Pages

Tuesday, May 17, 2011

சந்த்யாவந்தனம் -5






34. ப்ராணாயாமம் பத்தி சொல்லலையே!
பின்னால் விவரமாக பார்க்கலாம். இப்போதைக்கு இடது மூக்கு துவாரத்தால் இழுத்து நிறுத்தி பின் வலது பக்கத்தால் விட வேண்டும் என்று தெரிந்தால் போதும். ஒவ்வொரு கர்மாவுக்கும் முன்னால் அதை செய்ய ஒரு சக்தியை சேர்த்துக்கொள்ளவே இதை செய்கிறோம்.

35. ம்ம்ம் அப்புறம் தலையில தண்ணி தெளிச்சுக்கணும்.
ஆமாம். உத்தரணியில நீர் எடுத்து மந்திரம் சொல்லி ... இதுக்கு மார்ஜனம் ன்னு பேர். ஒன்பது வாக்கியங்கள் இந்த ஆபோஹிஷ்டா என்கிற மந்திரத்துல. எட்டாவது மந்திரத்தால் கால்களில தெளிக்கணும். மற்றது தலையில. மந்திரம் சொல்லி இப்படி செய்தால் அந்த தண்ணீர் திவலைகள் நம் உடலையும் மனசையும் சுத்தம் செய்யும்.

36. இந்த மந்திரத்துக்கு என்ன பொருள்? ஏன் செய்யணும்?
இது ஜல தேவதையை உத்தேசித்து சொல்லப்படுகிறது. ஜலம்தான் உலகத்துக்கு சுகத்தை தர வேண்டி முதலில் படைக்கப்பட்டது. நமக்கு குளிக்கவும், குடிக்கவும் பயனாகிறது. பயிர்களை வளரச்செய்து நமக்கு உணவு அளிக்கிறது. குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும் அன்னை மன்னித்து தனக்குக் கூட இல்லாமல் சத்தான உணவை அவர்களுக்கு கொடுப்பார்கள் இல்லையா? அது போல ஜல தேவதையும் நமக்கு அன்னம் முதலியவற்றை கொடுத்து காப்பாற்றட்டும். ஸ்தூலமான உடம்புக்கு அன்னம் தருவது போல சூக்குமமான உடலுக்கும் ஞானமாகிய உணவை கொடுக்கட்டும். உங்களது அருளால் நான் பேரின்பத்தை அடைய வேண்டும். இந்த மண்ணுலக வாழ்கைக்கு ஜலம் அவசியம். அதே போல மறு உலக வாழ்க்கைக்கும் ரஸத்தை கொடுக்கட்டும்.

37. சரி அப்புறம் உள்ளங்கையில் நீர் எடுத்து மந்திரம் சொல்லி குடிக்கணும். கரெக்டா?
சரிதான். ஸூர்யச்ச, ஆப: புனந்து, அக்னிச்ச ஆகியவை இந்த மந்திரங்கள். ஸுர்யன், ஜலம், அக்னி, கோபமும் கோபத்துக்கான தேவதைகளும் - இவற்றை வேண்டி நம் பாபங்களை தொலைக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் உடல் உறுப்புகளால் தெரிந்தும் தெரியாமலும் பல பாப செயல்களை செய்கிறோம். இவை நம் மனசை கெடுத்து பகவானை த்யானம் செய்ய முடியாமலோ அல்லது முக்திக்கான செயல்களில ஈடுபட முடியாமலோ செய்கின்றன. ஆகவே இவற்றை நீக்கிக்கொள்கிறோம்.

மத்தியானத்தில் ஆப: புனந்து என்ற மந்திரத்தால் உண்ணக்கூடாததை உண்டது, சேரக்கூடாதவருடன் சேர்ந்தது, அசத்துக்களிடம் பணம் வாங்கியது ஆகிய பாபங்களை நீக்கிக்கொள்கிறோம்.

38. சரி அப்புறம்?
திருப்பியும் மார்ஜனம். இப்போது கூட சில மந்திரங்கள் உண்டு. 'ததிக்ராவ' என்ற தேவதையை மந்திரம் சொல்லி துதிக்கிறோம். இது நம் வாயை நாற்றம் இல்லாமல் வாசனையுடன் கூடியதாக்கும். ஆந்திரர் 'ஹிரண்ய வர்ணா' என்ற 4 மந்திரங்களை கூடுதலாக சொல்வர். அப்புறம் காயத்ரியால் அர்க்கியம் விடுவது.

39. அர்க்கியம் விட சரியான செய்முறை என்ன? உட்கார்ந்து கொண்டா நின்று கொண்டா?
காலையும் மாத்தியானிகத்திலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்கியம் விட வேண்டும். நின்று கொண்டு செய்யும் போது கிழக்கே பார்த்துக்கொண்டு குதிகால்களை கொஞ்சம் உயர்த்தி மாட்டுக்கொம்பு உயரத்தில் கைகளால் நீரை விட்டு எறிய வேண்டும்.

40. என்ன! விட்டு எறியணுமா?
ஆமாம். வேதத்தில் 'ஆப ஊர்த்வம் விக்ஷிபந்தி' என்றே சொல்லி இருக்கிறது.

41. எந்த இடத்தில் இந்த ஜலத்தை விட்டு எறிவது?
நீர் நிலையில் செய்வதானால் நீரிலேயே விட்டு எறியலாம். இல்லை நிலத்தில் செய்வதானால் கூடுமான வரை சுத்தமான இடமாக பார்த்து செய்யலாம். தோட்டமோ இல்லை ஃப்லாட்டில் இருப்போர் மொட்டை மாடியிலோ செய்ய சரியாக இருக்கும்.

42. இது இரண்டுமே சரியாக அமையா விட்டால்?
வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் விட்டுக்கொண்டு பின்னால் ஏதேனும் செடி மரம் போன்றவற்றில் சேர்த்துவிடலாம். இப்படியே பழக்கமாகிவிட்டதால்தான் நின்றுக்கொண்டு வீசி எறியும் பழக்கம் விட்டுப்போனது.


2 comments:

SRINIVAS GOPALAN said...

37ம் பத்தி பெயர் ப்ராச்னம் இல்லையா. முந்திய சந்த்யாவந்தனதிற்குப் பின் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை முறித்து கொள்கிறோம்.

திவாண்ணா said...

ப்ராசனம் சரிதான்.