Pages

Saturday, December 26, 2009

விசாரசங்கிரஹம் -8



13. கருமங்களில் ப்ரவிருத்திக்கும்கால் இக்கருமத்தை செய்யும் கர்த்தாவும் இக்கரும பலனையநுபவிக்கும் போக்தாவும் நாமல்ல. இது திரிகரணங்களின் சேஷ்டையாகும் என்ற பாவத்துடனிருக்கலாமா?

ஆத்ம தேவதையாகிய தன்னிடத்திலிருத்தியதும் எப்போதும் அதை விட்டு நீங்காமல் வ்யவஹாரங்களில் உதாசீன பாவத்துடனிருக்கிறதுமான மனது மேற்கூறியபடி சங்கற்பித்தல் கூடுமா? இப்படிப்பட்ட சங்கற்பங்களன்றோ பந்தம்? இவ்வித நினைவுகள் வாசனையால் வந்தாலும் மனதை நினைவின் வழி செல்ல விடாமல் தன்னிலையிலிருத்த முயல்வதோடு வ்யவஹாரங்களில் உதாசீன பாவத்தோடு மிருத்தல் வேண்டும். மனதில் இது நல்லதா? அது நல்லதா? இதை செய்யலாமா அதை செய்யலாமா வென்பதாகிய நினைவுகளுக்குமிடங் கொடாமல் அத்தகைய நினைவுகளேனுந் தோன்று முன்னரே ஜாக்கிரதையாய்த் தெரிந்து அதை தன்னிலையிலிருத்தி விட வேண்டும். கொஞ்சமிடங் கொடுத்தால் தனக்கு ஹிதமாயிருப்பவனைப் போலிருந்து கெடுதி செய்யும் ஹித சத்துருவைப்போல நம்மை தலை கீழாய்த் தள்ளிவிடும். தன்னை மறப்பதாலன்றோ இவ்வித நினைவுகள் தோன்றி மேன்மேலும் அனர்த்தமுண்டாக்குகின்றன? விவேகத்தால் “நானொன்றும் செய்யவில்லை. எல்லாம் கரணங்களின் சேஷ்டைகளே” என்று சங்கற்பித்தல் வாசனையாகிற நினைவின் வழி செல்லும் மனதைத் தடுத்தற்குரிய உபாயமேயென்றாலும் நினைவின் வழி சென்றாலன்றோ முற்கூறியபடி தடுக்க வேண்டும்? தன்னிலையிலிருக்கின்ற மனது நானென்றும் எனக்கு வ்யவஹாரமிருக்கிறதென்றும் சங்கற்பிக்குமா? எவ்விதத்திலும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிய தன்னை மறவாதிருக்கவே முயற்சிக்க வேண்டும். அது ப்ராப்தியானால் எல்லாம் சித்தியாகும். மற்றெவ்விஷயங்களிலும் மனத்தைச்செலுத்த வேண்டாம். பித்தனைப்போல் கர்மத்தால் நேரிட்ட வ்யவஹாரங்களை செய்தாலும் நான் செய்கிறேன் என்ற நினைவு வராமல் தன்னிலையிலேயே மனதை வைத்திருக்க வேண்டும். உதாசீன பாவத்துடன் எத்தனையோ பக்தர்கள் எவ்வளவோ வ்யவஹாரங்களை செய்திருக்கவில்லையா?
=
கருமங்களில் ஈடுபடுகிறப்ப இதை செய்கிறவனும் இதோட பலனை அனுபவிக்கிறவனும் நானில்லைன்னு நினைப்போட இருக்கலாமா? இது திரிகரணங்களின் சேஷ்டையாகும் என்ற பாவத்துடனிருக்கலாமா?

3 ஆவது கேள்விக்கு பதிலில் சொன்னபடி விசாரிச்சு ஆத்ம தேவதையாகிய தன்னிடத்தில தன்னை இருத்தியதும், எப்போதும் அதை விட்டு நீங்காமல் வியவகாரங்களில கண்டுக்காம உதாசீனத்தோட இருக்கிற மனசு மேலே சொன்னபடி சங்கற்பிக்குமா? இப்படிப்பட்ட சங்கற்பங்கள்தான் பந்தம். இவ்வித நினைவுகள் வாசனையால வந்தாலும், மனதை அந்த வழியில செல்ல விடாம, தன்னிலையில இருத்த முயற்சி செய்வதோடு வியவகாரங்களில உதாசீன பாவத்தோடும் இருக்கணும். மனசில இது நல்லதா? அது நல்லதா? இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்பதாகிய நினைவுகளுக்கும் இடம் கொடாமல் அத்தகைய நினைவுகள் ஏதேனும் தோன்று முன்னரே ஜாக்கிரதையாய்த் தெரிந்து அதை தன்னிலையில இருத்தி விடணும். கொஞ்சம் இடம் கொடுத்தால் கூட தனக்கு ஹிதமா இருப்பவனைப் போல இருந்து கெடுதி செய்யும் ஹித சத்துருவைப்போல, நம்மை தலை கீழாய்த் தள்ளிவிடும். தன்னை மறப்பதாலதானே இந்த மாதிரி நினைவுகள் தோன்றி மேன்மேலும் அனர்த்தம் உண்டாகுது? விவேகத்தால் "நான் ஒண்ணும் செய்யலை. எல்லாம் கரணங்களின் சேஷ்டைகளே" என்று சங்கற்பிக்கிறது வாசனையாகிற நினைவோட வழில போற மனசை தடுக்க நல்ல உபாயமே. அப்படின்னாலும் நினைவின் வழி போனாதானே முன்னே சொன்னபடி தடுக்கணும்? தன்னிலையில இருக்கிற மனசு நான் ன்னும் எனக்கு வ்யவஹாரம் இருக்குன்னும் சங்கற்பிக்குமா? எந்த விதத்திலும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிய தன்னை மறக்காம இருக்கவே முயற்சிக்கணும். அது கிடைச்சால் எல்லாம் சித்தியாகும். வேற எந்த விஷயங்களிலும் மனத்தைச் செலுத்த வேண்டாம். பைத்தியக்காரன் ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பான் இல்லையா? அவனைப்போல கர்மத்தால் நேரிட்ட வியவகாரங்களை செய்தாலும் நான் செய்யறேன் என்ற நினைவு வராமல் தன்னிலையிலேயே மனதை வைத்திருக்க வேண்டும். உதாசீன பாவத்துடன் எத்தனையோ பக்தர்கள் எவ்வளவோ வியவகாரங்களை செய்திருக்கவில்லையா?



2 comments:

Kavinaya said...

//தன்னிலையில இருக்கிற மனசு நான் ன்னும் எனக்கு வ்யவஹாரம் இருக்குன்னும் சங்கற்பிக்குமா? எந்த விதத்திலும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிய தன்னை மறக்காம இருக்கவே முயற்சிக்கணும்.//

அது சரி, ஆனா எப்படி?

திவாண்ணா said...

/அது சரி, ஆனா எப்படி?//
பின்னாலே வரும்!