Pages

Tuesday, November 6, 2012

கடவுளின் உபயோகம் - 5

 
ஆனால் அப்படி வெறும் கற்பனையில்தான் இருக்க முடியும்.

அதனால் என்ன? சரியோ தவறோ, அப்படி ஒரு நண்பர் இருப்பதாக உணர்வது பெரிய ஆறுதல். அப்படி கணக்கற்ற பண்புகளுடன் ஒரு நண்பர் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதை கவனித்தால் அவர் எங்கும் நிறைந்து, சர்வ சக்தியுடன் சர்வ ஞானத்துடன் இருக்க வேண்டும். நம் சிறிய அறிவால் அப்படி ஒரு நண்பரை கற்பனை செய்யவும் முடியவில்லை; வாழ்கையில் காணவும் முடியவில்லை. ஆகவே நம் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒருவர், நாம் முழுதும் நம்பக்கூடிய ஒருவர் அப்படி ஒருவர் இருக்கிறார் என்று நம்மிடம் சொன்னால் நமக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. ஒரு வேளை அதில் நமக்கு சந்தேகம் இருந்தால் நம் சிற்றறிவால் அதை இல்லை என்று நிரூபிக்க முடியாது. நம்மிடம் அக்கறை கொண்டவரிடம் நமக்கு பரி பூரண நம்பிக்கை இருந்தால் எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த அந்த நண்பரின் நினைவில் நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வோம். இப்படி பரிபூரண நம்பிக்கை கொண்டவருக்கு பயமோ துக்கமோ இராது. எதுவாக இருந்தாலும் இந்த எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த நண்பர் சரியான நேரத்தில் தன்னை காப்பாற்றுவார் என்று அவர் நினைப்பார். அப்படி துக்க நிவர்த்தி கிடைக்காத நேரத்தில் கூட "சரி, எல்லாம் அறிந்த இவர் இந்த நேரத்துக்கு இதுதான் நல்லது என்று அறிந்துள்ளார் போலும், அதனால்தான் துக்க நிவர்த்தியை தரவில்லை" என்று நினைத்து தேற்றிக்கொள்வார். கடவுள் என்று நாங்கள் அழைக்கும் இந்த நண்பரின் இருப்பதை நிரூபிப்பது அல்லது காட்டுவது என்னும் கண்ணுக்கு தெரியாத விஷயத்தை விட்டுவிட்டு பார்த்தால் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது நடைமுறையில் பெரிய லாபமாகும்.

இருப்பதாக நிரூபிக்கப்படாத நபர் மீது எப்படி நம்பிக்கை வரும்?

நாம் எப்போதுமே நிரூபிக்கப்பட்டதை மட்டும்தான் நம்புகிறோமா? அப்படி ஒரு நடைமுறையை பின் பற்றினால் இந்த உலகில் பல விஷயங்களை செய்ய முடியாது. நாம் சந்திக்கும் நபர்கள் மீது நமக்கு ஒரு நம்பிக்கை இருந்தே ஆக வேண்டும். ஒரு வீட்டை தேடி போகிறீர்கள். யாரோ தெருவில் நிற்கும் ஒருவரிடம் விசாரிக்க, அவர் அது அங்கே இருக்கிறது என்று ஒரு வழியை சொல்கிறார். இந்த நபர் யார்? இவர் உண்மைதான் பேசுவாரா, இவருக்கு அந்த வீடு இருக்குமிடம் உண்மையில் தெரியுமா என்றெல்லாம் விசாரணை செய்கிறோமா? பொதுவாக அவரை பூரணமாக நம்பி அவர் சொன்ன வழியில் போய் பார்க்கிறோம். தப்பான வழியாக இருந்துவிட்டால் அப்போது அவரை குறை சொல்வது நியாயமாக இருக்கும். ஆனால் அப்படி அவர் சொன்ன வழியில் போகாமல் அதற்கு முன்னேயே அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று கோரினால் அவர் உங்கள் கையை பிடித்துக்கொண்டு அந்த வீட்டுக்கு கொண்டு விடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. அதற்கும் நீங்கள் சம்மதிக்க வேண்டும். அதே போல நம் புராதன ரிஷிகள் கடவுள் இருக்கிறார் என்று பிரகடனம் செய்ததை நீங்கள் பூரணமாக நம்பாமல் இருக்க காரணம் ஒன்றும் இல்லை. அவர்கள் சொன்னபடி நடந்து கொண்டு இருந்துவிட்டு அப்புறம் அவர்கள் சொன்னது தவறு என்று கண்டுபிடித்தால் அப்போது அவர்களை குறை சொல்ல சரியான நேரமாகும். அது வரை இல்லை.

