Pages

Friday, October 23, 2009

சித்தே நான்...



173.
சித்துநா னிறந்தோ னென்ற திடமற வாதி ருந்தால்
எத்தனை யெண்ணி னாலு மேதுசெய் தாலு மென்ன
நித்திரை யுணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல
அத்தனையும் பொய் தானே யானந்த வடிவு நானே

சித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தால், எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன? நித்திரை உணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல அத்தனையும் பொய் தானே! ஆனந்த வடிவு நானே! [தானே சித்து என்ற அநுபவம் உதிக்கில் யாவும் மித்தையாய் தான் ஆநந்த வடிவாகவும் ஆவான்]
--
எங்கும் நிறைந்த பரி பூரண ரூபமாகிய சித்தே நான் என்று உறுதியை மறவாதிருந்தால் என்ன எண்ணினாலும் என்ன செய்தாலும் அவற்றால் கெடுதி ஒன்றும் உண்டாகாது. தூக்கத்தில் இருந்து விழித்தபின், கண்ட கனவு பொய் என்று தோன்றி விடுவது போல எல்லாம் மித்தையாகும்.


174.
இந்த அநுபவம் உதிக்க ஹேதுவான உறுதியை கூறல்:

நானென வுடலைத் தானே நம்பினே னநேக சன்மம்
ஈனராய்ப் பெரியோ ராகியிருந்தவை யெலாமிப் போது
கானலில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி னாலே
நானென வென்னைத் தானே நம்பியீடேறி னேனே

நான் என உடலைத் தானே நம்பினேன். அநேக சன்மம் ஈனராய்ப் பெரியோராகி இருந்தவை எலாம் இப்போது கானலில் வெள்ளம் (கானல் நீர்) போல கண்டு சற் குருவினாலே நான் என என்னைத்தானே (என் பிரம வடிவத்தைதானே) நம்பி ஈடேறினேனே.
--
தியரியா ஆயிரம் சொன்னாலும் சொந்த அனுபவத்தை சொல்வது போல எதுவும் இல்லை. அதனால தாண்டவராய ஸ்வாமிகள் சொல்கிறார்:
நான் பல சன்மங்களாக உடலையே நானென்று நம்பி இருந்தேன். இழிந்த பிறவிகளாக இருந்த அவை அனைத்தும் இப்போது சற் குருவின் அருளால் கானல் நீர் போல மித்தையென்று அறிந்து கொண்டேன்.



No comments: