Pages

Monday, June 6, 2011

எனக்கு எதுக்கு?



இரண்டு சகோதரர்கள். ஒருவருக்கு திருமணம் ஆகி ஐந்து குழந்தைகள். இருவருக்கும் பொதுவான நிலம் இருந்தது. இருவரும் அதில் கடுமையாக உழைத்தனர். நல்ல வளமான நிலம். நல்ல மகசூல் கிடைத்தது. இருவரும் சமமாக பங்கிட்டு கொண்டனர்.
சில வருடங்கள் சென்றன. திருமணமான அண்ணன் இரவுகளில் அவ்வப்போது எழுந்து யோசிப்பான். 'எனக்கோ ஐந்து குழந்தைகள். எனக்கு வயதானால் யாரேனும் காப்பாற்றுவார்கள். தம்பி பாவம் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறான். இவனுக்கு வயதானால் யார் கவனித்து கொள்வார்கள். அவனுக்கு அதிகமாக பொருள் சேர வேண்டும்.' உடனே யாருக்கும் தெரியாமல் தன் குதிரில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்து தன் தம்பியின் குதிரில் சேர்த்துவிடுவான்.

தம்பி இரவுகளில் அவ்வப்போது எழுந்து யோசிப்பான். 'பாவம் அண்ணன். ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறான். நாமோ ஒண்டிக்கட்டை. நமக்கு எதற்கு இவ்வளவு பொருள்? அவனுக்கு தேவை அதிகம்.' உடனே யாருக்கும் தெரியாமல் தன் குதிரில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்து தன் அண்ணனின் குதிரில் சேர்த்துவிடுவான்.

ஒரு நாள் இரவு இருவரும் கையில் தானிய மூட்டையுடன் ஒருவருக்கொருவர் எதிரில் மோதிக்கொண்டார்கள்!

இருவரும் இறந்து போன பிறகு இந்தக்கதை மெதுவாக வெளியே வந்துவிட்டது. பல ஆண்டுகள் சென்ற பின் ஊர் மக்கள் இறந்து போன இந்த சகோதரர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தனர். எங்கு கட்டுவது என்று ஆலோசித்தவர்கள் இரவில் இருவரும் சந்தித்த இடத்தில் கட்ட முடிவு செய்தனர். அதைவிட புனிதமான இடமில்லை என்பது அவர்கள் கருத்து!

1 comment:

Geetha Sambasivam said...

கண்ணீர் வர வைச்ச கதை. இது மாதிரி உலகெங்கும் நடந்தால்?? எங்கே? அண்ணன், தம்பி பேசிக்கிறதே அபூர்வமா இருக்கு. :(((((