இந்த ரிஷிகளும் நம்மைப்போல மனிதர்கள்தானே? நமக்குத்தெரியாத கடவுள் அவர்களுக்கு எப்படி தெரிகிறார்?

எப்படி என்றால் அவர்கள் தம் குருவிடம் பரிபூரண நம்பிக்கை வைத்து இருந்தார்கள். அவர்கள் கடவுளை உணர எப்படி நடந்துக் கொள்ள சொன்னார்களோ அப்படி நடந்து கொண்டார்கள்.

அதுதான் விடை என்றால் மேலும் கேள்வி எழுகிறதே! இந்த குருவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய குரு மூலம் எனில் அவருக்கு என்று, பின் இந்த கேள்வியை மேலும் மேலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்குமே?

நிச்சயமாக அப்படித்தான். யாருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டியிராத ஒருவரை மூல காரணமாக அறியும் வரை அப்படித்தான்.

யார் அந்த மூல காரணமானவர்?

நம் பழைய நண்பரான கடவுள்தான். வேதங்கள் அவருடைய மூச்சு; அவை சரியான ஞானத்தின் ஊற்று. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள்; அவரது வார்த்தைகளில்; அவரது ஊழியர்கள் மீது. விரைவில் ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும்! அவர் அண்மையில் இருக்கிறார் என்னும் நினைப்பு உங்களுக்கு பெரிய ஆறுதலாகும். அப்படி அவரது இருப்பை உணர ஆரம்பித்துவிட்டால் இது வரை அனுபவிக்காத ஆனந்தம் உங்களுக்குள் பொங்கும்! அதன் பின் நேரம் என்பது ஏதோ ஒரு விஷயத்தில் கழிக்க வேண்டிய விஷயம் இல்லை என்பது புரியும். மாறாக பேரானந்தத்தை தேடிவதில் அனுபவிப்பதிலும் கழிக்க வேன்டியது அது என்று புரியும். அதன் பின் எதிர்மறை எண்ணங்களுக்கோ அர்த்தமற்றதாக வாழ்வு தோன்றுவதற்கோ இடமே இராது.

3 comments:

sury siva said...

எங்க குல தெய்வம் மாந்துரை ஆம்ரவனேஸ்வரர் கோவிலில் குடி கொண்டிருக்கும் கருப்பு தான்.
அந்தக் கருப்பு சாமி மேல எங்க அம்மாவுக்கு அசாத்ய நம்பிக்கை.
நீ எங்க போனாலும் அந்த கருப்பன் உன் பின்னாடியே வருவான்டா... என்பாள்

இன்றும் அந்த நம்பிக்கை எங்கள் குடும்பங்களில் தொடர்கிறது.

ரியலி, லைஃப் ரெஸ்ட்ஸ் இன் ஹோப் ஒன்லி.

சுப்பு ரத்தின சர்மா.

திவாண்ணா said...

உண்மைதான் சார். நம்பினோர் கெடுவதில்லை.:-))

Jayashree said...

கோகழி ஆண்ட குரு மணி தன் தாள் வாழ்க
ஆகமமாய் நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க