Pages

Tuesday, January 26, 2010

மாக புராணம் 28




29. க்ரூர ஸ்த்ரீக்கும் நற்கதி:

க்ருத்ஸமதர்: விதேஹ நாட்டிலே க்ரூரா என ஒரு உழவாளியின் மனைவி இருந்தாள். பெயருக்கேற்றபடி தன் க்ரூர குணத்தைப் பதி புத்திரரிடமும் காண்பிப்பாள். சேற்றில் தாமரை உண்டாவது போல அவளுக்கு நற்புத்திரன் உண்டானான். இவள் எவ்வளவு க்ரூரமோ அவ்வளவு சாத்விகமான மகன். அவனுக்கேற்ற உத்தம மனைவி கிடைத்தாள். இருவரும் முதலில் பெற்றோர் பணிவிடை, பிறகு சாதுக்களுக்கு உபசாரம், தெய்வ பக்தி, ஏழைகளிடம் இரக்கம் முதலிய நற்குண நற்செய்கை உள்ளவர்கள். க்ரூர சேர்க்கையால் அவள் பதியும் க்ரூரனாகிவிட்டான். இருவரும் சேர்ந்து சதா காரணமின்றியே மகனையும் அவன் மனைவியையும் திட்டுவார்கள். கையாலும் கம்பாலும் அடிப்பார்கள். இவர்கள் என்ன செய்தாலும் அது நம் வினைக்கேற்ற பயன் என பொறுமையுடனிருப்பர். எப்படி சாந்தமாக இருந்தாலும் வலுச்சண்டைக்கு இழுத்து ஓயாமல் கத்துவர், அடிப்பர் பெற்றோர். ஒரு நாள் தன் மனைவி படும் கஷ்டம் தாளாமல் பெற்றோரை பணிந்து தாயே! ஸதா கலஹம் நடந்தால் அது குடும்பத்துக்கும் தங்களுக்கும் நல்லதல்ல. உற்றார் உறவினரும் மதிக்க மாட்டார். பரிஹஸிப்பர். கோபத்தால் நம் குலமும் நாஸ2மாகும். அம்மா! குற்றமிருந்தாலும் பொறுத்துக்கொள். தங்களுக்கு தெரியாததுண்டா? பொறுமைக்கு சமமான தபஸ் உண்டா? என்றான் புத்திரன்.

இதைக்கேட்டவுடன் சீறினாள். தடியை எடுத்து அடித்தாள். "நேற்று வந்தவளுக்கு பரிந்து கொண்டா என்னை நீ அடக்குகிறாய்? அவள்தான் ஓயாமல் சண்டையிடுகிறாள்" எனக்கூறி, ஓங்கி இருவரையும் அடித்தாள். வலி தாளாமல் அவனுக்கும் கோபம் வந்தது. அதை அடக்கித் தனக்குள் சிந்தித்தான். பெற்றோரை- அதிலும் தாயை த்வேஷிப்பவன் கோரமான நரகஞ்செல்வான் அன்றோ? மாதா பிதாவுக்கு ஸமமான தெய்வமுண்டோ? ஸதிக்குப் பதிக்கு ஸமமான தெய்வம் இல்லை; விஷ்ணுவுக்கு சமமான தேவனில்லை என ஸா2ந்தனான். க்ரூரா கையை சொடுக்கிப் பலவகையாக மருமகளை வைது, அடித்து ஒரு உள்ளேத் தள்ளி கதவை பூட்டிவிட்டாள். அப்போதும் புத்ரன் பெற்றோர் பணிவிடையை முன்னிலும் பன்மடங்கு பக்தியுடன் செய்து வந்தான். இதைக்கண்ட பந்துக்கள் அவளை நிந்தித்ததுடன் புத்ரனையும் கோபித்துக் கொண்டார்கள்.

க்ரூராவின் மகன் எதற்கும் பதில் சொல்லாமல் பெற்றோர்களுக்கு பணிவிடை புரிந்து வந்தான். ஒரு வாரமாயிற்று. “உள்ளே இருக்கும் தன் மனைவி உயிருடன் இருக்கிறாளோ? எப்படித் தவிக்கிறாளோ? என்னை அடுத்து வந்த அப்பெண்ணுக்கும் இந்த கதி நேர்ந்ததே!” என எண்ணித்தவித்தான். வாய் திறவாமலிருக்கும் போதே ஓயாமல் சண்டையிடும் தாயிடம் எப்படிக் கூறுவது? அக்நி புடத்திலுள்ள பொருள் போல் உள்ளும் புறமும் தவித்தான். பன்னிரண்டு நாட்களாகியும் தாய் மனமிரங்கவில்லை. கதவைத் திறக்கவில்லை. துணிந்து உள்ளே செல்லவோ திற எனக் கூறவோ இவன் மநமும் இடமளிக்கவில்லை.
ஆனால் தாய்க்கு பயந்து ரஹஸ்யமாக சந்து வழியாகப் பார்த்தான். பிராணன் அப்போதுதான் போவதைக் கண்டான். தன்னை அறியாமல் வாயைவிட்டு கதறி அழுதான். ஸோ2கத்தால் மூர்ச்சையாகி விழுந்தான். அப்போதுதான் க்ரூரா கதவைத் திறந்தாள். பிணத்தைக் கண்டாள். அவளே ஓ என அழுதுவிட்டாள்! ஊராரெல்லாம் கூடி, க்ரூரையை பலவாறு நிந்தித்தார்கள். பயனென்ன? அவள் உடலைத் தீயிலிட்டார்கள். புத்ரன் ஸோ2கந் தாளாமல் கங்கா தீரம் சென்றான். சில நாட்கள் சென்றபின் உடலைவிட்டு நற்கதி அடைந்தான். க்ரூரையும் அவள் பதியும் பாபத்தால் மநம் நொந்து, மண்ணை வாரி தலையிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு இரவும் பகலும் அழுதுக் கொண்டே இறந்தார்கள். யம தூதர்கள் இவர்களை அஸிபத்ர வநம் முதலிய மிகப்பயங்கரமான நகரங்களில் அறுபத்து நான்கு யுகம் வதைத்தார்கள். பிறகு பாம்பாக பிறந்து பம்பா தீரத்தில் ஓர் அரஸ2 மரப்பொந்தில் வஸித்தனர்.

தீரர், உபதீரர் என்ற இரு சாதுக்கள் பம்பையில் மாகஸ்நாநம் செய்து பகவானை அர்ச்சித்து மாக புராணம் படித்தனர். அந்த ஸ2ப்தம் காதில் விழுந்தவுடன் பாம்புகள் வெளியில் வந்து வீழ்ந்திறந்தன. அதிலிருந்து திவ்ய ஸ2ரீரமேந்திய க்ரூரையும் பதியும் தம்பதிகளாக வைகுண்டஞ் சென்றனர். மாக புராண ஸ்2ரவணமே இந்தப் பாபிகளுக்கு நற்கதி தந்தது.


No comments: