Pages

Friday, December 4, 2009

விசார சங்கிரகம்-2




3. நான் யார் என்று விசாரிப்பது எப்படி?

போதல் வருதல் ஆதிய தொழில்கள் தேகத்தினவே யன்றி வேறின்மையால் தேகமே நானென்று சொல்வதாக அன்றோ தெரிகிறது? பிறத்தற்கு முன் தேகம் இன்மையாலும் பஞ்ச பூதாத்மகம் (பஞ்ச பூதங்களால் ஆனது) ஆதலானும் சுழுத்ததியில் அபாவம் (இல்லை) ஆதலானும் பிணமாக போதலானும் அதை நான் என்னும் போதமாக சொல்லுதல் கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தம் ஆகிய இச்சரீரம் நான் தான் என்று ஸ்புரித்து வழங்கி வருமா? இப்படி அவாந்தரமாகத் தேகத்தை குறித்து நான் என்று எழும் போதமே தற்போதம் என்றும் அகங்காரம் என்றும் அவித்தை என்றும் மாயை என்றும் மலம் என்றும் ஜீவன் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விசாரியாது இருக்கலாமா?விசாரித்து உணர்ந்து உய்தற்கன்றோ சகல சாஸ்திரங்களும் ஏற்பட்டு அத்தற்போத நாசமே முக்தி என்று கோஷிக்கின்றன. ஆகவே பிணமான தேகத்தை பிணம் என்றே இருத்தி வாக்கினாலும் நானென்று சொல்லாமல் இருந்து இப்போது நான் என்று எழுவது எது என கூர்மையாய் விசாரித்தால் அப்போது ஹ்ருதயத்தில் 'நான் நான்' என்னும் சப்தமில்லாமல் ஓர் வித ஸ்புரிப்பு அதாவது கண்டமாயும் (துண்டாகவும்) நாநா வாகவும் இருந்த நினைவுகள் போய் அகண்டமாகவும் ஏகமாகவும் (ஒன்றாகவும்) ஞெப்தி மாத்திரம் தனக்குத்தானே தோற்றிக்கொண்டு இருக்கும். அதனை விடாமல் சும்மாவிருந்தால் தேகம் நானென்னும் அகங்கார ரூப ஜீவ போதத்தை முற்றிரும் நாசப்படுத்தி கர்ப்பூரத்தில் பற்றிய நெருப்பு போல் முடிவில் தானும் சாந்தமாய் விடும். இதுவே மோக்ஷம் என்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் சொல்லப்படுகிறது.
==
சர்வ சகஜமா நான் போனேன் நான் வந்தேன் ந்னு சொல்கிறோம். போனதும் வந்ததும் யார்? உடம்பே போச்சு வந்தது.
நாம் பிறக்கும் முன்னாலே இந்த உடம்பு இல்லை. பஞ்ச பூதங்களால ஆக்கப்பட்டு வந்தது.
ஆனால் வந்த பிறகும் ஆழ் உறக்கத்திலே அது உணரப்படலை.
அப்புறமா ஏதோ ஒரு நாள் அது இருக்கும் போதே நான் இல்லைம்பாங்க; இறந்து போயிட்டதா சொல்வாங்க. ஏன்னு கேட்டா இதில உயிர் இல்லை; இது ஜடம்பாங்க. அதனால இந்த உடம்பை நான் ந்னு சொல்வது அறிவுடமையா இல்லை. இருந்தாலும் உடம்பை நான்ன்னு சொல்கிறோம். தேகம் நான் என்கிற இந்த நினைப்பே தற்போதம். இதுவே அஞ்ஞானம். இந்த அநியாயமான அஞ்ஞானத்தை விசாரிக்கணும். இதுக்கு உதவத்தான் எல்லா சாஸ்திரங்களும் இருக்கின்றன. அவை எல்லாம் சொல்லுவது என்ன? "இந்த தப்பான நினைப்பு போகிறதுதான் முக்தி” என்பதே. அதனால பிணமாக போகப்போகிற இந்த உடம்பை பிணமாகவே நினைச்சு இதை நான்னு சொல்கிறதை விட்டுவிட்டு, இப்ப யாரப்பா அந்த நான் ந்னு கூர்மையா கவனிச்சா உள்ளுக்குள்ள ஏதோ ஒண்ணு நான் ந்னு இருக்கும். இப்படி தோணும் போது மத்த சாதாரணமா இருக்கிற பல நினைப்புகளும் இரா. இதையே விடாம பிடிச்சுக்க முடிஞ்சா போதும்; வேற ஒண்ணும் செய்யாம சும்மா இருந்தா ஒரு உருவத்தை நான் ந்னு நினைச்சது போயே போய்விடும். அதுக்கப்புறம் எப்படி கர்ப்பூரத்தில் ஜ்வாலை எரிந்து அப்புறம் சாந்தமாய் ஆகுமோ அப்படி இதுவும் சாந்தமாகிடும். இந்த நிலையே மோக்ஷமாம்.
--------------
4. அகம் வடிவ தற்போதத்தின் மூலத்தை விசாரிக்க அங்கு வேறு எதேதோ வெவ்வேறெண்ணங்கள் கணக்கற்றனவாய்த் தோற்றிக்கொண்டு இருக்கின்றனவே அன்றி நானென்றதோர் தனி நினைவு தோன்றவில்லையே?

எழுவாயாகிய முதல் வேற்றுமை தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் மற்ற வேற்றுமைகளில் வரும் வாக்கியங்கள் அனைத்தும் முதல் வேற்றுமையை ஆச்ரயித்தே (சார்ந்தே) விளங்கல் போன்று ஹ்ருதயத்தில் தோன்றும் நினைவுகள் அனைத்தும் தேகோகம் (தேஹம் அஹம்- நானே தேகம்) புத்தி வடிவ நானென்னும் முதல் விருத்தியாகிய அகங்காரத்தை ஆச்ரயித்தே விளங்கலானும் அகங்காரத்தின் எழுச்சியே மற்ற எல்லா நினைவுகளின் எழுச்சிக்கு காரணமாகவும் மூலமாகவும் இருத்தலானும் சம்சாரம் என்னும் மாயா விருக்ஷத்தின் வேராகிய அகங்கார ரூப தற்போதத்தை நாசமாக்கின் மற்றெல்லா நினைவுகளும் வேரற்ற விருக்ஷம் போல் அடியோடு நாசமாகும். தான் செய்யும் நிஷ்டைக்கு பிரதிபந்தமாக எத்தனை நினைவுகள் தோன்றினாலும் மனதை அவ்வழியே செல்லவொட்டாமல் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்திலேயே இருத்தி நம் முன்னே என்னென்ன விசித்திரங்கள் நடக்கின்றன? நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம் என்று சாக்ஷியைப்போல விலக்ஷணமாய் பார்த்துக் கொண்டிருக்கப்பழகுவதே. அதாவது தோற்றங்கள் மயமாகாது தன்னை விடாமல் இருப்பதே முன் கூறிய பிரதி பந்தங்களுக்கெல்லாம் மூலமான தேகாத்ம புத்தி ரூப மனோ நாசத்துக்கான தக்க உபாயமாம். இலகுவாக கெடுக்கத்தகும் இம் மார்க்கமே பக்தி என்றும் தியானமென்றும் யோகமென்றும் ஞானமென்றும் கூறத்தகும். ஹ்ருதயத்தில் உள்ள அஹம் சொரூபமான ஆத்மாகாரமாகவே கடவுள் இருப்பதாலும் நினைப்பு மாத்திரமே பந்தம் என்று சுருதிகள் முறையிடுவதாலும் எப்படியேனும் நான் என்னும் நினைவு ரூபமான மனதை அவரிடத்திலே இருத்திவிட்டு எப்போதும் அவரை மறவாது சும்மா இருத்தலே சிரேஷ்டமான சாதனம். இதுவே சுருதிகளின் முடிவான சித்தாந்தம்.
-----
சரி, நான் யார் ன்னு விசாரத்துல உக்காந்தா வேற ஏதேதோ எண்ணங்கள் கணக்கில்லாம வருதே ஒழிய நான்ன்னு தனியா ஒண்ணும் தோணலையே?
இங்க வா, இதைப்பண்ணு, உனக்கு எடுத்துக்கன்னு எப்படி சொன்னாலும் ஒரு விஷயம் மறைஞ்சு இருக்கு இல்லியா? ஹே ராமா, இங்க வா, இதைப்பண்ணு, உனக்கு எடுத்துக்கன்னு சொல்லுவதில்லை. அது அன்டர்ஸ்டுட். அது போல மனசில வர எண்ணங்கள் எல்லாமே நான் என்கிற புத்தியோட ஒரு நிலைப்பாட்டை அடிப்படையா வெச்சே பிறக்குது. அதுவும் அன்டர்ஸ்டுட். இதுக்குத்தான் அகங்காரம் ந்னு பேர். இந்த உலகம் இந்த என்னை எப்படி பாதிக்கும் என்பதை வெச்சே மற்ற எண்ணங்கள். எனக்கு பிடிக்கும். எனக்கு கஷ்டம், எனக்கு சந்தோஷம் நான் சொல்கிறேன்னு எல்லா எண்ணங்களுமே! இந்த நான் என்கிற நினைப்பு இல்லாம போனா? வேரை வெட்டிப்போட்ட மரம் வாடுகிறதைப்போல மத்த எண்ணங்களுமே வாடி அழியும். நாம கவனிக்கிற விஷயத்துக்கு பாதகமா எத்தனை எண்ணங்கள் வந்தாலும் மனசை அதுல செலுத்தாம உள்ளுக்குள்ள தெரிஞ்ச தன்னிலேயே நிறுத்தி மத்தபடி நம்ம முன்னே என்னவெல்லாம் நாடகம் நடக்குது, நடப்பது நடக்கட்டும் என்கிற ரீதியில பாக்க ஆரம்பிக்கணும்.
அதாவது என்னென்ன எதிரே நடந்தாலும் அதிலே முழுகிடாம உள்ளுக்குள்ள இருக்கிற தன்னோட தொடர்பு விடாம இருக்கணும். இப்படி செய்யறதே மனசு ஒர் உருவத்தை தான் ந்னு உருவகப்படுத்தி கொண்டு இருக்கிறதை நாசம் செய்ய வழி. இதையே பக்தி, தியானம். யோகம், ஞானம் ந்னு பலவிதமா சொல்லிக்கலாம். ஹ்ருதயத்தில் நான்னு இருக்கிறது ஆத்மா, இந்த ஆத்மாவா இருக்கிறதேதான் கடவுளும். இதை உணர விடாம தடுக்கிறதே நம் மனசில் எழுகிற நினைவுகள்தான். நம்மால மனசு இல்லாம இருக்க முடியலை என்கிறதால அந்த மனசை எப்படியாவது கடவுள்கிட்டேயே செலுத்தி எப்பவும் மறக்காம சும்மாயிருக்கிறதே நல்லது. வேதங்கள் முடிவா சொல்கிறது இதுவே.


4 comments:

கபீரன்பன் said...

//வேரை வெட்டிப்போட்ட மரம் வாடுகிறதைப்போல மத்த எண்ணங்களுமே வாடி அழியும். நாம கவனிக்கிற விஷயத்துக்கு பாதகமா எத்தனை எண்ணங்கள் வந்தாலும் மனசை அதுல செலுத்தாம உள்ளுக்குள்ள தெரிஞ்ச தன்னிலேயே நிறுத்தி மத்தபடி நம்ம முன்னே என்னவெல்லாம் நாடகம் நடக்குது, நடப்பது நடக்கட்டும் என்கிற ரீதியில பாக்க ஆரம்பிக்கணும்///

ஹும் படிக்கும் போது நல்லாத்தான் இருக்கு. படிச்சப் பிறகு வசதியா மறந்துட்டு மனசு ஆட்டம் போடுது :))

திவாண்ணா said...

வாங்க கபீரன்பன்.
அவ்வளவு சுலபமா இருந்தா எல்லாரும் மோக்ஷம் அடைஞ்சுடுவாங்களே? அப்படி நடப்பதில்லை. மனசு திருப்பி திருப்பி ஆட்டம் போடும்தான். அப்பதானே அது மனசா இருக்கும்?
:-))

கிருஷ்ண மூர்த்தி S said...

/அவ்வளவு சுலபமா இருந்தா எல்லாரும் மோக்ஷம் அடைஞ்சுடுவாங்களே/

இங்கே தான் வள்ளாலார் சொன்னது

முத்தி என்பது நிலைமுன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம்

இந்தவாக்கும், ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறபடி, இந்த சிருஷ்டி இறைவனின் தீராத விளையாட்டே! இங்கே மோக்ஷம் விடுதலை என்று ஒதுங்கியிருப்பதற்காக இல்லை, இறைவனின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து அதன் படி நடக்கச் சித்தமாகும் வீரர்களாவதே, அதாவது பிரபஞ்ச விளையாட்டில் பங்கெடுத்துக் கொள்பவர்களாகவே இருப்பது என்பது இதற்கு முந்தைய காலங்களில் சொன்னதை விட, இந்தப் பிறவியின் நோக்கத்தை இன்னமும் அழகாக, தெளிவாகச் சொல்வதாக உணர்கிறேன்!

Kavinaya said...

//இறைவனின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து //

அங்கேயும்தான் உதைக்குது. சில சமயங்களில் சில விஷயங்கள் இறைவன் விருப்பமா 'என்' விருப்பமான்னு தெரியறதில்லை :(