Pages

Friday, May 6, 2011

அன்பு




வியாபாரி ஒருவன் வறுமையில் இருந்தான்.  நான்கு பெண் குழந்தைகள் வேறு. செல்வம் சேர வேண்டும் என்று லக்ஷ்மியை வேண்டிக்கொண்டு இருந்தான். எத்தனையோ பூஜைகள், சடங்குகளைச்செய்தும் அவன் வேண்டிய செல்வம் கிடைக்கவில்லை. குறைந்த பொருள் வசதியிலேயே எப்படியோ முயன்று பெண்களை திருமணம் செய்து கொடுத்தான். மனைவியும் போய் சேர்ந்தாள். தனித்து விடப்பட்டான். பாசங்கள் நீங்கின. மனம் தவம் குறித்து திரும்பியது. குருவைத்தேடி அலைந்து கண்டு பிடித்து உபதேசம் பெற்றான். மன ஒருமைப்பாட்டை முயன்று கடைப்பிடித்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்தான்.

ஒரு நாள் ஜபம் செய்து கொண்டு இருக்கும்போது லக்ஷ்மி அவன் எதிரே தோன்றினாள்.

"குழந்தாய்! என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன்!"

வியாபாரி சிரித்தான். "ஒரே விஷயம்தான் தெரிய வேண்டும். வேறு ஒன்றுமில்லை."
"கேள்!"
"எவ்வளவு பூஜைகள் செய்து உன்னை வருந்தி வருந்தி அழைத்தேன்? நீயோ வரவே இல்லை. வைராக்கியம் வந்துவிட்ட இப்போது எனக்கு வேண்டியது ஏதுமில்லை. நீ தரக்கூடியது ஏதுமில்லை! இது என்ன விசித்திரம்?"
"குழந்தாய், நீ நிறைய பூஜைகள் செய்தது உண்மையே. அதில் எனக்கு பரம திருப்தியே! உன் மீது உண்டான அன்பினால்தான் அப்போது உன் முன் வரவில்லை!"

2 comments:

Geetha Sambasivam said...

உன் மீது உண்டான அன்பினால்தான் அப்போது உன் முன் வரவில்லை!//

பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிடுவான் என்றா???????அவனுக்கு இதுதான் விதி என்றிருந்தால் எத்தனை செல்வம் வந்தாலும் மாறி இருக்க மாட்டான் என்றே தோன்றுகிறது.

திவாண்ணா said...

ஆமாம், இது உன் விதி அதனால வரலைன்னும் சொல்லியிருக்கலாம். அது ட்ரை பதிலா இருக்கும்! :-)) ஆனா இது நல்லா இருக்கில்லே?