Pages

Saturday, October 31, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -2



01- 01-1999 அன்று துவக்க நிகழ்ச்சி நடந்தது. பங்களூரில் ஒரு ஹோமம் நடந்து அதனால் உற்சாகம் பெற்றதாக சொன்னேன் அல்லவா?அதை ஏற்பாடு செய்தவர் சிருங்கேரி மடத்தை சேர்ந்த ஒரு சன்னியாசி. அவர் சென்னையில் அந்த சமயம் இருந்தபடியால் அவரை அழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.

பதிவு செய்து கொண்டவர்களில் வெகு சிலரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். இருந்தாலும் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்வாமிகள் தீர்வுகள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஜப காலத்தில் வெளியே ஓட்டலில் சாப்பிடக்கூடாது என்றால் ஊர் ஊராக சுற்றி வேலை செய்பவர்கள் என்ன செய்வது போன்ற பலவித கேள்விகள் எழுந்தன, எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

ஆரம்ப காலத்திலேயே ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தவர் ஸ்ரீ ர. வெகு உற்சாகமாக செயல்பட்டார். மருத்துவ பிரதிநிதி வேலை. ஊர் ஊராக சுற்றும் வேலை. உணவு கட்டுப்பாடை கடைபிடிப்பது எப்படி? நாங்களோ ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்று நியமம் விதித்து இருந்தோம். அப்படியும் அதை சாதித்து காட்டினார். கையோடு ஏதேனும் உணவு கொண்டு போய்விடுவார். பயண திட்டத்தை யோசித்து அமைத்துக்கொள்வார்.
இல்லை பட்டினி இருந்துவிடுவார். இது முடியவில்லையானால் தெரிந்தவர்கள் வீட்டுக்கு முன்னேயே சொல்லை வைத்துப்போய் நெய், துளசி, வில்வம் இப்படி எதையாவது கூட சேர்த்து சாப்பிடுவார். எப்படியோ நியமங்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்.

இவர் மனைவி பிஎஸ்என்எல் இல் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அவருக்கு புது தில்லிக்கு மாற்றலாகி விட்டது. எப்படியாவது தமிழ்நாட்டுக்கு திரும்ப படாத பாடு பட்டு, பலரையும் பார்த்து, விண்ணப்பங்கள் போட்டு ஒன்றும் நடக்கவில்லை. அலுத்துப்போய் முயற்சிகளை கைவிட்டு இறுதியாக ராஜினாமா செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.

நான்கு மாத கால ஜபம் முடிந்தது. அனைவரும் சேர்ந்து காயத்ரி ஹோமம் டவுண்
ஹாலில் செய்தோம். 16- 05-1999 அன்று ஹோமம் நடந்தது.
மொத்தம் 82 பேர் ஹோமத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். அதில் 32 பேர்
இலக்கான இலட்சத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.

அடுத்த வாரம் ஸ்ரீ ர. அவரது மனைவி இருவரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்
எங்கள் ஊருக்கே பணி மாற்றம் வந்து விட்டது.


Thursday, October 29, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1



ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் பங்களூரில் நடை பெற்ற சத கோடி காயத்ரி ஜப யக்ஞத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் இறை அருளால் அமையப்பெற்றது. அந்த நேரத்தில் பங்கு கொள்ள உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் ஒரு சிலர் இறங்கினோம், மிகுந்த அவநம்பிக்கையுடன்தான். ஒரு வருட காலத்துக்கு யார் இந்த காலத்தில் ஆசாரத்துடன் இருந்து இரண்டரை லட்சம் - தினம் அறு நூற்று ஐம்பது- காயத்ரி செய்வர் ? இருந்தாலும் முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை மற்றது இறைவன் செயல் என்று களத்தில் இறங்கினோம். ஒரு மாதம் சுற்றியதில் பதினைந்து பேர் பதிவு செய்து கொண்டனர். இதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஐந்து பேர் பங்களூர் சென்று பங்கு கொண்டோம். மேலும் சிலர் ஜபம் செய்து இருந்தாலும் ஜனவரி குளிர், தூரம் உள்ளிட்ட பல காரணங்களால் பங்கேற்கவில்லை.
ஜபம் ஆரம்பித்த சிலர் உற்சாகத்தில் தினசரி கூட்டு ஜபம் செய்யலாம் என்று ஒரு முயற்சி ஆரம்பித்து பெரியவர்களை கேட்கலாம் என்று ஒரு வேத விற்பனரை கேட்கப்போய் அவர் ஜபம் தனியாக செய்வதே சரி என்று சொல்ல அந்த முயற்சி அத்துடன் முடிந்தது. (போன இடத்தில் வேதம் பயில ஆர்வத்தை வெளியிடப்போய் "பேஷா சொல்லித்தரேனே! வியாழக்கிழமையிலிருந்து வா" என்று அவரும் சொல்ல என் வேத பாடங்கள் ஆரம்பித்து ஏழு வருடங்களில் பூர்த்தி ஆனது தனிக்கதை. )

ஹோமம் முடிந்தபின் இன்னொரு முயற்சி ஆரம்பித்தது. இதே போல உள்ளூரில் செய்தால் என்ன? தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா?) எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் அவசியம் செய்ய வேண்டும் என்றனர். இதோ பாருங்கள் இப்படி கொம்பு சீவி விட்டுவிட்டு போய் விடலாம் என்று நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டனர்.

உடனடியாக ஒரு சமிதி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சரிதான் யார் தலைவர் என்று தேர்ந்தெடுக்கலாமா என்றார்கள்.
இங்கே தலையும் இல்லை வாலும் இல்லை என்றோம்.

அது ஏன் எப்படி?
இப்படி ஒரு கமிட்டி போட்டதும் எல்லாரும் இனி அவர்கள் பாடு என்று தங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவர். இப்படி வேண்டாம். அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளது என்றோம். நீங்கள் தலைவராக இருக்கலாமே என்றார்கள். இல்லை நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.
இந்த விஷயம் அத்துடன் முடிந்தது. இன்று வரை யாருக்கும் எந்த பதவியும் இங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருக்கிறது.

ஊரை பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பேர் பொறுப்பாக்கப்பட்டார்கள். ஒரு மாத காலத்தில் தம் பகுதியில் வேலையை முடிக்கவேண்டும். வீடு வீடாக போய் ஜபம் செய்ய அதிகாரம் உள்ள, இசைவு தரும் நபர்களை பட்டியல் இட்டு அவர் குறித்த விவரங்களை சேகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்க வேண்டும்.
ஜபம் சங்கராந்தி அன்று துவங்கும். நான்கு மாதங்கள் ஜபகாலம். தினசரி ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். இப்படி நூறு நாட்களில் ஒரு லட்சம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்படி நூறு பேரை பிடித்துவிட்டால் ஒரு கோடி பூர்த்தியாகும் என்பது ஏட்டுக்கணக்கு.

அது நடைமுறையில் சாத்தியமாகாது என்று அறிந்து இருந்தோம். முன்னே பதினைந்தில் ஐந்துதானே தேறியது? ஆகவே எவ்வளவு பேர் பதிவு செய்வது என்பதில் மட்டு இல்லை என்று முடிவு செய்தோம்.

பகுதி பகுதியாக கூடுதல்கள் நடத்தி பங்கேற்போருக்கு ஜபம் குறித்த விவரங்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்று செயல் பட்டோம். ஜப காலம் முடியும் போது அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுக்கொண்டோம்.

அந்த அனுபவங்களைத்தான் உங்களுடன் பெயர்களை சொல்லாமல் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


Wednesday, October 28, 2009

நன்றி! மீண்டும் வருக!



இத்துடன் ஆன்மிகம் பத்தி நான் எழுத நினைச்சது எல்லாம் எழுதி முடிச்சாச்சு.
அடுத்து பெரிசா எழுத ஒண்ணும் இப்போதைக்கு இல்லை.
ஞான வழி கொஞ்சம் புரியறது கஷ்டம்தான். திருப்பி திருப்பி படிச்சு கேட்டு புரிஞ்சு கொள்ள வேண்டிய விஷயம் அது. அதனால புரியலைன்னா ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேணாம்.உற்சாகம் இழக்க வேணாம். வேறு யாரும் இன்னு சுலபமாக புரிய வைப்பாங்களோ என்னவோ!
ராஜ யோகம் குரு மூலமாகவே செய்ய வேண்டியது என்பதால அதைப்பத்தி ஒண்ணும் எழுதலை. மத்த மூணு வழிகளிலே நமக்கு எது தோது பட்டு வருமோ அதையே தேர்ந்தெடுத்துக்கலாம். எதா இருந்தாலும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்!

இனி வாரம் ஒரு முறையோ இரு முறைகளோ பதிவுகள் வர வாய்ப்பு இருக்கு. எப்படி நடக்குமோ தெரியலை.பார்க்கலாம். வாழ்த்துக்கள்!
இது வரை அயராம படிச்சு உற்சாகப்படுத்தி வந்தவங்களுக்கு என் நமஸ்காரங்கள்!
வரட்டா?

நிறைந்தது!



179.
ஆரணப் பொருளாம் வித்தியாநந்தம் விளங்க வேதுங்
காரணங் குறைவி லாமற் கைவல்லிய நவநீதத்தைப்
பூரணமாக்க வேண்டிப் பூர்வமா நன்னிலத்தில்
நாரண குருநமக்கு நவின்றனர் யோகில் வந்தே

ஆரண (வேதாந்த மஹா வாக்கிய) பொருளாம் வித்தியாநந்தம் (ஞானசுகம்) விளங்க ஏதும் (எவ்வளவும்) காரணம் குறைவில்லாமல் கைவல்லிய நவநீதத்தைப் பூரணமாக்க வேண்டிப் பூர்வமா (பழமையான) நன்னிலத்தில் நாரண குரு யோகில் (யோக நிஷ்டையில்) வந்தே நமக்கு நவின்றனர்.

180.
குலவுசற் குருவின் பாதகுளிர் புனற்றலைமேற் கொண்டால்
உலகினிற் றீர்த்த மெல்லா முற்றபே றாடைவார் போல
நலமையா குங்கை வல்லிய நவநீத நூலைக் கற்றோர்
பலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளாய் வாழ்வார்.

குலவு சற்குருவின் பாத குளிர் புனல் (நீர்) தலை மேற் கொண்டால், உலகினில் தீர்த்தம் எல்லாம் உற்ற பேறு அடைவார் போல, நலமையாகும் (மோட்ச சுகம் தரக்கூடிய) கைவல்லிய நவநீத நூலைக் கற்றோர் பலகலை ஞான நூல்கள் படித்த ஞானிகளாய் வாழ்வார்.

--
இத்துடன் ஞான வழி நிறைவடைகிறது.

Tuesday, October 27, 2009

நூற்பயன்



177.
வந்தோ ரிவ்வா நந்தமகிழ்சியா ருடன்சொல் வேன்யான்
சிந்தையி லெழுந்துபொங்கிச் செகமெலா நிறைந்து தேங்கி
அந்தமில் லாத தாயிற் றாப்படி குருவே தாந்த
மந்திர மருளுமீசன் மலரடி வணங்கி னேனே.

வந்தது ஓர் இவ்வாநந்த மகிழ்சி. யாருடன் சொல்வேன் யான்? சிந்தையில் எழுந்து பொங்கிச் செகமெலாம் நிறைந்து தேங்கி, அந்தம் (முடிவு) இல்லாதது ஆயிற்று. அப்படி குரு வேதாந்த மந்திரம் அருளும் ஈசன் மலரடி வணங்கினேனே.
--
இந்த பிரமானந்தத்தை யாருடன் பகிந்து கொள்வேன்? அது என் உள்ளத்துள் உதயமாகி கங்கு கரையற்று விளங்குகிறது. அத்தகைய ஒப்பு உயர்வற்ற ஆனந்த பேற்றை அருளவல்ல ஞானதேசிகரையும் வேதாந்த வாக்கியங்களை அருளிய பரமேஸ்வரனையும் பணிகிறேன்.

178.
வித்தியா னந்த மிந்த விதமென விளம்பி னோமே
பத்தியா லிந்த நூலை பார்தநு பவித்த பேர்கள்
நித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து சீவன்
முத்தியை யடைந்தி ருந்த முனிவர ராகுவாரே

வித்தியானந்தம் இந்த விதம் என விளம்பினோமே. பத்தியால் (அன்பினால்) இந்த நூலை பார்த்து (சற்குரு முன்னிலையில் இந்த ஞான சாஸ்த்ரார்தத்தை கேட்டு உணர்ந்து) அநுபவித்த பேர்கள், நித்திய தரும நிட்டை நிலைதனை அறிந்து சீவன் முத்தியை அடைந்திருந்த முனிவரர் ஆகுவாரே.


Monday, October 26, 2009

குரு கிருபையை வியந்து கூறல்:



175.
குரு கிருபையை வியந்து கூறல்:

என்னபுண் ணியமோ செய்தே னேதுபாக் கியமோ காணேன்
நன்னிலந் தனிலெ ழுந்த நாரணன் கிருபை யாலே
தன்னிய னானே னானுத் தரீயத்தை வீசு கின்றேன்
தன்னிய னின்னு நானே தாண்டவ மாடு கின்றேன்

என்ன புண்ணியமோ செய்தேன்? ஏது பாக்கியமோ காணேன் (தெரிந்திலேன்). நன்னிலந்தனில் எழுந்த நாரணன் கிருபையாலே தன்னியன் ஆனேன் நான். உத்தரீயத்தை வீசுகின்றேன். தன்னியன் இன்னும் நானே. தாண்டவம் ஆடுகின்றேன்.
--
எத்தனை புண்ணியங்களை செய்தேனோ! என்ன அதிருஷ்டமோ! நன்னிலம் என்னும் இடத்தில் அருளே திருமேனியாகக்கொண்டு எழுந்தருளிய நாராயண தேசிகருடைய கடாக்ஷத்தால் நான் கிருதார்த்தன் ஆனேன். கிடைத்த திருப்தியால் ஆனந்த தாண்டவம் ஆடுகிறேன்.


176.
தத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தால்
நித்தமா டுவன்கா ணென்ற நிலைமுன்ன மேய் றிந்த
சத்திய மதனா லன்றோ தாண்டவா வென்ற ழைத்தார்
அத்தனை மகிமை யுள்ளோ ரன்னையும் பிதாவுந் தாமே

தத்துவ ஞானம் வந்த சந்தோட அதிசயத்தால் நித்தம் ஆடுவன் காண் என்ற நிலை முன்னமே அறிந்த சத்தியம் அதனால் அன்றோ தாண்டவா என்றழைத்தார், அத்தனை மகிமையுள்ளோர் அன்னையும் பிதாவும் தாமே.
--
நூலாசிரியருக்கு அவரது குருவான நாராயணன் இட்ட பெயர் தாண்டவராயன். "தத்துவ ஞானத்தால் தான்டவம் ஆடுவேன் என உணர்ந்தோ இந்த பெயரை இட்டார்? அவரே எனக்கு தாயும் தந்தையும் ஆவார்" என்று வியக்கிறார். இருவர் அதிஷ்டானமும் ஒன்றாக நன்னிலம் பேருந்து நிலையத்தின் அருகில் சுமார் 100 மீ தூரத்தில் அமைந்துள்ளது.


Friday, October 23, 2009

சித்தே நான்...



173.
சித்துநா னிறந்தோ னென்ற திடமற வாதி ருந்தால்
எத்தனை யெண்ணி னாலு மேதுசெய் தாலு மென்ன
நித்திரை யுணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல
அத்தனையும் பொய் தானே யானந்த வடிவு நானே

சித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தால், எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன? நித்திரை உணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல அத்தனையும் பொய் தானே! ஆனந்த வடிவு நானே! [தானே சித்து என்ற அநுபவம் உதிக்கில் யாவும் மித்தையாய் தான் ஆநந்த வடிவாகவும் ஆவான்]
--
எங்கும் நிறைந்த பரி பூரண ரூபமாகிய சித்தே நான் என்று உறுதியை மறவாதிருந்தால் என்ன எண்ணினாலும் என்ன செய்தாலும் அவற்றால் கெடுதி ஒன்றும் உண்டாகாது. தூக்கத்தில் இருந்து விழித்தபின், கண்ட கனவு பொய் என்று தோன்றி விடுவது போல எல்லாம் மித்தையாகும்.


174.
இந்த அநுபவம் உதிக்க ஹேதுவான உறுதியை கூறல்:

நானென வுடலைத் தானே நம்பினே னநேக சன்மம்
ஈனராய்ப் பெரியோ ராகியிருந்தவை யெலாமிப் போது
கானலில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி னாலே
நானென வென்னைத் தானே நம்பியீடேறி னேனே

நான் என உடலைத் தானே நம்பினேன். அநேக சன்மம் ஈனராய்ப் பெரியோராகி இருந்தவை எலாம் இப்போது கானலில் வெள்ளம் (கானல் நீர்) போல கண்டு சற் குருவினாலே நான் என என்னைத்தானே (என் பிரம வடிவத்தைதானே) நம்பி ஈடேறினேனே.
--
தியரியா ஆயிரம் சொன்னாலும் சொந்த அனுபவத்தை சொல்வது போல எதுவும் இல்லை. அதனால தாண்டவராய ஸ்வாமிகள் சொல்கிறார்:
நான் பல சன்மங்களாக உடலையே நானென்று நம்பி இருந்தேன். இழிந்த பிறவிகளாக இருந்த அவை அனைத்தும் இப்போது சற் குருவின் அருளால் கானல் நீர் போல மித்தையென்று அறிந்து கொண்டேன்.



Thursday, October 22, 2009

ஞானம் உண்டானதற்கு அநுபவம்



172.
சர்வம் பிரம மயம் என்றும் சர்வம் மித்தை என்றும் ஞானம் உண்டானதற்கு அநுபவம்:

அப்படியிருக்கச் சித்த மலைதலால் விவகாரத்தில்
எப்படி கூடுமென்னி லென்னைவிட் டொன்றுமில்லை
இப்படிகண்ட வெல்லா மென்மய மென்கனாப் போற்
கற்பித மென்று தானே காண்கின்ற சித்து நானே

[உலக] விவகாரத்தில் சித்தம் அலைதலால் அப்படி [உறுதியாய்] இருக்க எப்படி கூடும்? என்னில், என்னை விட்டு ஒன்றுமில்லை. இப்படி கண்ட எல்லாம் என் மயம், என் கனா போல் கற்பிதம் என்று தானே காண்கின்ற சித்து நானே [என்று இரு]
--
அது சரி அந்த அனுபவம் எப்படி வருமாம்?
என்னைத்தவிர அன்னியமா இங்கே ஒன்றும் இல்லை. இங்கு நாம ரூபமாய் தோன்றிக்கொண்டு இருக்கும் அனைத்தும் உண்மையில் என் மனமே. என் மனம் இது பாம்புன்னு நினைச்சா அது பாம்பா தோணுது. கயிறுன்னு நினைச்சா கயிறா தோணுது.

உடனே இதெல்லாம் உடான்ஸ் ன்னு தோணுதில்லே?

ஹிப்நாடிச நிகழ்ச்சி எதுக்காவது போய் இருக்கீங்களா?
பயிற்சி பெற்ற ஹிப்நாடிச வல்லுனர்கள் அரங்கத்தை ஒரு சுத்து சுத்தி வருவாங்க. யார் வலிமையில்லாத மனம் கொண்டவங்கன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்களை மேடைக்கு கூப்பிட்டு போய் ஹிப்நாடிச தூக்கத்தில ஆழ்த்துவாங்க. அதாவது அவங்க மனசை கட்டுப்படுத்துவாங்க. மனசு கட்டுக்கு வந்தாச்சுன்னா வித்தைகள் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில "இத பார்! ஒரு எரிகிற குச்சி. உன் கையை சுடப்போறேன்"னு சாதா குச்சியை கை மேல அழுத்தினாலே போதும். அந்த இடம் சுட்டு கொப்பளிச்சு போயிடும். மனுஷனாலேயே இது முடியும்ன்னா பரம்பொருளால  என்னதான் முடியாது?

கடலில பாக்கிற அலை திவலை அனைத்தும் நீர் அன்றி வேறில்லை. அதே போல் இவை அனைத்தும் என்னை அன்றி வேறில்லை, நானே. இந்த தோற்றம் அனைத்தும் இருட்டில் பாம்பு போலும் கானல் நீர் போலும் கனா போலும் கற்பிதமே ஆகும்.


Wednesday, October 21, 2009

மீதி 2 உபாயங்கள்



170.
மீதி 2 உபாயங்கள்:
விருத்திக ளடக்க வின்னம் விநோதமாம் யோகத் தாலே
துருத்திபோ லூது மூச்சை சுகமுட னடக்கி னிற்கும்
கருத்ததற் கில்லை யென்னிற் காரண சரீர மாகிப்
பெருத்ததோ ரவித்தை தன்னைப் பிடுங்கிடி லடங்குந்தானே

விருத்திகள் அடக்க இன்னம் விநோதமாம் யோகத்தாலே துருத்தி போல் ஊது மூச்சை சுகமுடன் அடக்கின் நிற்கும். கருத்து (மனம்) அதற்கு இல்லை என்னில் காரண சரீரமாகிப் பெருத்தது (தடித்தது) ஓர் அவித்தை தன்னைப் பிடுங்கிடில் [விருத்திகள்] அடங்குந்தானே.
--
அந்த வாசனைகளை ஜெயிக்க இந்திரியங்களை கட்டுப்படுத்தறது எனக்கு முடியலை வேற வழி இருக்கான்னா...
 துருத்தி போல வீசிக்கொண்டு இருக்கும் பிராண வாயுவை ரேசக பூரக கும்பங்களால் அடக்கினால் மனோ விருத்திகள் எல்லாம் தானே அடங்கும். இது ஒரு யோக மார்கம்.

இது இயலாது எனில் காரண சரீரமாகிய அவித்தையை நாசம் செய்தால் அடங்கும்.

171.
காரண சரீரத்தை களையும் உபாயம்.
காரண சரீரந் தன்னை களைவதெவ் வாறென் றேதில்
ஆரணம் பொய் சொல்லாதே யதன்பொரு ளகத்தி லுன்னிப்
பூரண மாகு மென்மேற் புவனங்க டோற்ற மென்று
தாரணை வந்த தாகிற் றரித்திடு மவித்தை யெங்கே

காரண சரீரம் தன்னை களைவது எவ்வாறு என்று ஏதில் (கேட்கில்) ஆரணம் (வேதம்) பொய் சொல்லாதே. ஆதலால், அதன் பொருளை அகத்தில் உன்னி, (சிந்தித்து) பூரணமாகும் என் மேல் புவனங்கள் தோற்றம் என்று தாரணை (உறுதி) வந்ததாகில் எங்கே தரித்திடும் (இருக்கும்) அவித்தை?

சுத்தம்! அதென்ன காரண சரீரத்தை களையறது?

வேத நிச்சயப்படி குரு வாக்கியத்தால் "சர்வம் பிரம்ம மயம்" என்றும் "சர்வம் மித்தை" என்றும் "பரிபூரணமான என்னிடத்தில் இந்த பிரபஞ்சங்கள் ஆரோபமாக குடி கொண்டு உள்ளன" என்றும் உறுதி வந்தா அவித்தை காணாமல் போகும். அப்படி ஒரு உறுதி எப்படி வரும்? அநுபவம் வந்தாதான் அப்படி ஒரு உறுதி வரும்.


Tuesday, October 20, 2009

எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறது????



168.
அந்தவா றிருந்து கொண்டே யாநந்த மநுப விக்க
வெந்தவா றிருந்துகொண்டா லெனக்கிது தெரியுமென்னில்
இந்தமூன் றவத்தை தம்மு ளெழுந்திடும் விருத்தி நீக்கில்
அந்தவா றிருந்து நீயு மாநந்த மடைய லாமே

அந்தவாறு [பூரணமாக] இருந்து கொண்டே [வித்தை] ஆநந்தம் அநுபவிக்க எந்தவாறு இருந்து கொண்டால் எனக்கு இது தெரியும்? என்னில், இந்த மூன்று (ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்ற) அவத்தை தம்முள் எழுந்திடும் [கோர மூட] விருத்தி நீக்கில், அந்தவாறு இருந்து நீயும் ஆநந்தம் அடையலாமே.
--
எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறதுன்னா ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்கிற மூன்று அவஸ்தைகளால் எழும் மூட அந்தக்கரண விருத்தியை நீக்கி, அறிவு சொரூபமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.

அந்த விருத்தியை நீக்குகிறது எப்படி?
மூணு வழிகள் சொல்கிறாங்க.

169.
விருத்தியை நீக்கும் உபாயம் மூன்றில் முதலாவது:

வாதனா வசத்தினாலே வருகின்ற விருத்தி யெல்லா
மேதினா லடக்க லாகு மென்றுதான் விசாரஞ் செய்யில்
போதமா மிராசன் றானாய்ப் புந்தியைம் புலன்க ளெல்லாந்
தாதரா யிருக்கப் பெற்றாற் சகலமு மடங்குந் தானே

வாதனா (வாசனா) வசத்தினாலே வருகின்ற விருத்தி எல்லாம் எதினால் அடக்கலாகும் என்று தான் விசாரம் செய்யில், போதமாம் இராசன் தானாய் (ஆத்மா ராஜன் தானாகி) புந்தி ஐம் புலன்கள் எல்லாம் தாதராய் (தாசராக) இருக்கப் பெற்றால் சகலமும் அடங்குந்தானே.
--
"ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க! அந்தக்கரண விருத்தி எல்லாம் எப்படி அடக்கறது?" அப்படின்னு கேட்டா.... (அந்தக்கரணம் ன்னா புரியலைன்னா மனசுன்னு வெச்சுக்கலாம். மனம்தானே உலகத்தை வேற விதமா பாக்குது? பல விஷயங்களை யோசிக்குது. மேலே மேலே மனக்கோட்டை கட்டுது?)

இதை தெரிஞ்சுக்க ஏன் இப்படி விருத்தி வருதுன்னு தெரியணும்.
"நான்", "எனது" போன்ற நினைப்புக்களும்,  காமக் குரோதங்களும் ஆகிய விருத்திகள் வருவது பூர்வ ஜன்ம வாசனைகளாலே. அவை எப்போது அடங்கும்? ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.
முன்னே எங்கயோ கேள்விப்பட்டாப்பல இருக்கு இல்லே? ஆமாம்! கர்ம வழியை பாக்கிறப்ப பாத்தோம். கண்ணபிரான் கதை சொன்னான்!

இந்திரியங்கள் இழுக்கிற இழுப்புக்கு நாம் போகிற வரை அவை நமக்கு எஜமானன். அப்படி இழு படாம இருக்க நாம் பழகிட்டா அவை நமக்கு வேலைக்காரன்.
வாசனைகள் ரொம்பவே வலிமையானவைதான். ஆனாலும் தைரியமா இவைகளோட சண்டை போட்டு ஜெயிக்கிற ப்ராஸஸ்தான் சாதனா.


Monday, October 19, 2009

ஞானமே பிரமம், ஆத்மாவே பிரமம்.



166.
ஞானமே பிரமம் எனல்:
நிறைந்தவா றென்றவாறு நிலைதெறிந் திலனென் றாயேல்
அறிந்ததாஞ் சுழுத்தி தன்னி லாநந்த மதுவே யாகும்
குறைந்ததற் காநந்தந் தான் குவலயந் தன்னி லில்லை
நிறைந்ததே யிந்த வான்மா நிதானமிவ் வறிவு தானே

நிறைந்தவாறு (பரிபூரணனாயிருத்தல்) என்றவாறு (எப்படி என்ற) நிலை தெரிந்திலன் என்றாயேல், (அஞ்ஞானத்தை) சுழுத்திதன்னில் அறிந்ததாம் (அஞ்ஞானத்தை அறிந்து இருந்த) ஆநந்தம் அதுவே ஆகும். குறைந்ததற்கு ஆநந்தந்தான் குவலயம் (உலகம்) தன்னில் (எங்கும்) இல்லை. நிறைந்ததே இந்த ஆன்மா. இவ்வறிவு தானே நிதானம்.

[இவ்வறிவென்பது 5 இந்திரியங்களால் பஞ்ச விடயத்தை அறியும் பிரஞ்ஞானமே, நிதானம் என்பது சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமாயும் அவற்றுக்கு தற் சாட்சியாயும் வியாபகமாயும் உள்ள பிரமம். பிரக்ஞானம் ப்ரம்ஹா- ரிக் வேத மஹா வாக்கியம்]
--
பரிபூரணனாயிருத்தல் எப்படி என்று தெரியாது என்றால், தன்னை சுழுத்தியில் அறிந்த ஆனந்தம் எதுவோ அதுவே ஆகும். இதை குறைந்தது என்று சொல்லக்கூடிய அளவு வேறு ஆனந்தம் உலகில் இல்லை. அப்படி நிறைவானது இது. இந்த அறிவைதான் சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமான நிதானம் என்பர்.

167.
ஆத்மாவே பிரமம்.
மனத்தினா லெண்ணித் தானே வந்ததிவ் வுலக மாகும்
நினைத்திடி லனேக லோக நிற்பதவ் வறிவி லன்றோ
வனைத்தையுங் கடந்தப் பாலு மந்தமற் றறிவி தாமென்
றெனைத்தனி விசாரத் திட்டாலேகமாய் நிறைந்தோ னானே

மனத்தினால் எண்ணித்தானே வந்தது இவ்வுலகம் ஆகும். நினைத்திடில் அனேக லோகம் நிற்பது அவ்வறிவில் அன்றோ? (ஆரோபமான மனதுக்கு அதிஷ்டானமான அந்த பிரம சைதன்யத்தில் அன்றோ) அனைத்தையும் கடந்து, அப்பாலும் அந்தம் அற்று, 'அறிவு (பிரம சைதன்யம்) இதாம்' என்று என்னை தனி (தனிமையாக) விசாரித்திட்டால் ஏகமாய் நிறைந்தோன் நானே. [அயமாத்மா ப்ரம்ஹா -அதர்வண வேத மஹா வாக்யம்]

[இப்படி மேல் கண்ட 4 வேத மஹா வாக்கியங்களை வாக்கியார்த்த சொரூபம் தானே என சிந்திக்கும் போது உண்டாகும் சுகம் வித்தையாநந்தம்]


Friday, October 16, 2009

வித்தையானந்தம் ...



164.
வித்தையானந்தத்தை கூறத் துவங்கி பிரமமே கூடஸ்தன் எனல்.

பிறந்ததுண் டானா லன்றோ பிறகு சாவதுதா னுண்டாம்
பிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே
பிறந்தது நானென் றாகிற் பிரமமன் றந்த நானே
பிறந்தது மிறந்ததற்ற பிரமமா நானே நானே

பிறந்தது உண்டானால் அன்றோ பிறகு சாவதுதான் உண்டாம். பிறந்ததே இல்லை என்னும் பிரமம் ஆவதுவும் நானே. பிறந்தது நான் என்றாகில் அந்த நானே பிரமம் அன்று. பிறந்தது இறந்தது அற்ற பிரமமா(கிய) நானே நானே. [தத்வமஸி- சாம வேத மஹா வாக்கியம்]
ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது. பிறப்பு இல்லை என்பதால் மூலமாக இருக்கும் ஆத்மாவேதான் நான்.

165.
கூடஸ்தனே பிரமம் எனல்:
நானென்ற பிரம மான நானேநா னறியே னென்றால்
நானென்ப தேது பின்னை நம்முடைப் புந்தி யென்னில்
தானது மயக்கந் தன்னிற் சாகுமே சாவாதாகி
நானென நிறைந்திருந்த ஞானமா நானே நானே

நானென்ற பிரமமான நானே நான் [என] அறியேன் என்றால், நான் என்பது பின்னை ஏது? நம்முடைப் புந்தி என்னில் தான் அது (சுசுப்தி) மயக்கம் தன்னில் சாகுமே? [ஆகவே] சாவாது ஆகி நான் என நிறைந்திருந்த ஞானமாகிய (கூடஸ்தனே) நானே நானே. [அஹம் ப்ரம்ஹாஸ்மி-யஜுர் வேத மஹா வாக்கியம்]
--
நான் பிரம்மம். இப்படி அறியாவிடில் நான் என்பது வேறு என்ன? அது புத்தி எனில் புத்திதான் சுசுப்தியில் இல்லாது போய்விடுமே? ஆகவே சாகாமல் இருக்கும் ஞானமாகிய கூடஸ்தனே நான்.


Thursday, October 15, 2009

சிஞ்ஞாசும் இரு வகை...



163.
சிஞ்ஞாசும் இரு வகை:
பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரம ஞானம்
அந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரராயிருந்து சில ரடைவர் ஞானம்
இந்தவகைச் சாத்திரத்து முலகத்து நடப்பதுகண் டிருந்து மைந்தா
சிந்தனையின் மயக்கமென்னே சுருதியுத்தி யநுபவத்தாற் தெளிந்தி டாயே

1.பந்த மனை துறந்து சிலர் அதிதிகளாய் (சன்னியாசிகளாய்) இருந்து அடைவர் பரம ஞானம். 2. அந்தணர் மன்னவர், வணிகர், சூத்திரராயிருந்து சிலர் அடைவர் ஞானம். இந்த வகை சாத்திரத்தும் உலகத்து நடப்பது கண்டு இருந்து மைந்தா, சிந்தனையின் மயக்கம் என்னே? சுருதி யுத்தி அநுபவத்தால் தெளிந்திடாயே.
--
சிஞ்ஞாசுகளிலும்..... சிலர் மனைவி, மக்கள் எல்லாம் துறந்து சன்னியாசிகளாக இருப்பர்; கிடைத்த இடத்தில் விருந்தினரா இருந்து உண்டு தவம் செய்து கொண்டு இருப்பாங்க. சிலர் வருணாசிரம தர்மப்படி இல்லறத்தில் இருந்து கொண்டே அகத்துறவு பூண்டு குருவை அடைந்து அப்பியாசம் செய்து ஞானம் அடைந்தவர்.
இப்படி சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ளது; பிரத்தியக்ஷ அனுபவமாயும் உள்ளது. ஆகவே சந்தேகம் வேண்டாம். மோக்ஷத்தை அடைய ஆசிரமம் காரணம் அல்ல. இல்லறத்தில் இருந்தாலும், சன்னியாசி ஆனாலும், உலகில் எந்த தொழில் செய்தாலும்; மனதில் தீவிர வைராக்கியம் அடைந்து அகத்துறவு கொண்டு அப்பியாசத்தால், ஞானத்தை பெற்று எவரும் மோக்ஷமடையலாம்.



Wednesday, October 14, 2009

தீவிரதரத்தில்...



161.
தீவிரதரத்தில் இரண்டு சன்னியாசம்.

இருவகைதீ விரதரத்து மஞ்சனென்றும் பரமாஞ்ச னென்றுஞ் சொல்வார்
வருமஞ்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாரா தென்பார்
பரமஞ்சனுக்குமுத்தி யிவ்வு லகின் ஞானத்தாற் பலிக்குமென்பார்
திரமருவும் பரமாஞ்சன் றானுமிரு வகையாகுஞ் செப்பக் கேளாய்.

இருவகை தீவிரதரத்தும் அஞ்சன் (ஹம்ஸன்) என்றும் பரமாஞ்சன் (பரம ஹம்ஸன்) என்றுஞ் சொல்வார். வரும் அஞ்சனுக்கு முத்தி சத்திய (பிரம) லோகத்து அன்றி (இம்மையில்) வாரா தென்பார். பரமஞ்சனுக்கு முத்தி இவ்வுலகில் ஞானத்தாற் பலிக்குமென்பார். ஸ்திர மருவும் (பொருந்திய) பரமாஞ்சன்தானும் இரு வகையாகும் செப்பக் கேளாய்.
--
ஹம்ஸ சன்னியாசிக்கு இந்த உலகில் முத்தி இல்லை. அவர் பிரம்ம லோகத்தில் முத்தி பெறுவார். பரமஹம்ஸ சன்னியாசி தத்துவ ஞானத்தால் இவ்வுலகிலேயே முத்தி அடைவார்.
--
162.
பரம ஹம்ஸ சன்னியாசி இருவகை:
சிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்களவ ரிற்சிஞ்ஞாசு
மெஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூ மியுணடக்கும் விவேகி யானோன்
சுஞ்ஞான வானென்போன் சீவன்முத்தி யடைந்திருக்குந் தூய மேலோன்
அஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசு மிருவகையா மதுவுங் கேளாய்

சிஞ்ஞாசு, ஞானவான் என்று இரண்டு பேர்கள். அவரில் சிஞ்ஞாசு மெஞ்ஞான [ஏழு] பூமியில் முன் மூன்று பூமியில் (சுபேச்சை, விசாரணை, தனுமானசி ஆகியவற்றில்) நடக்கும் விவேகி [அப்பியாசி] ஆனோன். சு (நல்ல) ஞானவான் என்போன் சீவன் முத்தி அடைந்திருக்கும் தூய மேலோன். [அநுபவி] அஞ்ஞானம் அகலும். அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். அதுவுங் கேளாய்.
ஜிக்ஞாஸு என்கிறவரே ஞான வழில இறங்கிட்டவர். முதல் மூணு நிலைகள் ஏதாவதில இருப்பார். இது வரைக்கும் பாத்தவங்க சன்னியாசிகள் ஆனாலும் ஞான வழில முழுக்க இறங்கலை.
ஞானவான் சீவன் முத்தன்.
அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். தலையை சுத்துது இல்லை?

Tuesday, October 13, 2009

எதில எப்படி...



160.
மந்த வைராக்கியத்தில் சன்னியாசம் இல்லை. தீவிரத்தில் இரண்டு உண்டு.

பாவிமந்த விராகத்திற் சந்நியா சங்களொன்றும் பலித்திடாதே
தீவிரத்திற்கு டீசகமும் வெகூதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம்
தாவிநடந் திடத்திடமி லாதவர்களுக்குக் குடீசகமுஞ் சகங்களெங்கும்
மேவிநடந் திடத்திடமுள் ளவர்க்குவெகூ தகமுமென விதித்தார் மேலோர்.

பாவியின் மந்த விராகத்தில் சந்நியாசங்கள் ஒன்றும் பலித்திடாதே. [மீண்டும் இச்சை உண்டாகி பற்றுதல் ஏற்பட்டால் இம்மையில் இகழ்ச்சியும், மறுமையில் நரகமும் விளயும். ஆதலால் சன்னியாசம் கிடையாது) தீவிரத்தில் குடீசகமும் பகூதகமும் என்று இரண்டு திறங்கள் (சன்னியாசங்கள்) உண்டாம். தாவி நடந்திட (ரோகம் அல்லது வயோதிகத்தால்) திடமில்லாதவர்களுக்குக் குடீசகமும் (இவர்களுக்கு சஞ்சாரம் தவத்துக்கு விக்கினமாகும். ஆகையால் காமம் முதலான பிரவிருத்திக்கு ஹேது இல்லாத ஓர் இடத்தில் தவம் செய்தல் நன்று.) சகங்கள் எங்கும் மேவி நடந்திட திடமுள்ளவர்க்கு (சஞ்சரிக்காவிடில் ஆத்ம விசாரம் இல்லாது போனால் காமாதி பிரவிருத்தி உண்டாகிவிடும்) பகூதகமும் என விதித்தார் மேலோர்.
மந்த வைராக்கியம் இருக்கிறவருக்கு சன்னியாசம் சித்திக்காது. திருப்பி குடும்பியா ஆகிறவனை பாத்து ஜனங்கள் சிரிப்பாங்க திட்டுவாங்க. இந்த பிறவி முடிகிறப்ப அடுத்து நரகம்தான். அப்படி அது மகா பாபம்.
தீவிர வைராக்கியத்தில...
பற்றின்மையை வளத்துக்காட்டாலும் அப்படியே வைச்சுக்கிறது முக்கியம். மழைக்காலம் தவிர ஒரு இடத்தில மூணு நாளுக்கு மேல தங்கக்கூடாதுன்னு விதி. அப்படி தங்கினா அங்கே இருக்கிறவங்க மேலே பற்றுதல் வர அதிக வாய்ப்பு இருக்கு.
அதனால யாருக்கு இடம் இடமா நகர உடம்பில தெம்பு இருக்கோ அவங்க நகந்துகிட்டே இருக்கணும். இவர் பகூதகர்.
ஒத்தருக்கு உடம்பில தெம்பு இல்லை. அவரைப்போய் நகந்துகிட்டே இருன்னா அவர் கஷ்டப்படுவார். அந்த நிலைல ஆத்ம விசாரம் எங்க செய்யறது? அதனால சௌகரியமான ஒரு இடத்தில தனிமையில தங்கி தபஸ் பண்ணலாம். இவர் குடீசகர். ஹும். அப்படி யாரும் உக்காந்தா மக்கள் அவரை தனிமையில விடுவாங்க என்கறீங்க? வயதான சிலர் குடும்பத்திலேயே இருந்து கொண்டு பூஜை, ஜபம்ன்னு இருக்கிறதை பாத்து இருக்கேன். குடும்பம் என்கிறதால அவரை கவனிச்சுக்கவும் செய்கிறாங்க. தொந்திரவும் செய்கிறதில்லை. அப்படிப்பட்ட குடும்பம் அமையனுமே.


Monday, October 12, 2009

பற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை...



158.
சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்த சங்கைநன்று தெரியக் கேளாய்
கட்டழியுந் துறவுநால் வகையாகு மவைகளுக்கங் காகும் பேர்கள்
பட்டதுயர் கெடுங்குடீசகம்வெகூ தகமஞ்சம் பரவஞ்சம்
விட்டகலுந் துறவுக்கு விராகங்கா ரணமன்றி வேட மன்றே

சிட்டர் புகழ் மகனே நீ சங்கித்த சங்கை நன்று தெரியக் கேளாய், கட்டு அழியும் துறவு நால் வகையாகும். அவைகளுக்கு அங்கு ஆகும் பேர்கள்: பட்ட துயர் கெடும் குடீசகம், வெகூதகம், அஞ்சம், பரம் அஞ்சம். விட்டு அகலும் துறவுக்கு விராகம் காரணம் அன்றி வேடம் அன்றே.
--
"சிட்டனே நீ கேட்ட சந்தேகம் நல்லதே.
சன்னியாசம் 4 வகையாகும்.
குடீசகம், வெகூதகம், ஹம்ஸம், பரம ஹம்ஸம்.
குடும்பத்தை விட்டு நீங்கும் சன்னியாசத்துக்கு மனதில் உண்டாகும் ஆசை இன்மை காரணமின்றி காஷாய வஸ்திரம் போன்ற வேடம் முக்கியமல்ல."

ஹும்! எல்லாத்தையுமே இவர் க்ளாஸிபை பண்ணிகிட்டே போறார். சன்னியாகளிலேயும் வித்தியாசம் இருக்காம். யார் என்னன்னு அப்புறம் பாக்கலாம். இப்ப பாக்கிற முக்கியமான பாய்ண்ட் பற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை என்கிறது.

159.
மந்தமுந்தீ விரமுந்தீ விரதரமு மெனமூன்று வகைவி ராகம்
வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத் துவரும் விராக மந்த
மிந்தவுட லளவுமனை தனம்வேண்டா மெனவிடறீ விரமென் பார்க
ளந்தணர்நூன் மித்தையென விடலதுதீ விரதரமா மறிந்திடாயே

மந்தமும் தீவிரமும் தீவிரதரமும் என மூன்று வகை விராகம் (வைராக்யம்). வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத்து வரும் விராகம் மந்தம். இந்த உடலளவு மனை, தனம் வேண்டாம் என விடல் தீவிரம் என்பார்கள். அந்தணர், நூல், மித்தை என விடல் அது தீவிரதரதமாம் அறிந்திடாயே.
--
பற்றின்மையை மூணா பிரிக்கிறார். மந்தம், தீவிரம், ரொம்ப தீவிரம்ன்னு.

ஒத்தரோட மனவி மக்கள் இறந்து போகிறார்கள். வாழ்க்கை கசந்து போகுது. சன்னியாசியா போயிடலாம்ன்னு சன்னியாசம் வாங்கிக்கிறார். இல்லை, எப்ப பாத்தாலும் குடும்பத்தில ஒரே சச்சரவு. தொல்லை தாங்கலை. "போதும்பா ஒங்க சகவாசம்"ன்னு தொல்லை பொறுக்காமல் சன்னியாசம் வாங்கிக்கிறார். இப்படி வரும் வெறுப்பு மந்த வைராக்கியம். இப்படி இருக்கிறவர் நிலைமை அனுகூலமா போச்சுன்னா சன்னியாசத்தை விட்டாலும் விட்டுடுவார். உண்மையான சன்னியாசம் இவருக்கு சித்திக்காது.

இப்படிப்பட்டவங்கதான் சன்னியாசிகளுக்கு கெட்டப்பெயர் வாங்கி தரவங்க. அதுவும் இந்த காலத்தில தராதரம் பாக்காம சன்னியாசம் கொடுக்கிறாங்க அல்லது சும்மா காவி உடை போட்டுக்கிட்டு நான் சன்னியாசின்னு கிளம்பிடறாங்க....
கிடக்கட்டும். நாம நல்ல விஷயங்களை பாத்துகிட்டு போகலாம்.

இந்த உடல் உள்ள வரை நமக்கு மனைவி மக்கள் தேவையில்லை என விடல் தீவிர வைராக்கியம்.
இந்த உலக போகங்களும், தேவ லோகம் முதலான போகங்களும் அநித்தியம்; துக்கம்; மித்தை. ஆகையால் நமக்கு அவை வேண்டாம் என விடுதல் தீவிரதர வைராக்கியம். 



Friday, October 9, 2009

சன்னியாசியானாதான் முத்தியா?



157.
பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞான பூமியென்று
நெல்லாகி முளைக்குமெனைத் தண்டுலமாக் கியகுருவே நீர்சொன் னீரே
இல்லாளுங் குடும்பம்விட்டுச் சன்னியா சம்புகுந்தே காங்கியானோர்
அல்லாமன் முத்திபெறா ரென்றுசிலர் சொலுமயக்க மகற்று வீரே.

பொல்லாத மிலேச்சருக்கும் ஞான பூமி விதேக முத்தி தரும் என்று நெல்லாகி முளைக்கும் எனைத் தண்டுலம் (அரிசி) ஆக்கிய குருவே நீர் சொன்னீரே, இல்லாளும் குடும்பமும் விட்டுச் சன்னியாசம் புகுந்து ஏகாங்கியானோர் அல்லாமல் [மற்றவர்] முத்தி பெறார் என்று சிலர் சொல்லும் மயக்கம் அகற்றுவீரே.
--
முளைக்கக்கூடிய நெல்லில் இருந்து உமியை நீக்கி அரிசியாக்கியது போல அவித்தையாகிய அஞ்ஞானத்தால் மூடப்பட்டு இருந்த என்னை அஞ்ஞானம் நீக்கி பிரம்ம சொரூபமாகும்படி செய்த குருவே! இந்த ஞான பூமிகள் ஒன்று அல்லது இரண்டில் அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக ஆவார்கள் என்றீர்களே. மனைவியையும் குடும்பத்தாரையும் விட்டு சன்னியாசி ஆனால் ஒழிய யாரும் முத்தி பெறார் என சிலர் சொல்கிறர்களே, அந்த சந்தேகத்தை நீக்க வேண்டும்.
--
உமியை நீக்கிவிட்டால் நெல் முளைக்க முடியாது. அப்படி பிறவி முளைக்காமல் அருளியதால் இந்த உவமை சொல்லப்பட்டது.
தெளிவாவே இருக்கு இல்லையா? இதை முன்னேயும் பாத்து இருக்கோம் - சன்னியாசியானாதான் முத்தியா?



Thursday, October 8, 2009

விட்ட குறை தொட்ட குறை ...



156.
இப்புவி யிலிஞ்ஞான பூமியொன்றி லிரண்டிலடைந் திருந்தா ரானால்
அப்புருடர் மிலேச்சரா கிலுமுத்தர் குருபாதத் தாணை மெய்யே
தப்புரை யென் றவர்கெடுவார் நடுவான மறைகளைநீ சங்கி யாதே
செப்புமொழி வழிதிடமா யகம்பிரம மென்றிருந்து தெளிந்தி டாயே

இப்புவியில் ஞான பூமி ஒன்றில் இரண்டில் அடைந்திருந்தார் ஆனால் அப்புருடர் மிலேச்சர் ஆகிலும் முத்தர் குரு பாதத்தாணை மெய்யே! தப்பு உரை என்றவர் கெடுவார் நடுவான மறைகளை நீ சங்கியாதே. செப்பு மொழி வழி திடமாய் அகம் பிரமம் என்றிருந்து தெளிந்திடாயே.
--
யாரேனும் இந்த ஞான பூமிகள் ஒன்று (சுபேச்சை) அல்லது இரண்டில் (விசாரணை) அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக காலப்போக்கிலே ஆவார்கள். சற்குரு பாதங்கள் மீது ஆணையாக இது சத்தியமே. இது தவறு என்பவர்கள் நாசமடைவார்கள். பாரபட்சமற்ற சுருதி வாக்கியங்களில் நீ சந்தேகம் கொள்ளாதே! அவற்றில் உறுதி உடையவனாக அகம் பிரம்மம் என்று அநுசந்தானம் செய்து பிரம்மமாகவே இருப்பாயாக.

ரொம்ப பலமாவே சொல்கிறார். முன்னே நல்ல குடியில் பிறந்துன்னு சொன்னப்ப சந்தேகம் வந்தவங்களுக்கு இப்ப தெளிவா இருக்கணும்.


Wednesday, October 7, 2009

சாதனை செய்யும்போது இறந்து போனால்?



155.
நாலாம் பூமியில் வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து மாண்டோர்
மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ளவந்து வீடுசேர்வார்
மாலான பவத்தில் விழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா
காலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்த தாமே

நாலாம் பூமியில் வரு முன் மூன்று பூமியும் அடைந்து நடந்து மாண்டோர் மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ள வந்து வீடு சேர்வார். மாலான பவத்தில் விழார். முதற் பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா காலான முதற் பூமி கை வந்தான் முத்தியுங் கை வந்ததாமே.


ஆன்மீக நாட்டம் ஒத்தருக்கு வருது. கஷ்டப்பட்டு முன்னே போறார். வயசாயிடுது. இறந்து போறார். இது வரைக்கும் அவர் கஷ்டப்பட்டது வீணா?
ஒத்தருக்கு நிறைய வயசான பிறகுதான் ஆன்மீக நாட்டமே வருது. நமக்கு வாழ்க்கையே வீணா போச்சு. ஆன்மீகத்தில இனிமே என்ன சாதிக்கப்போறோம் ன்னு அதைரியப்படலாமா? .
நாமும் எத்தனையோ நாளா சாதனை சாதனைன்னு நேரம் போக்கிக்கிட்டு இருக்கோம். என்னத்தை சாதிக்க முடிஞ்சது? ஒரு இஞ்ச் கூட முன்னேறினதா தெரியலையே. ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு டிப்ரெஸ் ஆகலாமா?
தேவையில்லை.
நாம இந்த உலகத்தை விட்டு போகிறப்ப காசு பணம் நகை நட்டு வீடு வாசல் தோட்டமெல்லாம் கொண்டு போக முடியாது. ஆனா இந்த ஆன்மீக முன்னேற்றத்தை கொண்டு போகலாம். விட்ட இடத்திலேந்து தொடரலாம்.

முதல் மூன்று பூமிகளை மட்டும் அடைந்து 4 வது பூமியின் அப்பியாசம் இல்லாமல் மரணமடைந்தவர் மேலான சுவர்க்கம் முதலான பதவிகளை அடைந்து பின் நல்ல வம்சத்தில் பிறந்து நான்காம் பூமி முதலானவற்றை அடைந்து மோக்ஷம் பெறுவர். (நல்ல வம்சம்ன்னா மேலே ஆன்மீகத்தில முன்னேற நல்ல சூழ்நிலையை தரக்கூடிய குடும்பம்.) அவர்கள் மயக்கத்துக்கு காரணமான பிறவியை திருப்பியும் அடைய மாட்டார்.

அதனால முதல் படியான சுபேச்சை கைவருவதே பிரயாசை. அதுக்குத்தான் கஷ்டப்படணும். அது கிடைச்சாச்சுன்னா மற்றவற்றுக்கு சுலபமா போயிடலாம். மற்றவற்றுக்கு காரணமான அது வந்துவிட்டால் முத்தியே கிடைச்சதாகும்.
இதைத்தான் பகவானை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கிறான்னு சொல்கிறாங்களோ என்னவோ.

அப்பாடான்னு இருக்கு இல்லே?


Tuesday, October 6, 2009

பூமிகளை பொருத்திப்பாக்க ...




154.
முன்னிலங்க ளேறியமூ வருமப்பி யாசிகளா முத்த ரல்லர்
பின்னிலங்கள் வரன்வரீயான் வரிட்டனெனுஞ் சீவன் முத்தர் பேத மாகுஞ்
சொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தாந் தூய முத்த
ரின்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல் வேனே

முன் நிலங்கள் (சுபேச்சை, விசாரணை, தனுமாசி ஆகிய மூன்று) ஏறிய மூவரும் அப்பியாசியாவார்கள். [சீவன்] முத்தர் அல்லர். பின் நிலங்கள் (அசம்சத்தி, பதார்த்த பாவனை என்ற மூன்று) வரன், வரீயான், வரிட்டன் எனும் சீவன் முத்தர் பேதமாகும். சொன்ன நடுப் பூமி (சத்துவாபத்தி) வந்த ஞானிகளே பிரம வித்தாம், தூய முத்தர். இன்னமும் அப் பூமிகளின் பெருமைதனை நீ அறிய யான் சொல்வேனே.

நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சதை வெச்சு பாத்தோம்னா சுலபமா இந்த நிலைகளை புரிஞ்சுக்கலாம். சுபேச்சை, விசாரணை, தனுமாசி என்கிற முதல் மூணு நிலைகள்ல இருக்கிறவங்க ஆன்மீக நாட்டம் உள்ளவங்க அவ்வளோதான். இவங்க முன்னேறினாலும் முன்னேறலாம்; இல்லை நல்ல வாசனை கழிஞ்ச பின் மற்ற வாசனைகள் இழுக்க கீழே இறங்கலாம். இல்லை முன்னேற்றம் தடைப்பட்டு அப்படியே நின்னுடலாம். சொல்ல முடியாது.

விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிற அசம்சக்தி என்கிற நிலையில அவரை பிரம்ம வரன் என்கலாம்.
பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அனுபவம் அடைஞ்சு சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்கிட்டார்ன்னு பாத்தோம் இல்லையா? இருந்தாலும் தானாக வெளியே அப்பப்ப வந்து கொஞ்சம் உணவு எடுத்துக்கிறது போல சிலது பண்ணிட்டு திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க.
பதார்த்த பாவனை நிலையில வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல் ன்னு பாத்தோம். இவங்க பிரம்ம வரீயான்.(நினைவிருக்கா? இவர் தானா வெளியே வர மாட்டார். ஆனா மத்தவங்க இவரை வெளியே கொண்டு வரலாம்.)

துரியம் என்பது சாக்கிரம் சொப்பனம் சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி பூரண மௌனமாய் தன்னாலும் பிறராலும் வெளிவராமல் நிர் விகல்ப சமாதி அடைஞ்சுடுவார். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது. இவர் பிரம்ம வரிட்டன்.

இதுக்கு  நடுவில நாலாம் நிலையில இருக்கிறவங்கதான் சீவன் முத்தர்.


Monday, October 5, 2009

இந்த துரீயமே துரியாதீதம்....


இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.
(இப்படியும் சிலர் சொல்கிறாங்க.)

152.
இத்துரிய பூமியே துரியாதீதம் ஆகும்.
முற்புவிமூன் றினுமுலகந் தோன்றுதலாற் சாக்கிரமா மூன்றற் கப்பால்
சொற்பனமா மதுவுமெள்ள நழுவுமைந்தாம் பூமியே சுழுத்தி யாகும்
அற்புதமாஞ் சுகாநுபவ மிகுமாறாம் புவிதுரிய மதற்கப் பாலோர்
கற்பனையி லாதவிட மதீதமென்று மௌனமாக் காட்டும் வேதம்.

(சுபேச்சை முதலான) முற்புவி மூன்றினும் உலகம் தோன்றுதலால் சாக்கிரமாம். மூன்றற்கு அப்பால் [4 வது ஆன சத்துவாபத்தி] சொற்பனமாம் (பிரபஞ்சம் மித்தையாக தோன்றும் கனவு) அதுவும் மெள்ள நழுவும் ஐந்தாம் (அசம்சத்தி) பூமியே சுழுத்தியாகும். அற்புதமாம் சுகாநுபவ மிகும் ஆறாம் புவி [பதார்த்தாபாவனை] துரியம் ஆகும். அதற்கப்பாலோர் (துரியம் எனும் 7 ஆம் பூமி) கற்பனையிலாத இடம் அதீதம் என்று மௌனமாய் காட்டும் வேதம்.
--
சுபேச்சை, தநுமானசி, சத்துவா பத்தி ஆகிய   முதல் 3 பூமிகளில் உலகம் தோன்றுகிறது. நாம சாதாரணமா பாக்கிற இந்த உலகம் தெரியுது. அதனால் அவை சாக்கிரம் ன்னு சொல்லாம்.


நான்காவது சத்துவாபத்தியில் பிரபஞ்சம் மாயை ன்னு தோன்றுகிறது. ஆனா அது என்ன என்கிற தெளிவு இருக்காது. அதனால் அது  கனவு.

5 வது ஆன அப்பியாசத்தில் எல்லாம் பிரம்ம சொரூபமாக தோன்றுகிறது. உலகம் நழுவுகிறது. அதனால் அது சுழுத்தி.

