவிட்டு போகப்போகிறாராம். போய் கொஞ்சமாவது வாங்கிக்கொண்டு வாருங்கள்!"

ப்ராம்ஹணனுக்கோ ப்ரதிக்ரஹம் வாங்குவதில் சம்மதம் இல்லை. யாரிடம் ப்ரதி க்ரஹம் வாங்கினாலும் அவரது பாபங்களையும் சேர்த்துதானே வாங்கிக்கொள்கிறோம்? அத்தனையும் இல்லா விட்டாலும் ஒரு பகுதி பாபமாவது? அதை எப்படி தீர்ப்பது? கொடுப்பது ராமரே ஆனாலும் மனசு ஒப்ப மாட்டேன் என்கிறதே? ஆனாலும் மனைவி சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது?
கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சம்வாதத்தில் மனைவியின் கட்சியே ஜெயித்தது!

இந்த ப்ராம்ஹணரும் ராமர் இருக்கும் இடத்தை அடைந்தார். வேத ப்ராம்ஹணனாச்சே! ராமரும் வரவேற்றார். என்ன வேண்டும் என்று கேட்டார். ப்ராம்ஹணருக்கோ கேட்க நா எழவில்லை!
ராமருக்கு விஷயம் புரிந்துவிட்டது. இவரது கோலத்தை பார்த்தாலே இவரது ஏழ்மை புரிந்துவிட்டது. காசுக்கு ஆசைபடாத ப்ராம்ஹணனாக இருக்க வேண்டும். சொத்தை தானம் செய்யும் செய்தி கேட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரதிக்ரஹம் வாங்க கூச்சப்பட்டுக்கொண்டு நிற்கிறார்.
இங்கேதான் ராமரின் மேன்மை வெளிப்பட்டது. வலுக்கட்டாயமாக  தானம் கொடுத்து அவரை சங்கடப்படுத்தாமல் மெதுவாக பேசலானார். "ப்ராம்ஹணரே, என் சொத்து அத்தனையும் ஏறத்தாழ தானம் செய்துவிட்டேன். என் பசுக்கள் மட்டுமே இன்னும் எஞ்சியவை. இதோ அரண்மனையின் வெளியே மேயும் கூட்டம்தான் அவை. ஒரு போட்டி வைக்கப்போகிறேன். யாரேனும் இந்த கழியை  இங்கிருந்து வீசினால் அவருக்கு இங்கிருந்து அந்த கழி வீசப்படும் இடம் வரை உள்ள பசுக்களை பரிசாக அளிக்கப்போகிறேன்! முயற்சி செய்து பார்க்க விருப்பமா?"
ப்ராம்ஹணருக்கு பரம சந்தோஷமாகிவிட்டது! பெறுவது பரிசல்லவா? தானம் இல்லையே? கௌபீனத்தை இறுக்கிக்கட்டிக்கொண்டு ஓடி வந்து கழியை வீசி எறிந்தாராம். அது சரயு நதிக்கு அப்பால் போய் விழுந்ததாம்! ராமர் அவரை நமஸ்கரித்து "இங்கிருந்து கழி விழுந்த இடம் வரை உள்ள பசுக்கள் உங்களுடையது. ஓட்டிக்கொண்டு போங்கள்!" என்றாராம்!
 --
பெரியவர் சொன்ன கதைக்கு கொஞ்சமே கொஞ்சம் கண், மூக்கு எல்லாம் வைத்து இருக்கிறேன்.
ஹாப்பி ராம நவமி!

 

No comments: