Pages

Friday, July 9, 2010

அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்



அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்:

நாம பார்க்கப்போகிறது  தியரி மட்டுமே. இது யோகத்துக்கு ஒரு கிராஷ் கோர்ஸ் இல்லை. விடாமுயற்சி உள்ளவருக்கே இது பயனாகும். பற்றின்மையும் அப்பியாசமும் மிக அவசியம். நமக்கு இவற்றை அடையவே பெரு முயற்சி வேண்டும்.

படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும். கலைச்சொற்களை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. சாதாரணமாக மற்ற இடங்களில் வரும் பொருள் இங்கே இல்லாமல் போகலாம். யோக சாஸ்திரத்தின் அகராதி தனியேதான். குழம்ப வேண்டாம்.

 இதை பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை. தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவஸ்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது என்பதால்தான் தைரியமாக இதைப் பதிப்பிகிறேன். சுலபமாக சித்தத்தை ஒருமுகப்படுத்து என்று சொல்லிவிட்டு போய்விடுவார். சித்தம்ன்னா என்ன, ஒருமுகப்படுத்துவதுன்னா என்ன, எப்படி செய்வது என்று சொல்ல குருதான் வர வேண்டும். படித்து புரிய முடியாதென்றால் ஏன் இதை பதிக்கிறேன் எனில் ஏதோ ஒரு
தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும்.

முதலில் வருவது சமாதி யோகம். இதில் யோகம் என்பது என்ன என்பதைப்பற்றி சிறிது விளக்கி பின் வெவ்வேறு வகையான சமாதிகளைப்பற்றி சொல்லப்படுகிறது. அடுத்து வரும் சாதனா பாதத்தில் எப்படி சமாதி அடையப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விபூதி பாதத்தில் அடையப்படும் சித்திகள் குறித்தும், கடைசியாக கைவல்லிய பாதத்தில்
கைவல்லியத்தை அடைவது குறித்தும் சொல்லப்படுகிறது.

சித்திகள் குறித்து ஒரு தவறான அபிப்பிராயமே பொதுவாக காணப்படுகிறது. அவை மனதானது வெவ்வேறு இடங்களில் நிலை பெறும்போது தானாகவே தோன்றுவன. துணை உற்பத்தி (by products) அல்லது பக்க விளைவுகள் (side effects) எனலாம். ஆனால் இவை சாதகனுக்கு முன்னேற்றத்தை காட்டும் போது இலக்கை விட்டு விலகவும் ஹேதுவாகலாம். சித்திகளின் மகத்துவத்தில் மயங்கும் சாதகன் இலக்கான கைவல்லியத்தை அடைய தடையுண்டாகும். ஆசைகளை விடும்போதுதான் மனம் நிலை பெறுகிறது என்றாலும் ஆசைகள் மீண்டும் முளைத்து சாதகன் நிலை கீழிறங்கக்கூடும்.

 மனிதனின் யத்னத்தில் சமாதி கிட்டுவதை விட ஈஸ்வர பக்தியால் இன்னும் விரைவில் நல்ல சமாதி கிட்டுகிறது என்பது நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒன்று...

3 comments:

Geetha Sambasivam said...

சித்திகளின் மகத்துவத்தில் மயங்கும் சாதகன் இலக்கான கைவல்லியத்தை அடைய தடையுண்டாகும்.//

இது தான் ரொம்ப முக்கியம் யோகத்தில். சித்துகள் கை கூடி வருதுனு பிரயோகம் பண்ண ஆரம்பிச்சா அவ்வளவுதான், போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போக முடியாது. எளிமையாய் இருக்கு. காத்திருக்கேன், ஆவலோடு.

நிகழ்காலத்தில்... said...

சித்துகளின் மகத்துவத்தில் மயங்கிவிடும்போதுதான் உண்மையானவன் போலியாக மாற்றம் பெற்றுவிடுகிறான் சமுதாயத்தின் பார்வையில்..

அடுத்து பகுதிக்கு காத்திருக்கிறேன்..

திவாண்ணா said...

வரவுக்கு நன்றி கீ அக்கா & "நிகழ்காலத்தில்.."