Pages

Wednesday, October 17, 2012

உண்மையான பக்தி -4


பக்தர்: பக்தி விஷயமாக இன்னொன்று கேட்க விரும்புகிறேன். கேட்கலாமா?

ஸ்வாமி: கேளுங்கள், என்ன விஷயம்?

அநேக பக்தர்கள் சிரத்தை உள்ளவராயும் சாத்வீகமாயும் இருந்தாலும் தன் உபாஸ்ய தேவதையைத் தவிர வேறு எந்த தேவைதையையாவது யாரும் தன் காது பட துதித்தால் உடனே அதை ஒரு வியவகாரமாக்கி வசவை ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதை பார்த்து இருக்கிறேன். இப்படி பொறுத்துக்கொள்ள முடியாத மனோ பாவம் உண்மை பக்தியுடன் பொருந்துமா?

பொருந்தாது என்பதில் ஐயமில்லை. இந்த மனோ பாவம் நல்ல பக்தர்களிடம் இராது. பக்தியின் உண்மை ஸ்வரூபத்தை அறியாமலும், தங்களால் உபாசிக்கப்படுவதாக சொல்கிற ஈஶ்வரனின் ஸ்வரூபம் எப்படி உள்ளதென அறியாமலும் இருக்கிறவர்களிடம்தான் இந்த மனோ பாவம் காணப்படும்.
ஜகத்தை நிர்வாகம் செய்து கொண்டு ஸர்வேஸ்வரனாக இருக்கும் பர வஸ்து நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த நாம ரூபங்கள் அசேதனமான ப்ரக்ருதியை சேர்ந்தவையே. கொஞ்சமாவது ப்ரக்ருதி சம்பந்தத்தை ஏற்படுத்தாமல் ஈஶ்வரனுக்கு என்று நாம ரூபம் இருக்க முடியாது. “பாதோsஸ்ய விஶ்வா பூதானி" என்று புருஷ ஸூக்தத்தில் சொல்லி உள்ளபடி நாம ரூபமுள்ள ப்ரபஞ்சமே அவருடைய பாத மாத்திரமே (கால் பாகம்) ஆகும். ஶ்வர தத்துவத்தில் இதற்கு மேலாக இருக்கும் பெரிய பாகத்தை ஒரு பொழுதும் நாம் நேரடியாக அறிய முடியாது. அவரது பாதம் மட்டுமே நமக்கு தெரியக்கூடும். அந்த பாதத்தை சேவிப்பதாலேயே அவரை சேவிக்க வேண்டி இருக்கிறது.
ப்ரபஞ்சத்தில் உள்ள தேவர்கள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், மிருகங்கள் முதலானவை அடங்கிய இதர விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நம்மை எப்படி நடத்திக்கொள்ள வேன்டுமென்றும் சாஸ்திரங்களில் சொல்லிய படி நடத்திக்கொள்வதுதான் கர்மா எனப்படுகிறது. அதுவே ஈஶ்வரனின் பாத சேவை. அந்த பாதத்தில் ஊக்கத்துடன் இடையறாத சேவை செய்துநம் பக்தியினால் ஈஶ்வரனுக்கு த்ருப்தி ஏற்பட்டு, நம்மை கை தூக்கி நிறுத்தி அவர் முகத்தை நேரில் காணும் வாய்ப்பை கொடுத்தால், அப்போது அவர் நெற்றியில் இருப்பது விபூதியா கோபி சந்தனமா என்று பார்த்துக்கொள்ளலாம்.
நாமோ ஏணிப்படியின் அடியில் இருக்கிறோம். பகவானின் பாத பிரகாசமே இன்னும் சரியாக புலப்படவில்லை. அப்படி இருக்க அவரது முகத்தின் தன்மை பற்றி ஏன் ஊகிக்கவும், வியவஹாரம் செய்யவும் வேண்டும்? நம் காலமும் சக்தியும் மட்டுமே விரயமாகும். உண்மை பக்தி உள்ளவன் இதில் நேரத்தியும் ச்கதியையும் வீணாக்க மாட்டான்.ஶ்வரன் எனில் உலகை உருவாக்கி, காப்பாற்றி, அழிப்பவன் என்கிற சுருக்கமான லக்ஷணம் போதும் அவனுக்கு. அவருக்கு எந்த பெயர், உருவம் கொடுத்தாலும் ஆட்சேபணை செய்ய மாட்டான். ஏனெனெனில் அவை ஈஶ்வர தத்வத்தை சேர்ந்தவை அல்ல என்றும் அந்தந்த பக்தரின் நலனை உத்தேசித்து சொல்லப்படுகிறவைதான் என்றும் அவன் அறிவான். தன்னைக்குறித்து பகவானால் ஆணையிடப்படுகிறவை அடங்கியதே வேதங்கள் என்றும், வேதங்கள், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை ஒழுங்காக செய்து வருவதே பகவானின் அனுக்ரஹத்தை சம்பாதிக்க வழி என்றும் பகவத் ஆராதனத்தை தான் சரியாக செய்ய இது ஒன்றே வழி என்றும் அறிந்திருப்பான்.

No comments: