Pages

Tuesday, February 23, 2010

நியாஸம் -தொடர்ச்சி2




இது மாதிரி ஆகிவிடக்கூடாது!
சாதாரணமாக மனித மனசு கொஞ்சம் மலினமானது. அது கொஞ்சம் ஜாக்கிரதை குறைவாக இருந்தாலும் பலவித ஆசைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக பலவித கோப தாப பொறாமை முதலியதற்கும் இடம் கொடுத்துவிடும். அதைதான் ராமக்ருஷ்ணர் வேடிக்கையாக சொன்னார் என்று நினைக்கிறேன். எப்படி கங்கை குளியலால் பாபங்கள் விலகுமோ அப்படி ஜபத்தினால் மனசும் கொஞ்சம் தூய்மையாகும். இதை வளர்த்துகிட்டே போகணும். பழைய படி மலின எண்ணங்களுக்கு இடம் கொடுக்ககூடாது. அதுக்கு முயற்சியாவது செய்ய வேணும்.

இது சக்தி பஞ்சாக்ஷரீ சமாசாரம். இதைபோலவே மத்ததுக்கும் உண்டு. பீஜாக்ஷரங்கள் மாறும். த்யான ஸ்லோகம் மாறும். அடிப்படை ஒண்ணேதான்.
நியாஸம் கூட மந்திரத்தையே மூணாகவோ ஆறாகவோ பிரிச்சு பயன்படுத்தறதும் உண்டு.

நாம ஜபத்துக்கு இப்படி ஒரு நியமமும் இல்லை. ஆசமனம் பண்ணி உட்கார்ந்து மனசில இஷ்ட தேவதையை த்யானம் பண்ணி ஜபம் ஆரம்பிக்க வேண்டியதுதான். இந்த நாம ஜபத்திலே ஒரு சௌகரியம் என்னன்னா இதை அப்புறமும் நிறுத்தவே தேவையில்லை. நினைவு வரும்போதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்.
நாம ஜபமோ க்ரம ஜபமோ ஏதானாலும் மனசு அதிலே எவ்வளவு குவிப்போட ஈடுபடும் என்கிறதை பொறுத்துதான் பலன். அதனால இதுவா அதுவா என்கிற கேள்வியெல்லாம் தேவையில்லை. இருந்தாலும் க்ரம ஜபம் குரு மூலமா பெற்றவங்களுக்கு அதை விட்டுவிட்டு நாம ஜபத்திலே இறங்கறதுலே அவ்வளவு விசேஷம் இல்லை. சேர்த்து செய்வதிலே தப்பு இல்லை.
ஜபம் முடிஞ்சாச்சா? அடுத்து சூரியன் உதிக்கப்போகுது. சூரிய உபாசனைக்கு தயாராகலாம்.

Monday, February 22, 2010

நியாஸம் -தொடர்ச்சி




கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.
உதாரணம் சொல்ல கொஞ்சம் தயக்கம்தான். இருந்தாலும் இது முக்கியம் என்பதால் சொல்லுவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மந்திரங்கள் குரு மூலமாகவே உபதேசம் பெற வேணும். அப்படி உபதேசம் பெறும்போது சூக்ஷுமமான ஒரு விஷயமும் பரிமாறிக்கப்படும். . அது இன்னும் சக்தி உடையதா இருக்கும். அதனால் மந்திரம் இங்கே சொல்லப்படாது.
சக்தி பஞ்சாக்ஷரீ ஐ எடுத்துக்கலாம்.
இப்படி ஆரம்பிப்போம்.

அஸ்ய ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய
வாமதேவ ரிஷி:
அனுஷ்டுப் ச2ந்த:
சாம்ப3சதா3ஸி2வோ தே3வதா
--
ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்திரத்துக்கு வாமதேவ ரிஷி: இந்த ரிஷிதான் இந்த மந்திரத்தை கண்டு உலகிற்கு கொடுத்தார். இந்த மந்திரம் பங்தி ச்சந்தஸில் அமைந்துள்ளது. இந்த மந்திரத்துக்கு தேவதை சாம்பசதாஸி2வன்.
ரிஷி புத்தி சம்பந்தப்பட்டதால் அதை சொல்லும்போது தலையை தொடுகிறோம். ச்சந்தஸ் என்பது ஒலியுடன் சம்பந்தப்பட்டதால் வாயை தொட வேண்டும். தேவதையை ஹ்ருதயத்தில் ஸ்தாபிப்பதால் அங்கே தொட வேண்டும்.
-
ஹ்ராம் பீஜம். ஹ்ரீம் சக்தி: ஹ்ரூம் கீலகம்.
சாம்ப சதாசிவ ப்ரஸாத சித்த்யர்த்தே ஜபே வினியோக:
பீஜம் வலது தோள்; சக்தி இடது தோள்; கீலகம் நடு மார்பு/ தொப்புள்; இந்த இடங்களில் தொட வேண்டும். வினியோகஹ என்னும் போது உள்ளங்கைகளை பக்கத்து பக்கத்தில் நீட்டி வைத்து இருந்து மந்திரம் சொல்லி விரல் நுனிகள் ஹ்ருதயத்தை நோக்கி சுழற்றி திருப்ப வேண்டும். (சில சம்பிரதாய வித்தியாசங்கள் உண்டு)
ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

இவற்றைச் சொல்லி கட்டை விரலில் ஆரம்பித்து சின்ன விரல் வரை - விரல் கையில் சேருமிடத்தில் இருந்து நுனி வரை தடவிக்கொடுக்க வேண்டும். எப்படி என்பதை முன்னேயே பார்த்தோம்.
ஹ்ர: கலதல கரப்ருஷ்டாப்யாம் நம:
இதைச்சொல்லி கைகளை உள்ளும் புறமும் மற்ற கையால் துடைக்க வேண்டும்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா.
ஹ்ரூம் ஸி2காயை வஷட்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.
--
ஹ்ராம் ஹ்ருதயாய நம: - ஐந்து விரல்களாலும் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா. - வலது கை நடு விரல் மோதிர விரலால் தலை உச்சியையும்;
ஹ்ரூம் ஸி2காயை வஷட். - கட்டை விரலால் சிகையையும் தொட வேண்டும்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.. . -கைகளை மறித்து தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .- நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும்.
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.- சுட்டு விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும்.

பூ4ர் பு4வஸுவரோம் இதி திக்பந்த: :
தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.

இதுவே ஜபம் முடிந்த பின் செய்யும்போது பூ4ர் பு4வஸுவரோம் இதி விமோக: என்றாகும். சுற்றுவதும் இடமாக ஆகும். கட்டை அவிழ்த்து விடுகிறோம் இல்லையா?

அடுத்து த்யான ஸ்லோகம்:
மூலே கல்பத்3ருமஸ்ய த்3ருத கனகநி4பம் சாரு பத்3மாஸனஸ்த2ம்
வாமாங்காரூட3 கௌ3ரி நிபி3ட குசப4ராபோ4க3 கா3டோப கூ3ட3ம்
நானாலங்கார காந்தம் வர பரசு2 ம்ருகாபீ4தி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே3 பாலேந்து3 மௌலிம் க3ஜ வத3ன கு3ஹாஸ்லிஷ்2ட பார்ஸ்2வம் மஹேஷம்
--
பொருள்: கற்பக விருக்ஷத்தின் அடியில் பொன் போன்ற மேனியுடன் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவரும், இடது புறம் மடியில் அமர்ந்திருக்கும் கௌரியின் மார்பை இறுகத்தழுவி இருப்பவரும், பலவிதமான அலங்காரங்களுடன் பிரகாசிப்பவரும், வரம், பரசு, மான், அபயம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவரும், முக்கண்ணரும், சிரசில் இளம் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கணபதியும் குஹனும் இரு புறமும் சேர்ந்திருக்கப்பெற்றவரும் ஆகிய மஹேஸ்வரனை வந்தனம் செய்கிறேன்.

லம் ப்ருத்வியாத்மனே க3ந்தா3ந் தா4ரயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பைஹி பூஜையாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்3ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் த3ர்ஸ2யாமி
வம் அம்ருதாத்மனே மஹா நைவேத்யம் நிவேத3யாமி
ஸம் ஸர்வாத்மனே ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.

இதுக்கு அப்புறம் ஜபம். முடிஞ்சு திருப்பியும் அங்க ந்யாஸம் (வித்தியாசம் சொல்லி இருக்கேன்), த்யானம், பஞ்ச பூஜை.
முடிஞ்சது. ஆசமனம் செய்து விட்டு இந்த உலக வியவகாரங்களுக்கு திரும்பலாம்.

உலக வியவகாரங்கள்ன்னதும் ஒரு கதை ஞாபகம் வருது.
ராம க்ருஷ்ணரை ஒத்தர் கேட்டாராம். என் ஸ்வாமி? கங்கையிலே குளிச்சா எல்லா பாவமும் போயிடும் இல்லையா? ஆனா இங்கேயே வசிக்கிறவங்க அப்படி ஒண்ணும் வித்தியாசமா இருக்கிறதா தெரியலையே?
பரம ஹம்ஸர் வேடிக்கையா பதில் சொன்னார்.
உண்மைதான்பா! கங்கைகிட்டே போகும்போதே காத்திலே கங்கை தண்ணி துளிகள் சேர்ந்து வந்து பாவம்கள் குளிக்க போறவரைவிட்டு கிளம்பிடும். எங்கே போகும்? அக்கம் பக்கம் இருக்கிற செடி கொடிகள் மரங்களிலே தங்கும். ஆசாமி கங்கைலே ஜம்முன்னு குளிச்சுட்டு வருவார். அது வரை நல்லா இருக்கும். கரைக்கு வந்து துணி உடுத்திகிட்டு வீட்டுக்கு திரும்பும்போது மிட்டாய் கடையை பார்த்தவுடனே நாக்கிலே ஜலம் ஊறும். அவரை விட்டு போய் கரையிலே காத்துகிட்டு இருக்கிற பாபங்கள் அப்பாடான்னு திருப்பியும் அவங்க மேலே வந்து உக்காந்துடும்!

இது மாதிரி ஆகிவிடக்கூடாது!

விசார சங்கிரஹம் - 18




27.யோகாஷ்டாங்கங்க ளெவை?
இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி யென்பனவாம். இவற்றில்
(1) இயமம்: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரமசரியம், அபரிகிரகமாதிய ஒழுக்கமுடைமையாம்.

(2) நியமம்: சௌசம், சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈச்வர பணிதானமாகிய ஒழுக்கமுடைமையாம்.

மோக்ஷாதிகாரிக்குரிய சர்வ சன்மார்க்கங்களின் ப்ராப்பதியே இயம நியமங்களின் தாத்பரியமாம். இவைகளைப்பற்றி விரிவாகயறிய வேண்டின் யோக சூத்ரம், ஹடயோக தீபிகை முதலிய நூல்களிற் காண்க.

(3) ஆசனம்: ஆசன பேதங்கள் 84 வகையாகும். அவற்றில் சிம்ஹம், பத்ரம், பத்மம், சித்தம் ஆகிய விந்நான்குமே சிரேஷ்டமென்றும் இவற்றிலும் சித்தாசனமே மிக சிரேஷ்டமென்றும் யோகசாஸ்திரங்கள் கூறுகின்றன.

(4) ப்ராணாயாமம்: சுருதிகளிற் கூறியுள்ள மாத்திரைக் கணக்கின்படி ப்ராணனை வெளிவிடுவது இரேசக மென்றும் உட்கொள்வது பூரகமென்றும் ஹிருதயத்தில் நிறுத்துவது கும்பகமென்றும் சொல்லப்படும். மாத்திரை யளவுகளைப் பற்றிச் சில சாஸ்திரங்களில் இரேசக பூரகங்களுக்கு சமமும் கும்பகத்திற்கு இரண்டு மடங்கும்; சில சாஸ்திரங்களில் இரேசகத்தைப்போல் பூரகத்திற்கு இரண்டு பங்கும் கும்பகத்திற்கு நான்கு பங்குமென சொல்லப்பட்டிருக்கிறது. மாத்திரை யென்பது காயத்ரி மந்திரத்தை ஒரு முறை யுச்சரிக்கும் காலமாக சொல்லப்படுகிறது. இவ்வித இரேசக பூரக கும்பகங்களடங்கிய ப்ராணாயாமத்தை தன்னாலியன்ற அளவு மிருதுவாகவும், கிரமமாகவும், நாடோறு மப்யசித்து வரின் சரீரத்தில் ஒரு வித இளைப்புடன், சலனமற்று ஆனந்தமாயிருத்தற்கான இச்சை மனதிலுண்டாகும். இதன் பின் ப்ரத்யாகாரம் செய்ய வேண்டும்.

(5)ப்ரத்யாகாரம்: வெளியிலுள்ள நாம ரூபங்களிற் செல்லவொட்டாமல் மனதை ஒருவழிப்படுத்தலாம். இதுகாறும் ஓடியுழன்ற மனது இப்போது ஒருவழிப்பட்டிருத்த லருமை யாதலின் இதற்கு (1) மனோமாத்திர ப்ரணவ த்யானம் (2) புருவ மத்திய நாட்டம் (3) நாசிகாக்ர திருஷ்டி (4) நாதாநுசந்தானம் ஆகியவை சகாயமாம். இப்படி யொருமைப்பட்ட மனம் ஓரிடமேயிருக்க யோக்கிய மானதாகும். இதன்பின் தாரணை செய்ய வேண்டும்.

(6) தாரணை: மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்ம ரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம். இவ்விரண்டிடங்களிலுமுள்ள அஷ்டதள பத்மங்களின் மத்தியில் ஆத்ம தேவதா ரூப ப்ரஹ்ம சொரூபமே தீப ஜ்வாலை போலும் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதாகப் பாவித்து மனதை அதில் ஸ்திரமாய் நிறுத்துவதாம். இதன்பின் தியானம் செய்ய வேண்டும்.

(7) தியானம்: முற்கூறிய அத்தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லையென்று ஸோஹம் பாவனையால் தியானிப்பதாம். இதிலும் எங்குமுள்ள ப்ரஹ்ம சொரூபமே ஆன்ம ரூபமாய் ஹ்ருதயத்தில் புத்தி சாக்ஷியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்னும் சுருதியின் படி அங்ஙனனமாயிருக்கும் நானார் என்னும் விசாரத்தால் விசாரிக்கில் ஹ்ருதய கமலத்தில் ஆன்ம தேவதை "அஹம் அஹம்" எனத் தான்றானே ஜ்வலித்துக்கொண்டிருப்பது விளங்கும். இவ்வநுசந்தானரூப தியானமே சிரேஷ்டமாகும்.
ப்ரஹ்மரந்திரத்திலுள்ளது சஹஸ்ர (1000) தள பத்மமானாலும் அதுவும் 125 சிறுதளங்களுடைய அஷ்டதள பத்ம மேயாம்.

(8) சமாதி:- மேற்கூறிய தியானத்தின் பரிபாகத்தால் தான் இன்னானென்றும் இன்னது செய்கிறோமென்றும் தோன்றாமல் மனது தியான ரூபத்திலேயே லயித்த அல்லது அஹம் அஹம் என்னும் ஸ்புரிப்பு அடங்கிய (சூக்ஷ்மமான) ஸ்திதியே சமாதி யென்பதாம். இதில் நித்திரை மாத்திரம் வராமல் பாதுகாத்துக்கொண்டு தினந்தோறும் விடாமல் கிரமமாக அநுசந்தித்து வந்தால் ஈச்வரன் கூடிய சீக்கிரத்தில் மனோவிசிராந்திரூப சிரேஷ்டமான கதியை அநுகிரஹிப்பார்.

Friday, February 19, 2010

ந்யாஸம்




நியாஸம்
முன்னே தாந்த்ரிகத்தில் ன்னு சொன்னேன் இல்லையா? யோசித்ததில அது அவ்வளவு சரியில்லைன்னு தோணுது. தாந்த்ரீகத்தில் சேராத மந்திரங்களுக்கும் உண்டு. ஏன் வேத மந்திரமான ருத்ரத்துக்கே லகு ந்யாஸம் மஹா ந்யாஸம்ன்னு உண்டு.
ந்யாஸம் என்கிறதுக்கு ஒப்பு கொடுக்கிறதுன்னு பொருள்.
எதை ஒப்புக்கொடுக்கிறது?
நம்மையேதான்.
கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம்.
மந்திர ஜபத்திலே ஈடுபட போறப்ப வெளியிலிருந்து பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைக்கிறோம் இல்லையா? நமக்கு தெரிஞ்சு வரக்கூடிய பிரச்சினைகளை தடுக்க முயற்சி எடுக்கிறோம். கொசு விரட்டி வெச்சுக்கிறோம்; அல்லது கொசுவை கஷ்டப்படுத்த மனசில்லையானா கொசு வலைக்குள் புகுந்துக்குறோம். மின்காத்தாடியை தகுந்த வேகத்திலே வெச்சுக்கிறோம். வீட்டுல இருக்கிறவங்களை கொஞ்ச நேரம் தொந்திரவு செய்யக்கூடாதுன்னு சொல்கிறோம். இப்படி பலது.
நமக்குத் தெரியாத பாதிப்புகளும் இருக்கலாம். அதெல்லாம் கண்னுக்கு தெரியாது என்பதால சூக்ஷுமம் என்கிறோம். அதற்கும் பாதுகாப்பு செய்துக்கணும்.
எப்படின்னா..
உடம்பிலே சில முக்கிய இடங்களில் தேவதா ஸ்தாபனம் செய்து இப்படி செய்யலாம். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு நிலையிலே ஒரு இடத்திலே (ஜீவ) ஆத்மா நிலைக்குமாதலால் (இது ஒரு வகை பார்வை) அதில் நாம் ஜபம் செய்ய மந்திரத்தின் அதி தேவதையை ஸ்தாபனம் செய்வதால அதைச்சுத்தி சில வட்டங்களில் வேறு சில தேவதைகளை ஸ்தாபனம் செய்து சூக்ஷுமமா இடைஞ்சல் வராம பாதுகாப்பு செய்துக்கலாம்.
இப்படி செய்ததும் அந்தக்கரணத்துக்கும் (ம்ம்ம்ம்ம்... சரி, மனசுக்கும்ன்னு வெச்சுக்கலாம்) ஆன்மாவில நிலை பெற்ற தேவதைக்கும் இடையே வேறு ஏதும் வராது.
இப்படி செய்வதே ந்யாஸம்.
கர ந்யாஸம் என்பது ஒவ்வொரு விரலிலும் பின் கைமுழுவதும் தேவதா ஸ்தாபனம் செய்வது. விரல்கள் மிகவும் தொடு உணர்வு மிக்கவை. ஏதானாலும் விரல்களால் தொட்டு தெரிஞ்சுக்கிறோம். ஒரு பொருள் சூடா, சில்லுன்னா, வற வறன்னா, வழ வழன்னா எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது விரல்களால தடவிப்பார்த்துதான். விஞ்ஞானமும் விரல்கள் வெகு சென்சிடிவ் ன்னு ஒத்துக்குது. உடம்பு முழுதும் நரம்பு நுனிகள் விரவி இருந்தாலும் அவை விரல் நுனிகளிலே அதிக அளவிலே அடர்த்தியா இருக்கு.
ஒவ்வொரு விரலும் கையோட ஒட்டி இருக்கு இல்லையா? அங்கே ஒரு ரேகை இருக்கும். இந்த இடத்தை அடையாளம் வெச்சுப்போம்.
மந்திரங்களாலே இந்த ரேகையில் ஆரம்பித்து விரல் நுனி வரை தடவிக்கொடுக்கணும். கட்டை விரல் நுனியால் மத்த விரல்களையும் ஆள் காட்டி விரல் நுனியால் கட்டை விரலையும் இப்படி தடவிக்கொடுக்கணும்.
வலது கை விரல்களை வலது கை விரல்களாலும் இடது கை விரல்களை இடது கை விரல்களாலும் தடவிக்கொடுக்கணும். கை மாத்தி செய்வதில்லை.
அங்க ந்யாஸம் என்கிறது ஹ்ருதயம், சிரஸ், சிகை, கவசம், 3 கண்கள் இவற்றுடன் சம்பந்தப்பட்டது. வலது கை நடு 3 விரல்களால் ஹ்ருதய ஸ்தானத்தையும்; நடு, மோதிர விரல்களால் தலை உச்சியையும்; கட்டை விரலால் சிகையையும் (சிகை இல்லைன்னா என்ன செய்வது?!) மந்திரங்களால் தொட வேண்டும். கைகளை மறித்து 10 விரல்களாலும் தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும். நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும். வலது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும். பின் தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.
இதை அடுத்து த்யானம். ஒவ்வொரு தேவதைக்குமான த்யான ஸ்லோகத்தை சொல்லி அப்படி அந்த தேவதையை த்யானம் செய்ய வேண்டும். த்யானித்த தேவதைக்கு உடனே பூஜை செய்ய வேண்டும். அட என்னாப்பா? பூஜையா? முன்னேயே சொல்லக்கூடாதா? தூபம் தீபம் ன்னு ஒண்ணும் தயார் பண்ணலையேன்னு சொல்லாதீங்க. மனசை வழி நடத்தி இப்படி போன பிறகு செயல்களுக்கு அதிக இடமில்லே! மனசாலேயே பஞ்ச பூதங்களாலேயே பூஜை செய்துடலாம்.
சம்ஸ்க்ருத எழுத்து ஒவ்வொண்ணுக்கும் ஒரு தேவதை சம்பந்தம் உண்டு.
லம் என்பது ப்ருத்வீக்கு பீஜாக்ஷரம். ஹம் ஆகாசம்; யம் வாயு; ரம் அக்னி; வம் ஜலம்.
லம் என்பதால் சந்தனம்; ஹம் ஆல் புஷ்பம்; யம் ஆல் தூபம்; ரம் ஆல் தீபம்; வம் ஆல் நிவேதனம். ஸம் ஆல் கைகளை இரு புறமும் துடைத்து எல்லா உபசாரங்களும். எவ்வளொ சுளுவா ஆத்ம பூஜை முடிஞ்சுப்போச்சு!
இதன் பின் ஜபம்.
இதே போல மந்திர ஜபம் முடிந்ததும் அங்க ந்யாஸம் செய்து (அந்தந்த தேவதைகளுக்கு நன்றி சொன்னதாக வைத்துக்கொள்லலாம்!:-)) திக் பந்தத்தை இடமாக சுற்றி விடுவிக்கலாம். கர ந்யாஸம் முடிக்கும்போது செய்வதில்லை.

கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.

Thursday, February 18, 2010

ஜபம்




சரி உட்கார்ந்தாச்சு! இப்ப என்னப்பா?

ஜபம் செய்ய ஆரம்பிக்கு முன்னே சிலது மனசில வைச்சுகறது நல்லது.
நம்ம பிரச்சினைகள் எப்பவுமே நம்மோட இருக்கத்தான் இருக்கும். கொஞ்சம் காணாம போனதா நினைச்சாலும் திருப்பியும் வரத்தான் வரும். இப்ப கொசு விரட்டி போட்டு துரத்திட்டாலும் நாளை மாலை அது எல்லாமே திருப்பி வரது உறுதி!
அது போல பிரச்சினைகள் திருப்பி திருப்பி வந்துண்டேதான் இருக்கும்.
 
அதனால் இப்ப என்ன ஆச்சு? உறுதியா மனசில சொல்லிக்கணும். "பிரச்சினைகளே! நீங்க எல்லாரும் எங்கேயும் போக மாட்டீங்கன்னு தெரியும்; வந்து உங்ககிட்டே வம்பு வெச்சுக்கிறேன். இப்ப கொஞ்சம் எல்லாரும் தள்ளி நில்லுங்க. கொஞ்ச நேரம் பகவானோட இருந்துட்டு வரேன்.”
இப்படி சொல்லி எல்லத்தையும் பக்கமா தள்ளிவிட்டு அடுத்து...

வெளியிலுள்ள விஷயங்களில மனசை போகவிடாம ஒரு முகப்படுத்தணும். இவ்வளோ நாள் ஓடி ஓடி பழக்கப்பட்ட [தட்டச்சுப்பிழை "பாழாக்கப்பட்ட" ன்னு இருந்தது. திருத்தினேன். இப்ப அப்பபடியே இருந்திருக்கலாம்ன்னு தோணுது!] மனசு அவ்வளோ சுலபமா ஒருவழிப்படுமா? அதுக்கு என்ன செய்யறது? இதற்கு புருவ மத்திய நாட்டம், நாசிகாக்ர திருஷ்டி – அதாங்க மூக்கு நுனியை பாக்கிறது இதெல்லாம் உதவும். அதாவது கண்களை மூடிக்கொண்டு புருவங்களின் மத்தியோ அல்லது மூக்கின் நுனியையோ பார்க்கிறது போல "பார்வையை¨ திருப்புங்க!

வழக்கிலே மிகவும் உபயோகமானது இந்த நேரத்திலே பிராணாயாமம் செய்வது. அது பெரிய டாபிக் என்கிறதால இப்ப ஒண்ணும் எழுதலை. மேலும் சரியான நேர இடைவெளி கொடுத்து பண்னலைன்னா பிரச்சினைகள் வரும். அதனால நல்லா இதை பழகினவங்ககிட்டே தெரிஞ்சுக்கணும்.

இதை பழகலைன்னா பரவாயில்லை. பழகும் வரை நல்லா ஆழ்ந்த மூச்சு எடுத்து விடலாம். மூணு தரம் செய்தா போதும்.
ரெய்கி கத்துத்தரப்ப இப்படி கத்துத்தராங்க. இப்படி செய்யும் போது மூளையோட மின் அலைகள் ஆல்பா ஆக மாறுவதா விஞ்ஞானம் சொல்லுது. இது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும்.

ஒருமையான மனதை எங்கேயாவது வைக்கணுமே? அதுவே த்யானம்.
எந்த தேவதையை குறிச்சு ஜபம் செய்யப்போறோமோ அந்த தேவதையை சுத்தியே - தலை, முகம், கை கால் எல்லாம் இப்படி இப்படி இருக்கும்ன்னு - நினைக்கறதே த்யானம். பல ஜபங்களுக்கும் த்யான ஸ்லோகம் உண்டு. அதை தெரிஞ்சு கொண்டு அதை சொல்லும்போது கற்பனை செய்து பார்க்கலாம்.
அதுக்கு அப்புறம் ஜபம் துவக்க வேண்டியதுதான்.

பலருக்கும் ஜபம் செய்யும் போது பக்கத்திலே தள்ளிவிட்ட எண்ணங்கள் திருப்பி திருப்பி வந்து தொல்லைதரும். இது நாளடைவிலேதான் சரியாகணும். அதனால எப்போதெல்லாம் நம் மனசு வெளியே போயிடுச்சுன்னு தெரியுதோ அப்பல்லாம் திருப்பி அதை ஜபத்திலே கொண்டு வந்து விடணும். என்னடா இப்படி திருப்பி திருப்பி ஜபம் கெட்டு போய்கிட்டு இருக்கேன்னு வருத்தப்படறதுல பிரயோசனம் இல்லை. இப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. சிதறுகிற எண்ணங்களை குறைச்சு பின்னே ஒரே விஷயத்துல அதை திருப்பி விடுகிறதுதான் ஜபம்.

தாந்திரிகத்துல த்யானத்துக்கு முன்னே நியாசம் உண்டு. அது என்னன்னா...

Wednesday, February 17, 2010

விசார சங்கிரஹம் - 17




26.ப்ராண பந்தனம் மனோலயத்திற்கு மாத்திரம் சாதன மாகிறதே யன்றி மனோலயத்திற்கு சாதன மாகாமையான் மனோநாசத்திலேயே தாத்பரியமுடைய விசாரத்திற்கு இது சாதனமா வதெப்படி?
ஆன்ம சாக்ஷாத்காரம் சித்தித்தற்குரிய சாதனங்களை அஷ்டாங்க யோகம் அஷ்டாங்க ஞானமென இரு பிரிவுகளாகச் சுருதிகறிற் கூறியுள்ள படியால் அந்த யோகாஷ்டாங்களி லொன்றாகிய ப்ராணாயாமத்தினாலாவது அல்லது கேவல கும்பகத்தினாலாவது பந்தப்பட்ட மனதை அதோடு விட்டுவிடாமல் மேற்சாதனங்காகிய ப்ரத்யாகார முதலியவற்றில் கிரமமாக பழகி வரின் முடிவில் விசார பல ரூப சொரூப சாக்ஷாத்காரம் பெறுதல் திண்ணம்.

ப்ராணனை ஒடுக்கினா மனசு ஒடுங்குமே தவிர நாசமாகாது இல்லையா? அப்போ நமக்கு மனோநாசத்திற்கு எப்படி அது சாதனமாகும்?

சரிதான். வேதங்களிலே என்ன சொல்லி இருக்குன்னா ஆன்ம சாக்ஷாத்காரம் சித்திக்க உரிய சாதனங்கள் அஷ்டாங்க யோகம், அஷ்டாங்க ஞானம்னு இரண்டு பிரிவுகள். இதில அஷ்டாங்க யோகத்தில ஒண்ணு ப்ராணாயாமம். இதாலேயோ அல்லது கேவல கும்பகத்தாலேயோ அது மனோநாசத்திற்கு நேரடியா சாதனமாகாது. ஒரு பிடிப்புக்கு வந்த மனசை அப்படியே விடாம அதுக்கும் மேலே ப்ரத்யாகாரம் முதலானவற்றில முறையா பழகி வரணும். அப்படி செய்தா விசாரணையோட பலனா சொரூப சாக்ஷாத்காரம் அடைவது நிச்சயம்.


Monday, February 15, 2010

விசார சங்கிரகம் -16




21.மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களில் முதன்மையானதெது?
ப்ராண வொடுக்கமே மனவொடுக்கத்துக்குச் சாதனமாம்.

ப்ராண வாயுவை ஒடுக்குகிறதே மனசை ஒடுக்குவதில முதன்மையான சாதனமாம்.

22.ப்ராண நிரோதமுண்டாவ தெப்படி?
கேவல கும்பகத்தாலேனும் ப்ராணாயாமத்தாலேனும் ப்ராண நிரோதமுண்டாகும்.
கேவல கும்பகம் செய்வதாலேயும் அல்லது முறையான ப்ராணாயாமத்தாலேயும் ப்ராணன் ஒடுங்கும்.

23.கேவல கும்பகம் என்றாலென்ன?
இரேசக பூரகங்களின்றி ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம். இது ப்ராணோபாசனை முதலியவற்றால் சித்திக்கத்தக்கது.

24.ப்ராணாயாமம் என்றாலென்ன?
யோக சாஸ்திரங்களிற் கூறியுள்ள கணக்கின்படி இரேசக பூரக கும்பகங்கள் வாயிலாய் ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம்.

சாதாரணமா ப்ராணாயாமத்தில மூச்சை உள்ளே இழுப்பதும் தக்க வைச்சு கொள்வதும் வெளியே விடுவதும் அங்கங்கள். இதோட வழி முறைகள் யோக சாஸ்திரத்திலே சொல்லி இருக்கு. வெறும் கும்பகத்திலே மூச்சை உள்ளே எடுக்கிறதும் வெளியே விடுகிறதும் அங்கங்களா இல்லை. இது ப்ராண உபாசனையால சித்திக்கும்.

25.ப்ராண நிக்ரகம் மனோநிக்ரகத்திற்குச் சாதனமா யிருப்பதெப்படி?
ப்ராணனைப் போலவே மனமும் வாயுவின் அம்சமாக லானும் இவ்விரண்டுக்குமே சலிக்குந் தன்மை சுபாவமாக லானும் இவ்விரண்டின் பிறப்பிடமும் ஒன்றே யாகலானும் இவ்விரண்டுள் ஒன்றி னொடுக்கமே மற்றதி னொடுக்கத்திற்கு காரணமாகலானும் ப்ராண நிரோதம் மன நிரோதத்திற்குச் சாதன மென்பதிற் சந்தேகமில்லை.

அதெப்படி ப்ராணனை நிறுத்தினா மனம் நிற்கும்?
அது இரண்டுக்குமே பல விஷயங்கள் பொது. இரண்டும் வாயுவோட அம்சம்; விடாம அலைந்து கொண்டே இருக்கும். இரண்டோட பிறப்பிடமும் ஒண்ணே. அதனாலஒண்ணு ஒடுங்கினா மற்றதும் ஒடுங்கும்.

Friday, February 12, 2010

விசார சங்கிரகம்-15



20. மனோபலமின்மைக்கும் காரணம் யாது?
ஆன்ம விசாரத்திற்குத் தன்னை அதிகாரியாகச் செய்கிற சாதனங்களான தியான யோக மாதியவையில் முன்னரே வேண்டிய அளவு கிரமமாக பயின்று, அதனால் இடையறாத சஜாதீய விருத்தியின் பிரவாகத்தை சஹஜமாகப் பெற்றிருக்கும் பரிபக்குவமுள்ள மனதாயிருந்தால் இவ்விசார சிரவணஞ் செய்தவுடனே தனது எதார்த்த சொரூபத்தை அபரோக்ஷமாகத் தெரிந்து எப்போதும் தன்னிலையிலிருந்து பரம சாந்தியுடன் விளங்கும். இங்ஙனம் பரிபக்குவமடையாத மனதிற்கு விசார சிரவணத்தால் உடனே அபரோக்ஷ ஞானமும் உப சாந்தமும் வாய்ப்பது துர்லபமே; என்றாலும் சிறிது காலம் மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களிற் பழகி வந்தால் காலக்கிரமத்தில் சித்தோபசாந்தம் சித்திக்கும்.

--மனோ பலம் இல்லைனா அதுக்கு காரணம் அது இன்னும் பரி பக்குவம் ஆகலை என்கிறதுதான். ஆத்ம விசாரத்துக்கு தன்னை அதிகாரியா செய்கிறதுக்கு சாதனங்கள் தியானம், யோகம் முதலானவை. இதில போதுமான அளவு பயிற்சி எடுக்கணும். அதுவும் முறையான பயிற்சி. இதனால மனசு கொஞ்சம் கூட இடையில்லாம இயல்பாக ஆன்மாவை நாடி பயணிச்சு கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட மனசு கேள்வி ஞானத்தின் பின்னணியிலே விசாரம் செய்தவுடன் தன் யதார்த்த சொரூபத்தை வெளிப்படையாக தெரிஞ்சு கொள்ளும்; தன்னிலையிலேயே நிற்கும். அந்நிலையிலே பரம சாந்தத்துடன் இருக்கும். இப்படி மனசு விசாரத்தாலே உடனே அந்நிலையை அடையலைன்னாலும் இந்த மன ஒடுக்க சாதனங்களில பழக பழக காலம் செல்ல செல்ல இந்நிலையில் லயிக்கும்.



Wednesday, February 10, 2010

விசார சங்கிரஹம் 14



விசார சங்கிரஹம் 13 திருத்தப்பட்டு உள்ளது.


கர்மா அடுத்த சுற்று - உட்காருவது எப்படி?




உட்காருவது எப்படி?
"அட என்னங்க இது உக்காரக்கூட தெரியாதா என்ன" என்கிறீங்களா?
நான் சொல்லுகிறது தரையில் உட்காருவதைப்பத்தி. பலருக்கும் உட்காரத்தெரியுது. ஆனால் சரியாக உட்காரத்தெரியலே. ஏன்னா...
பலருக்கும் தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாமல் போய்விட்டது. டேபிள் சேர் சோபா என்றாகிவிட்ட இந்த காலத்தில் இது எதிர்பார்க்கக்கூடியதே. திடுதிப்பென்று ஜபம் செய்யலாம் என்றோ, பெரியவர்களுடன் பேசவோ அமரும்போது கஷ்டப்படுகிறோம். அதனால் இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
முதலில் தரையில் நேரடியாக உட்காரக்கூடாது என்பது சாஸ்திரம். செய்த புண்ணியங்கள் பூமிக்கு போய்விடும் என்கிறார்கள். போவதற்கு அப்படி ஒண்ணும் புண்ணியம் பண்ணவில்லை என்றாலும் அப்படி உட்காராமல் இருப்பது நல்லது.
உட்காருமிடம் சுத்தமாக இருக்கணும்.
கீழே ஆசனம் ஏதேனும் போட்டு அமர வேண்டும். மரப்பலகை (மணை), பாய், கைகுட்டை கூடப்போதும். இல்லை ஒரு துண்டைக்கூட பயன்படுத்தலாம். சிலர் ஒரு சில்க் கைக்குட்டை வைத்துகொள்கிறார்கள். (அரவிந்தர் ஆஸ்ரம கடைகளில் கிடைக்கும்) இது வெகு சின்னதாக மடியும். எடுத்துச்செல்ல சௌகரியம். கம்பளமும் நல்லது; ஆனால் சூடு.
அஜினம் (தோல்) இப்போது கிடைப்பதில்லை. மேலும் மான் தோலை சோம யாகம் செய்தவர் மட்டுமே பயன்படுத்த சாஸ்திரங்களனுமதிக்கின்றன.
தர்ப்பை ஆசனம் வெகு உன்னதமானது. புதிய தர்ப்பைகள் வேளா வேளைக்கு கிடைப்பது கஷ்டம். (பாருங்கப்பா! வெறும் புல் கூட இந்த காலத்திலே கிடைப்பது துர்லபம் ஆயிருச்சு!) அதனால் தர்பையால பாய் முடைஞ்சு விற்கிறாங்க. அதை பயன்படுத்தலாம். ஒரு 6 மாசம் வரும். காசி போன்ற இடங்களிலே சுலபமா கிடைக்கும்.

உட்காரும்போது நம் உடலை தசைகள் எல்லாம் பாலன்ஸ் செய்கின்றன. அப்படியே உட்காருகிறோம். அவை தளராமல் அப்படியே இறுக்கத்தில் இருந்துவிடுகின்றன. இதுதான் கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்காரமுடியாமல் இப்படியும் அப்படியுமாக அசைய வேண்டிய கட்டாயத்துக்கான காரணம்.

இதை எப்படி சரி செய்வது?
வழக்கம் போல உட்கார்ந்துவிடுங்கள். அப்புறம் முன் பக்கமாக இடுப்பில் இருந்து வளையுங்கள். உட்கார்ந்து கொண்டு நமஸ்காரம் செய்வது போல. இப்போது இடுப்பு அருகில் உள்ள தசைகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும். அப்படியே நிமிர்ந்து விடுங்கள். அவ்வளோதான்! எத்தனை சுலபம் பாத்தீங்களா?
இதே எஃபக்ட் கைகளை பக்கத்தில் ஊன்றிக்கொண்டு உடலை அவற்றின் பலத்தில் தூக்கி கீழே இறக்கினாலும் கிடைக்கும். வயதானவர்களுக்கு கடினமாயிற்றே என்று அதை முதலில் சொல்லவில்லை.
அடுத்து கவனிக்க வேண்டியது முதுகு எலும்பு நிமிர்ந்து நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். இது பலருக்கும் கஷ்டமாக தோன்றும். ஆனால் முன்னே சொன்ன படி உட்கார்ந்த பிறகு இது சுலபமே என்று தெரியவரும். சரியாக உட்காராத போது தசைகள் இறுக்கத்தில் இருப்பதால் முதுகு வளைந்தால்தான் பாலன்ஸ் கிடைக்கும். அதனால் முதுகை வளைத்தே உட்காருக்கிறோம். அப்போது அதுதான் சௌகரியமாக இருக்கும். ஆனால் தசைகள் இதை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நேரத்தில் வலிக்க ஆரம்பித்து விடும். முதுகு எலும்பை நேராக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் இது தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது. அதனால் வலிக்காது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பழக்கமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டி இருக்கும். இதெல்லாம் நாளடைவில் பழகிவிடும். இயல்பாகவே சரியாக உட்காருவோம்.
இப்படி செய்தும் நிமிர்ந்து உட்காரமுடியாமல் இருந்தால் வஜ்ராசன் பழக்கிக்கொள்ள வேண்டும். அதில் இயல்பாகவே நிமிர்ந்துதான் உட்கார முடியும். பாதங்கள் மடங்குவது பழகிவிட்டால் இதுவும் நன்றாகவே உட்கார உதவும்.

குருவின் கட்டளை வேறாக இல்லாத பட்சத்தில் ஜபம் செய்ய சுகாசனமோ (வழக்கமாக உட்காருவது) சித்தாசனமோ, பத்மாசனமோ சிறந்தது. பத்மாசனம் உடனடியாக முடியாது போனால் அர்த்த பத்மாசனத்தில் சில நாள் பழகலாம். அது ஒரு பக்கம் மட்டுமே பத்மாசனம் போல காலை வைத்துக்கொண்டு உட்காருவது.

Monday, February 8, 2010

விசார சங்க்ரஹம் 13



18.ஏகமாயும் அகண்டமாயும் விளங்கும் சொப்பிரகாச வடிவ ஆன்ம ஜோதியின் கண் அவஸ்தாத்ரயம், தேகத்ரயமாதிய கற்பனைகள் தோற்றுவதும்; தோற்றினும் ஆன்மா மாத்திரம் எப்போதும் அசலமாகவே யுள்ளதென்பது மெவ்வாறு?


ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.

ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.

ஒரு வீடு இருக்கு. வீட்டில உள்ளே ஒரு அறை. அதில ஒரு விளக்கு எரியுது. அதுக்கு வெளியே ஒரு அறை. இந்த ரெண்டுக்கும் நடுவே ஒரு கதவு இருக்கு. வெளி அறையிலேந்து முற்றத்துக்கு நடுவே ஜன்னல்கள் இருக்கு
இந்த முற்றத்தை ஸ்தூல தேகம் ஜாக்கிரத அவஸ்தையாக கற்பனை செய்யுங்க.
இதில் உள்ள ஜன்னல் வழியா வெளி அறையை பார்க்கலாம்.
வெளி அறை ஸூக்ஷும தேகம். ஸ்வப்ன அவஸ்தை.
இதையும் உள் அறையையும் பிரிக்கிறது ஒரு சுவர். உள் அறை காரண தேகம். (ஆணவம், கன்மம், மாயை)

அதுக்கு இருக்கிறது மஹத்தத்வம் என்கிற வாசல். அதுல இருக்கிற கதவு தூக்கம்.
இதுக்கு கொஞ்சமே கொஞ்சம் வெளியே ஒரு கண்ணாடி இருக்கு. அது அந்தக்கரணம்.
வெளியிருந்து பாத்தா வீட்டு முற்றம் மட்டுமே தெரியும்.
அதிலேந்து எட்டி ஜன்னல் வழியே பாத்தா உள் அறை தெரியும்.
உள் அறையில் போய் நின்னால்தான் கதவு திறக்கும்போது கண்ணடியில பிரதிபலிக்கிற உள்ளே இருக்கிற விளக்கை பார்க்கலாம். சரியா?

இப்ப ஆன்மாதானே எல்லாவற்றையும் பிரகாசிபிக்கிறது? இந்த ஆன்ம சக்தி இல்லாமல் ஒண்ணுமே இயங்காது. இது எப்படி வெளிப்படுதுன்னு பார்க்கலாம்.

ஆன்மா எப்பவும் பிரகாசிக்கும்.
அதை சுத்தி இருக்கிறது அவித்தை அல்லது காரண சரீரம். இது நித்திரை என்கிற ஆழ் உறக்க நிலை - ஸுஷுப்தி யால சூழப்பட்டு இருக்கு.
காலம் கருமம் பிராணன் ஆகியவற்றால இந்த உறக்க கதவு கலைஞ்சா ஆன்ம ஒளி அகங்காரம் வழியா வெளி அறையில பிரகாசிக்கும். இது ஸ்வப்ன நிலை இல்லையா?
இந்த வெளி அறையிலிருந்து முற்றத்துக்கு வெளிச்சம் வரணும்ன்னா அது இந்திரியங்கள் என்கிற ஜன்னல் வழியாதான் வரும்.

இப்ப ரிவர்ஸ்ல போகலாமா? ஏன் போகணும்? ஆன்ம தரிசனத்துக்கு.
பஞ்ச இந்திரியங்களையும் தாண்டிப்போக ஸ்வப்னம். அதையும் தாண்டிப்போக ஆழ் தூக்கத்தில அவித்தை. அகங்காரத்தையும் தாண்டிப்போக உள்ளே ஆன்மா மட்டுமே பிரகாசிக்கும்.
இப்ப படிச்சுப்பாக்கலாமா?

ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) உட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) உள் மனையில் தானே விளங்க; கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக்கு அடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.


Wednesday, February 3, 2010

கர்மா அடுத்த சுற்று -காலையில் எழுந்து




காலை எப்போது எழுந்திருக்கணும்?

பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னேயே எழுந்திருக்கணும்.

அதாவது 6 மணிக்கு சூரிய உதயம்ன்னா 4-30 க்கு முன்னேயே.

சரிப்பா, அடுத்த அஞ்சலை பாக்கப் போகலாம் என்கிறீர்களா?

:-)))

நம்மில் பலருக்கும் இரவு சீக்கிரம் தூங்கப் போகும் பழக்கம் இல்லை, சர்வ சாதாரணமாக 10 -11 ஆகிவிடுகிறது. அப்படி தாமதமா தூங்கபோனா இது கஷ்டம்தான். நான் சின்ன பையனா இருக்கும் போது ஹோசூரில் சீக்கிரம் இருட்டி 7 மணிக்கெல்லாம் வீடு அடங்கிவிடும். மின் விளக்குகளும் அதிகம் கிடையாது. இப்போது எப்போ தூங்கப் போறோம் என்கிறதை சீரியல்கள்தான் நிர்ணயிக்குது. சரி, சரி! நாம்தான் இதை நிர்ணயம் செய்யணும். இரவு ஒன்பதுக்குப் பிறகு தூங்கப்போனால் காலை நாலரைக்கு எழுந்திருப்பது கஷ்டம்தான்.

அது சரி! இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்ய?
ஜபம், த்யானம் இதுக்கெல்லாம் இதே மிக நல்ல நேரம்.

இரவு படுக்கப்போகும்போது மனமும் உடலும் களைத்து இருக்கும். மனம் தேவையான தேவையில்லாத பல விஷயங்களையும் எதிர்கொண்டு எதிர்வினையை தூண்டி தூண்டியே களைத்து போயிருக்கும். நாள் முழுதும் பறந்து பறந்து இரை தேடிய பறவை களைப்பாகி சுகம் அனுபவிக்க கூட்டில போய் பட்டென்று விழுவது போல, அப்பாடா என்று படுத்து விடுகிறோம்.

இரவு மூளையில் உள்ள ரசாயனங்கள் மீண்டும் உற்பத்தி ஆகிறது. ஜீவாத்மா மனம் ஒடுங்கி - கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நித்திரையில அனுபவிக்கிற சுகம் பிரமாநந்தம்.

இந்த பிரம்மானந்தத்தாலே காலையிலே புத்துணர்ச்சியோட எழுந்திருக்கிறோம்.

இதனாலத்தான் யோகிகள் தவிர யாராலேயும் தூக்கம் இல்லாம இருக்க முடியாது. ஓரளவு தள்ளிப்போடலாமே ஒழிய, இல்லாமலே இருக்க முடியாது.

இருக்கட்டும். காலை எழும் போது மனம் புதுசா இருக்கா? அது மலினமான எண்ணங்களுக்கு போகு முன்னே அதை கொஞ்சம் சீர் செஞ்சு நல்ல வழியிலே திருப்பி விட்டோம்னா நாள் முழுதும் நல்ல படியா போகும். அதனால மனசளவில இறைவனோட ஒன்றி இருக்கப் பார்க்கணும். இதுக்குத்தான் விடிகாலையிலே ஜபம், த்யானம்.

என்ன ஜபம்?

யாருக்கு என்ன உபதேசம் ஆகியிருக்கோ அதுதான்.

காயத்ரி உபதேசம் ஆனவங்களுக்கு சந்தேகமில்லாமல் அதுவே. அப்புறம்தான் அவருக்கு உபதேசமான மற்ற மந்திரங்கள்.

ஏதுமில்லையானால் நமக்கு பிடிச்ச நாம ஜபம். இதுல ஒரு சாதகமான விஷயம், இதையே நாள் முழுதும் தொடர முடியும் என்கிறதுதான். அதைப்பத்தி அப்புறம் பார்க்கலாம்.

ஜபம் செய்ய காலை குளியலை முடிச்சும் செய்யலாம். இந்த குளிரிலே யார்ப்பா குளிக்கிறதுன்னு கேட்டா, சரி சரி - குளிக்க வேண்டாம். ( இப்போதைக்குத்தான்!) கழிவறையை பயன்படுத்திவிட்டு, பல் தேய்த்து, கை கால் சுத்தி செய்து, முகம் கழுவி, நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஜபம் செய்ய அமரலாம்.

த்யானத்திலே உக்காந்தா ஒரு சப்தமும் கேட்கக்கூடாது; குளிரோ வெயிலோ தெரியக்கூடாது; கொசு கடிச்சாலும் தெரியக்கூடாது ன்னு எல்லாம் வீண் கற்பனை வேண்டாம். அதெல்லாம் அட்வான்ஸ்ட் லெவெல். அந்த மட்டத்துக்கு போகும் / பழகும் வரை தொந்திரவு ஏதும் இல்லாதபடிக்கு பாத்துக்கலாம். செல் போனை ஆஃப் பண்ணிடலாம். கொசு விரட்டி இருக்கான்னு பாத்துக்கலாம். மின் விசிறியை தேவையான வேகத்துக்கு போட்டுக்கலாம். இப்படி பலதை யோசிச்சு செய்துக்கலாம். இதுக்கும்தான் இந்த அதிகாலை நேரம் வசதின்னு சொல்கிறது.

இந்த நேரம் நாம் ஜபம் த்யானம் செய்கிற நேரம்ன்னு தெரிஞ்சா மத்தவங்களும் இதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிண்டு போயிடுவாங்க. தொந்திரவு செய்ய மாட்டாங்க.