Pages

Thursday, December 31, 2009

மாகபுராணம் 8




8.வித்யாதரியை ரக்ஷித்தது மாக வ்ரதம்:
வித்யாதார வகுப்பை சேர்ந்த ஒருவர் வெகுகாலமாக புத்ரபாக்கியமில்லாமல் வருந்தினார். நூறாண்டு பிரும்மாவை நாடி தவம் புரிந்தார். அவர் தவத்தால் ஸந்தோஷமடைந்த சதுர்முகன் பிரசன்னமாகி "வித்யதரா! இந்த பிறவில்யில் உனக்கு புத்திர பாக்கியம் கிடையாது. உனது தபோ பலத்தால் ஒரு பெண்ணைத் தருகிறேன்.” என்று கூறி மறைந்தார். அங்ஙனமே சில நாட்கள் சென்றபின் அதிக ரூபலாவண்யம் வாய்ந்த ஒரு பெண் குழந்தை பிறந்தது. ரூபம் மட்டும் இல்லாமல் அதன் அரிய குணங்களையும் தெய்வ பக்தியையும் கண்டு அக மகிழ்ந்தான் வித்தியாதரன். மணம் புரிவதற்கேற்ற காலம் வந்தது. பலர் கேட்டும் இவளுக்கேற்றவனாகவும் எனது வீட்டிலேயே வசிப்பவனாகவும் உள்ளவனுக்கே இவளைத் தருவேன் என்று கூறிவந்தான்.

அச்சமயம் ஒரு ராக்ஷஸன் மஹாமாயா தேவியை நாடிக்கடுந்தவம் புரிந்தான். தேவி அவன் விரும்பியபடி ஸகல வித்தைகளும் ஸகல விதமான மாயையும் அவனுக்கு வசமாகும்படி வரமளித்தாள். பரமசிவனிடமிருக்கும் சூலத்தை பெற்றுவிட்டால் உலகில் மூவரும் எவரும் தனக்கு ஈடாகமாட்டார்கள் என்று எண்ணினான். த்ரோணமலைச் சிகரத்தில் அமர்ந்து சிவனை விரைவில் மனங்குளிரச் செய்யும் மந்திரங்களை ஜபித்தான். உணவை, உலகை, உடலையும் மறந்து கால் கட்டைவிரல் மாத்திரம் பூமியில் பட நின்று கொண்டு கரத்தை சிரசின் மேல் குவித்து ஸூர்யனைப் பார்த்து கொண்டு மிகக்கடுமையான தவம் செய்தான். [சிவன்] அவனெதிரில் தோன்றி "நீ விரும்பியபடி சூலத்தை அளிக்கிறேன். அது சத்ரு வஸம் அகப்பட்ட போது நீ இறப்பாய். த்ரிசூலம் என்னிடமே வந்து சேரும்" என்று கூறி அளித்தார்.

பரம சந்தோஷத்துடன் அசுரன் தன்னை ஜயிப்பவர் ஒருவருமில்லை என சமுத்திரத்தின் நடுவிலே மாயையால் மிக அற்புதமான நகரத்தை படைத்தான். சகல லோகங்களிலும் இருக்கும் ஸகல போக வஸ்துக்களும் அங்கிருக்கும் படி செய்தான். எனது பெருமைக்கும் இப்பட்டணத்திற்கும் ஏற்ற ஒரு ஸ்த்ரீ ரத்தினம் கிடைத்துவிட்டால் லக்ஷ்மீ நாராயணனையும் கௌரீ சங்கரனையும் விட சிறந்தவனாக இருப்பேன் என எண்ணினான். ஒவ்வொரு லோகத்திலும் உள்ள அழகிய கன்னிகைகளைப் பார்த்தான். இவள் நமக்கு ஏற்றவளல்ல என்று மேண் மேலும் தேடிக்கொண்டே சென்றான். தற்செயலாக தீர்த்தம் கொண்டுவர நதி தீரம் சென்ற வித்யாதர கன்னிகையைக் கண்டு இவளே நமக்கு ஏற்றவள் எனக்கருதினான்.

அவளருகில் சென்று "பெண்ணே! நான் ராக்ஷஸனாயினும் திவ்யமான தேவ ரூபம் எடுப்பேன். என்னை மணந்தால் என்னிடமிருந்து ஒருவருமனுபவிக்காத இன்பம் பெறலாம். என்னை மணந்துகொள்" என்றான். "ஐயா! பெண்கள் தந்தை தாய் சொல் படி நடக்க வேண்டும் அல்லவா? தந்தையை கேளும்" என்றாள். அரக்கன் தந்தையை கேட்க அவர் தன் கொள்கையை கூறி பெண்ணைத்தர மறுத்தார். ஏமாந்த அசுரன் மற்றோர் முறை அவள் வெளியில் வந்த போது பலாத்காரமாக அவளைத் தூக்கிச்சென்றான். தனது அரண்மனையில் அவளை வைத்துவிட்டு அவளை விதிப்படி மணந்து கொள்ள நல்ல முகூர்த்தம் கூறும்படி பிரும்மாவைக் கேட்டான்.

ப்ரும்மா எட்டு மாதங்கள் கழித்த பின்பே நல்ல நாள் எனக் கூறினார். தன் கஷ்டத்தையும் பெற்றோர் பிரிவையும் எண்ணி வருந்தும் கந்தர்வ கன்னிகையை சந்தோஷப்படுத்த, "பெண்ணே உனக்கு விருப்பமான பொருளை கூறு. எந்த லோகத்தில் இருந்தாலும் கொண்டு வருகிறேன்" என்றான். அவள் "எனக்கு ஸோம வார பிரதோஷத்தில் சிவலிங்க தர்சனம் செய்ய வேண்டும். மற்றெதுவும் வேண்டாம்!” என்றாள். அரக்கன் பாதாளத்தில் உள்ள ஹாடகேஸ்2வர லிங்கத்தைக் காட்டி பிரதி ஸோமவாரத்திலும் சென்று தர்சிக்க ஏற்பாடு செய்தான். அங்கு தர்சனம் செய்ய வந்த நாரத ரிஷி இவளைப்பார்த்து விசாரித்தார். அவளது துக்கத்தை அகற்ற "இங்கு உள்ள மானச சரஸில் மாகஸ்நாநம் செய்து மாதவனைப் பூஜித்து வா!” என உபதேசம் செய்தார். அவளும் அங்ஙனமே அனுஷ்டித்து வந்தாள்.

இதற்கிடையில் நாரதர் இவளுக்கேற்ற பதி ஹரித்ரதன், அவனே அரக்கனை கொன்று இவளை மணக்கத்தக்கவன் எனக்கருதினார். ஹரித்ரதன் உலகில் கண்ணில்படும் நரர், சுரர், வீடு, மாடு, சுவர் முதலிய எல்லாம் ஹரி என்று கருதி வழிபடுவான். பகவன் நாமாவை எந்த வகையிலாவது ஸதா கூறுவான். ஒருவரை வா என்று அழைக்க விஷ்ணோ, போ என்று சொல்ல ஹரே, ஒன்றை எடுத்து வா என்று கூற கோவிந்தா, வாங்கிக்கொள்ள கிருஷ்ணா, சாப்பிட தாமோதரா எழுந்திருக்க கேசவா, படுக்க நரஸிம்ஹா, தூங்க மாதவா, விளையாட வாஸுதேவா, நடக்க வாமனா, வியஸனத்திற்கு ஹ்ருஷீகேச, ஸந்தோஷத்தில் ஸ்ரீதர என பகவன் நாமாக்களையே சகல காரியங்களுக்கும் வைத்து (உதாரணமாய் தங்களுடன் பேசியது ஸந்தோஷமாக இருக்கிறது என்பதற்கு ஸ்ரீதரனாக இருக்கிறது) எப்போதும் பகவன் நாமாவில் ஈடுபடுவான்.
நாரதர் ஹரித்ரதன் அரண்மனைக்கு சென்ற போது அவரை அரசன் தக்கபடி பூஜித்தான். தேவரிஷி தான் வந்த காரியத்தைக்கூறி "நீ அரக்கனை நாடிச்செல். ஸமுத்திரம் தானே உனக்கு வழிவிடும். அவன் சிவனிடம் பெற்ற திரிசூலத்தை ஸமுத்திரத்தில் வைத்து இருப்பான். அதை நீ எடுத்து அதனால் அவனைக் கொன்று வித்யதர ஸ்த்ரீயை மணந்து கொள்" என்றார். முனிவரைப் பணிந்து ஹரித்ரதன் கடலினிடையே உள்ள அரக்கர் ராஜ்யத்தில் நுழைந்தான். கடல் வழி விட அங்கிருந்த சூலத்தை எடுத்துக்கொண்டு போர் முழக்கம் செய்தான். ப்ரும்மாவிடம் சென்று தனது விவாஹத்துக்கு நல்ல முகூர்த்தம் கேட்டு வர சென்ற ராக்ஷஸன் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டான்.

விஷ்ணு பக்தரில் சிறந்த ஹரித்ரதனைப் பறி கேள்வி பட்டிருந்ததால் அவன் கையால் அவனிடமுள்ள த்ரிசூலத்தால் இறந்து நற்கதி பெறத் தீர்மானித்தான். ஆதலால் மாயையைக் கொண்டு மறையவோ ஸந்தி செய்து கொள்ளவோ (?) விரும்பாமல் வீராவேஷத்துடன் போர் புரிந்தான். சிவன் சொல் வீணாகுமோ? சூலத்தை ஹரித்ரதன் அவன் மார்பில் பிரயோகிக்க அடியற்ற மரம் போல வீழ்ந்தான் அரக்கன். வித்யதர கன்னிகைக்கு நாரதர் சொல்படி மாகஸ்நானம் எவரும் எதிர்பாராத ஆச்சரியமான பலனைத் தந்தது. இவரே என் பதி என்று அவள் இவனை வரிக்க விதிப்படி மணத்தை முடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். விதி வழுவாது விஷ்ணு பூஜையையும் மாகஸ்நானத்தையும் செய்தனர். ஸந்ததிக்கும் இதை உபதேசித்து முடிவில் வைகுண்டம் சென்றனர்.


Wednesday, December 30, 2009

விசார சங்க்ரஹம் 9



இன்று ரமண ஜயந்தி!
14. சந்நியாசத்தின் யதார்த்தமான தாத்பர்யம் என்ன?
சந்நியாசம் என்பது நானென்னும் சங்கற்ப தியாகமேயன்றி வெளி விஷயங்களை விடுவதல்ல. இந்த சந்நியாசமுள்ளவனுக்கு ஏகாந்தத்தி லிருந்தாலும் அபார சம்சாரத்திலிருந்தாலும் சமமாகவே தோன்றும். வேறு விஷயத்தில் மனதைச் செலுத்தியிருக்கும் போது பக்கத்திலுள்ளது தெரியாதது போல ஞானி எவ்வளவு வியவகாரங்களை செய்யினும் நானென்ற போதம் வராமல் தன்னிடத்திலேயே மனதிருப்பதால் அவன் ஒன்றும் செய்யாதவனேயாம். தான் அசையாமற் படுத்திருந்தும் கனவில் தலை கீழாக விழுவதாய்க் காண்பது போல அஞ்ஞானி அதாவது நானென்பதறாதவன் ஏகாந்தனாய் சதா நிஷ்டையிலிருந்தாலும் சர்வ வ்யவகாரங்களையும் செய்தவனேயாம் என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர்.

சந்நியாசத்தோட எதார்த்தமான தாத்பர்யம் என்ன?
சந்நியாசம் என்பது நான் என்னும் நினைப்பை ஒழிக்கிறது அன்றி வெளி விஷயங்களை விடுவது இல்லை. இந்த சந்நியாசம் உள்ளவனுக்கு ஏகாந்தத்தில - தனியா இருந்தாலும் அபாரமான சம்சாரத்தில இருந்தாலும் சமமாகவே தோணும். வேற விஷயத்தில மனசை செலுத்தி இருக்கறப்ப பக்கத்தில உள்ளது தெரியாதது போல ஞானி எவ்வளவு வியவகாரங்களை செஞ்சாலும் நான் என்கிற நினைப்பு வராம தன்னிடத்திலேயே மனதிருப்பதால் அவன் ஒன்றும் செய்யாதவனேயாம். தான் அசையாம படுத்து இருந்தும் கனவில தலை கீழாக விழுவதாய்க் காண்பது போல அஞ்ஞானி அதாவது நானென்பது போகாதவன் ஏகாந்தனாய் எப்பவும் நிஷ்டையிலிருந்தாலும் எல்லா வ்யவகாரங்களையும் செய்தவனேயாம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்காங்க.

மாகபுராணம் 7


7.பிரம்மராக்ஷஸனுக்கும் நற்கதி:

துவாபர யுகத்திலே கோதாவரீ தீரத்தில் ஸூசீ2லர் என்றோர் வேதியரிருந்தார். தர்மசீலரான அவர் பல புண்ணியங்களைச் செய்து தீர்த்த யாத்திரைக்குச் சென்றார். வழியிலே பயங்கரமான ஒரு அரண்யத்தில் நுழைந்து வழி தெரியாமல் தவித்தார். அடர்ந்த புதர்களில் இருந்து புலி கரடிகளின் சப்தம் அவரை நடுங்கச்செய்தது. ஒரு கருங்காலி மரத்திடையே ஒரு பூதத்தைக்கண்டார். அது கொள்ளிக்கண்ணும், செம்பட்டை மயிரும், உலர்ந்த வயிரும், தோலும், எலும்பும், வஸ்த்ரமில்லா உடலுமாக இருந்தது. அதன் உடலை மரக்கிளையின் முட்கள் கீறி கீறி ஒரே ரத்தம். ஐயோ என்ற கூக்குரலுடன் இருந்தது. அதன் நீண்ட மூக்கும் கருத்த உருவமும் மரத்தின் வேரில் அழுந்தி அசைய முடியாத காலும் உடல் மாத்திரம் அசைவதையும் கண்டார் சுசீலர். நடுநடுங்கி ஆபத்பந்துவான விஷ்ணுவை த்யானம் செய்தார்.
ஐயா! என்னை காப்பாற்றுமே! க்ஷணமிங்கே நில்லும். உமது தர்சனம் எனக்கு சிறிது ஆறுதலை தருகிறது என்றது அது. தைர்யத்துடன் யார் நீ? ஏனிப்படித்தவிக்கிறாய்? என்றார் ஸுஸீலர். கோகர்ண க்ஷேத்திரத்தின் மேற்கு பாகத்தில் மதுவிருதம் என்ற ஊரிலே நான் கணக்கனாக இருந்தேன். கிராம  அதிகாரியாக இருந்ததால் எல்லோரையும் முக்கியமாக பிராம்மணர்களையும்  அதட்டி மிரட்டி பணம் பறித்து வந்தேன். பிரதி தினம் பிராம்மண சொத்தையே புஜிப்பேன். அதில்லாத நாள்தான் உபவாசதினம். ஸ்நாநம், தானம், பூஜை,
புண்ணியம் உபகாரம், கதை கேட்பது ஒன்றையும் நான் செய்தறியேன். உமது தர்சனத்தால் எனக்கு பூர்வஞானம் வந்தது. நீர்தான் என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விடுவித்துக்காக்க வேண்டும் என்றது. நாய், கழுதை, ஓநாய், பூனை முதலிய பல பிறவிகள் பெற்று இப்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்றது.
"அருகில் ஏதேனும் தீர்த்தமிருந்தால் அதில் மாக ஸ்நாநம் செய்து உனக்கு நற்கதி தேடலாம்" என்றார் ஸூஸீலர்.
ஐயா! இங்கே சுற்றி பன்னிரண்டு யோஜனை வரை தீர்த்தம் கிடையாது!” என்றது பிரம்மராக்ஷசன். "அப்படியானால் உன் புத்திரர் பௌத்திரர் இருக்குமிடத்தைக்கூறு. அவர்கள் மூலம் உனக்கு நற்கதி தேடுகிறேன்" என்றார் ஸுஸீலர். ஸ்வாமி! அந்த துக்கத்தை ஏன் கேட்கிறீர்கள்? கோகர்ண க்ஷேத்திரத்திலே என் புத்திரர் நால்வரும் என்னைப்போலவே பாபம் செய்து இறந்தனர். எங்கு எப்படி இருக்கிறார்களோ? அவர்களது ஐந்தாம் தலை முறையில் பாஷ்கல் என்று ஒருவன் கர்ணிகனாக இருக்கிறான். அவனால் எனக்கெப்படி நற்கதி கிடைக்கும்?”
"அஞ்சாதே! உனக்கென்ன? நான் அங்கு சென்று அவன் மூலமாக உனக்கு இத்துக்கம் அகன்று ஸத்கதி வரும்படிச் செய்கிறேன்" என்று ஸுஸீலர் கோகர்ணம் சென்று அவனைக்கண்டு பிடித்து தான் கண்டதை கூறினார். பாஷ்கலியும் அவர் சொல்படி மாக மாஸம் வந்த போது முப்பது நாளும் ஸ்நாநம் தானம் செய்தான். முடிவன்று கரு வேங்கை மரம் முறிந்து பிரம்மராக்ஷச ஸ்வரூபமும் அகன்று அவன் (பிரம்மராக்ஷசன்) வைகுண்டம் சென்றான்.



Monday, December 28, 2009

மாகபுராணம் 6




6. சுமந்தனும் குமுதையும் மாக மஹிமை பெற்றது.

ஆந்த்ர தேசத்திலே ஸுமந்தன் என்றோர் நான்காம் வர்ணத்தவன் இருந்தான். அவன் உழவு தொழிலாலும் வட்டியாலும் நிறைய பொருளைத்தேடி பூமியில் புதைத்து வந்தான். மேல் மேலும் பொருளைத் தேடி பொருள் சேர்ப்பதிலேயே கருத்தாக இருந்தானே தவிர தானம், தர்மம், பூஜை ஸ்நாநம் முதலிய நற்கருமம் செய்வதில்லை. அவனது குமுதா எனும் மனைவியோ நல்லெண்ணமுள்ளவள். "ஏழைகளுக்கு தானமளி, கோவில் குளம் போவோம்" என்றாள். அதை அவன் கேட்பதில்லை. ஒரு நாள் இரவு கடும் மழையில் நனைந்து குளிரால் நடுங்கி நள்ளிருட்டில் ஒரு ஸாது அவர்கள் வீட்டிற்கு வந்து படுக்க இடம் தரும்படி வேண்டினார். குமுதா அவர் நிலையை கண்டு வருந்தி பசு கொட்டகையை சுத்தம் செய்து அங்கு புதிய படுக்கையையும் வஸ்த்ரத்தையும் கம்பளத்தையும் அளித்து தீ மூட்டி குளிரை அகற்றி, பாலைக்கறந்து காய்ச்சி குடிக்கும்படி செய்தாள். சு2சிவ்ரதர் என்ற அவர் மனங்குளிர அவளை ஆசிர்வதித்து பகவான் நாமாவைக் கூறிக்கொண்டே உறங்கினார்.

அதி காலையில் எழுந்து நாம ஸ்மரணம் செய்து நாம ஜபம் செய்து கொண்டே புறப்பட்டார். குமுதா அவரை வணங்கி "தாங்கள் யார்? எங்கே சீக்கிரமாக கிளம்பிவிட்டீர்கள்?” என்றாள். "நான் துங்கபத்ராவாசி. ஸ்ரீரங்கம் சென்று காவேரியில் மாகஸ்நாநம் செய்வதற்காக செல்கிறேன்" என்றார். "மாகஸ்நானம் என்றால் என்ன? அதனால் நமக்கு உண்டாகும் பலனென்ன?” என்று அவள் கேட்க சு2சிவ்ரதர் கூறினார்:

"மாகமாஸம் முப்பது நாட்களிலும் புண்ய தீர்த்தங்களில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்தால் நாம் செய்த ஸகல பாபங்களுமகலும். இப்பிறவியில் இறந்த பின்னும் சுகமுண்டாகும். மாகஸ்நானம் செய்யாதவர் நரகம் செல்வர். பிரயாகை, க்ருஷ்ணவேணி, காவேரீ, ரேவா, துங்கபத்ரா, கோகர்ணம், ப்ரபாஸம், தாம்ரபரணீ முதலிய புண்ய தீர்த்தங்களில் மாகஸ்நாநம் செய்தால் விஷ்ணு லோகம் சென்று ஸாயுஜ்யமுக்தி பெறுவான். வேறு எந்த நதியோ, குளமோ, ஏரியோ கிடைத்தாலும் கட்டாயம் அதில் ஸ்நாநம் செய்யவேண்டும். பக்தியுடனோ பலாத்காரத்தாலோ தெரியாமலோ மாகஸ்நாநம் செய்தால் கூட முக்தி பெறுவது நிச்சயம்!” என்றார். இதைக்கேட்ட குமுதா அவரைத் துதித்து "ஐயா! நானும் தங்களுடன் வந்து இன்று அருகிலுள்ள தடாகத்தில் ஸ்நாநம் செய்கிறேன்!” என்று அவருடன் புறப்பட்டாள். இதை அறிந்த ஸுமந்தன் கோபம் கொண்டு "குளிரில் முழுகாதே!" என, அவளை மிரட்ட அடிப்பேனென அவளருகே வந்தான். அதற்குள் அவள் வேகமாக சென்று நீரில் ஒரு முழுக்குபோட்டாள். கணவன் கரையிலிருந்தே அவளை கையைப்பிடித்து இழுத்தான். அவள் எப்படியாவது கணவனும் ஸ்நாநம் செய்யட்டுமென அவன் கையை பிடித்திழுத்து ஜலத்தில் முழுகச்செய்தாள். இருவருமொரு வழியாக ஸ்நாநம் செய்து வீட்டிற்குச் சென்றனர். இந்த வேடிக்கையைப் பார்த்து சு2சிவ்ரதரும் மாகஸ்நாநம் செய்து சென்றார். சில நாட்கள் சென்றபின் ஸுமந்தனும் அவன் மனைவியும் இறந்தார்கள்.

யம கிங்கரர்கள் வந்து பாபியான ஸுமந்தனை பாசத்தால் கட்டி இழுத்துச்சென்றனர். வைகுண்டத்தில் இருந்து திவ்ய விமானம் வந்து குமுதாவை அழைத்தனர். அவள் "தேவ கிங்கரர்களே! எனது பதி யாதொரு தர்மமும் செய்யவில்லை. அவரது சேர்க்கையால் நானும் ஒரு தர்மமும் செய்யவில்லையே? என்னை மாத்திரம் ஏன் வைகுண்டத்திற்கழைக்கிறீர்கள்? அவரை விட்டுவிட்டு நான் மட்டும் வருவது நியாயமா?” என்றாள். "குமுதா! நீ மாக மஹிமையை கேட்டு புருஷன் தடுத்தும் ஒரு ஸ்நாநம் செய்துவிட்டாய். அதற்கு பலன் வைகுண்டம்" என்றனர் விஷ்ணு தூதர். "ஐயா! அவர் என்னை கரைக்கு இழுக்க நான் அவரை ஜலத்தில் இழுக்க, இருவருமே ஸ்நாநம் செய்தோமே.விருப்பின்றியோ பலாத்காரத்தாலோ ஸ்நாநம் செய்தாலும் வைகுண்டம் கிட்டும் என்றாரே சு2சிவ்ரதர்?” என்றாள்.

சித்ரகுப்தனிதைக்கேட்டு "ஸுமந்தனும் மாக ஸ்நாநம் செய்தவனாவான், . அவனையும் வைகுண்டம் அனுப்புங்கள்" என யமக்கிங்கரருக்கு உத்தரவிட்டார். இருவரும் வைகுண்டம் சென்றனர். ஸங்கமே கூடாது. அவஸ்யமானால் ஸத்துக்களுடன் ஸங்கம் வேண்டும். சுசிவ்ரதர் எனும் சாதுவின் சங்கத்தால் ஸுமந்தனும் வைகுண்டம் சென்றான். விருப்பமின்றி பலாத்காரத்தால் ஒரு முறை ஜலத்தில் வீழ்ந்ததே வைகுண்டமளித்தது. விதிப்படி 30 நாளும் ஸ்நாநம் செய்து பழமோ, தாம்பூலமோ தேங்காயோ வஸ்த்ரமோ, கம்பளமோ தானம் செய்தவர் பற்றி கூறவும் வேண்டுமா?



Saturday, December 26, 2009

விசாரசங்கிரஹம் -8



13. கருமங்களில் ப்ரவிருத்திக்கும்கால் இக்கருமத்தை செய்யும் கர்த்தாவும் இக்கரும பலனையநுபவிக்கும் போக்தாவும் நாமல்ல. இது திரிகரணங்களின் சேஷ்டையாகும் என்ற பாவத்துடனிருக்கலாமா?

ஆத்ம தேவதையாகிய தன்னிடத்திலிருத்தியதும் எப்போதும் அதை விட்டு நீங்காமல் வ்யவஹாரங்களில் உதாசீன பாவத்துடனிருக்கிறதுமான மனது மேற்கூறியபடி சங்கற்பித்தல் கூடுமா? இப்படிப்பட்ட சங்கற்பங்களன்றோ பந்தம்? இவ்வித நினைவுகள் வாசனையால் வந்தாலும் மனதை நினைவின் வழி செல்ல விடாமல் தன்னிலையிலிருத்த முயல்வதோடு வ்யவஹாரங்களில் உதாசீன பாவத்தோடு மிருத்தல் வேண்டும். மனதில் இது நல்லதா? அது நல்லதா? இதை செய்யலாமா அதை செய்யலாமா வென்பதாகிய நினைவுகளுக்குமிடங் கொடாமல் அத்தகைய நினைவுகளேனுந் தோன்று முன்னரே ஜாக்கிரதையாய்த் தெரிந்து அதை தன்னிலையிலிருத்தி விட வேண்டும். கொஞ்சமிடங் கொடுத்தால் தனக்கு ஹிதமாயிருப்பவனைப் போலிருந்து கெடுதி செய்யும் ஹித சத்துருவைப்போல நம்மை தலை கீழாய்த் தள்ளிவிடும். தன்னை மறப்பதாலன்றோ இவ்வித நினைவுகள் தோன்றி மேன்மேலும் அனர்த்தமுண்டாக்குகின்றன? விவேகத்தால் “நானொன்றும் செய்யவில்லை. எல்லாம் கரணங்களின் சேஷ்டைகளே” என்று சங்கற்பித்தல் வாசனையாகிற நினைவின் வழி செல்லும் மனதைத் தடுத்தற்குரிய உபாயமேயென்றாலும் நினைவின் வழி சென்றாலன்றோ முற்கூறியபடி தடுக்க வேண்டும்? தன்னிலையிலிருக்கின்ற மனது நானென்றும் எனக்கு வ்யவஹாரமிருக்கிறதென்றும் சங்கற்பிக்குமா? எவ்விதத்திலும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிய தன்னை மறவாதிருக்கவே முயற்சிக்க வேண்டும். அது ப்ராப்தியானால் எல்லாம் சித்தியாகும். மற்றெவ்விஷயங்களிலும் மனத்தைச்செலுத்த வேண்டாம். பித்தனைப்போல் கர்மத்தால் நேரிட்ட வ்யவஹாரங்களை செய்தாலும் நான் செய்கிறேன் என்ற நினைவு வராமல் தன்னிலையிலேயே மனதை வைத்திருக்க வேண்டும். உதாசீன பாவத்துடன் எத்தனையோ பக்தர்கள் எவ்வளவோ வ்யவஹாரங்களை செய்திருக்கவில்லையா?
=
கருமங்களில் ஈடுபடுகிறப்ப இதை செய்கிறவனும் இதோட பலனை அனுபவிக்கிறவனும் நானில்லைன்னு நினைப்போட இருக்கலாமா? இது திரிகரணங்களின் சேஷ்டையாகும் என்ற பாவத்துடனிருக்கலாமா?

