Pages

Tuesday, June 28, 2011

பேச்சுக் கொடுக்க



பாஷான பாரிஷ் அது.
பாதிரியார் மாஸ் முடிந்ததும் எல்லோரிடமும் பேச்சுக் கொடுக்க நபர்களை அமர்த்தி இருந்தார்.
பாதிரியாரின் மனைவி "இத நீங்களே செய்யணும். நாம் இங்க வந்து நாலு வருஷமாச்சு. இன்னும் யாரையும் தெரிஞ்சுக்காம இருக்கிறது அவமானம் இல்லே?” என்றாள்.
சரி என்று அடுத்த ஞாயிறு மாஸ் முடிந்ததும் வாசல் பக்கம் போய் நின்று கொண்டார், முதலில் வெளியே வந்த பெண்மணியை பார்த்து " எப்படி இருக்கீங்க? நீங்க இங்கே வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்" ன்னார். அந்த பெண்மணி கொஞ்சம் அதிர்ச்சி ஆனாப்போல இருந்தது. “ நான் நல்லாத்தான் இருக்கேன்"
"அடிக்கடி வாங்க; புதுசா வரவங்களைப் பார்த்தா எங்களுக்கு சந்தோஷமே!”
“சரிங்க"
“நீங்க இந்த சர்ச் பகுதியிலேயா வசிக்கீறீங்க?”
பெண்மணிக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. பாவம் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க போல இருக்கு.
“பரவாயில்லை, உங்க அட்ரஸ் கொடுங்க. நானோ என் மனைவியோ வந்து உங்களை பார்க்கிறோம்.”
“நீங்க ரொம்ப தூரம் போக வேண்டாம் சார். நான்தான் உங்க வீட்டு சமையல்காரி!”


Thursday, June 23, 2011

ப்ரார்த்தனை



பாட்டி: பேராண்டி, தினசரி ராத்திரி ப்ரார்த்தனை செய்யறியா?
பேரன்: ஆமாம் பாட்டி, செய்யறேன்.
பாட்டி: தினசரி காலையில?
பேரன்: இல்லை பாட்டி!
பாட்டி: ஏன்?
பேரன்: பகல்ல எனக்கு பயம் கிடையாது!

Wednesday, June 22, 2011

காயத்ரி -5





29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.

30. அட அப்படின்னா வேற என்ன காயத்ரி இருக்கு?
அஜபா காயத்ரீ, துரீய காயத்ரீன்னு உண்டு. நாம் மூச்சை இழுக்கிறது ஹம் என்று, விடுகிறது ஸஹ என்று, இப்படி பழக்கமாகிவிட்டால் அது ஹம்ஸ அல்லது அஜபா காயத்ரி. துரீய காயத்ரி சன்னியாசிகள் செய்வது.
த்ரிபதா காயத்ரிதான் நாம் சாதாரணமா காயத்ரி ன்னு சொல்கிற போது குறிக்கிறது. இது எவ்வளவு பெருமை வாய்ந்தது என்றால் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்ன்னு பகவான் சொல்லும் அளவு!
இது மிக பெருமை வாய்ந்தது என்கிறதால எல்லா தேவதைகளுக்குமே ஒரு காயத்ரி உருவாக்கப்பட்டது. ஆனா வேதத்தில குறிப்பிட்டு இருக்கிற காயத்ரி சிலருக்குத்தான்.
ஸவிதா தவிர
நரஸிம்மர்
சுப்ரமணியர்
அக்னி
சூரியன்
ப்ரம்ஹா
சிவன்
விஷ்ணு
லக்ஷ்மி

31. மத்ததெல்லாம்?
மத்ததெல்லாம் நாமே நம் இஷ்ட தேவதை மேலே இருக்கிற அபிமானத்திலே செஞ்சது.
இந்த காயத்ரி மூன்று வேதங்களிலேயும் இருக்கு. வேதத்திலேயே ஆவாஹன மந்திரம் இருக்கிறது இதுக்கு மட்டுமே. (ஆயாது வரதா...) மேலே அங்க ந்யாஸம், கரந்யாஸம், செய்பவர்களும் இருக்காங்க. த்யான ஸ்லோகம் எல்லோருக்கும் பொதுவே.

வேத கதை: தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். ஒரு முறை அப்படி போர் நடக்கும்போது காயத்ரி இருவருடைய பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தி காப்பாற்றியது. போர் முடிந்த பின் அசுரர்கள் தம் பொருட்களைப்பெற காயத்ரியை மரியாதை இல்லாமல் விரட்டிமிரட்டினர். ஆனாலும் அவர்களால் பொருட்களை பெற முடியவில்லை. தேவர்கள் அன்புடன் காயத்ரியை 'ஆயாது' என்ற மந்திரத்தால் துதித்தனர். “ஓ, காயத்ரியே! நீ வேதங்களுக்கெல்லாம் தாய்! வரத்தை கொடுப்பவள், அழிவில்லாதவள். ப்ரும்ஹ ஸ்வரூபிணி. நீ எங்களிடம் வா. எங்களிடம் இரு. நீ ஓஜஸ், ஸஹன சக்தி, பலம், தேஜஸ்! தேவர்களுக்கு வீடு எல்லாம் நீயே! ஆயுஸ் நீயே!” மகிழ்ந்த காயத்ரி அவர்களது சொத்தை கொடுத்து அருள் புரிந்தாள்.

32. காயத்ரின்னு ஏன் பெயர்?
காயந்தம் த்ராயதே இதி காயத்ரி. அதாவது யார் அதை சரியாக ஸ்வரத்துடன் உச்சரிக்கிறார்களோ அவர்களை காப்பாற்றுவது காயத்ரி.
வேதத்தில பல சந்தஸ் கள் (meter) உண்டு. உஷ்ணீக், அந்ஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்று பல. அவற்றில் ஒன்று காயத்ரி.
இதற்கு மூன்று பாதம், ஒவ்வொன்றிலும் எட்டு எழுத்துக்கள்.
முதலில் நான்கு எழுத்துக்கள்தான் இருந்தனவாம். அப்புறம் எட்டு ஆகிவிட்டது. இதற்கு வேதத்தில் ஒரு கதை உண்டு.

33. ஆஹா! கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லுங்க.

(க்ருஷ்ண யஜுர் வேதம்- காண்டம் 6- ப்ரச்னம் 1- அநுவாகம் 6)
கத்ரூ, ஸுபர்ணி என்று இருவர் சகோதரிகள். அழகில் சிறந்தவர் யார் என்று இவர்களிடையே ஒரு போட்டி வந்துவிட்டது. அதில் கத்ரூ ஜெயித்தாள். போட்டியின் விதிப்படி ஸுபர்ணி கத்ருவின் அடிமையானாள். உனக்காக யாராவது மூன்றாம் உலகத்துக்குப்போய் ஸோம லதையை கொண்டு வந்தால் நீ அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம் என்று சொன்னாள் கத்ரூ. ஸுபர்ணா " ஓ குழந்தைகளே, இளமையில் பெற்றோர் உங்களை ரக்ஷிப்பது வயதான காலத்தில் தம்மை ரக்ஷிப்பீர்கள் என்பதனாலேயே. நீங்க ஸோமலதையை கொண்டு வந்து என்னை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பீர்களாக" என்றாள்.
உடனே 14 அக்ஷரங்கள் கொண்ட ஜகதீ சந்தஸ் ஸோமலதையை கொண்டுவரச்சென்று தோற்றது. தன் அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. 13 அக்ஷ்ர வடிவான த்ருஷ்டுப் உம் அதே போல சென்று, தோற்று, அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. அடுத்து 4 அக்ஷ்ரங்கள் கொண்ட காயத்ரி கிளம்பிசென்று தன் சாமர்த்தியத்தால் ஸோம லதையையும் பெற்று தன் சகோதரிகளிழந்த 4 அக்ஷரங்களையும் மீட்டுக்கொண்டு திரும்பியது. அன்று முதல் அது 8 அக்ஷ்ரங்கள் கொண்டதாயிற்று. ஆகவே வயதிலும் உருவிலும் சிறியதாக இருந்தாலும் காயத்ரியே சிறந்தது உயர்ந்தது என்று ப்ரம்ஹவாதிகள் கூறினர்.
ஒரு பாதத்தில் 8 அக்ஷரங்கள் வீதம் மூன்று பாதங்களில் 24 அக்ஷரங்கள் கொண்டது காயத்ரி.

34. சரி ஜப கிரமத்தை சொல்லுங்க.
முதலில் ஆசமனம். இது எல்லா கர்மாவுக்கும் பொது. அப்புறம் ப்ரணாயாமம். இது பத்தி தனியா பார்க்கலாம். அடுத்து சங்கல்பம். வேளைக்கு தகுந்தாப்போலே மாறும். இத்தனை ஜபம் செய்கிறேன் ன்னும் சங்கல்பிக்கலாம். அடுத்து பத்து ப்ராணாயாமம். இது ஜபத்திலே மனசு நல்லா நிலைக்க. அடுத்து முன்னே சொன்ன ஆயாது என்ற மந்திரத்தால ஆவாஹனம். அங்க கர ந்யாஸம் செய்வதும் உண்டு. முக்தா வித்ரும என்று ஆரம்பிக்கும் த்யானம்.

35. இந்த த்யானம் என்ன சமாசாரம்?
ஒரு பொருளையே சுத்தி மனசு லயமாகிறது த்யானம் என்பாங்க. டெக்னிகலா தாரணை என்கிறது இது. த்யானம் இதுக்கும் ஒரு படி மேலே போய் 'தடை இல்லாம' பொருளைப்பத்தியே சிந்திக்கறது.
காயத்ரி ஜபம் செய்ய நாம் காயத்ரியுடைய வடிவத்தை எப்படி இருக்கும்ன்னு மனசுல கற்பனை செய்யறோம்.

"முக்தா வித்ரும ஹேமநீல தவளவ சாயைர் முகை: த்ரியக்ஷணைர்
யுக்தா மிந்து கலா நிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாம் அங்குச கசா: சுப்ரம் கபாலம் குணம்
சங்கம் சக்ரம் அதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே'

முத்து, பவழம், தங்கம், நீலம், வெண்மை ஆகிய ஐந்து வண்ண திருமுகங்களையுடையவள் காயத்ரி! ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களுடையவள். சந்திரக் கலையை நவரத்தின க்ரீடத்தில் அணிந்தவள். தத்துவார்த்தமுள்ள (24) எழுத்துக்களின் வடிவானவள். வரதம், அபயம், அங்குசம், சாட்டை, வெண்மையான கபாலம், கதாயுதம், சங்கு, சக்கரம், இரு செந்தாமரை ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவள். இத்தகைய காயத்ரி தேவதையை த்யானம் செய்கிறேன்.

36. மந்திரத்தை உரக்க சொல்லணுமா எப்படி?
காயத்ரியை மனதில் மட்டுமே சொல்வது சிறந்தது.
இருந்தாலும் எப்படி ஒரு விஷயம் - மொழி - முதலில் கற்றுக்கொள்ளும் போது எழுத்துக்கூட்டி மெதுவாக சொல்கிறோமோ அப்படி சரியாக உச்சரிப்பு ஸ்வரம் வரும் வரை சொல்லலாம். பிறகு உதடுகள் மட்டும் அசையும்படி சொல்லலாம். இதற்கு உபாம்சு என்று பெயர். பிறகு மனதிலேயே சொல்லி பழகலாம்.

35. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?

Tuesday, June 21, 2011

கோரிக்கை



அயர்லாந்தில் பெல்பாஸ்டில் மூன்று பேர்களுக்கிடையே காரசார ஆன்மீக விவாதம். ஒருவர் கத்தோலிக்க பாதிரி; ஒருவர் ப்ராடெஸ்டென்ட் மினிஸ்டர்; மூன்றாவது ஒரு யூத ராபி. கிட்டத்தட்ட அடி தடியில் இறங்கும் நிலமை.
திடீரென்று அவர்களிடையே ஒரு தேவதை தோன்றியது, "உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். நாட்டில் அமைதி நிலவ ஆளுக்கொரு வரம் கேளுங்கள். ஆண்டவன் அதை கொடுப்பார்.”
கத்தோலிக்கர் சொன்னார் , “எங்கள் அழகிய அயர்லாந்தில் இருந்து எல்லா ப்ராடெஸ்டென்ட்களும் காணாமல் போகட்டும். அப்போது அமைதி நிலவும்.”
கோபமான ப்ராடெஸ்டென்ட் முழங்கினார், "எங்கள் புனித அயர்லாந்தில் இருந்து எல்லா கத்தோலிக்கர்களும் வெளியேறட்டும். அப்போது அமைதி திரும்பும்.”

"உங்களுக்கு?” என்று ராபியை பார்த்து கேட்டது தேவதை.
"எனக்கு ஒன்றும் வேண்டாம். இவங்களோட கோரிக்கைகளை நிறைவேத்துங்க. அது போதும்.”

Thursday, June 16, 2011

காயத்ரி-4





24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?
பலதும் இருக்கு. நாமே சிலதையும் உருவாக்கிக்கலாம். உதாரணத்துக்கு ஒண்ணு.
ப்ரணவத்தை மனசாலே வரையணும். ஸம்ஸ்க்ருத ரூபம் ன்னு வெச்சுப்போம். முழு ரூபத்தை மனக்கண்ணால பாத்து கொண்டு ப்ரணவத்தை சொல்லுவோம். அடுத்து மேலே ஆரம்பித்து முதல் வளைவு மனசால வரைஞ்சு கொண்டே வ்யாஹ்ருதிகளை சொல்லுவோம். இரண்டாவது வளைவை தொடர்ந்து வரைந்து கொண்டு ஸாவித்ரியின் முதல் அடி. இரண்டாம் அடி சொல்லிக்கொண்டே வால் மாதிரியான பகுதியை வரைவோம். மூன்றாம் அடிக்கு மேலே போடுகிற சந்திரனும் பிந்துவும். வரைந்து முடிந்ததை பார்த்து அடுத்த மந்திரத்தின் முதல் அடியான ப்ரணவம். இப்படியே சொல்லிக்கொண்டு வரைந்து கொண்டு போக மனசு நிலைப்பட வாய்ப்பு இருக்கு.
இது போல மந்திர ஜபத்தை செயலோடு இணைக்க மனம் நிலைப்படலாம். மூச்சு எடுத்துவிடுவது என்பது எப்படியும் நடக்கும் ஒன்று. இந்த மூச்சுடன் மந்திரத்தை இணைத்தும் ஜபம் செய்வதுண்டு. ஆனால் இதுக்கு பயிற்சியும் சீராக மூச்சு விடும் பழக்கமும் தேவை.

25. ஜபத்தின் போது ஏன் இப்படி மற்ற விஷயம் எல்லாம் நினைவுக்கு வருது?
அப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. அப்படி இருக்கும்போதுதான் அதுக்கு மனசு ன்னு பெயர்.

26. பின்னே ஜபத்துல சரியா நின்னுட்டா?
அப்ப அதுக்கு சித்தம் ன்னு பெயர். " சித்தத்தை சிவன் பால் இருத்தி" ன்னு பாட்டு கேட்டு இருப்பீங்களே?

27. அப்ப மன ஓட்டத்தை நிறுத்தனும்?
ஆமாம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு மன ஓட்டத்தை நிறுத்தி வைக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு பகவானோட செயல் திட்டம் நிறைவேறும். அப்ப எல்லாமே சரியா நடக்கும். இல்லைன்னா நம்மோட அஞ்ஞானத்துல முடிவுகள் எடுப்போம்.

28. மந்திரத்துல கவனிக்க ஏதும் விஷயம் இருக்கா?
நிறைய இருக்கு. சரியா உச்சரிப்பு தெரிஞ்ச ஒத்தர்கிட்டே போய் நாம சரியா சொல்கிறோமா ன்னு சீரியஸா சோதனை பாத்துக்கறதே நல்லது.
இருந்தாலும் பெரும்பாலானவர்கள் செய்கிற தப்புக்களை பார்க்கலாம்.
முதல் இரண்டு வ்யாஹ்ருதிகளும் நாலாவது ப வில் ஆரம்பிக்குது. நல்லா அழுத்தி பூர் புவ ன்னு சொல்லணும். வரேண்யம் என்கிறதுல ரே மேலே தூக்கி நீட்டி ரேஏஏ ன்னு சொல்லணும். பர்கோ என்பதும் நாலாவது ப. தீமஹி என்பதில தீ 4 ஆவது. தியோ வில தி யும் அப்படியே. ந:ப்ரசோதயாத். இதில் : ஐ ஆங்கில எஃப் ஆக உச்சரிக்கணும். நிறைய பேர் ப்ரஜோதயாத் என்கிறாங்க. இதையும் கவனிக்கணும்.
ஸ்வரங்களை சொல்லிக்கொடுக்கும்போது சரியா கவனித்து பழகணும்.

29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.

Wednesday, June 15, 2011

சந்திர க்ரஹணம்



இந்த பௌர்ணமிக்கு சந்திர க்ரஹணம் வருகிறதல்லவா?
அதைக்குறித்து சிலதை பார்க்கலாம்.

சந்திர க்ரஹணத்துக்கு 9 மணி நேரம் முன் சாப்பிடலாம். அதற்குள் சாப்பிடக்கூடாது.
முக்கியமாக க்ரஹணத்தின் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

க்ரஹணம் பிடித்து இருக்கும் போதே சில சமயம் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அப்படியானால் அன்று உபவாசம் இருந்து சந்திரனை பார்த்த பின்பே சாப்பிட வேண்டும்.

க்ரஹண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்கு சமமாகும்; எல்லா ப்ராம்ஹணர்களும் வஸிஷ்டருக்கு சமமாவார்கள். ஆகவே அப்போது செய்யும் நீராடல் கங்கையில் செய்த நீராடலுக்கு சமமாகும்; கொடுக்கும் தானம் வஸிஷ்டருக்கு கொடுத்ததுக்கு சமமாகும்.

க்ரஹண காலத்தில் அன்னம் முதலியன மீதியாக இருந்தால் க்ரஹணம் விட்ட பின் அவற்றை உண்ணக்கூடாது. நீக்கிவிட வேண்டும்.

ஊறுகாய், தயிர் போன்ற சேமித்து வைத்தே உண்ணும் பொருட்களை பாதுகாக்க அவற்றில் தர்ப்பை புல்லை துண்டித்து போட வேண்டும்.
சூரியனும் சந்திரனும் ஓஷதிகளுக்கு (மருந்து பொருட்கள்) அதிகாரிகளாவார்கள். ஆகவே இப்படி ஏற்பாடு.
க்ரஹண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது.

க்ரஹண காலத்தில் செய்யும் ஜபமும் தானமும் பன் மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

அதே போல சந்திர க்ரஹணம் விடும் போது செய்யும் தர்ப்பணமும் சக்தி வாய்ந்ததாகும்.

எந்த நக்ஷத்திரத்தில் க்ரஹணம் பிடிக்கிறதோ அந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்; அதன் அனு ஜன்ம, த்ரிஜன்ம நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் (குறிப்பிட்ட நக்ஷத்திரத்தின் முன் 7 ஆவது, பின் ஏழாவது நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்) சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதாவது பின் வரும் ஸ்லோகத்தை ஓலையில் எழுதி க்ரஹண காலத்தில் நெற்றியில் கட்டிக்கொண்டு (பட்டம் கட்டிக்கொள்வது என்பர்) இருந்து க்ரஹண காலம் முடிந்தபின் ஓலையை ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பூசனிக்காய், கொஞ்சம் இயன்ற தக்ஷிணையுடன் கொடுத்துவிட வேண்டும்.

"இந்த்ரோ அனலோ யமோ ரிக்ஷோ வருணோ வாயு ரேவச க்ளத்து இந்து உபநாத உத்தவ்யதாம் மம."

பொருள்: இந்திரன், அக்னி,யமன், நிருருதி, குபேரன், வருணன், வாயு ஆகியோர் சந்திர க்ரஹணத்தால் உண்டான துக்கத்தை அகற்றட்டும்.

சிரத்தை உள்ளோர் க்ரஹணம் பிடிக்கும் முன் குளித்து ஜபம் ஆரம்பித்து க்ரஹணம் விட்டபின் மற்றவர் போல குளிக்க வேண்டும்.
எல்லோருமே க்ரஹணம் விட்ட பிறகு குளிக்க வேண்டும். இப்படி குளிக்காமல் எந்த தேவ காரியத்துக்கும் சுத்தி இல்லை.

Tuesday, June 14, 2011

காயத்ரி-3



14.
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது......


15. ஏன் மூடிக்கிட்டு?
விரல்கள் ஒன்றை ஒன்று தொடும்போது அது முத்திரையா ஆகும். சில முத்திரைகளை வெளியே காட்டக்கூடாது என்கிறதால அப்படி கட்டுப்பாடு.

16. சரி, வலது கையாலதானே எண்ணறோம். அந்த கையை எங்கே வெச்சுக்கணும்?
வலதால எண்ணினாலும் இரண்டும் பக்கத்து பக்கத்துல ஒண்ணாதான் வெச்சுக்கணும். உள்ளங்கைகள் நம்மை பார்க்க இருக்கணும். காலை ஜபத்திலே முகத்துக்கு எதிரேயும், மத்தியானம் இதயத்துக்கு எதிரேயும், மாலை தொப்புளுக்கு எதிரேயும் கைகளை வெச்சுக்கணும்.

17. ஏன் அப்படி?
கைகளை முகத்துக்கு எதிரே வைத்து ஜபம் செய்யும் போது புருவ மத்திக்கு சக்தி பாயரதை நாமே கூட உணரலாம். அந்த அந்த இடத்து சக்கரத்துக்கு சக்தி ஊட்டுகிறதாக இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்படி செய்யத்தான் பெரியவங்க சொல்லி இருக்காங்க.

18. எண்ணிக்கை பத்தி சொல்லிட்டீங்க. மேலே ஜபம் பத்தி சொல்லுங்க.
காயத்ரி மொத்தம் ஐந்து வரிகள். ஒவ்வொண்ணா நிறுத்தி சொல்லணும்.

19. இருங்க, இருங்க, மூணு வரிகள்தானே?
நீங்க நினைக்கிற 3 வரிகள் ஸாவித்ரி எனப்படும். மந்திரத்தில முதல்ல ப்ரணவம். அடுத்து மூன்று வ்யாஹ்ருதிகள் (பூர், புவ, ஸுவ) அடுத்து மூன்று வரிகள் ஸாவித்ரி.

20. சரி, அப்புறம்...
மந்திரத்தில் மனசு லயிக்கறது முக்கியம். அவசர அவசரமா 108 செய்யறத்துக்கு நிதானமா நிறுத்தி குறைச்சலா செய்யறதே பரவாயில்லை.

21. அப்புறம்...
அப்புறம் என்ன, ஒண்ணுமில்லை. ஜபம் செய்து உபஸ்தானம் செய்ய வேண்டியது.

22. பிரச்சினையே ஜபத்தில மனசு லயிக்கிறதுதானே? அதுக்கு ஒண்ணுமே சொல்லலையே?
ஏன்? முன்னேயே இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கேன். முதல்ல சரியா உக்காருவது. இரண்டாவது ப்ராணாயாமம்.
மனசு லயிக்கிறது என்பது ப்ரச்சினைதான். சாதாரணமா வேற ஒரு எண்ணமும் இல்லாம ஜபம் செய்யணும்ன்னுதான் உக்காருவோம். இப்படி நினைக்கிறதும் ஒரு படிதான். கடவுளே! வேற எண்ணங்கள் இல்லாம ஜபத்திலே ஈடுபட வைன்னு வேண்டிக்கவும் செய்யலாம். ஆரம்பத்திலே கொஞ்ச நேரம் வேற சிந்தனை இல்லாம செய்வோம். அப்புறம் மனசு அதோட இயல்பான ஓட்டத்திலே போயிடும். வேற எண்ணங்கள் கிளைக்கும்.

23. ஆமாமாம். அதுக்கு என்ன செய்யறது?
ஒண்ணும் செய்ய வேண்டாம். திருப்பி ஜபத்தை தொடர வேண்டியதுதான். விட்டுப்போச்சே என்கிற எண்ணம் இன்னும் டென்ஷனை உண்டாக்க விடக்கூடாது.

24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?....

Friday, June 10, 2011

காயத்ரி-2



8. ஜபமாலை சமாசாரம் என்ன?
ஜபமாலையும் பயன்படுத்தலாம். அதற்கு அதிக பலன் உண்டு. ருத்திராக்ஷம், ஸ்படிகம், துளசி, மணி, போன்றவற்றை மாலையாக உபயோகிக்கலாம். இவை 108, 54, 27 என்ற எண்ணிக்கையில் கட்டப்படும்.

9. பின்னே ஏன் ஜபமாலையை எல்லோரும் பயன்படுத்தச்சொல்லலை?
ஏதாவது கூடுதல் சக்தி உண்டு என்றால் அதற்கான சட்ட திட்டமும் அதிகமாக இருக்கும். ஜபமாலை பயன்படுத்தினால் அதிக பலன் என்றால் அதற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் உண்டு. ஜபத்தின் போது மாலை அசங்கக்கூடாது. மாலையில் கோர்த்த மணிகளுக்கு தலைபாகம் கீழ் பாகம் என்று உண்டு. தலை தலைபாகத்தை தொட்டுக்கொண்டும் கீழ் பாகம் கீழ் பாகத்தை தொட்டுக்கொண்டும் மாலை கோர்க்க வேண்டும். இதிலும் மேரு உண்டு. அது தனியாக கோர்த்திருக்கும். அந்த இடம் வந்த பிறகு தாண்டக்கூடாது. ஆள் காட்டிவிரல் படாமல் மாலையை தன்னை நோக்கியே உருட்ட வேண்டும். மாலை தொப்புளுக்கு கீழ் இறங்கக்கூடாது.

10. சரி சரி, நான் விரல்லியே எண்ணிக்கறேன்.
ஆமாம், அதுவே எளிது, நல்லது, ரிஷிகள் பரிந்துரைத்ததும் அதுவே.

11. அக்ஷர மாலைன்னு சொன்னீங்களே அது என்ன?
ஸக்ஸ்க்ருதத்தில் உள்ள எழுத்துக்கள் அ முதல் ஹ வரை 54. ஒவ்வொரு மந்திரத்துக்கும் அம் முதல் ஹம் வரை ஒவ்வொரு எழுத்தும் சொல்லி 54 ஆ கணக்கு வெச்சுக்கலாம். அதையே திருப்பி ஹம் முதல் அம் வரை இன்னொரு 54 செய்ய மொத்தம் 108. இதுக்கு நல்ல நினைவாற்றல் வேணும்.

12. நின்னு கொண்டு செய்யணுமா? சிலர் அப்படி சொல்லறாங்களே?
ஆமாம். காலையும் மதியமும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் செய்யணும். உட்காரும்போது எந்த வித ஆசனம் போட்டு உட்காரணும்ன்னு முன்னேயே சொல்லியிருக்கோம். எப்படியும் முதுகுத்தண்டு வளையாம இருக்கணும்.

13. நல்லதுதான், அப்பதான் தூக்கம் வராம இருக்கும். சரி உட்கார்ந்து கொண்டு செய்யறது?
மாலையிலும் ஸஹஸ்ர காயத்ரி மாதிரி அதிக ஜபம் செய்யவும் உட்கார்ந்து செய்யலாம். நாம் வழக்கமா உட்காருகிறது போலவே உட்கார்ந்து செய்யலாம்.

14. பூணூலை பிடிச்சு கொண்டுதானே செய்யணும்?
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது.
பின்ன பலர் செய்யறாங்களே?
மேல் துணி போட்டுக்கற பழக்கம் இல்லாததாலேயும், மூன்றாவது பூணூல் த்ருதீய வஸ்தரம்ன்னு சொல்கிறதாலேயும் துணியை போட்டு மூடாமல் பூணூலால மூடிக்கற மாதிரி இது வந்து இருக்கலாம்.

Thursday, June 9, 2011

இப்படித்தான் இருக்க வேண்டும்....



ஒருவன் ஒரு மாஸ்டரைத்தேடி சென்று கொண்டு இருந்தான். இதைப்பார்த்த சாத்தான் எப்படியாவது அவனை மனமாற்றம் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டான்.

பொன், பொருள், புகழ் என்ன ஆசை காட்டியும் ஆசாமி அசைந்து கொடுக்கவில்லை. மனத்திண்மை அவ்வளவு இருந்தது. தோல்வியை ஒப்புக்கொண்ட சாத்தான் என்னதான் நடக்கிறது என்று காண அவனை பின் தொடர்ந்தான்.

அவன் குரு முன்னிலையில் போய் சேர்ந்தான். என்ன இது? பெரிசா சிம்மாசனம் போட்டுக்கொண்டு நிறைய பக்தர்கள் காலடியில.... ம்ம்ம்.. அடக்கம் போறலை. ம்ம்ம்ம்ம் என்னைக்கண்டுக்கக்கூட இல்லை..... உண்மையான ஆன்மீக தாகம் இருக்கிற நபரை அடையாளம் காணக்கூட தெரியலை...... நான் மத்தவங்களைப்போல அவரை போற்றி புகழலைன்னு உதாசீனம் செய்யராரோ..... இவருக்கு பட்டு பீதாம்பரம் வேற எதுக்கு?... அப்புறம் அந்த பேச்சில ஒரு அலட்சியம்.... ம்ஹூம் இவர் உண்மையான குரு இல்லை. வேறு இடம் பார்க்கலாம் என்று அவன் வெளியே சென்றான்.
மாஸ்டர் அறையின் மூலையில் இருந்த சாத்தானைப்பார்த்து சொன்னார், “ நீ கலங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் ஆரம்பத்தில் இருந்து உன்னவன்தான்!”

கடவுள் இப்படித்தான் இருப்பார், இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தவர்கள் கதியும் இதுதான்!

Tuesday, June 7, 2011

காயத்ரி - 1




1. காயத்ரி ஜபம் பத்தி சொல்லுங்க!
எளிமையா எல்லோரும் செய்கிற விதத்தை பார்க்கலாம்.

2. அப்படின்னா இன்னும் விரிவான வழி இருக்கா?
ஆமாம். மந்திர சித்திக்காக செய்யறது விரிவான வழி. அதில இன்னும் கூடுதல் படிகள் உண்டு.
எளிமையான வழியில... முதல்ல எப்படி உட்காருகிறதுன்னு பார்த்தோம். முதுகு நிமிர்ந்து இருக்கும் வரை ஜபத்தில மனக்குவிப்பு (கான்சன்ட்ரேஷன்) இருக்கும்.
மேலும் மனக்குவிப்பு வர ப்ராணாயாமம் செய்யணும். அதையும் தனியா பாத்தோம்.

3. இருங்க, முதல்ல எவ்வளோ காயத்ரி செய்யணும்ன்னு சொல்லுங்க.
அந்த காலத்தில செய்தது ஒவ்வொரு வேளையும் ஆயிரம் என்றே பல ரிஷிகளும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் எட்டு சேர்த்து ஆயிரத்தெட்டு என்றதால் அந்த பழக்கமும் இருக்கு. அவ்வளவு செய்ய இந்த அவசர காலத்திலே நேரம் இல்லை என்பதால 108 ஆவது நிச்சயம் செய்யணும்.

4. எண்ணிகிட்டுதான் செய்யணுமா? அது மனக்குவிப்பை தடுக்குதே?
எண்ணாமல் செய்தால் பலனில்லை என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே எண்ணியே செய்ய வேண்டும்.

5. சரி எப்படி எண்ணுவது?
அக்ஷர மாலை, ஜப மாலைன்னு பலதும் இருந்தாலும் விரல்களில் எண்ணி செய்வதே நல்லது, சுலபமானது.

6. அந்த வழி என்ன?
இரண்டு கைகளையும் பக்கத்து பக்கத்துல சேர்த்து வைத்தே ஜபம் செய்தாலும் வலது கையிலேதான் எண்ணனும். முதல் ஜபம் செய்யும் போது வலது கை கட்டைவிரலோட நுனியை மோதிர விரலோட நடு ரேகையில் வைக்கணும். இரண்டாம் ஜபத்துக்கு கட்டை விரலோட நுனியை அடுத்து கீழே இருக்கிற ரேகைக்கு நகர்த்தணும். அடுத்து சுண்டு விரலின் கீழ் ரேகை; அங்கிருந்து சுண்டு விரலின் நடு ரேகை, மேல் ரேகை; அப்படியே மேலே உள்ள ரேகைகளிலேயே போய் மோதிர விரல், நடுவிரல், சுட்டு விரல் மேல் ரேகைகளை தொட்டு சுட்டு விரலில் கீழாக இறங்கணும். நடு ரேகை கீழ் ரேகை முடித்தா பத்து ஜபம் ஆகும். அங்கேயே 11 ஆவது ஜபம். வந்த வழியே திரும்பினால் மோதிர விரலோட நடு ரேகை வரும்போது 20. அங்கேயே மீண்டும் ஆரம்பித்து எண்ண வேண்டும். இப்படியே ஐந்து சுற்று வந்தால் 100 பூர்த்தி ஆகும்.


7. இதில நடுவிரலோட நடு, கீழ் ரேகைகள் எண்ணப்படலையே!
ஆமாம். இதை மேரு என்பாங்க. இதை தாண்டக்கூடாது என்பதால அந்த இடத்தில கட்டை விரல் வைத்து எண்ணுவதில்லை.

Monday, June 6, 2011

எனக்கு எதுக்கு?



இரண்டு சகோதரர்கள். ஒருவருக்கு திருமணம் ஆகி ஐந்து குழந்தைகள். இருவருக்கும் பொதுவான நிலம் இருந்தது. இருவரும் அதில் கடுமையாக உழைத்தனர். நல்ல வளமான நிலம். நல்ல மகசூல் கிடைத்தது. இருவரும் சமமாக பங்கிட்டு கொண்டனர்.
சில வருடங்கள் சென்றன. திருமணமான அண்ணன் இரவுகளில் அவ்வப்போது எழுந்து யோசிப்பான். 'எனக்கோ ஐந்து குழந்தைகள். எனக்கு வயதானால் யாரேனும் காப்பாற்றுவார்கள். தம்பி பாவம் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறான். இவனுக்கு வயதானால் யார் கவனித்து கொள்வார்கள். அவனுக்கு அதிகமாக பொருள் சேர வேண்டும்.' உடனே யாருக்கும் தெரியாமல் தன் குதிரில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்து தன் தம்பியின் குதிரில் சேர்த்துவிடுவான்.

தம்பி இரவுகளில் அவ்வப்போது எழுந்து யோசிப்பான். 'பாவம் அண்ணன். ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறான். நாமோ ஒண்டிக்கட்டை. நமக்கு எதற்கு இவ்வளவு பொருள்? அவனுக்கு தேவை அதிகம்.' உடனே யாருக்கும் தெரியாமல் தன் குதிரில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்து தன் அண்ணனின் குதிரில் சேர்த்துவிடுவான்.

ஒரு நாள் இரவு இருவரும் கையில் தானிய மூட்டையுடன் ஒருவருக்கொருவர் எதிரில் மோதிக்கொண்டார்கள்!

இருவரும் இறந்து போன பிறகு இந்தக்கதை மெதுவாக வெளியே வந்துவிட்டது. பல ஆண்டுகள் சென்ற பின் ஊர் மக்கள் இறந்து போன இந்த சகோதரர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தனர். எங்கு கட்டுவது என்று ஆலோசித்தவர்கள் இரவில் இருவரும் சந்தித்த இடத்தில் கட்ட முடிவு செய்தனர். அதைவிட புனிதமான இடமில்லை என்பது அவர்கள் கருத்து!

Friday, June 3, 2011

திட்டம்....



டெட்சுஜன் ஒரு ஜென் மாணவர். அவருக்கு ஒரு விசித்ர ஆசை ஏற்பட்டது. சீன மொழியில் இருந்த சூத்திரங்கள் அடங்கிய ஏழாயிரம் சுவடிகளை ஜப்பானிய மொழியில் பதிப்பிக்க வேண்டும். இதற்காக அவர் ஜப்பானின் குறுக்கும் நெடுக்கும் அலைந்தார். சில தனவான்கள் நூறு பொற்காசுகள் வரை கொடுத்தனர். பல ஏழைகளும் குடியானவர்களும் சிறு காசுகள் கொடுத்தனர். ஒரு வழியாக தேவையான பொருள் சேர்ந்துவிட்டது. அந்த சமயத்தில் யூஜி ஆறு பெருக்கெடுத்து வெள்ளத்தில் பல ஊர்கள் அழிந்தன. பலர் உணவு உறைவிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தன் பெரு மதிப்பு வாய்ந்த திட்டத்துக்கு சேர்த்த பொருள் அனைத்தையும் தயங்காமல் அவதி படும் மக்களுக்கு செலவழித்தார் டெட்சுஜன்.

பிறகு மீண்டும் அதே திட்டத்துக்கு பொருள் சேமிக்க துவங்கினார். பல வருடங்கள் கழித்து தெவையான பொருள் சேர்ந்த போது நாட்டில் கொள்ளை நோய் தோன்றி பல குடும்பங்களை துயரில் ஆழ்த்தியது. தயங்காமல் மீண்டும் நோய் நிவாரணத்துக்கு பொருளை செலவிட்டார்.

மூன்றாம் முறை முயற்சித்து இருபது வருடங்கள் கழித்து மீண்டும் பொருள் சேர்த்து தன் கனவான திட்டத்தை நிறைவேற்றினார்.
க்யோட்டோவில் ஒபாகு மடாலயத்தில் முதல் புத்தகத்தை அச்சடித்த பலகை இன்னும் இருக்கிறது. ஜப்பானியர் தம் குழந்தைகளுக்கு இதை கதையாக சொல்லுகிறார்கள்: டெட்சுஜன் மூன்று சூத்திர பதிப்புக்களை வெளியிட்டார், முதல் இரண்டும் கண்ணுக்கு தெரியாதவை. அவை மூன்றாம் பதிப்பைவிட மகத்துவம் வாய்ந்தவை!

