Pages

Monday, March 18, 2013

ரமணர் -2 அர்த்தநாரீ



காசியிலிருந்து புறப்பட்ட தேவி காஞ்சி வந்தடைந்தாள். மணலால் சிவலிங்கம் அமைத்து பூசித்தாள். பாப விமோசனமாயிற்று என்று அவள் திருப்தி அடைந்தவுடன் அங்குள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கே காமாக்ஷியாக ரூபம் கொண்டு ப்ரசித்தமானாள்.  

அதன் பின் வ்ருஷப வாஹனத்தில் ஏறிக்கொண்டு இந்த அருணாசலத்துக்கு புறப்பட்டு வந்தாள். முதலில் இங்கே பவளக்குன்றின் அடிவாரத்தில் இருக்கும் கௌதமர் ஆஸ்ரமத்துக்கு வந்தாள். கௌதமரின் புத்திரரான சதானந்தர் அம்பாளைப்பார்த்து பக்தி பரவசமடைந்து 'அம்மா, வா, வா' என்றழைத்து அர்க்ய பாத்யங்களால் உபசரித்தார். "என் தந்தை தர்பை, சமித்துகள் கொண்டு வரக் காட்டுக்கு போயிருக்கிறார். நான் போய் அழைத்து வருகிறேன். நீ இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்றார்

இதற்குள் கௌதமரே காட்டில் இருந்து புறப்பட்டு நடுவழியில் பிள்ளையை எதிர்கொண்டார். அவரைப்பார்த்ததும் சதானந்தர் பரம ஆனந்தத்துடன் "அம்மா வந்திருக்கிறாள், தேவி வந்திருக்கிறாள்" என்று கூச்சலிட்டார். இமைப்பொழுதில் அங்கிருந்த செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து புஷ்பமும் பழங்களுமாக நிறைந்து சொரிந்தன. கௌதமர் ஆச்சரியப்பட்டு அருகில் வந்து "அம்மா யாரடா?" என்று கேட்டார். சதானந்தர் தழு தழுக்கும் குரலில் "அம்மா பார்வதியே வந்திருக்கிறாள்!” என்றார். கௌதமர் புளகாங்கிதமடைந்து ஆஸ்ரமத்துக்கு ஓடோடி வந்து தேவியை தரிசித்து பூஜித்தார்.  

அதன் பின் கௌதமர் சொன்ன படி அம்பாள் நெடுந்தவம் செய்தாள். மஹாதேவன் ப்ரத்யக்ஷமாகி வரம் கேள் என்றார். தேவி மிக வினயமாக "ஸ்வாமி! தாங்கள் இவ்வளவு ப்ரஸன்னராகி (gracious) இருந்தால் தங்கள் தேகத்தில் பாதிபாகத்தை எனக்குத்தர வேண்டும். இனித் தங்களை விட்டு தனி சரீரத்துடன் என்னால் வாழ முடியாது. வேறு சரீரத்தில் இருந்தால் இதே போல இன்னொரு தவறை செய்து உங்களை பிரிந்து அல்லல் பட வேண்டி இருக்கும். ஆகவே அனுக்ரஹிக்க வேண்டும்" என்று ப்ரார்த்தித்தாள். பரமேஸ்வரரும் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்படி அனுக்ரஹித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். ஜகன் மாதா அர்த்தாங்கினி ஆன கதை இதுதான்.

இப்படி கதை சொல்லும் போது பல இடங்களில் பகவான் கண்களில் நீர் நிறைந்தது; குரலும் கம்மியது; உடல் நடுங்கியது; கதை சொல்லி முடித்த பின் பகவான் ஆழ்ந்த மௌனம் கொண்டார் என்று இதை எழுதிய சூரி நாகம்மா எழுதுகிறார்.
 

2 comments:

Unknown said...

என் இரண்டாவதுபதிவு இதுதான். இதேகதையை நானும் போட்டிருக்கேன். நன்றி

http://jaisankarj.blogspot.in/2008/06/blog-post_11.html

திவாண்ணா said...

ஜெய்சங்கர், சரிதான்! நாம் இரண்டு பேரும் ஒரே ஸோர்ஸிலிருந்து எழுதி இருக்கிறோம்! ரமணாஸ்ரமத்தில் இருந்து கடிதங்கள்.
உங்கள் பதிவு என் கவனத்துக்கு வரவில்லை. மன்னிக்க. இதே புத்தகத்தில் இருந்து வேறு பதிவு எழுதி இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.