3 ஆவது கேள்விக்கு பதிலில் சொன்னபடி விசாரிச்சு ஆத்ம தேவதையாகிய தன்னிடத்தில தன்னை இருத்தியதும், எப்போதும் அதை விட்டு நீங்காமல் வியவகாரங்களில கண்டுக்காம உதாசீனத்தோட இருக்கிற மனசு மேலே சொன்னபடி சங்கற்பிக்குமா? இப்படிப்பட்ட சங்கற்பங்கள்தான் பந்தம். இவ்வித நினைவுகள் வாசனையால வந்தாலும், மனதை அந்த வழியில செல்ல விடாம, தன்னிலையில இருத்த முயற்சி செய்வதோடு வியவகாரங்களில உதாசீன பாவத்தோடும் இருக்கணும். மனசில இது நல்லதா? அது நல்லதா? இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்பதாகிய நினைவுகளுக்கும் இடம் கொடாமல் அத்தகைய நினைவுகள் ஏதேனும் தோன்று முன்னரே ஜாக்கிரதையாய்த் தெரிந்து அதை தன்னிலையில இருத்தி விடணும். கொஞ்சம் இடம் கொடுத்தால் கூட தனக்கு ஹிதமா இருப்பவனைப் போல இருந்து கெடுதி செய்யும் ஹித சத்துருவைப்போல, நம்மை தலை கீழாய்த் தள்ளிவிடும். தன்னை மறப்பதாலதானே இந்த மாதிரி நினைவுகள் தோன்றி மேன்மேலும் அனர்த்தம் உண்டாகுது? விவேகத்தால் "நான் ஒண்ணும் செய்யலை. எல்லாம் கரணங்களின் சேஷ்டைகளே" என்று சங்கற்பிக்கிறது வாசனையாகிற நினைவோட வழில போற மனசை தடுக்க நல்ல உபாயமே. அப்படின்னாலும் நினைவின் வழி போனாதானே முன்னே சொன்னபடி தடுக்கணும்? தன்னிலையில இருக்கிற மனசு நான் ன்னும் எனக்கு வ்யவஹாரம் இருக்குன்னும் சங்கற்பிக்குமா? எந்த விதத்திலும் மெல்ல மெல்ல ஈச்வரனாகிய தன்னை மறக்காம இருக்கவே முயற்சிக்கணும். அது கிடைச்சால் எல்லாம் சித்தியாகும். வேற எந்த விஷயங்களிலும் மனத்தைச் செலுத்த வேண்டாம். பைத்தியக்காரன் ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பான் இல்லையா? அவனைப்போல கர்மத்தால் நேரிட்ட வியவகாரங்களை செய்தாலும் நான் செய்யறேன் என்ற நினைவு வராமல் தன்னிலையிலேயே மனதை வைத்திருக்க வேண்டும். உதாசீன பாவத்துடன் எத்தனையோ பக்தர்கள் எவ்வளவோ வியவகாரங்களை செய்திருக்கவில்லையா?



Friday, December 25, 2009

மாகபுராணம் 6



தவளைக்கு நற்கதி:
அரசனும் சிஷ்யர்களும் கௌதமருடன் மாகஸ்நானம் செய்தனர். ஒரு நாள் முனிவர் புராணம் கூறிக்கொண்டு இருக்கும்போது அரசமரப் பொந்திலிருந்து ஒரு தவளை கத்திக்கொண்டே கீழே விழுந்து புரண்டது. ஒரு நிமிஷத்துக்குள் அது இறக்க அங்கிருந்து ஒரு திவ்ய ஸ்த்ரீ தோன்றி நின்றாள். எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். அவள் ஓர் ரிஷி ஸ்த்ரீ போல் மரவுரி உடுத்தி அச்சம், நாணம், அடக்கம் முதலிய நற்குணங்களுடன் உடல் நடுங்க எவரையும் பார்க்காமல் தனது பாதத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். கௌதமர் அவளைப்பார்த்து ”அம்மா அஞ்சாதே! ஏன் பயப்படுகிறாய்? நீ யார்? ஏன் இந்த தவளை சரீரம் பெற்றாய்? தெரிந்தால் சொல்” என கேட்க முனி பத்னி கூறுகிறாள்.

மண்டூகத்தின் முற் பிறவி.
மஹர்ஷே! யான் முற்பிறவியில் ஞான சித்தி என்னும் முனிவரின் புத்ரீ. ப்ரக்ஞமுனி என்பவரின் தர்ம பத்னீ. காவேரீ தீரத்தில் வசித்து வந்தேன், மாக மாஸம் நேர்ந்த போது எனது பதி அதன் பெருமையை விளக்கி ப்ராதஸ்நானம் செய். வீட்டிற்கும் ஸ்வாமி ஸன்னதிக்கும் பசும்சாணத்தால் மெழுகி கோலம் போடு. நான் செய்யும் பூஜைக்கு பணிவிடை செய். சுசியாக பாகம் செய்து தூப தீபாதிகளையும் அளி. விஷ்ணோ, க்ருஷ்ணா, முகுந்தா என்று பகவன் நாமாவை கூறு. பகவானே மாக மாதமாய் இருப்பதால் அச்சமயம் அவரை அர்ச்சித்து அந்த தீர்த்தம் அருந்து, காம குரோதங்களை விட்டுவிட்டு பூஜை ஸ்நாநம் கதாஸ்ரவணம் செய்வோர் நற்கதி பெறுவர் என பலவாறு கூறினார்.
பதி கூறியது எனக்குப்பிடிக்கவில்லை. ”மாகமாவது ஸ்நானமாவது! குளிர் எடுக்கிறது! பிராணனே போகும் போல் பனி பல்லைக்கிட்டுகிறது. என்னால் எழுந்திருக்கவே முடியாது. ஸூர்யன் உதித்து வெயில் உறைத்த பின்தான் எழுந்திருப்பேன்” என்றேன். அவர் சாந்தரானாலும் கோபம் வந்து என்னை தவளையாகப்போ என்று சபித்தார். “தர்மமில்லா புத்திரனையும், பதியை எதிர்த்து அப்ரியமாக பேசும் மனைவியையும் பிராம்மணனை ஆதரிக்காத அரசனையும் சாபத்தால் தண்டிக்க வேன்டும் என சாஸ்திரம். அதனால் நீ தவளை ஆவாய்!” என்று சாபமளித்தார். நான் எவ்வளவு வேண்டியும் அவர் மனம் இரங்கவில்லை. ஆனால் கௌதமரை தர்சித்தபின் ஸ்வரூபத்தை அடைவாய் என்றார். அப்படியே நீரில் உள்ள தவளையாகக்கூட இல்லாமல் கரையில் வசிக்கும் தவளையாகி என் மலத்தையே நான் புஜித்துக்கொண்டிருந்தேன். உமது அருளால் சாபமகன்றது என்றாள்.
"அம்மா! குளிருக்கு பயந்த உன்னை நீரில் இல்லாத கேவலமான ஸ்தல தவளை ஆக்கினார். இங்கு நடக்கும் மாகஸ்நாந புரண ஸ்ராணாதிகளால் உனது பாபமகன்றது. பதியே விஷ்ணு! பதியே சிவன்! பதி சொல்லைத் தட்டலாகாது. பதி கூறிய தர்மத்தை விட்டு வேறு எதைச் செய்தாலும் ஸதி அதன் பலனை பெற மாட்டாள். நரகத்தையும் அனுபவிப்பாள். பதியில்லா ஸ்த்ரீ குருச்சொற்படி நடக்க வேண்டும். பதியின் பாத ஜலமே கங்காதி சர்வ தீர்த்தங்களாகும். க்ருஷ்ணவேணியில் மாக ஸ்நானம் செய்து ஸப்தமீ, தஸமீ, பௌர்ணமி, ப்ரதிபத் இந்த நாட்களிலாவது பூஜை, புராண ஸ்ராவணம் செய்தால் ஸகல பாபங்களுமகலும். இந்த நாட்களில் காலையில் பதினெட்டு அபூபம், பூரி இவைகளை புது முறத்தில் வைத்து தானம் செய்தோர் ராஜ போகத்தை பெறுவர் என்றார்.
முனி பத்னியும் அங்கு மாக ஸ்நாநம் புரண ஸ்ரவணம் செய்து வைகுண்டம் சென்றாள்.



Wednesday, December 23, 2009

விசாரசங்கிரஹம் -7



12.பிராரப்தாநுசாரமான வ்யவகாரங்களை செய்ய வேண்டியிருக்கிற மனதிற்கு வ்யவகார நிலையிலேயே முற்கூறிய சொரூபாநுபவம் வாய்க்குமா?

ப்ராஹ்மணன் என்ன வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாலும் அவன் மனத்தில் ப்ராஹ்மணனென்னும் பாவம் எப்படியோ அப்படியே எந்த வ்யவகாரங்களிரிருந்தாலும் தேகாதிகள் நானெனத் தோற்றாமல் ஆன்மா நானென்னுந் திடபாவம் வரவேண்டும். மனம் தன் நிலையை விட்டுப் பஹிர் முகப்படுமானால் உடனே "ஓ ஓ! தேகாதிகள் நாமல்லவே! நாமார்?” என்னும் விசாரத்தால் மறுபடியும் தன்னிலையிலேயே யிருத்த வேண்டும். நானாரென்னும் விசாரம் சர்வ துக்க நிவிருத்திக்கும் பரமானந்த ப்ராப்திக்குமான முக்கிய ஹேது. இப்படித் தன்னிலையில் மனம் அடங்க அடங்க, யாதொரு தடையுமில்லாமல் சொரூபானுபவம் தானாகவே வாய்க்கும். அப்பால் விஷய துக்கங்கள் மனதில் தாக்கா. எல்லாம் ஸ்வப்நம் போல் பற்றற்றுத் தோன்றும். எப்போதும் சர்வ பரிபூரணமாயுள்ள ஸ்வாத்ம பாவனையை மறவாதிருத்தலே முடிவான பக்தியும் யோகமும் ஞானமும் மற்றுமுள்ள எல்லா தபசுகளுமா மென்று பெரியோர் கூறுகின்றனர்.

பிறந்துட்டோம். வேற வழியில்லை. கர்மாவை அனுபவிச்சே தீர்க்கணும். பிராரப்தம் அப்படி இருக்கு. அதுக்கு தகுந்தபடி வ்யவகாரங்களை செய்ய வேண்டியிருக்கிற மனசுக்கு வ்யவகார நிலையிலேயே முன்னே சொன்ன சொரூபாநுபவம் வாய்க்குமா?

ஒத்தன் என்ன வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாலும் மேடையிலே ஜாதி இல்லைன்னு பேசினாலும் அவன் மனசில நான் இன்ன ஜாதி என்கிற பாவம் எப்படி போகாம இருக்குமோ, அப்படியே எந்த வ்யவகாரத்திலே இருந்தாலும் தேகம் முதலானது நான் ந்னு தோணாம ஆன்மா நான் என்கிற திடபாவம் வரணும். மனம் அந்த தன் நிலையை விட்டு வெளியே போகுமானால் உடனே "ஓ ஓ! தேகம் முதலானதெல்லாம் நாம இல்லையே! நாம் யார்?” என்கிற விசாரத்தால மறுபடியும் தன்னிலையிலேயே அதை கொண்டு வரணும். நான் யார் என்கிற விசாரம் எல்லா துக்கங்களும் போவதற்கும், பரமானந்தம் கிடைக்கவும் முக்கிய ஹேது. இப்படித் தன்னிலையில் மனம் அடங்க அடங்க, யாதொரு தடையுமில்லாமல் சொரூபானுபவம் தானாகவே வாய்க்கும். அதுக்கு அப்புறமா விஷய துக்கங்கள் மனசில தாக்கா. எல்லாம் கனவு போல பற்று இல்லாம தோணும். எப்பவும் சர்வ பரிபூரணமா இருக்கிற ஸ்வாத்ம பாவனையை மறக்காம இருக்கிறதே முடிவான பக்தியும் யோகமும் ஞானமும் மத்த எல்லா தபசுகளுமாம் ன்னு பெரியவங்க சொல்கிறாங்க.


விசார சங்க்ரஹம் 6




11.சதா சலனத்தையே வடிவாகவுடைய மனத்திற்குச் சொரூபாவநுபவங் கூடுமா?

மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவமாகலானும் அது ஆகாசத்தைப் போன்று ஸ்வச்சமாயும் நிர்மலமாயுமிருத்த லானும் மனமென்பது உண்மையில் ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனமென்னும் பெயருமில்லை. ஒன்றை இன்னொன்றாக அறியும் விபரீத ஞானமே மனமெனப்படுகிறது. ஞான மாத்திரமாக விருந்த சுத்த சத்துவ மனதானது தன் ஞான சொரூபத்தை மறந்த அவித்தையால் தானே தமோ குணவசத்தாய் உலக ரூபமாகப் பரிணமித்து ரஜோ குண வசத்தாய் தேகாதிகள் நானென்றும் உலகம் சத்தியமென்றும் பாவித்து இதன் மூல முண்டாகும் ராக த்வேஷாதிகளால் புண்ணிய பாப கர்மங்களை சம்பாதித்து அவ்வாசனையால் ஜனனமரணங்களை யடையும். அநேக ஜன்மங்களிற் செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால் மலம் (பாபம்) நீங்கின மனமானது சற்குரு மூலமாய் சிரவண மனனங்களியற்றி நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது அஹம் ப்ரஹ்மமென்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் சஹஜ ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனம் செய்யவே மனதின் தமோகுண ரூபமான உலகாகார பரிணாமமடைதலும் ரஜோ குண ரூபமான அவற்றிலுள்ள சலனமும் நீங்கும். நீங்கவே மனம் சூக்ஷ்மமும் நிச்சலமுமாகும். ஸ்தூலமான (பெரிய) கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிடக் கூடாதது போலவும் காற்றினால் அதிக சலனமாகவுள்ள தீபத்தால் அதி சூக்ஷ்மமான வஸ்துக்களின் லக்ஷணங்களை நிர்ணயிக்கக்கூடாதது போலவும் ஸ்தூலமாகவும் சலனமாகவுமுள்ள ரஜோதமோ குண வசத்தான அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமான வஸ்துவை அனுபவித்தல் கூடாதே யொழிய முற்கூறியபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் ஆவிர்பவிக்கும். (தோன்றும்). மனமின்றி அனுபவம் கூடாதாகையால் அதி சூக்ஷ்மமான விருத்தியோடுங்கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது தான் பிரஹ்ம சொரூபமாயிருப்பது நன்றாய் அனுபவமாகும்.


மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவம். அது ஆகாசத்தைப் போல ஸ்வச்சமாயும் நிர்மலமாயும் இருக்கு. மனமென்பது உண்மையில ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனம் ன்னு பெயருமில்லை. ஒண்ணை இன்னொண்ணா அறிகிற விபரீத ஞானமே மனம் எனப்படுவது. ஞான மாத்திரமாக இருந்த சுத்த சத்துவ மனசு, தன் ஞான சொரூபத்தை அவித்தையால மறந்துடும். தானே தமோ குணவசத்தால உலக ரூபமாகப் பரிணமிக்கும். ரஜோ குண வசத்தால தேகாதிகள் நானென்றும், உலகம் சத்தியமென்றும் பாவிக்கும். இதன் மூலம் உண்டாகும் ராக த்வேஷம் முதலானவைகளால் புண்ணிய, பாப கர்மங்களை சம்பாதிக்கும். அந்த வாசனையால் ஜனன மரணங்களை அடையும். அது சரி, இதிலேந்து எப்படி விடுபடும்?
அநேக ஜன்மங்களில செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால மனசோட அழுக்கு நீங்கும். சற்குரு மூலமாய் சிரவண, மனனங்கள் இயற்றும். நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது "நான் ப்ரஹ்மம்" என்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் இயல்பான ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனத்தை செய்யும். மனதின் தமோகுண சொரூபம் உலகங்களாக பரிணாமம் அடைவது. அதன் ரஜோ குண ரூபம் அவற்றிலுள்ள சலனம். இவை நிதித்தியாசனம் செய்யவே நீங்கும். மனம் சூக்ஷ்மமாகும்; நிச்சலமுமாகும்.
எல்லாத்துக்கும் பொருத்தம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? காலிலே குத்தின முள்ளை எடுக்க கட்டப்பாரையால் குத்த மாட்டோம். பெரிய கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிட மாட்டோம். அது போல காற்றினால அதிக சலனமாக இருக்கிற தீபத்தால அதி நுட்பமான பொருட்கள் எப்படி இருக்குன்னு ஆராய மாட்டோம். அதே போல பருமனாகவும் சலனமாகவும் இருக்கிற ரஜோ, தமோ குண வசத்தில விழுந்துவிட்ட அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமா இருக்கிற வஸ்துவை அனுபவிக்க முடியாது. முன்னே சொன்னபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் தோன்றும். மனமின்றி அனுபவம் எப்படி கூடும்? அதனால அதி சூக்ஷ்மமான விருத்தியோட கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது பிரஹ்ம சொரூபமா தான் இருக்கிறது நல்லா அனுபவமாகும்.

Monday, December 21, 2009

மாகபுராணம் 5



4. நாயும் நற்கதி பெற்றது: வங்கராஜ சரிதம்:
முன்னொரு சமயம் கௌதம முனிவர் சிஷ்யர்களுடன் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிக் கிருஷ்ணவேணி தீரம் சென்றார். மாக மாசம் வரை அங்கு தங்கி ஸ்நானம் செய்து அச்2வத்த விருக்ஷத்தினடியில் தசமியன்று விதிப்படி பூஜை செய்து புராணம் கூறினார்.

ஒரு நாய் அருகில் வர சிஷ்யர்கள் அதை ஓட்டினர். அது வெளியே ஓடாமல் அம்மரத்தைச் சுற்றிச் சுற்றி மூன்று வலம் வந்தது. ஸாதுக்களின் தர்சனத்தாலும் மாக மாஸ தசமீ பூஜா தர்சனத்தாலும் பிரதக்ஷிணத்தாலும் நாயின் பூர்வ ஜன்ம பாபமகன்றது. உடனே கீழே விழுந்து அது உடலை விட அங்கிருந்து ஒரு ராஜ புருஷன் எழுந்து கௌதமரை வணங்கி நின்றான்.
கௌதமர் "நாயுருவிலிருந்து திவ்ய தேகம் பெற்ற நீ யார்?” என்று கேட்க

"மஹர்ஷீ! யான் வங்க நாட்டை ஆண்ட வேகரதன் என்ற அரசன். மநுநீதி தவறாமல் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து துலா புருஷதானம் முதல் சகல தானங்களையும் செய்தேன். பல யக்ஞங்கள், குளம் வெட்டுதல், விருக்ஷம் வளர்த்தல் முதலிய பூர்த்த தர்மங்களையும் செய்து வந்தேன்.”
"ஒரு நாள் பைங்கலர் என்ற முனிவர் யாக தக்ஷிணை கேட்பதற்காக என்னிடம் வந்தார். அவரைத் தக்கபடி அர்ச்சித்து தர்மோபதேசம் செய்யும்படி வேண்டினேன். அவர் "மாக மாஸ விரதம் ஸகல தமங்களிலும் சிறந்தது. சிறிது சூர்யோதயம் ஆகும்போது பிராதஸ்நானம் செய்தால் விஷ்ணு லோகம் செல்வர். மாகமாஸ பாநுவாரம், ஸப்தமீ, தசமீ இந்த தினங்களில் செய்யும் ஸ்நாநம் அபரிமிதமான பலன்களை கொடுக்கும். மாக மாஸத்தில் ஒரு நாளாவது பிராதஸ்நானம் செய்யாவிடில் சண்டாள ஜன்மமெடுப்பான். குளிர் பயத்தால் ஸ்நாநம் செய்யாமல் மற்றவைகளை எல்லாம் செய்தாலும் அவன் உத்தமனாயினும் நீச பிறவியே பெறுவான்" என்றார்.
இதைக்கேட்ட நான் "ஸ்வாமின்! மாகமாதம் காலை பனியில் ஒரு நாள் ஸ்நாநம் செய்தால் கூட எனக்கு சீ2தோபாதையால் நோய் உண்டாகும். இறக்கவும் நேரிடும். சரீரமிருந்தால் அல்லவா தான தர்மங்களை செய்யலாம்? மற்ற சகல தான தர்மங்களை செய்கிறேன்" என்றேன். மஹர்ஷி என்னிடம் கோபம் கொண்டு நான் தருவதாக சொன்ன தக்ஷிணையை வாங்கிக்கொள்ளாமல் கிளம்பினார். நான் பல முறை அவரை பணிந்து ஸமாதானம் செய்து தக்ஷிணையைக் கொடுத்து அனுப்பினேன். சில காலம் சென்றபின் நான் இறந்து பல நரகங்களை அனுபவித்து இருபத்து நான்காம் முறை நாயாகி இங்கே இறந்தேன். எனது துன்பத்துக்கும் இப்போது கிடைத்த இன்பத்துக்கும் காரணம் யாதென தாங்கள்தான் கூற வேண்டும்" என கௌதமரை வேண்டினான்.
அவர் ஞானதிருஷ்டியால் எல்லாம் உணர்ந்து கூறினார்: "மஹாராஜன்! மாகஸ்நானத்தின் பெருமையை பைங்கலர் பலவாறு கூறியும் அதை அவமதித்தாய். உனது சரீரத்தையே பெரிதாக எண்ணினாய். அதனால் இந்த துன்பத்தை அனுபவித்தாய். இது மாகமாதம் ஆனதால் நாங்கள் மாகஸ்நானம் செய்து திருவேணிக் கரையில் லக்ஷ்மீ நாராயண பூஜை செய்து புராண ஸ்ரவணம் செய்தோம். நீ நாய் உடலுடன் இங்கு வர, பூஜா காலத்தில் பாப பிறவியான நாயைப்பார்க்கக் கூடாதென்று சிஷ்யர் ஓட்ட, நீ ஆங்காங்கு ஓடி படுத்து, உன்னை அறியாமலே மூன்று முறை ஸ்வாமியை வலம் வந்தாய். அதனால் பாபமெல்லாம் அகன்று நற்கதியினை பெற்றாய்" என்றார். மாக ஸ்நாந பெருமையை உணர்ந்து "இப்போதாவது உங்களுடன் ஸ்நானாதிகளை இங்கிருந்தே அனுஷ்டிக்கிறேன்!” என வேகவிரதன் அங்ஙனமே செய்து வந்தான்.


விசார சங்க்ரஹம் 5



10.சர்வ பிரபஞ்சமும் மனதின் சொரூபமே யெனின் பிரபஞ்சம் பொய்யென்றல்லவோ ஏற்படுகிறது? அப்படியானால் பிரபஞ்சத்திற்கு வேதத்தில் ஸ்ருஷ்டி கூறப்பட்டிருப்பதேன்?
ப்ரபஞ்சம் சுத்தப்பொய்யே யென்பதிற் சம்சயமில்லை. பொய்யான வுலகத்தைப் பொய்யாக்கி மெய்யான ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் முக்கிய கருத்து. இது பற்றியே வேதங்கள் உலகிற்கு ஸ்ருஷ்டியை அங்கீகரித்தனவேயன்றி வேறில்லை. மேலும் மந்தாதிகாரிகளுக்கு க்ரம ஸ்ருஷ்டியால் ப்ரஹ்மத்தில் ப்ரக்ருதி, மகத்தத்வம், தன் மாத்திரை, பூதம், உலகம், தேகமாகிய இவை கிரமமாக வுண்டாகின வென்றும்; தீவிர அதிகாரிகளுக்கு யுகபத் ஸ்ருஷ்டியால் ஆன்மாவாகிய தன்னை யறியாத தோஷத்தினாலுண்டான தனது நினைவுகளாலேயே சொப்னம் போன்று இவ்வுல குண்டாயிற்றென்றும் கூறும். இங்ஙனம் உலக ஸ்ருஷ்டியைப் பலவிதங்களாகக் கூறுவதிலிருந்தே எப்படியேனும் ப்ரபஞ்சத்தைப் பொய்யென்று சாதித்து ப்ரஹ்மத்தை அறிவிப்பதிலேயே வேதத்தின் தாத்பர்யமென்பது பெறப்படும். ஜகம் மித்தையென்பதை சொரூபானந்த வநுபவரூப அநுபூதி நிலையில் எல்லாரும் பிரத்யக்ஷமாகவே அறியலாம்.

பிரம்மத்தைத்தவிர வேற ஒண்ணுமில்லை. அப்ப இந்த பிரபஞ்சம் பொய்தானே? அப்படிப்பட்ட பிரபஞ்சத்தை ஏன் வேதத்திலே எப்படி பிறந்ததுன்னு விவரிச்சு இருக்கு?
வேதத்தின் முக்கிய நோக்கம் பொய்யான உலகத்தை பொய்ன்னு சொல்லி உண்மையான பிரம்மத்தை காட்டுவதே! ஆனா நடைமுறையை கருதி ஆன்மீகத்தில அதிகமா முன்னேறாதவங்களுக்கு ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி ந்னு வரிசையா சொல்லி இருக்கு. விஷயம் புரிஞ்சுக்ககூடிய தீவிர அதிகாரிகளுக்கு நினைவுகளாலேயே ஒரேயடியா பிரபஞ்சம் உண்டாச்சுன்னு சொல்லி இருக்கும். எப்படி இருந்தாலும் ஆன்ம அனுபூதி நிலையிலே எல்லாருமே ஜகத் பொய்ன்னு புரிஞ்சுக்கலாம்.



Thursday, December 17, 2009

மாகபுராணம்-4




4. தசமியில் லக்ஷ்மீ நாராயண பூஜை
மாக சுக்ல தசமியன்று ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணனை நதி தீரத்தில் அர்ச்சிக்க வேண்டும். கோமயத்தால் சுத்தம் செய்த இடத்தில் அஷ்டதள பத்மமமைத்து மேலே மண்டபாதி அலங்காரம் செய்ய வேண்டும். வஸ்த்ரத்துடன் கூடிய கலசத்தின் மீது சா2ளக்ராமத்தை வைத்து துளசியாலும் புஷ்பங்களாலும் ஆராதிக்க வேண்டும். பாயஸான்னம், பழம், அபூபம், தூப தீப, நீராஞ்சனம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் முதலியவற்றைக் கொண்டு நன்கு லக்ஷ்மீநாராயணனை அர்ச்சிக்க வேண்டும்.பன்னிரண்டு நாமாக்களைக் கூறி பன்னிரண்டு உபசாரங்களைப் புரிய வேண்டும்.

1.வைகுண்ட நாதாய ஸ்நாநம் ஸமர்ப்பயாமி
2.இஷ்டார்த்ததாயினே வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
3.ஜநார்த்தநாய உபவீதம் ஸமர்ப்பயாமி
4.கோவர்தனாய கந்தம் ஸமர்ப்பயாமி
5.பத்மாலயாபத்ரே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
6.ஆதித்ய வர்ச்சஸே தூபம் ஸமர்ப்பயாமி
7.ஸுரேச்2வராய தீபம் ஸமர்ப்பயாமி
8.கேச2வாய நைவேத்யம் ஸமர்ப்பயாமி
9.ஸுமுகாய தாம்பூலம் ஸமர்ப்பயாமி
10.விஷ்ணவே ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
11.ந்ருஸிம்ஹாய லக்ஷ்மீநாராயணாய நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
12.ராமசந்த்ராய ஜபம் ஸமர்ப்பயாமி

தாமிர பாத்திரத்திலுள்ள தீர்த்தத்தால் கீழ் வரும் மந்திரத்தைக் கூறி அர்க்யம் அளிக்க வேண்டும்.
ஸர்வ தேவ நிவாஸாய லக்ஷ்மீ நாராயணாய ச!
இதமர்க்யம் மயாதத்தம் ஸ்வீகுருஷ்வ ரமாபதே!!
பிரார்த்தனை
யன் மயா சரிதம் தேவ த்வாமுத்திச்2 ய மமப்ரபோ!
தத்ஸர்வம் ஸப2லம் க்ருத்வா ரக்ஷமாம் பக்த வத்ஸல !!

பிறகு தண்டுலம் (அரிசி), உப்பு, வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். மாக புராணம் ச்2ரவணம் செய்து அல்லது படித்து மாக ஸ்நான விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதனால் மேருமலைக்கு சமமான பாபங்களும் அகலும்.


Wednesday, December 16, 2009

விசார சங்கிரகம்-4



9.ஹ்ருதயம் ப்ரஹ்மத்தை யன்றி வேறில்லை என்பது எப்படி?

ஆன்மா ஜாக்ர, சொப்ன, சுழுப்திகளில் நேத்திரம், கண்டம், ஹ்ருதயமென்னும் ஸ்தான முன்னிலையாகப் போகங்களை புஜிக்கினும் அது தன்னுடைய முக்கிய ஸ்தானமாகிய ஹ்ருதயத்தை விட்டு எப்போதும் நீங்குகிறதில்லை. ஸர்வாத்மகமான ஹ்ருதய கமல மத்தியில் அதாவது மனாகாசத்தில் நானென்றும் அவ்வாத்ம ஜோதி பிரகாசிக்கிறது. இப்படி ஒவ்வொரு தேகத்திலும் விளங்குவதால் இதையே சாக்ஷி என்றும் துரியமென்றும் சொல்லுவார்கள். இந்த நானென்னும் ஜோதியின் அந்தர்கதமாய் ஸர்வதேகங்களிலும் நானனற்று விளங்கும் பரப்ரஹ்மமாகிற ஆத்மாகாசமே (ஞானாகாசமே) எதார்த்த வஸ்து. இதுவே துரியாதீதம். ஆகையால் ஹ்ருதய மென்பது ப்ரஹ்மத்தை யன்றியில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ப்ரஹ்மம் எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதயங்களிலும் ஆன்ம சொரூபமாக பிரகாசிக்கிற காரணத்தாலேயே பிரஹ்மத்திற்கு ஹ்ருதயம் என்றோர் பெயருண்டு.
__
விதம் படு முளத்தொறும் விசேடவறி வாயுற் றிதம்படுத லாலிதய மென்றிறை தன்னை.... - பிரம கீதை
விதம் படும் உளத்தொறும் விசேட அறிவாய் உற்று இதம் படுதலால் இதயம் என்று இறை தன்னை.... - பிரம கீதை
__
ஹ்ருதயம் என்பதன் பொருள் ஹ்ருத் + அயம் என்ற பிரிவால் ப்ரஹ்மமேயாகிறது. ஆன்ம சொரூப மாகப் பிரகாசிக்கும் பிரஹ்ம வஸ்துவானது எல்லா ஜீவர்களினுடைய ஹ்ருதய ஸ்தானத்தில் நிவஸிக்கின்ற தென்பதற்கு சர்வ ஜனங்களும் நான் நான் என்று மார்பை தொட்டுக் காட்டுவதே போதுமான சாட்சி.
===
நினைவு, கனவு, ஆழ் உறக்கம் என்கிற நிலைகளிலே கண், கழுத்து, இதயம் ந்னு ஆன்மாவுடைய இடத்தைச் சொன்னாலும் அது எப்பவும் ஹ்ருதயத்துல இருந்து கொண்டு வெளியுடன் தொடர்புலதான் இருக்கும். எல்லா ஆன்மாவும் இருக்கிற ஹ்ருதய கமலம், மனாகாசம் ந்னு பலவிதமா சொல்கிற இந்த இடத்தில ஆன்ம ஜ்யோதி பிரகாசிக்கிறது. இப்படி ஒவ்வொரு உடம்பிலும் இது இருக்கிறது. அதை சாக்ஷி ந்னும் துரியம்ன்னும் சொல்லுவாங்க.

இப்படி ஒவ்வொரு உடம்பிலும் உள்ளே இருக்கிறது ஆன்மாகாசம், ஞானாகாசம் என்கிற ஒரே பரபிரம்ம வஸ்துதான். இதனாலேயே பிரம்மத்துக்கு ஹ்ருதயம் ந்னும் பெயர்.
ஆர்டிக் முதல் அண்டார்டிக் வரை இருக்கிற எல்லா ஜனங்களும் நான் ந்னு சொல்கிறபோது கை தானியங்கியா மார்கிட்டேதான் போகும்; தன் ஹ்ருதயத்தைத்தான் சுட்டிக்காட்டறாங்க. யாரும் வயித்தையோ, கண்ணையோ காலையோ காட்டறாங்களா?


Tuesday, December 15, 2009

மாகபுராணம்-3




3.சிஷ்யனுக்கு ஸத்ய விரதர் உபதேசம்.

ஸுதேவரது சிஷ்யன், தான் குரு புத்ரியின் நிர்பந்தத்தால் அவள் இறந்தால் குரு சாபம் வருமே என அஞ்சி செய்யத்தகாத கார்யம் செய்ததைக்கூறி தனக்கு பிராயச்சித்தம் கூறும்படி வேண்டினான். ஸுதேவன் மனம் நொந்து உனது இச்சையின்றி பரேச்சையால் செய்த இந்த பாபம் அகல கங்கா தீரம் சென்று பன்னிரண்டாண்டு தவம்புரி என்றார். அங்ஙனமே சிஷ்யன் குருவை பணிந்து செல்லும்போது ஓராஸ்ரமத்தில் மஹரிஷிகள் பத்னியுடன் ஸ்நாநம் பூஜை முதலியன செய்து மணல் திட்டில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி நீங்கள் செய்யும் கர்மா யாது? அதை எப்படி அனுஷ்டிப்பது? என்று வினவினான்.
ஸத்ய விரதர் என்ற ரிஷி கூறினார்: இது மாக மாஸ விரதமெனப்படும். மாகமாஸம் முப்பது நாட்களிலும் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்து விஷ்ணுவைப் பூஜித்து மாக புராண ஸ்ரவணம் செய்தால் பிரம்ம ஹத்தி, பொய் சாக்ஷி கூறல், உத்யானத்தை அழிப்பது, பெண்ணை விற்பது, ஸேதுவை உடைப்பது, வேத பிராம்ஹணர் த்ரவ்யத்தை அபகரிப்பது, கொடுக்கிறேன் என்று கூறி கொடுக்காமல் இருப்பது, பெரியோரிடம் த்வேஷம், பூஜை வைச்வதேவமில்லாமல் உண்பது, அன்ய பித்ரு சேஷம் உண்பது, குருஸ்த்ரீ கமனம், கையில் தர்ப்ப பவித்ரம் இல்லாமல் சண்டாளர்களுடன் பேசுவது, சண்டாளன் தூர ஸ்த்ரீகளின் குரலை கேட்டுக்கொண்டே புசிப்பது, வேதமில்லா ஊரில் வசிப்பது, புராணம், விவாஹம் முதலியவைகளுக்கு விக்கினம் செய்வது, மாக விரதம்/ புண்ய தீர்த்த ஸ்நாநம் இல்லாமை, ஸதியை த்யாகம் செய்வது முதலிய மஹா பாதக உபபாதகங்களையும் நீக்கும் இந்த விரதம்.
இந்த மாஸத்துக்கு மாதவனே தேவன் ஆனதால் காலையில் ஸ்நாநம் செய்து, துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து தூப, தீப, நைவேத்யங்களை செய்து அவர் எதிரில் அமர்ந்து மாக மஹாத்மியத்தை கேட்க வேண்டும். சக்திக்கேற்றபடி ஸுவர்ணம், வஸ்த்ரம், அன்னம், பாயஸம் முதலியன தானம் செய்ய வேண்டும். மாக மாஸத்தில் கந்தமூலம், பழம் முதலியவைகளையே புஜித்து ஸ்நாந பலன் பூரணமாக கிடைக்கும்படி முடிவில் அன்னதானம் செய்தவர் மறு ஜென்மம் எடுக்க மாட்டார்" இதைக்கேட்ட சிஷ்யன் மூன்று நாள் அங்கிருந்து அவர்களுடன் மாக ஸ்நாநம், பூஜை, புராண ஸ்ரவணம் இவைகளைச் செய்தான். ஸத்யவிரதரை வணங்கி தான் இச்சை இல்லாமலே செய்த பாபத்தையும், குரு கூறிய பிராயச்சித்தத்தையும் கூறி கங்கைக்குப் புறப்பட்டான். ஸகல பாபங்களையும் போக்கி பக்தரிஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரும் சங்க சக்ர கதாபாணியும் லக்ஷ்மீ பதியாயுமுள்ள மஹா விஷ்ணுவை மனதிலே த்யானம் செய்து பன்னிரண்டாண்டுகள் கடுந்தவம் புரிந்தான் சிஷ்யன். மாக ஸ்நாநம் மாதவ பூஜை தவம் இவைகளால் பாபம் நீங்கி அவன் விஷ்ணு பதத்தை அடைந்தான்.

Monday, December 14, 2009

விசார சங்கிரகம்-3




7.மனம் புத்தி சித்தம் அகங்காரமாகிய இந்நான்கும் ஒரு பொருளேயென்றால் இவைகளுக்குத் தனித்தனி ஸ்தானங்கள் கூறப்படுவதேன்?
மனத்திற்கு ஸ்தானம் கண்டமென்றும் புத்திக்கு முகம் அல்லது ஹ்ருதயமென்றும்; சித்தத்திற்கு நாபி என்றும்; அகங்காரத்திற்கு ஹ்ருதயம் அல்லது சர்வாங்கம் என்றும் பலவிதங்களாகக்கூறி இருந்தாலும், இவற்றின் சமஷ்டியாகிற மனமென்னும் அந்தக்கரணத்திற்கு ஹ்ருதயமே ஸ்தானம் என்று சுருதிகளில் முடிவாக கூறியிருக்கிறது.

அது சரி, எல்லாம் ஒண்ணுதான்னா ஏன் தனித்தனியா இடம் சொல்லி இருக்கு?
நடைமுறையிலே பலதா சொன்னாலும் அந்தக்கரணத்தோட இடம் ஹ்ருதயம் ந்னு முடிவாக வேதத்திலே சொல்லி இருக்கு.

8.அகக்கரணமாவுள்ள மனமே ஜீவேச்வர ஜகத்ரூப சர்வதத்வாத்மனமாக விளங்குகிறது என்பது எவ்வாறு?

விஷயங்களையறிதற்கு சாதனமாய் இந்திரியங்கள் வெளியிலிருத்ததால் புறக்கரணம் என்றும் மனம் உள்ளிருத்ததால் அகக்கரணமென்றும் கூறப்பட்டாலும் தேகத்தை குறித்தே அகம் புறம் என்று சொல்லப்படுகிறதே அன்றி உண்மையில் உள் வெளி என்பதே இல்லை. ஆகாசத்தைப்போன்று ஸ்வச்சமாயிருத்தலே மனதின் சொரூபம். ஹ்ருதயமென்றும் மனமென்றும் சொல்லப்படுவது அந்தர்பஹிராய்த் தோன்றும் தத்துவங்களின் சேர்க்கையேயாம். ஆகவே சர்வ நாமரூபக்காட்சிகளும் மனோரூபமே என்பதில் சம்சயமில்லை. வெளியிற்றோன்றும் சகலமும் உள்ளேயே இருக்கிறதன்றி வெளியிலில்லை யென்பதை அறிவித்தற்கே வேதங்களிலும் எல்லாம் ஹ்ருதயாகாரமாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஹ்ருதய மென்பது ப்ரஹ்மத்தை யன்றி வேறில்லை.

மனசு அகக்கரணம் இல்லையா? இந்த மனசேதான் வெளியே இருக்கிற எல்லா ஜீவன்-ஈஸ்வரன், ஜகத், தத்துவங்கள் முதலான எல்லாத்துக்கும் காரணம் ன்னு ஏன் சொல்லறீங்க?
நாம விஷயங்களை தெரிஞ்சுக்க உதவும் கண் முதலானது வெளியே இருக்கு என்கிறதால நாம் அதை எல்லாம் புறக்கரணம் ந்னும் மனசு உள்ளே இருக்கிறதாலே அகக்கரணம் ந்னும் சொல்கிறோம். இதை உடம்பை ஆதாரமா வெச்சு உள்ளே, வெளியேன்னு சொல்கிறோம். ஆனா உண்மையிலே உள்ளேன்னும் ஒண்ணுமில்லை, வெளியேன்னும் ஒண்ணுமில்லை. மனசு ஆகாசம் போல தெளிவா இருக்கு. ஹ்ருதயம் என்கிறதும் மனசு என்கிறதும் உள்ளே/வெளியே வா தோன்றுகிற எல்லாம்தான். அதேதான் பிரம்மம்.


Saturday, December 12, 2009

மாகபுராணம்-2



புராணங்களில் சில இடங்களில் "இப்படியெல்லாம் இருக்கிறதே. இதை எல்லாம் சொல்ல வேண்டுமா?" என்று நினைக்கவைக்கும். முதலாவது உள்ளதை உள்ளபடியே சொல்வது அந்த கால பழக்கம். இப்போது காணப்படும் "puritanism" அப்போது இல்லை. இதை நினைவில் வைத்துக்கொண்டு மேலே படிக்கலாம்.

2.மாக கௌரீ பூஜை மஹிமை:
ஸௌராஷ்ட்ர தேசத்திலே ப்ருந்தாரக என்ற ஊரில் ஸுதேவன் என்ற ஓர் வேதியர் இருந்தார். வேத சாஸ்த்திர அனுஷ்டானம் நிறைந்த அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு. அவர் மிக்க ரூபலாவண்யம் வாய்ந்த தனது ஒரே கன்னிகையை தக்க வரன் தேடி மணம் புரியக் கருதிக் கொண்டிருந்தார். சிஷ்யர்களில் ஸுமித்ரன் என்பவன் குரு பணிவிடையில் சிறந்த சாது. தனது கன்யகைக்கும் துணையாயிருந்து ஆளுக்கும் பணிவிடை செய்யச் சொல்லி இருந்தார். ஒரு நாள் தூரம் சென்றுவிட்டாள். ஸுமித்ரன் அவளை ரக்ஷிக்க கூடவே சென்றான். அவள் ஆடி ஓடி விளையாடி ஒரு தடாகத்தருகே மரத்தின் நிழலில் அமர்ந்தாள். மந்த மாருதமும், கோகில கானகமும், மணமுள்ள மலரும் ஆளது மனதில் காம விகாரத்தை உண்டு பண்ணிற்று. அருகிலிருந்த ஸுமிதரனை தன்னுடன் ரமிக்கும்படி வேண்டினாள்.
மிக உத்தமமான ஸுமித்ரன் அம்மா நான் உனது சஹோதரன். குரு புத்ரி! இத்தகைய சொல்லை என்னிடம் கூறாதே! விரைவில் ஸத்பதியை தேடி மணம் புரிவிப்பார் குரு! மனதை அடக்கிக்கொள்! என்றான்.
கன்யா ரத்னம், கனகம், ஸம்வித்தை, அமிருதம் இவைகள் தானே நம்மிடம் வரும்போது வேண்டாம் என்பது மூடச்செயல். என்னுடன் இப்போது நீ ரமிக்காவிட்டால் என்னுயிர் போய்விடும். குரு உன்னை சபிப்பார்! என்றாள். ஸூமித்ரனும் தெய்வ வசத்தால் குரு சாபத்துக்கு அஞ்சி, அவள் விருப்பத்துக்கிணங்கினான்.
இருவரும் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தனர். நடந்ததை அறியாத ஸுதேவர் நல்லபடியாக பெண்ணை ரக்ஷித்து வந்ததற்காக அவனைப்பாராட்டி களைப்புடன் இருக்கும் பெண்ணையும் பக்ஷ்ய போஜ்யாதிகளால் தேற்றினார். சில நாட்கள் சென்ற பின் காஷ்மீர தேசத்திய வேதியன் ஒருவனுக்குப் பெண்ணை அளித்து மணம் செய்வித்தார். துரதிருஷ்ட வசத்தால் உடனே அவன் இறக்க பெண்ணும் தந்தையும் கதறினார்கள். இப்படி அவள் தலையில் எழுதிய ப்ரம்மாவை நிந்தித்தார். தம் வினையை எண்ணி கதறினார். பெண்ணும் கதறினாள்.
பரோபகாரியான ஒரு யதீஸ்வரர் இவ்வழுகை குரலைக் கேட்டு அருகே வந்து விசாரித்தார். தன் ஞானதிருஷ்டியால் அவர் முன் வினையை கண்டறிந்து கூறினார். பிராம்மணோத்தம! உம் பெண் முற்பிறவியில் ஒரு க்ஷத்திரியப்பெண். அதிரூப சுந்தரி. விதர்ப்ப ராஜனை மணந்து வாழும் நாளிலே கெட்ட சகவாசத்தால் ஜார புருஷரிடம் அன்பு கொண்டாள். அவர்களது தூண்டுதலால் மன்னனை நடு நிசியில் தூங்கும்போது கத்தியால் வெட்டினாள். அந்த ரத்த பிரவாகத்தை கண்டு பயந்து தன்னையும் வெட்டிக்கொண்டு இறந்தாள். அந்த பாபத்தினால் பதியை இழந்தாள். மிக உத்தமரான உம் குலத்தில் தோன்ற காரணம் யாதென்று கூறுகிறேன் கேள்!

பதியை கொன்ற பாபத்தினால் பல பிறவிகளில் பெண்ணாகி மணமானவுடனே பதியை இழந்து விதவையானாள். பதினான்காவது பிறவியில் ஸரஸ்வதீ தீரத்தில் பெண்கள் பலர் கூடி மணலால் கௌரியை அமைத்து மாகமாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் பூஜை செய்து வந்ததைத் தற்செயலாக இவள் அங்கு சென்று ஒர் நாள் அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த புண்ணியத்தால் சிறந்த உம் குலத்தில் பிறந்தாள். புண்யம் புண்ய பலனை கொடுத்தது. பாபம் பாப பலனான வைதவ்யத்தை தந்தது. அன்றியும் விவாஹம் ஆவதற்கு முந்தியே பூர்வ வாசனையால் உமது சிஷ்யனை பலாத்காரம் செய்து அனுபவித்தாள் என்றார் யதீஸ்வரர்.
இதைக் கேட்டவுடன் ஸுதேவர் இரு கரங்களாலும் செவிகளை மூடிக்கொன்டு சிவ சிவ என்று கதறினார். புழுவாய்த் துடித்தார். "யதீஸ்வரரே! கஷ்டம் கஷ்டம். என் பெண்ணாய் பிறக்க வேண்டுமா இவள்? இவள் நற்கதி அடைய மறு பிறவியிலாவது ஸுமங்கலியாய் இருக்க ஒரு உபாயம் கூறுங்கள்" என்று அவர் திருவடிகளை வணங்கி வேண்டினான் ஸுதேவன். யதீஸ்வரர், ஸுதேவரே! மாக ஸ்நானம் முறைப்படி செய்வித்து மாக கௌரீ பூஜையும் செய்தால் இவளது பாபமகலும். மறு பிறவிகளில் சுமங்கலியாக வாழ்வாள். மூன்றாவது மாகமாஸ விரதத்தில் ஸுமங்கலிகளுக்கு இரண்டு முறத்தில் பஞ்சு, மஞ்சள், தாம்பூலம் முதலியன வைத்து சந்தனம் குங்குமம், மை புஷ்பம், முதலியவற்றால் அலங்காரம் செய்து ஏழு பிரதக்ஷிணம் ஏழு நமஸ்காரம் செய்து தானம் செய்ய வேண்டும். அன்ன தானமும் செய்தால் பாபமகலும். ஸுதேவர் அங்ஙனமே அப்பெண்ணுக்கு செய்வித்தார். பதியில்லாதவளானதனால் விஷ்ணுவின் திருவடியை அடைந்தாள். பதியுள்ளவளானால் பதி லோகம் சென்று பல பிறவிகளிலும் ஸுமங்கலியாகவே வாழ்வாள்.


Thursday, December 10, 2009

விசார சங்க்ரஹம் 3



5. விசாரம் ஸ்தூல தேகத்திலுள்ள ஆன்ம பாவத்தை மாத்திரம் நீக்குதற்கு சாதனமா? சூக்கும காரண தேகங்களிலுள்ள ஆன்ம பாவங்களை நீக்குதற்கும் சாதனமா?
ஸ்தூல தேகத்தை பற்றியே மற்ற தேகங்கள் ஜீவித்திருப்பதாலும் தேகம் நான் என்பதில் பஞ்ச கோச ரூபமான முத்தேகங்களுமே அடங்கிவிட்டதானும் ஸ்தூல தேகத்தில் உள்ள ஆன்ம பாவத்தின் அழிவே மற்ற தேகங்களின் அழிவாகலானும் விசாரம் மும்மை தேகங்களிலுமுள்ள ஆன்ம பாவங்களை போக்கற்கே சாதனமாகிறது.

விசாரம் செய்யச் சொல்லறீங்க. இதனால இந்த நாம பாக்கிற உடம்புலிருந்து நான் என்கிறதை நீக்குமா? இல்லை பாக்கமுடியாத உடம்புங்கன்னு சொல்கிறாங்களே - சூக்குமம், காரணம் ந்னு,- அந்த உடம்புகளிலிருந்தும் நான் என்கிற பாவனையை நீக்குமா?
நாம பாக்கிற உடம்பைத்தான் மத்ததும் பிடிச்சுக்கொண்டு இருக்கு. அதனால நாம பாக்கிற உடம்பிலிருந்து நான் என்கிற பாவத்தை நீக்கினா போதும். மத்ததிலிருந்தும் அது நீங்கிடும்.

6. விருத்தி பேதங்கள் மனம் புத்தி சித்தம் அகங்காரமெனப் பல விதங்களாயிருக்க மனோ நாசமே முக்தி என்பதெப்படி?
[மனசுன்னு மட்டுமில்லாம உள்ளத்தோட (அந்தக்கரணத்தோட) வெளிப்பாடு புத்தி, சித்தம், அகங்காரம் ந்னு பலவிதமா சொல்லறாங்களே, ஆனா ஏன் மனோநாசமே முக்தின்னு சொல்கிறாங்க?]
மனதின் தத்துவங்களை கூறும் சாஸ்திரங்களில் "நாம் புஜிக்கும் அன்னத்தின் சூக்ஷ்மபாகத்தால் கெட்டிப்பட்டு, இராக த்வேஷ காமாதிகளால் விருத்தி அடைந்து, மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் சமுதாயமாய், மனமென்னும் பன்மை யொருமைப் பெயரையே பெற்றதாய், நினைத்தல், நிச்சயித்தலாதிய தருமங்களை யுடையதாய், ஞானத்தால் அறியப்பட்ட திருசியமாய், ஜடமாய், ஜடமாயினும் ஞானத்தின் சேர்க்கையால் (தப்தாய பிண்டம் போன்று) சேதனம் போலவே தோற்றுவதாய், பரிச்சின்னமாய், அநித்தியமாய், அவயவாகாரமாய், அரக்கு சுவர்ண மெழுகாதிகள் போன்று பரிணாமமுறுவதாய், சர்வ தத்வாதமகமாய், சக்ஷுரிந்திரியாதிகளுக்கு நேத்திராதி போல ஹ்ருதய கமலத்தை ஸ்தானமாகவுடையதாய்; ஜீவனுக்குபாதியாய்; தானொரு பொருளை நினைத்து விருத்தி ரூபமாய் மூளையிலுள்ள அறிவோடுங் கூடி பஞ்சேந்திரியங்களின் வழியாக அவ்விஷயங்களை (அறிவோடுங்கூடியுள்ள) மூளையாற் கூட்டிக்கொடுக்கப்பெற்று, அவ்விஷயங்களை யறிந்தனுபவித்து திருப்தியடைவதாய் விளங்கும் பதார்த்தம் எதுவோ அதுவே மனம்.” என்று மனத்தின் சொரூபத்தை கூறியிருத்தலால் ஒருவனுக்கே வேலையில் வெவ்வேறு நாமம் வருவது போன்று மனமொன்றே விருத்தி பேதங்களை முன்னிட்டு மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்ற நாமங்களால் வழங்கப்படுகிறதேயன்றி வேறில்லை. இம்மனமே சர்வ தத்வாத்மக ஜீவேச்வர ஜகத் சொரூபமாயிருத்தலான் இது எப்போது ஞானத்தால் ஆன்மாகாரமாகுமோ அப்போதே எல்லாம் ப்ரஹ்ம சொரூபமாகிற கைவல்யமாகும் என்று சொல்லப்படுகிறது.
--
மனசைப்பத்தி சாஸ்திரங்களில எப்படி விவரிச்சு இருக்குன்னு பாத்தா இது விளங்கிடும்.
நாம சாப்பிடற உணவில கண்ணால பார்க்கக்கூடிய பாகம் ஜீரணமாகி சக்தி கொடுக்கும். பார்க்க முடியாத பாகம் மனசை பாதிக்கும்; எண்ணங்களை அதிகமாக்கும். பட்டினி கிடக்கும்போது எண்ணங்கள் அதிகமா வராது இல்லியா? (இதனாலதான் விரதங்களில சாப்பாட்டை குறைக்கச் சொல்லராங்க) இந்த மனசு ஆசை, கோபம் போன்ற குணங்களால வளரும். இதுவேதான் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்கிற கூட்டமாக பரிணாமமாகும். அப்படி பலதா ஆனாலும் மனம் என்கிற ஒரே பொருள்தான் அது. இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமான்னு நினைக்கறதும், இப்படித்தான்னு நிச்சயம் பண்ணறதும் இதுதான். சாக்ஷி ஞானத்தாலே இது அறியப்படும். இது ஜடம்தான், ஆனாலும் எப்படி நெருப்பில காய்ச்சிய ஒரு இரும்பு துண்டுக்கு சூடு என்கிற அதோட இயற்கையா இல்லாத குணம் ஒண்ணு புதுசா இருக்கறாப்பல தெரியுமோ அது போல சாக்ஷி ஞானத்தோட சேர்கிறதால மனசு அறிவுள்ளதா தோணும். பின்புலத்தில சாக்ஷி ஞானம் இல்லாம மனசுக்கு அறிவு இல்லை. மேலும் மனசுங்கறது வரையறைக்கு உட்பட்டது (அதாவது அளவற்றது இல்லை). அதே மாதிரி மனசு அநித்தியம்; இப்ப இருக்கிற மனசு அப்புறம் அப்படியே இருக்கும்ன்னு சொல்ல முடியாது. மனசு அப்டீன்னு இப்பொ நாம சொல்லிண்டிருக்கற அந்தக்கரணம் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்கிற எந்த அம்சத்தோட தன்மைகளை எப்ப காட்டுதோ அப்ப அந்த ரூபத்தை எடுத்துக்கும். அரக்கு, மெழுகு, தங்கம் முதலிய பொருள்கள் உருவம் மாறி பொம்மை, ஆபரணம் முதலிய பல விதமான பொருள்களா மாறுவது போல இதுவும் மாறும். (சர்வதத்வாத்கமாய்?) கண் காது முதலான உடல் உறுப்புகளுக்குள்ள நேத்திரம் சுரோத்திரம் முதலான இந்த்ரியங்கள், அதாவது பார்ப்பது கேட்பது முதலான சக்திகள் இருந்து செயல் படுத்தறதுபோல அந்த இந்த்ரியங்களுக்குள்ள இருந்து அதுகள செயல்படுத்தறது மனசு தான். ஹ்ருதயத்த இருப்பிடமா கொண்டு ஆழ்ந்த உறக்கத்துல அந்த எடத்துல ஒடுங்கிடறது. ஜீவனுக்கு உபாதியா இருக்கு. அதாவது அது ஒரு ஜீவனையும் இன்னோரு ஜீவனையும், ஜீவனையும் ஈச்வரனையும் பிரிக்கறது. அதாவது ஒரு ஜீவனுக்கும் இன்னோரு ஜீவனுக்கும் என்ன வேறுபாடுன்னா இவனுக்கு வேற மனசு அவனுக்கு வேற மனசுன்னு அத வெச்சு சொல்லலாம். அதே மாதிரி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் என்ன வித்தியாசம்னா ஜீவனுக்கு குறுகிய (ஒரு சில பொருள்களை மாத்திரம் அறியக்கூடிய) மனசு இருக்கு, ஈச்வரனுக்கோ உலகத்தையே வ்யாபிக்கக்கூடிய பெரிய்ய்ய மனசு. பௌதிக ரீதியில சொல்லப்போனா ஐம்புலன்கள் பொருள பாத்து மூளையிலே தெரிவிக்கும்போது அந்த மூளையோடு கூடி அந்த விஷய ரூபமா மாறி அனுபவிக்கறது. இப்படிப்பட்ட குணங்களை உடையது மனசு, அல்லது அந்தக்கரணம்.

இப்படி மனசைப்பத்தி சொல்லி இருக்கிறதாலே மனசுன்னு தனியா இல்லை. அதோட தொடர்புடையதுதான் புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம். எப்படி ஒருத்தர் வீட்டிலே மனைவிக்கு கணவனாகவும், குழந்தைக்கு தகப்பனாகவும், அலுவலகத்திலே ஆபீசராவும், மேலதிகாரிக்கு சேவகனாகவும், கிளப்பிலே செயலாளராகவும் இருப்பாரோ அப்படியே மனசு இடத்துக்கு தகுந்த ரூபம் எடுக்குது. ஆகவே மனோ நாசம்ன்னா இந்த நாலுமே நாசம் அடையும். இந்த மனசேதான் எல்லா ஜீவன்-ஈஸ்வரன், ஜகத், தத்துவங்கள் முதலான எல்லா கற்பனைகளுக்கும் காரணம். அதனால மனம் ஆன்மாகாரம்- நாசமாகும் போது முக்தி கிடைத்ததாக பொருள்.


Wednesday, December 9, 2009

ஸ்ரீ மாக புராணம் 1



ஓம்
ஸ்ரீ மாக புராணம்

மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ
ப்ரும்மக்னம் வா ஸுராபம் வா கம்பதந்தம்புனீமஹே

மாகமாஸத்தில் ஜல தேவதை கூறுகிறது: சிறிது சூரியன் உதயமாகும்பொழுது ஜலத்தில் ஸ்னானம் செய்கிற மனிதன் ப்ரும்ம ஹத்தி, சுராபானம் முதலியன செய்தவனாயினும் அவனைச் சுத்தம் செய்கிறேன்.

வைதீக தர்ம வர்த்தனீ என்ற இதழை பல ஆண்டுகள் வெளியிட்டு பல அரிய விஷயங்களை தந்தவர் ஸ்ரீ ஸோமதேவ ச2ர்மா. அதிலிருந்து கிடைக்கும் தொகுப்பில் இருந்து சில விஷயங்களை வெளியிட உத்தேசம். மூலத்தில் இருப்பதையே அப்படியே எழுதுவதால் சில இடங்களில் இந்த காலத்துக்கு சரிப்படாமல் நெருடலாம். இதை தவிர்க்க முடியவில்லை.
மாக மாதம் ஜனவரியில்தான் ஆரம்பிக்கிறது. இருந்தாலும் நேரம்ம் கிடைப்பது அரிதாகையால் இப்போதிலிருந்தே வெளியிடுகிறேன். முப்பது அத்தியாயங்களையும் மாக மாதம் முடியு முன் வெளியிட முடிந்தால் நலம். பகவான் எண்ணம் எப்படியோ பார்க்கலாம்.
மாகமாஸ ஸ்நானம் துலா ஸ்நானம், கார்த்திகை ஸ்நானம், வைசாக ஸ்நானம் இவைகள் மூன்றைப் போல சிறந்தது. ஸகல பாபங்களையும் போக்க வல்லது. இது ஸ்காந்தத்தில் முப்பது அத்தியாயம் கொண்டது.

1.பார்வதி தேவிக்கு பரமசிவன் உபதேசித்தது.

மகா தேவன் கூறூகிறார்: ஸகல பாபங்களையும் போக்கடிக்கக்கூடிய மாக ஸ்நானத்தை பிரயாக க்ஷேத்திரத்தில் செய்வது மிகச்சிறந்தது. எந்த தீர்த்தமாயினும் முதல் ஸ்நானம் செய்வதால் பாபம் அகலும். இரண்டாவது ஸ்நானத்தால் வைகுண்டம் கிடைக்கும். மூன்றாவது ஸ்நானம் செய்தவுடன் இதற்கு என்ன பலன் தருவது, நான் கடனாளி ஆவேனே என பகவான் நினைக்கிறார். மாக மாஸத்தில் ஸூர்யன் உதயமான பொழுது கிராமத்திற்கு வெளியிலுள்ள மகாநதியிலோ, ஓடையிலோ, ஏரியிலோ, குளத்திலோ, நடபாவியிலோ ஸ்நானம் செய்பவன் பாபங்களைவிட்டு ஜனன மரணமில்லா முக்தி பெறூவான், பசுவின் முழங்கால் நனையும் அளவு ஆழமுள்ள நீரிலாவது ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் மஹிமையை உணர்ந்து கொண்டு செய்தாலும் உணராவிட்டாலும் அஸ்வமேத பலனைத் தரும்.

ஸ்நானம் விஷ்ணு பூஜை, புராண ஸ்ரவணம், தாநம் இவை ஒவ்வொன்றும் மிகப்பாவனமானது. இவைகளில் ஒன்றேனும் செய்யாதவர் பாபம் எப்படி அகலும்? நற்கதி எப்படி உண்டாகும்? பல பிறவிகளில் நீசனாகப்பிறப்பர். மாக ஸ்நானம் செய்யாதவர்களை பார்ப்பதும் பாபம். ஒரு முறை மாக ஸ்நானம் செய்தாலும் நூறு கங்கா ஸ்நானம் செய்த பலனுண்டாகும். பஞ்ச மஹ பாதகம், மித்ர த்ரோஹம், குரு/ மாத்ரு/ பித்ரு த்ரோஹம், நன்றி கொன்ற தோஷம், கோள் சொல்லுவது, தர்ம விக்நம் செய்வது, அபாத்திரத்தில் செலவு செய்வது, கிராம உத்யோகம், ஆலய உத்யோகம், தனம் பெற்று வேதம் கற்பிப்பது, க்ரூரமான கர்மா செய்தல் இத்தகைய பாபத்தையும் மற்றவைகளையும் போக்கடிக்கிறேன் என்று மாக தீர்த்தம் உத்கோஷிக்கிறது. டம்பத்திற்காகவோ, பிறர் தூண்டுதலாலோ, பிறர் சேற்க்கையாலோ, இன்னொருவருக்காகவோ ஸ்நானம் செய்தாலும் பாபமகலும். மாஸங்களில் உத்தமம் மாகம், தேவரில் விஷ்ணு, மரங்களில் அரசு, தேஜஸில் ஸூர்யன், சாஸ்த்திரங்களில் வேதம், வர்ணங்களில் வேதியன், மலைகளில் மேரு உத்தமமானது.
தன்னால் செய்ய முடியாவிடினும் தனக்காக ஒருவரை தக்ஷிணை தந்து ஸ்நானம் செய்யச்சொன்னாலும் மகா புண்னியமுண்டு. குளிரில் மாக ஸ்நானம் செய்வோருக்கு தீர்த்தங்கரையில் குளிர்காய தீ எரிய வைத்தால் அவனுக்கும் மாக ஸ்நான பலனுண்டாகும். மாக ஸ்நானம் செய்பருக்கு வஸ்த்ரம் அல்லது கம்பள தானம் செய்தாலும் ஸ்னான பலனுண்டு. மாக ஸ்நானம் செய்ய வருபவரை தடுத்தால் கோ ஹத்தி செய்த பாபம் வரும். தான் செய்ய முடியாவிடினும் மற்றவரை செய் என்று கூறினாலும் ஸ்நான பலனுண்டு. ஸ்நானம் செய்ய சக்தி இல்லாதவன் முப்பது நாளும் மாக புராண ச்2ரவணம் அல்லது படனம் செய்தாலும் ஸ்நான பலனைப் பெறலாம்.


Friday, December 4, 2009

விசார சங்கிரகம்-2




3. நான் யார் என்று விசாரிப்பது எப்படி?

போதல் வருதல் ஆதிய தொழில்கள் தேகத்தினவே யன்றி வேறின்மையால் தேகமே நானென்று சொல்வதாக அன்றோ தெரிகிறது? பிறத்தற்கு முன் தேகம் இன்மையாலும் பஞ்ச பூதாத்மகம் (பஞ்ச பூதங்களால் ஆனது) ஆதலானும் சுழுத்ததியில் அபாவம் (இல்லை) ஆதலானும் பிணமாக போதலானும் அதை நான் என்னும் போதமாக சொல்லுதல் கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தம் ஆகிய இச்சரீரம் நான் தான் என்று ஸ்புரித்து வழங்கி வருமா? இப்படி அவாந்தரமாகத் தேகத்தை குறித்து நான் என்று எழும் போதமே தற்போதம் என்றும் அகங்காரம் என்றும் அவித்தை என்றும் மாயை என்றும் மலம் என்றும் ஜீவன் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விசாரியாது இருக்கலாமா?விசாரித்து உணர்ந்து உய்தற்கன்றோ சகல சாஸ்திரங்களும் ஏற்பட்டு அத்தற்போத நாசமே முக்தி என்று கோஷிக்கின்றன. ஆகவே பிணமான தேகத்தை பிணம் என்றே இருத்தி வாக்கினாலும் நானென்று சொல்லாமல் இருந்து இப்போது நான் என்று எழுவது எது என கூர்மையாய் விசாரித்தால் அப்போது ஹ்ருதயத்தில் 'நான் நான்' என்னும் சப்தமில்லாமல் ஓர் வித ஸ்புரிப்பு அதாவது கண்டமாயும் (துண்டாகவும்) நாநா வாகவும் இருந்த நினைவுகள் போய் அகண்டமாகவும் ஏகமாகவும் (ஒன்றாகவும்) ஞெப்தி மாத்திரம் தனக்குத்தானே தோற்றிக்கொண்டு இருக்கும். அதனை விடாமல் சும்மாவிருந்தால் தேகம் நானென்னும் அகங்கார ரூப ஜீவ போதத்தை முற்றிரும் நாசப்படுத்தி கர்ப்பூரத்தில் பற்றிய நெருப்பு போல் முடிவில் தானும் சாந்தமாய் விடும். இதுவே மோக்ஷம் என்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் சொல்லப்படுகிறது.
==
சர்வ சகஜமா நான் போனேன் நான் வந்தேன் ந்னு சொல்கிறோம். போனதும் வந்ததும் யார்? உடம்பே போச்சு வந்தது.
நாம் பிறக்கும் முன்னாலே இந்த உடம்பு இல்லை. பஞ்ச பூதங்களால ஆக்கப்பட்டு வந்தது.
ஆனால் வந்த பிறகும் ஆழ் உறக்கத்திலே அது உணரப்படலை.
அப்புறமா ஏதோ ஒரு நாள் அது இருக்கும் போதே நான் இல்லைம்பாங்க; இறந்து போயிட்டதா சொல்வாங்க. ஏன்னு கேட்டா இதில உயிர் இல்லை; இது ஜடம்பாங்க. அதனால இந்த உடம்பை நான் ந்னு சொல்வது அறிவுடமையா இல்லை. இருந்தாலும் உடம்பை நான்ன்னு சொல்கிறோம். தேகம் நான் என்கிற இந்த நினைப்பே தற்போதம். இதுவே அஞ்ஞானம். இந்த அநியாயமான அஞ்ஞானத்தை விசாரிக்கணும். இதுக்கு உதவத்தான் எல்லா சாஸ்திரங்களும் இருக்கின்றன. அவை எல்லாம் சொல்லுவது என்ன? "இந்த தப்பான நினைப்பு போகிறதுதான் முக்தி” என்பதே. அதனால பிணமாக போகப்போகிற இந்த உடம்பை பிணமாகவே நினைச்சு இதை நான்னு சொல்கிறதை விட்டுவிட்டு, இப்ப யாரப்பா அந்த நான் ந்னு கூர்மையா கவனிச்சா உள்ளுக்குள்ள ஏதோ ஒண்ணு நான் ந்னு இருக்கும். இப்படி தோணும் போது மத்த சாதாரணமா இருக்கிற பல நினைப்புகளும் இரா. இதையே விடாம பிடிச்சுக்க முடிஞ்சா போதும்; வேற ஒண்ணும் செய்யாம சும்மா இருந்தா ஒரு உருவத்தை நான் ந்னு நினைச்சது போயே போய்விடும். அதுக்கப்புறம் எப்படி கர்ப்பூரத்தில் ஜ்வாலை எரிந்து அப்புறம் சாந்தமாய் ஆகுமோ அப்படி இதுவும் சாந்தமாகிடும். இந்த நிலையே மோக்ஷமாம்.
--------------
4. அகம் வடிவ தற்போதத்தின் மூலத்தை விசாரிக்க அங்கு வேறு எதேதோ வெவ்வேறெண்ணங்கள் கணக்கற்றனவாய்த் தோற்றிக்கொண்டு இருக்கின்றனவே அன்றி நானென்றதோர் தனி நினைவு தோன்றவில்லையே?

எழுவாயாகிய முதல் வேற்றுமை தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் மற்ற வேற்றுமைகளில் வரும் வாக்கியங்கள் அனைத்தும் முதல் வேற்றுமையை ஆச்ரயித்தே (சார்ந்தே) விளங்கல் போன்று ஹ்ருதயத்தில் தோன்றும் நினைவுகள் அனைத்தும் தேகோகம் (தேஹம் அஹம்- நானே தேகம்) புத்தி வடிவ நானென்னும் முதல் விருத்தியாகிய அகங்காரத்தை ஆச்ரயித்தே விளங்கலானும் அகங்காரத்தின் எழுச்சியே மற்ற எல்லா நினைவுகளின் எழுச்சிக்கு காரணமாகவும் மூலமாகவும் இருத்தலானும் சம்சாரம் என்னும் மாயா விருக்ஷத்தின் வேராகிய அகங்கார ரூப தற்போதத்தை நாசமாக்கின் மற்றெல்லா நினைவுகளும் வேரற்ற விருக்ஷம் போல் அடியோடு நாசமாகும். தான் செய்யும் நிஷ்டைக்கு பிரதிபந்தமாக எத்தனை நினைவுகள் தோன்றினாலும் மனதை அவ்வழியே செல்லவொட்டாமல் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்திலேயே இருத்தி நம் முன்னே என்னென்ன விசித்திரங்கள் நடக்கின்றன? நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம் என்று சாக்ஷியைப்போல விலக்ஷணமாய் பார்த்துக் கொண்டிருக்கப்பழகுவதே. அதாவது தோற்றங்கள் மயமாகாது தன்னை விடாமல் இருப்பதே முன் கூறிய பிரதி பந்தங்களுக்கெல்லாம் மூலமான தேகாத்ம புத்தி ரூப மனோ நாசத்துக்கான தக்க உபாயமாம். இலகுவாக கெடுக்கத்தகும் இம் மார்க்கமே பக்தி என்றும் தியானமென்றும் யோகமென்றும் ஞானமென்றும் கூறத்தகும். ஹ்ருதயத்தில் உள்ள அஹம் சொரூபமான ஆத்மாகாரமாகவே கடவுள் இருப்பதாலும் நினைப்பு மாத்திரமே பந்தம் என்று சுருதிகள் முறையிடுவதாலும் எப்படியேனும் நான் என்னும் நினைவு ரூபமான மனதை அவரிடத்திலே இருத்திவிட்டு எப்போதும் அவரை மறவாது சும்மா இருத்தலே சிரேஷ்டமான சாதனம். இதுவே சுருதிகளின் முடிவான சித்தாந்தம்.
-----
சரி, நான் யார் ன்னு விசாரத்துல உக்காந்தா வேற ஏதேதோ எண்ணங்கள் கணக்கில்லாம வருதே ஒழிய நான்ன்னு தனியா ஒண்ணும் தோணலையே?
இங்க வா, இதைப்பண்ணு, உனக்கு எடுத்துக்கன்னு எப்படி சொன்னாலும் ஒரு விஷயம் மறைஞ்சு இருக்கு இல்லியா? ஹே ராமா, இங்க வா, இதைப்பண்ணு, உனக்கு எடுத்துக்கன்னு சொல்லுவதில்லை. அது அன்டர்ஸ்டுட். அது போல மனசில வர எண்ணங்கள் எல்லாமே நான் என்கிற புத்தியோட ஒரு நிலைப்பாட்டை அடிப்படையா வெச்சே பிறக்குது. அதுவும் அன்டர்ஸ்டுட். இதுக்குத்தான் அகங்காரம் ந்னு பேர். இந்த உலகம் இந்த என்னை எப்படி பாதிக்கும் என்பதை வெச்சே மற்ற எண்ணங்கள். எனக்கு பிடிக்கும். எனக்கு கஷ்டம், எனக்கு சந்தோஷம் நான் சொல்கிறேன்னு எல்லா எண்ணங்களுமே! இந்த நான் என்கிற நினைப்பு இல்லாம போனா? வேரை வெட்டிப்போட்ட மரம் வாடுகிறதைப்போல மத்த எண்ணங்களுமே வாடி அழியும். நாம கவனிக்கிற விஷயத்துக்கு பாதகமா எத்தனை எண்ணங்கள் வந்தாலும் மனசை அதுல செலுத்தாம உள்ளுக்குள்ள தெரிஞ்ச தன்னிலேயே நிறுத்தி மத்தபடி நம்ம முன்னே என்னவெல்லாம் நாடகம் நடக்குது, நடப்பது நடக்கட்டும் என்கிற ரீதியில பாக்க ஆரம்பிக்கணும்.
அதாவது என்னென்ன எதிரே நடந்தாலும் அதிலே முழுகிடாம உள்ளுக்குள்ள இருக்கிற தன்னோட தொடர்பு விடாம இருக்கணும். இப்படி செய்யறதே மனசு ஒர் உருவத்தை தான் ந்னு உருவகப்படுத்தி கொண்டு இருக்கிறதை நாசம் செய்ய வழி. இதையே பக்தி, தியானம். யோகம், ஞானம் ந்னு பலவிதமா சொல்லிக்கலாம். ஹ்ருதயத்தில் நான்னு இருக்கிறது ஆத்மா, இந்த ஆத்மாவா இருக்கிறதேதான் கடவுளும். இதை உணர விடாம தடுக்கிறதே நம் மனசில் எழுகிற நினைவுகள்தான். நம்மால மனசு இல்லாம இருக்க முடியலை என்கிறதால அந்த மனசை எப்படியாவது கடவுள்கிட்டேயே செலுத்தி எப்பவும் மறக்காம சும்மாயிருக்கிறதே நல்லது. வேதங்கள் முடிவா சொல்கிறது இதுவே.


Thursday, December 3, 2009

விசார சங்கிரகம்-1




ஓம்
விசார சங்கிரகம்
1. ஸ்வாமி எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துதற்குரிய உபாயம் யாது?

எங்கெங்கே சரீரம் உள்ளதோ அங்கங்கே துக்கம் உள்ளது என வேதத்திற் கூறியுள்ளதன்றி எல்லோர்க்கும் பொதுவான பிரத்யக்ஷ அனுபவமாவிருத்தலான் எப்போதும் சரீரமில்லாத தனது யதார்த்த சொரூபம் இன்னது என்று விசாரித்துணர்ந்து உள்ளவாறிருத்தலே அந்நிலை எய்துதற்கு உரிய உபாயம்.

2. தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்துணர்வது என்றால் என்ன?

எல்லோர்க்கும் சுபாவமாக உண்டாகும் போனேன் வந்தேன் இருந்தேன் செய்தேன் என்பதாகிய அநுபவங்களில் இருந்தே அவ்வநுபவ நிகழ்ச்சிக்குரிய வினைகளுக்கு முதலாக நான் என்றதோர் போதம் (நினைப்பு) தோற்றுகிறதல்லவா? அந்த போதத்தின் உண்மை வடிவை (நான் யார் என்ற விசாரத்தால்) விசாரித்து தானாயிருப்பதே தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்பதாம்.

3. நான் யார் என்று விசாரிப்பது எப்படி?
போதல் வருதல் ஆதிய தொழில்கள் தேகத்தினவே யன்றி வேறின்மையால் தேகமே நானென்று சொல்வதாக அன்றோ தெரிகிறது? பிறத்தற்கு முன் தேகம் இன்மையாலும் பஞ்ச பூதாத்மகம் (பஞ்ச பூதங்களால் ஆனது) ஆதலானும் சுழுத்ததியில் அபாவம் (இல்லை) ஆதலானும் பிணமாக போதலானும் அதை நான் என்னும் போதமாக சொல்லுதல் கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தம் ஆகிய இச்சரீரம் நான் தான் என்று ஸ்புரித்து வழங்கி வருமா> இப்படி அவாந்தரமாகத் தேகத்தை குறித்து நான் என்று எழும் போதமே தற்போதம் என்றும் அகங்காரம் என்றும் அவித்தை என்றும் மாயை என்றும் மலம் என்றும் ஜீவன் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விசாரியாது இருக்கலாமா?விசாரித்து உணர்ந்து உய்தற்கன்றோ சகல சாஸ்திரங்களும் ஏற்பட்டு அத்தற்போத நாசமே முக்தி என்று கோஷிக்கின்றன. ஆகவே பிணமான தேகத்தை பிணம் என்றே இருத்தி வாக்கினாலும் நானென்று சொல்லாமல் இருந்து இப்போது நான் என்று எழுவது எது என கூர்மையாய் விசாரித்தால் அப்போது ஹ்ருதயத்தில் 'நான் நான்' என்னும் சப்தமில்லாமல் ஓர் வித ஸ்புரிப்பு அதாவது கண்டமாயும் (துண்டாகவும்) நாநா வாகவும் இருந்த நினைவுகள் போய் அகண்டமாகவும் ஏகமாகவும் (ஒன்றாகவும்) ஞெப்தி மாத்திரம் தனக்குத்தானே தோற்றிக்கொண்டு இருக்கும். அதனை விடாமல் சும்மாவிருந்தால் தேகம் நானென்னும் அகங்கார ரூப ஜீவ போதத்தை முற்றிரும் நாசப்படுத்தி கர்ப்பூரத்தில் பற்றிய நெருப்பு போல் முடிவில் தானும் சாந்தமாய் விடும். இதுவே மோக்ஷம் என்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் சொல்லப்படுகிறது.

Tuesday, December 1, 2009

விசார சங்க்ரஹம்




கம்பீரம் சேஷையர் என்பவர் ஒரு ராம பக்தர். 1900 ஆண்டு வாக்கில் ஸ்ரீ ரமண பகவான் விரூபாக்ஷி குகையில் வசித்த காலத்தில் பகவானிடம் வரலானார். அது முதல் பகவானின் எளிய தொண்டனாய் தன்னைக் கருதிக்கொண்டு குகையை துப்புரவாக வைத்துக் கொள்வது முதல் பல தொண்டுகளை செய்து வந்தார். அவருக்கு ராஜ யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு. ராஜ/ஞான யோகங்கள் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகளை படித்துவந்தார். அதில் எழும் சந்தேகங்களை பகவானிடம் காட்டி நிவர்த்தி செய்து கொள்வதுண்டு. அவை ஆங்கிலத்தில் இருக்கும். அம்மொழியில் புலமை அதிகம் இல்லாததால் தமக்கு தெரிந்த தமிழ் மொழியில் புரிந்து கொள்ள பகவானை தமிழில் அந்த உபதேசங்களை எழுதித்தர வேண்டினார். பகவானும் சமாதியில் இல்லாத போது அவ்வாறே துண்டு காகிதங்களில் எழுதிக்கொடுத்தார். இப்படி இரண்டு ஆண்டுகள் சேகரித்தவை ஒரு நோட்டுப்புத்தகமாக உருவாயிற்று. பின்னால் இது சிலரால் பகவான் சந்நிதியிலேயே தொகுக்கப்பட்டு "விசார சங்கிரஹ வினா- விடை" என்று பிரசுரிக்கப்பட்டது.

இது இப்போது நமக்கு பயனாகக்கூடுமோ என்று தட்டச்சு செய்யலானேன். மொழி நடை நமக்கு இப்போது பரிச்சயமில்லாதது. ஞான காண்டம் படித்தவர்களுக்கு மட்டுமே இது பயனாகும். ஆகவே கூடவே எளிய மொழியில் விளக்கங்கள் தேவையாக இருக்கிறது.
வாரம் இரண்டோ மூன்றோ பதிவுகளாக வெளியாகும்.