Thursday, June 2, 2011

சந்த்யாவந்தனம் -10



70. ம்ம்ம்... சரி காயத்ரி பத்தி தனியா சொல்லப்போறீங்களா? சரி. அதென்ன ஜபம் முடிஞ்சு உபஸ்தானம்?
ஆமாம்! காயத்ரி பத்தி தனியா விரிவா பார்க்கலாம். தேவதையை கூப்பிட்டு ஆவாஹனம் செய்தோமில்லையா? அதனால அவங்களை உத்தமே சிகரே என்ற மந்திரத்தால வழியனுப்பவும் செய்யணும்.

71. அப்புறம்?
காலையில 'மித்ரஸ்ய', மத்தியானம் 'ஆஸத்யேன', மாலை 'இமம்மே வருண' ஆகிய மந்திரங்களல மித்ரன், சூரியன், வருணன் ஆகிய தேவதைகளை உபாசிக்கிறோம். அப்புறம் திக்குகளுக்கு நமஸ்காரம். தெற்கு திசை நாயகனான யமன், மேற்கே விச்வரூபன், வடக்கே நர்மதை கிழக்கே சூரியன் ஆகியோருக்கு வந்தனம்.

72. யமனா? பயமாயிருக்கே?
என்ன பயம்? அவரை துதித்தா சாவைப் பத்தி பயப்பட மாட்டோம். எல்லோருக்கும்தான் சாவு ஒரு நாள் சர்வ நிச்சியமாக வரப்போகிறது. ஏன் பயப்படணும்? இப்படி தெரிந்தும் சாவுக்கு பயப்படாதவங்க அரிதே!

73. சரி நர்மதை எங்கே வந்தது?
நர்மதை நதிதேவதைக்கு விஷத்தை முறிக்கிற சக்தி உண்டு. அதனால பாம்பு முதலான விஷ ஜந்துக்களில் இருந்து காப்பாத்தும்படி வடக்கே இருக்கிற நர்மதையை வேண்டிக்கிறோம்.

74. ம்க்கும். காசியிலே இருக்கிறவங்களுக்கு அது மேற்கேதானே இருக்கு? அவங்களும் வடக்கே பாத்து வேண்டிப்பாங்களா? (மாட்டிக்கிட்டாரு!!!)
தமிழ்நாட்டில் பல ஜாதி அந்தணர்கள் நர்மதை கரையிலேந்து சங்கரர் கூப்பிட்டு வந்ததாலே இங்கே வந்தாங்க. அவங்தான் இப்படி வேண்டிப்பாங்க. மற்ற இடங்களிலே இது பழக்கம் இல்லை. (பொழச்சுட்டேன்!)

75.ம்ம்ம் இதெல்லாம் முடிஞ்ச பிறகு?
சூரியனுக்கு வந்தனம் செய்து அபிவாதனம் செய்யணும். பிறகு எல்லா கர்மாக்களையும் செய்து முடிச்ச பிறகு செய்கிற 'காயேனவாசா' ...

76.அது என்ன?
'உடம்பாலும் வார்த்தைகளாலும் மனசாலும் புலன்களாலும் இயற்கையா நமக்கு வாய்ச்சு இருக்கிற ஸ்வபாவத்தாலும் எதெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம், நாராயணா உனக்கு அர்ப்பணம்' ன்னு சிறிது ஜலம் எடுத்து விடுவது பழக்கம்.
கடைசியா சிறிது ஜலத்தால் ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷணம் செய்து அதை 'அத்யானோ' என்ற மந்திரத்தால் நெற்றிக்கு இட வேண்டும். மந்திரார்த்தம் "இந்த கர்மாவால் மகிழ்ச்சியடைந்த சூரியனே, எங்களுக்கு மகன், பேரன் முதலிய பாக்கியத்தை தாரும். கெட்ட கனவுகளால் ஏற்படும் கெடுதலை அகற்றும். எல்லா பாபங்களையும் நீக்கி க்ஷேமத்தை தாரும்".


Wednesday, June 1, 2011

வேட்டை நாய்...



ஒருவன் புதிதாக வேட்டை நாய் வாங்கினான். அடுத்தநாள் அதை அழைத்துக்கொண்டு வாத்து (கீஸ்) வேட்டையாட போனான். முதலில் அவன் சுட்ட பறவை ஏரி நீரில் விழுந்தது. நாய் சாவதானமாக நீர் மீது நடந்துபோய் வாத்தை கொண்டு வந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து ஒரு வாத்தை சுட்டான்; அதுவும் ஏரியில் விழ மீண்டும் நாய் நீர் மீது நடந்து போய் வாத்தை கொண்டு வந்தது.

வெகு ஆச்சரியத்தோடு வீடு திரும்பினான். இதை சொன்னால் யார் நம்புவார்கள்? அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரரை கூட அழைத்துப்போனான். அன்றும் வாத்துகளை இருவரும் மாற்றி மாற்றி சுட சுட, நாய் நீர் மீது நடந்து போய் வாத்துகளை கொண்டு வந்தது.

அண்டை வீட்டுக்காரர் முகத்தில் சலனம் ஒன்றுமே காணவில்லை!

"ஏதேனும் வித்தியாசமா பாத்தீங்களா?”

"ம்ம்ம் .... ஒண்ணுமே இல்லையே!”

ஒரு நிமிடம் கழித்து "ஆமாம், ஒரே ஒரு விஷயம் வித்தியாசமா இருக்கு!”

"என்ன அது?”

“நாய்க்கு நீந்த தெரியலை!”

அதிசயங்கள் நடக்கவில்லை என்று இல்லை: அவை எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன், வாழ்கையே அதிசயம்தான். நாம் கிடைத்ததை சாவதானமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அதை உடனே உணரலாம்!