Pages

Tuesday, January 24, 2012

காமம் - 4



மனதின் சக்தியை பார்த்தீங்களா?

பெண்ணுக்கு அடுத்த படியா காமம் பிறப்பது பொருளிடத்திலே. காஞ்சன காமினி என்று ரெண்டையுமே ராம க்ருஷ்ணர் சேத்து சொல்லுவார்.

பணம், காசு.... பணம் இருந்தா எதை வேணுமானாலும் வாங்கலாம் ன்னு ஒரு நினைப்பு இருக்கு. அது முழுக்க உண்மை இல்லையானாலும் பணத்தால நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்கிறது நிதர்சனம். இந்த காலத்தில கெட்டுப்போயிருக்கிற அரசியல் பணத்தால பல விஷயங்களை சாதிக்க முடியும் ன்னு சுட்டிக்காட்டுது.

இந்த பணமும் சேர்க்க சேர்க்க அடங்காத ஒரு ஆசைதான். எவ்வளோ கிடைத்தா போதும்? ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன் ரெண்டாயிரம் சம்பாதிக்க ஆசை படுகிறான். லட்சம் சம்பாதிக்கிறவன் ரெண்டு லட்சம் சம்பாதிக்க ஆசை படுகிறான். அந்த ரெண்டு லட்சம் கிடைச்சதும் நாலு லட்சம் சம்பாதிக்க நினைப்பான். இதுக்கு அளவே இல்லை.

யக்ஷவித்தம் ன்னு ஒரு கான்செப்ட்.

ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவனுக்கு ஒரு நாவிதன். நாவிதனுக்கு ராஜாவோட சம்பந்தம் இருந்ததால நிறைய பேர் அவன்கிட்ட முடி வெட்டிக்க, ஷேவிங் செய்து கொள்ள வருவாங்க. இவனும் பிகு பண்ணிப்பான். நேரம் இல்லை அப்புறம் வாம்ப்பான். அவங்க பண்ணிவிடுப்பான்னு தாஜா பண்ணுவாங்க. நிறைய காசு கொடுப்பாங்க. எனக்கௌ இவ்வளோ வேணாம். நான் ராஜாகிட்டே வேலை செய்யறேனாக்கும் என்பான். அவங்க வற்புறுத்தி கொடுப்பாங்க. நாவிதனும் சந்தோஷமா இருந்தான்.

ஒரு நாள் காட்டு வழியே போகும் போது அவனெதிரே ஒரு யக்ஷன் வந்தான். உனக்கு நிறைய காசு வேணுமா? நான் புதையல் இருக்கற இடத்தை காட்டறேன்னு சொன்னான். நாவிதனுக்கு அதிசயமா போச்சு! யார் வேண்டாம்ன்னு சொல்வாங்க? காட்டு காட்டு ன்னான். இதோ இந்த மரத்தடியில தோண்டு. ஏழு ஜாடி நிறைய தங்கம் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு யக்ஷன் போய்ட்டான். நாவிதனும் தோண்டிப்பார்க்க அங்கே யக்ஷன் சொன்னபடியே ஏழு ஜாடிகள் கிடைச்சது.

சந்தோஷமா வீட்டுக்கு எடுத்துப்போய் எல்லாத்தையும் திறந்து பார்த்தான். ஒரு ஜாடி தவிர எல்லாத்திலேயும் தங்க காசுகள் நிரம்பி இருந்தது. ஒண்ணுத்துல மட்டும் முக்கால் ஜாடிதான் காசுகள் இருந்தது. நாவிதனுக்கு ஒரே வருத்தம். ஏன் இப்படி இதில மட்டும் குறைஞ்சு இருக்கு? அதை நிரப்பனும்ன்னு ஒரு வெறி வந்தது. வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் கொண்டுப்போய் தங்க காசு வாங்கி வந்து அதில போட்டான். நிரம்பலை. பெண்டாட்டி நகை எல்லாம் பிடுங்கி காசா மாத்தி நிரப்பப்பார்த்தான். அளவு கொஞ்சம் அதிகமாச்சே தவிர நிரம்பலை. அது ஏதோ மாய ஜாடி போல இருந்தது. எவ்வளோ காசு போட்டாலும் நிரம்பலை. நாவிதனுக்கு அன்னிலிருந்து அதுவே ஒரு குறிக்கோளா போச்சு. பைத்தியம் பிடித்தவன் போல இதை எப்படி எல்லாம் சம்பாதிச்சு நிரப்பலாம் என்கிறதே சிந்தனையா போச்சு. முன்னே வருகிற வாடிக்கையாளர்களை அலட்சியம் செய்தவன் இப்ப வலுவில போய் உனக்கு நான் முடி வெட்டி விடுகிறேனே என்று வேலையை தேடிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எவ்வளோ காசு போட்டும் அது நிரம்பறதா இல்லை. ஆனா நிரம்பவே நிரம்பாதுன்னு ஒரு தோற்றத்தையும் அது தரலை. அதனால் நாவிதன் என்னைக்கோ ஒரு நாள் இது நிரம்பும் என்றே நம்பினான்.

இது வரை சந்தோஷமா இருந்த ஆசாமி கவலையால பீடிக்கப்பட்டு உடம்பு கெட்டுப்போனான். ராஜாகிட்டே சம்பள உயர்வு கேட்டான். ஆச்சரியப்பட்டாலும் சரின்னு ராஜாவும் கொடுத்தார். அன்னிலேந்து அவனை கவனிக்க ஆரம்பிச்சார். எப்பவுமே வருத்தத்தோட இருக்கிறதை கவனிச்சார். ஒரு நாள் திடுதிப்புனு "ஏம்ப்பா? காட்டிலே யக்ஷனை பாத்தியா? அவன் உனக்கு புதையல் தரேன்னு சொன்னானா" ன்னு கேட்டார். நாவிதனுக்கு தூக்கி வாரி போட்டுது! ஆமாம் ராஜா, உங்களுக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டான். அதான் திடீர்ன்னு காசுக்குப்பறக்கறயே! முன்னே நீ இப்படி இல்லை. அதனால் ஊகிச்சேன் ன்னான் ராஜா.

அவனை உங்களுக்கு தெரியுமா ராஜா?

தெரியும்ப்பா. எனக்கும் அவன் புதையலை காட்டறேன்னான். நான்தான் வேண்டாம்னுட்டேன்.

ஏன் ராஜா?

அதைப்பத்தி எனக்குத்தெரியும். அது ஒரு மாய ஜாடி. அதில நீ எவ்வளவுதான் காசு போட்டாலும் நிரம்பவே நிரம்பாது ன்னான் ராஜா.

இப்ப நாவிதனோட அதிர்ஷ்டம் வேலை செஞ்சது. ராஜா சொன்னது சரின்னு மனசுக்கு பட்டது.

நான் என்ன செய்யட்டும்?

அந்த ஜாடிகளை திருப்பி எடுத்துப்போ. காட்டில் யக்ஷனை பாத்தா நீயே வெச்சுக்கோ ன்னு கொடுத்துட்டு வந்துடு.

அதே போல காட்டுக்குப்போய் யக்ஷனை பார்த்து ஜாடிகளை திருப்பி கொடுத்துவிட்டு சந்தோஷமா இருந்தான் நாவிதன்.

யக்ஷர்களுக்கு ராஜா குபேரன். ஜனங்களுக்கு காசு ஆசை இருக்கற வரை குபேரனும் நல்லா இருப்பானாம். அதனால மக்களை காசு காசுன்னு டெம்ப்ட் பண்ணுவான் என்கிறாங்க பெரியவங்க.

ரொம்ப ஆசைப்படாம அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியா வாழலாம். ஆனா அப்படி ஒத்தரை பார்க்கிறது அரிதே. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ன்னு ஔவை பாட்டி சொன்னாலும் நாம அதுக்கு மேலேயே சாப்பிடுகிறோம். பலரும் பசிக்கு சாப்பிடுகிறாப்போல தோணலை. இவ்வளோ ன்னு சாப்பிட்டு பழக்கமாயிடுத்து. அதனால் முன் போல வேலை செய்கிறோமோ இல்லையோ அதே அளவு சாப்பிடுகிறோம். பசி இருக்கோ இல்லையோ அதே நேரத்துக்கு தினசரி சாப்பிடுகிறோம். முன்னே இருந்த இளம்வயசா இப்ப இல்லை; அப்போதையா ஆட்டம் பாட்டம் இப்ப இல்லை, இருந்தாலும் அதே அளவு சாப்பிடுகிறோம்.  இது ஒரு பழக்கமா போயிடுத்து.

கிடைச்சதை கொண்டு திருப்தியா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்.
-தொடரும்.



.

No comments: