Pages

Monday, December 21, 2009

மாகபுராணம் 5



4. நாயும் நற்கதி பெற்றது: வங்கராஜ சரிதம்:
முன்னொரு சமயம் கௌதம முனிவர் சிஷ்யர்களுடன் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிக் கிருஷ்ணவேணி தீரம் சென்றார். மாக மாசம் வரை அங்கு தங்கி ஸ்நானம் செய்து அச்2வத்த விருக்ஷத்தினடியில் தசமியன்று விதிப்படி பூஜை செய்து புராணம் கூறினார்.

ஒரு நாய் அருகில் வர சிஷ்யர்கள் அதை ஓட்டினர். அது வெளியே ஓடாமல் அம்மரத்தைச் சுற்றிச் சுற்றி மூன்று வலம் வந்தது. ஸாதுக்களின் தர்சனத்தாலும் மாக மாஸ தசமீ பூஜா தர்சனத்தாலும் பிரதக்ஷிணத்தாலும் நாயின் பூர்வ ஜன்ம பாபமகன்றது. உடனே கீழே விழுந்து அது உடலை விட அங்கிருந்து ஒரு ராஜ புருஷன் எழுந்து கௌதமரை வணங்கி நின்றான்.
கௌதமர் "நாயுருவிலிருந்து திவ்ய தேகம் பெற்ற நீ யார்?” என்று கேட்க

"மஹர்ஷீ! யான் வங்க நாட்டை ஆண்ட வேகரதன் என்ற அரசன். மநுநீதி தவறாமல் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து துலா புருஷதானம் முதல் சகல தானங்களையும் செய்தேன். பல யக்ஞங்கள், குளம் வெட்டுதல், விருக்ஷம் வளர்த்தல் முதலிய பூர்த்த தர்மங்களையும் செய்து வந்தேன்.”
"ஒரு நாள் பைங்கலர் என்ற முனிவர் யாக தக்ஷிணை கேட்பதற்காக என்னிடம் வந்தார். அவரைத் தக்கபடி அர்ச்சித்து தர்மோபதேசம் செய்யும்படி வேண்டினேன். அவர் "மாக மாஸ விரதம் ஸகல தமங்களிலும் சிறந்தது. சிறிது சூர்யோதயம் ஆகும்போது பிராதஸ்நானம் செய்தால் விஷ்ணு லோகம் செல்வர். மாகமாஸ பாநுவாரம், ஸப்தமீ, தசமீ இந்த தினங்களில் செய்யும் ஸ்நாநம் அபரிமிதமான பலன்களை கொடுக்கும். மாக மாஸத்தில் ஒரு நாளாவது பிராதஸ்நானம் செய்யாவிடில் சண்டாள ஜன்மமெடுப்பான். குளிர் பயத்தால் ஸ்நாநம் செய்யாமல் மற்றவைகளை எல்லாம் செய்தாலும் அவன் உத்தமனாயினும் நீச பிறவியே பெறுவான்" என்றார்.
இதைக்கேட்ட நான் "ஸ்வாமின்! மாகமாதம் காலை பனியில் ஒரு நாள் ஸ்நாநம் செய்தால் கூட எனக்கு சீ2தோபாதையால் நோய் உண்டாகும். இறக்கவும் நேரிடும். சரீரமிருந்தால் அல்லவா தான தர்மங்களை செய்யலாம்? மற்ற சகல தான தர்மங்களை செய்கிறேன்" என்றேன். மஹர்ஷி என்னிடம் கோபம் கொண்டு நான் தருவதாக சொன்ன தக்ஷிணையை வாங்கிக்கொள்ளாமல் கிளம்பினார். நான் பல முறை அவரை பணிந்து ஸமாதானம் செய்து தக்ஷிணையைக் கொடுத்து அனுப்பினேன். சில காலம் சென்றபின் நான் இறந்து பல நரகங்களை அனுபவித்து இருபத்து நான்காம் முறை நாயாகி இங்கே இறந்தேன். எனது துன்பத்துக்கும் இப்போது கிடைத்த இன்பத்துக்கும் காரணம் யாதென தாங்கள்தான் கூற வேண்டும்" என கௌதமரை வேண்டினான்.
அவர் ஞானதிருஷ்டியால் எல்லாம் உணர்ந்து கூறினார்: "மஹாராஜன்! மாகஸ்நானத்தின் பெருமையை பைங்கலர் பலவாறு கூறியும் அதை அவமதித்தாய். உனது சரீரத்தையே பெரிதாக எண்ணினாய். அதனால் இந்த துன்பத்தை அனுபவித்தாய். இது மாகமாதம் ஆனதால் நாங்கள் மாகஸ்நானம் செய்து திருவேணிக் கரையில் லக்ஷ்மீ நாராயண பூஜை செய்து புராண ஸ்ரவணம் செய்தோம். நீ நாய் உடலுடன் இங்கு வர, பூஜா காலத்தில் பாப பிறவியான நாயைப்பார்க்கக் கூடாதென்று சிஷ்யர் ஓட்ட, நீ ஆங்காங்கு ஓடி படுத்து, உன்னை அறியாமலே மூன்று முறை ஸ்வாமியை வலம் வந்தாய். அதனால் பாபமெல்லாம் அகன்று நற்கதியினை பெற்றாய்" என்றார். மாக ஸ்நாந பெருமையை உணர்ந்து "இப்போதாவது உங்களுடன் ஸ்நானாதிகளை இங்கிருந்தே அனுஷ்டிக்கிறேன்!” என வேகவிரதன் அங்ஙனமே செய்து வந்தான்.


No comments: