Pages

Wednesday, January 12, 2011

மரணம் எப்போது என அறிதல்...



सोपक्रमं निरुपक्रञ्च कर्म तत्संयमादपरान्तज्ञानमरिष्टेभ्यो वा ।।22।।
ஸோபக்ரமம்° நிருபக்ரஞ்ச கர்ம தத்ஸம்°யமாத³பராந்தஜ்ஞாநமரிஷ்டேப்⁴யோ வா || 22||

ஸோபக்ரமம்° = இப்போது பலன் தரும் நிலையில் உள்ளது; நிருபக்ரஞ்ச = வேறு காலத்தில்தான் பலன் கொடுக்கும், இப்போது கொடுக்காதது; கர்ம (என) கர்மம் (இரு வகையாகும்) தத் ஸம்°யமாத்³= அதில் ஸம்யமம் செய்வதில் இருந்து; அரிஷ்டேப்⁴யோ வா = (அல்லது) தோன்றும் அசுபக்குறிகளில் இருந்தோ; அபராந்த ஜ்ஞாநம் =மரணம் எப்போது என்ற ஞானம் ஏற்படுகிறது.


வெய்யிலில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக உள்ள கர்மா உடனடியாக பலனை கொடுத்துவிடும். மற்றபடி காற்று, வெய்யில் இல்லாத இடத்தில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக இல்லாத கர்மா உடனடியாக பலனை கொடுக்க முடியாது. அது அதன் காலக்கிரமத்தில்தான் கொடுக்கும். அது வரை அது சித்தத்தில் ஸம்ஸ்கார ரூபமாகவே இருக்கும். இந்த கர்மாக்கள் எப்போது பலன் தரும் என்பதை அறிவதன் மூலம் ஒருவன் தன் ஆயுளின் முடிவு காலத்தை அறிந்துகொள்ளலாம்.

சோப கர்மத்தை அறியும் யோகி அதை சீக்கிரம் அனுபவித்து முடிக்க முயற்சி செய்வான். அப்போதுதானே கணக்கு தீர்ந்து பூஜ்யத்துக்கு வந்து மோக்ஷம் கிடைக்கும்? ஏதேனும் கர்மம் அனுபவிக்க பாக்கி இருக்கும் வரை மறு பிறவி இருந்து கொண்டே இருக்கும். அதனால் யோகி பல உடல்களை எடுத்து அனுபவித்து தீர்த்துவிடுவான். ஒரே உடலால் அத்தனையும் அனுபவிக்க உடல் தாக்குப்பிடிக்காது.

யோக பயிற்சி இல்லாதவரும் தன் கடைசி காலம் நெருங்குவதை தெரிந்துகொள்ளலாம்.
கைகளால் காதுகளைப் பொத்திக்கொள்ள பிராணன்களின் சப்தம் கேட்காமை; நிமித்தமின்றி யமதூதர் போன்றோரை காண்பது; நிமித்தமின்றி சொர்கம் போன்றவற்றை காண்பது - இவை அசுப குறிகளாகும்.

மேலும் வைத்ய ரத்னாகரம் கூறுகிறது:
தனது நாக்கையும் மூக்கின் நுனியையும் இரண்டு புருவங்களின் மத்தியையும் ஆயுளின் இறுதியை எட்டியவர் காண்பதில்லை. அதாவது மரணம் சமீபித்துவிட்டால் இவற்றை காண முடியாது.
திடீரென பெருத்தும் இளைத்தும் திடீரென வேறு மாதிரி மாறி விடுபவர்களும் 6 மாதங்களுக்குள் இறப்பர்.
நல்ல குளிரால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், நல்ல சரீர புஷ்டி இருப்பினும் எந்த மனிதனின் நெற்றியில் பனி போன்ற வியர்வை உண்டாகிக் கழுத்துக் குழியில் தங்கி அங்கிருந்து மார்பு வரை வழிந்தோடுகிறதோ அவன் விரைவில் இறப்பான்.
இரவில் எரிச்சலும் பகலில் குளிரும் கண்டத்தில் சிலேஷ்மமும் (சளி) நாக்கில் வறட்சியும், கண்களில் குங்குமம் போன்ற சிவப்பும் நாக்கு கருமையடைந்து எப்போதும் நீர் வடிதலும் நரம்புகள் எப்போதும் ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் இருப்பதும் மரண காலம் நெருங்கிவிட்டதை குறிக்கும்.

2 comments:

Geetha Sambasivam said...

எந்த மனிதனின் நெற்றியில் பனி போன்ற வியர்வை உண்டாகிக் கழுத்துக் குழியில் தங்கி அங்கிருந்து மார்பு வரை வழிந்தோடுகிறதோ அவன் விரைவில் இறப்பான்//

???????

திவாண்ணா said...

என்ன சந்தேகம்? ஜுரம் இருக்கும்போது வியர்ப்பது சாதாரணம்தான். ஆனால் இப்படி நெற்றி வியர்வை உண்டாகி ஓடி கழுத்தில் இரண்டு க்லாவிகில் நடுவே இருக்கிற நெஞ்சுக்குழியில் தங்கி மேலும் ஓடி மார்புக்கு போனால் அவன் இறப்பான் என்கிறார்கள்.