Pages

Tuesday, March 19, 2013

ரமணர்-3 பரஸ்பர சாபம்.

 
திருச்சுழி போய் வந்த பக்தர் ஒருவர் பகவானைப்பார்த்து கேட்டார்: “திருச்சுழியில் பூமிநாதேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் இருக்கும் சூல தீர்த்தத்தின் கரையில் அரச மரம் ஒன்று இருக்கிறதல்லவா? அதன் அடியில் கௌதமர் தவம் செய்ததாக சொல்கிறார்களே உண்மைதானா? அங்கு அவர் தவம் செய்ய காரணமென்ன?”

அதுவா! நிஜந்தான். சம்ஸ்க்ருதத்தில் இருக்கிற த்ரிசூலபுர மஹாத்மியத்தில் கௌதமர் தவம் செய்ய திருச்சுழிக்கு போனது ஸனகருடைய ப்ரேரணையால் என்று சொல்லி இருக்கிறது. தமிழ் திருச்சுழி புராணத்தில் வேறு விதமாக இருக்கிறது. கௌதமர் இந்திரனையும் அகலிகையையும் சபித்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்திரன் கௌதமர் ரூபம் எடுத்துக்கொண்டு அஹலிகையிடம் போன போது அவள் தன் கணவர் என்று நினைத்து தவறிய விஷயத்தை கௌதமர் தீர விசாரிக்காமல் 'நீ கல்லாகி விடு' என்று கொடும் சாபம் கொடுத்தாராம். உடனே அஹலிகை "புத்தியில்லாத முனிவரே! யதார்த்தத்தை விசாரித்து, செய்த தவற்றுக்கு பரிகாரம் சொல்லாமல், இது போல் சபித்தீரே! எனக்கு சாபவிமோசனம் எப்போது, எவ்வாறு கிடைக்கும் என்றாவது அனுக்ரஹித்து சொல்லக்கூடாதா?” என்றூ கேட்டாளாம். கௌதமர் “ஸ்ரீ ராமாவதாரத்தில் அவருடைய பாத தூளி பட்டவுடன் உனக்கு விமோசனம் உண்டாகும் ” என்று சொன்ன அடுத்த கணமே அவள் கல்லாகிவிட்டாளாம்.

கௌதமர் அங்கிருந்து கிளம்பி அனுஷ்டானத்துக்கு போன போது அவர் புத்தி சஞ்சலித்து பலவிதமாக பிரமிக்கத்தொடங்கியதாம். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததால் அவர் யோசித்து பார்த்தபோது, தன் மனைவி அஹலிகை தவற்றை சரியாக விசாரிக்காமல் சபித்த போது, தன்னை அவள் புத்தியில்லாத முனிவரே என்று அழைத்த விஷயம் நினைவுக்கு வந்ததாம். அவள் மஹா தபஸ்வினியல்லவா? அதனால் அவள் சாதாரணமாகவே சொன்ன இந்த சொற்கள் பலித்து தனக்கு எதிர் சாபமாக ஆகிவிட்டன என்று புரிந்து கொண்டார்.

இதற்கு பரிகாரம் சிவ தாண்டவத்தை காண்பதே என்று நிச்சயித்து சிதம்பரத்துக்கு போனாராம். அங்கு "திரிசூலபுரத்தில் உனக்கு தாண்டவ தரிசனம் தருகிறேன்" என்ற அசரீரி கேட்டு, கௌதமர் அங்கிருந்து திரிசூலபுரம் நோக்கி நடந்தார். அந்தத்தலம் தென்பட்டதுமே அவர் மனது சாந்தி அடைந்ததாம். அங்கே அவர் நீண்ட காலம் தவம் செய்யவே ஈஸ்வரன் மகிழ்ந்து தனுர் மாதத்தில் ஆருத்ரா நக்ஷத்திரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் அருளினாராம். கௌதமர் தாண்டவ தரிசனம் செய்து பின் ஈஸ்வரனை துதித்து, யதாஸ்தானத்துக்கு திரும்பி வழக்கம் போல் அனுஷ்டானங்களில் ஈடு பட்டாராம்.

அதன் பின் அஹலிகை சாப நிவர்த்தி அடைந்து தன் ஸ்வய ரூபத்தை அடைந்து கௌதமரிடம் போன போது, அவரும் மகிழ்ந்து அவளிடம் 'ஈஸ்வரனின் கல்யாண மஹோத்ஸவத்தை கண்டு பின் க்ருஹஸ்த தர்மத்தை ஆரம்பிப்போம்' என்று சொல்லி சதி சமேதராய் ஆவர்த்த க்ஷேத்திரத்துக்கு (திருச்சுழிக்கு) சென்றார். கருணைக்கடலான ஈஸ்வரன் அவர்களுக்கு கல்யாண கோலத்தை அனுக்ரஹித்தாராம். கௌதமரும் ஈஸ்வரனை துதித்து தடைகள் எல்லாம் நீங்கியவராய் முன் போல் மனைவியுடன் தவ வாழ்வில் ஈடுபட்டாராம். இது தமிழ் புராணத்தில் உள்ள கதை.

இந்த பரஸ்பர சாப கதை இதில் மட்டும்தான் இருக்கிறது. ராமாயணத்தில், ஜனகரின் சபையில் புரோஹிதராக இருந்த சதானந்தர் தன் தாயார் அஹலிகை தந்தையின் சாபத்தினால் மனோ தைரியமிழந்து தன் நிலை தெரியாமல் விழுந்து கிடக்க, ராமரின் பாத தூளியினால் சின்மயஸ்பூர்த்தி அடைந்து ராமனை துதித்து தன் தகப்பனரிடம் திரும்பிச்சென்றதை விசுவாமித்திரர் சொல்லக்கேட்டு ஆனந்தப்பட்டார் என்று சொல்லி இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை.

"ஆனால் அஹலிகை கல்லாய் இருந்தாள் என்பது அவளது மனநிலையைத்தான் குறிக்கிறதா?” என்று ஒருவர் கேட்டார்.

ஆமாம். கல்லானாள் என்பது மனதுக்கு இல்லாமல் சரீரத்திற்கா? சரீரம் கல்லாக மாறி காட்டில் கிடந்தது; ராமர் கால் வைத்து ஸ்த்ரீயாக மாற்றினார் என்று சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்களே அன்றி அது நடக்கக்கூடிய காரியமா? மனம் ஆத்ம ஞானத்தை மறந்தது மட்டும் அல்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல் போல் ஜடத்வத்தை அடைந்தது என்று அர்த்தம். மஹா புருஷனின் தரிசனத்தினால் அந்த ஜடத்வம் விலகியது. அவள் மஹா தபஸ்வினியாக இருந்ததால் உடனே சின் மய ஸ்பூர்த்தி அடைந்து ஸ்ரீராமரை தத்வமயனாக அறிந்து துதித்தாள். இந்த சூக்ஷ்மார்த்தம் ராமாயணத்தில் இருக்கிறது. ஸ்ரீராமர் கௌதமாஸ்ரமத்தில் அடி வைத்ததும் அஹலிகையின் மன மலர் விரியலாயிற்றாம்” என்றார் பகவான்.

5 comments:

Geetha Sambasivam said...

// மனம் ஆத்ம ஞானத்தை மறந்தது மட்டும் அல்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல் போல் ஜடத்வத்தை அடைந்தது என்று அர்த்தம். மஹா புருஷனின் தரிசனத்தினால் அந்த ஜடத்வம் விலகியது. அவள் மஹா தபஸ்வினியாக இருந்ததால் உடனே சின் மய ஸ்பூர்த்தி அடைந்து ஸ்ரீராமரை தத்வமயனாக அறிந்து துதித்தாள். இந்த சூக்ஷ்மார்த்தம் ராமாயணத்தில் இருக்கிறது. ஸ்ரீராமர் கௌதமாஸ்ரமத்தில் அடி வைத்ததும் அஹலிகையின் மன மலர் விரியலாயிற்றாம்”//

அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

Jayashree said...

"மனம் ஆத்ம ஞானத்தை மறந்தது மட்டும் அல்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல் போல் ஜடத்வத்தை அடைந்தது என்று அர்த்தம்" Interesting !

எல் கே said...

Ithu pondra todargalaiyum PDF akkalame

ஸ்ரீராம். said...

அஹலிகை கல்லானாள் என்பதற்கு இப்படி அர்த்தமா? கிட்டத்தட்ட பரஸ்பர சாபம். கெளதமரையும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு ஒரு வார்த்தையில் ஆளாக்கி விட்டுச் சென்று விட்டாளே..!

திவாண்ணா said...

கீ அக்கா, நன்னி!
ஜெயஸ்ரீ அக்கா, ஆமா இல்லே?
எல்கே, தொடர் முடிந்ததும் வரும். முன்னாள் இது போல செய்து இருக்கிறேன்.
ஸ்ரீராம், ஆமாம். அதானே தலைப்பும் கூட! அவளை அடிக்கடி மகா தபஸ்வினி ன்னு சொல்வதை கவனிக்க!