ஆறாவதில் ஆனந்தம் உதிக்கும். இது துரியம்.

இதற்கு அடுத்து ஒன்றும் தோன்றாத நிலையே துரியாதீதம் எனப்பட்டது. அதாவது துரியத்துக்கு அப்பாற்பட்டது.

153.
துரியநிலந் தனைத்துரியா தீதமெனின் மயக்கமென்று கருதி மேலோர்
அரியதொரு விதேகமுத்தி யதீதமென் பாரதுகணக்கி லாறாம் பூமி
மருவுசுழுத் தியிற்காட்சி சுழுத்தி யென்பா ரென்பதுநீ மனதிற்கொள்வாய்
பெருமைதரு ஞானபூ மியின்விகற்ப மின்னமுண்டு பேசக் கேளாய்.

துரிய நிலந்தனைத் துரியாதீதம் எனில் மயக்கம் என்று கருதி மேலோர், அரியதொரு விதேக முத்தி அதீதம் என்பார். அதுகணக்கில் ஆறாம் பூமி. மருவு சுழுத்தியில் காட்சி சுழுத்தி என்பார் என்பது நீ மனதில் கொள்வாய். பெருமை தரு ஞான பூமியின் விகற்பம் இன்னமுண்டு. பேசக் கேளாய்.
--
சீவன் முத்தர் தேகத்துடன் கூடி இருக்க அவர் நிலை துரியாதீதம் ன்னு சொன்னா ஸ்தூல திருஷ்டி இருக்கிறவங்களுக்கு  குழப்பம் வரும் என கருதிய முன்னோர், முதல் மூன்று சாக்கிரம் எனவும் நான்காவது சத்துவாபத்தி கனவு எனவும், ஐந்தும் ஆறும் சேர்த்து காட்சி சுழுத்தி எனவும், ஏழாம் பூமி துரியம் எனவும் கூறினர். இந்த ஞான பூமிகளின் விசேடங்கள் இன்னும் உண்டு.
அதாவது ஒரு சீவன் முத்தர் இருக்கார். அவருக்கு ஞானம் வந்துட்டாலும் கர்மாவை கழிக்க இந்த உலகத்தோட தொடர்பு இருக்கு. இவரோட நிலை எப்படி துரியாதீதம் ஆகும்ன்னு சிலர் குழம்பலாம். இதுக்காக இந்த ஞான நிலைகளை கொஞ்சம் ரீக்ளாஸிபை பண்ணி துரியாதீதம் என்கிற வார்த்தையை எடுத்துட்டாங்க சிலர். வேற இடத்தில படிக்கும்போது குழப்பம் வரக்கூடாதேன்னு இதை குறிப்பிடுறார் ஆசிரியர்.


Friday, October 2, 2009

துரீயமே துரியாதீதம்



151.
தத்துவத்தின் மனமுறைத்து மித்தையெலா மறத்தலசம் சத்தியாகும்
அத்துவிதா னந்தம்வருந் திரிபுடிபோம் பதார்த்தாபா வனைய தாகும்
வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவு னசுபாவந் துரிய மாகும்
இத்துரிய பூமியைமுன் றுரியாதீ தப்பதமென் றதுவுங் கேளாய்

தத்துவத்தில் மனம் உறைத்து மித்தை எலாம் மறத்தல் அசம்சத்தி (சங்கல்பம் அறல்) ஆகும். (5ஆம் பூமி) அத்துவிதானந்தம் வரும்; திரிபுடி போம்; பதார்த்தா பாவனை அதாகும்.(6ஆம் பூமி). வத்து நிலை இருந்தபடி இருந்த மவுன சுபாவம் துரியமாகும். (7ஆம் பூமி) இத்துரிய பூமியை முன் துரியாதீதப் பதம் என்றதுவுங் கேளாய்.
--
5. சம் சத்தின்னா விஷயங்களில பற்று வைக்கிறது.
அசம்சக்தின்னா விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிறது. அதாவது 4 ஆம் பூமியின் அப்பியாசத்தால பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அபரோக்ஷ (மறைவில்லா) அனுபவம் அடைஞ்சு, சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்குதல்.

6. பதார்த்த பாவனை என்பது வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல்.

7. துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து, சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி, பூரண மௌனமாய்; தன்னாலும் பிறராலும் வெளிவராமல்; நிர் விகல்ப சமாதி அடைவதே துரியம் ஆகும். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது.

இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.

Thursday, October 1, 2009

ஞான நிலைகள்



149.
ஞானபூமிகள் ஏழு:
புலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரணையிரண்டாம் பூமியாகும்
நலதநுமா னசிமூன்றாம் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி
சொலுமசம்சத் திப்பேரும் பதார்த்தாபா வனைபேருந் துரியப் பேரும்
மலினமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வகுத்தார் மேலோர்

புலவர் (மகான்கள்) புகழ் முதற் பூமி சுபேச்சை. (சுப இச்சை=சுபம் விரும்பல்) விசாரணை இரண்டாம் பூமியாகும். நல்ல தநுமானசி மூன்றாம் பூமி. சத்துவா பத்தி (உண்மையில் மனதில் நின்றல்) நாலாம் பூமி. சொல்லும் அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகிய பெயர்கள் [கொண்டவற்றை], மலினமறு (களங்கமில்லா) மகனே, ஐந்து ஆறு ஏழு பூமிகளாக வகுத்தார் மேலோர்.
--

150.
துற்சங்க நிவர்த்திவந்து சிவஞானம் விரும்புவது சுபேச்சையாகும்
நற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி
முற்சங்க வேடனைகள் விடறநுமா னசியிந்த மூன்றி னாலும்
சற்சங்க மனதிலுண்மை யறிவுதித்தல் சத்துவா பத்தி தானே

துர் (மூட) சங்க நிவர்த்தி வந்து சிவ (பிரம) ஞானம் விரும்புவது சுபேச்சையாகும்.

நற்சங்க (சாது சங்க) மொழி வினவி ஞானநூல் பழகல் (வேதாந்த சாஸ்திரம் அப்பியாசித்தல்) விசாரணையாம்.

(விசாரணையில் வெளிப்படுவதை) நம்பி முற்சங்க வேடனைகள் (காமாதி வாசனைகளான இச்சைகளை) விடல் தநுமானசி (நினைவு குவிந்து மனம் சிறுகல்).

இந்த மூன்றினாலும் சற்சங்க (வைராக்கியம் முதலான நல்ல குணங்களை பழகிய) மனதில் உண்மை அறிவுதித்தல் (சத் சித் ஆநந்தம் சொரூபமே நான் எனும் அபரோட்ச ஞானம் உதித்தல்) சத்துவா பத்தி தானே.
--
அடுத்து ஞான நிலைகளை பாக்கலாமா?
இதில வர பெயர்கள் அஞ்ஞான பூமிகள் பெயர் மாதிரி சுலபம் இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து நினைவு கொள்ளணும்.
1. சுபேச்சை முதலாவது. தேர்தல்ல சுயேட்சை கேள்விப்பட்டு இருக்கோம். இது என்ன சுபேச்சை?
சுப இச்சை= சுபம் என்பது இங்கு பிரம்ம ஞானத்தால் அடையும் மோக்ஷம். இச்சை விரும்புவது. நம்ம பூர்வ ஜன்ம புண்ணியம் - திடுதிப்புன்னு ஒரு நாள் ஒரு நினைப்பு தோணுது; “அடடா! நாம் மூடத்தனமாக இந்த அநித்திய உலகையும் இதில் உள்ள போகத்தையும் நம்பி பிறப்பிறப்பாகிய பெரிய துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே.” என்ற உணர்வு வந்து, "சே! இனியாவது எல்லா கர்மங்களையும் நிவர்த்தி செய்து எப்படியாவது மோக்ஷமடைய வேண்டும் என திட வைராக்கியம் கொள்வதே சுபேச்சை.

2. அப்படி ஆன பின் குரு, பெரியோர் இவர்களை அடைந்து சாத்திர விசாரணை செய்து ஞானத்தை அடைய அப்யாசித்தல் விசாரணை. இது இரண்டாவது.

3. சாத்திர ஆராய்ச்சியாலும், குருவிடம் கேள்வி கேட்டதாலும் உண்டான பலத்தால் பிரபஞ்சம் அநித்தியம் என்ற உண்மை தோன்றி; மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றில் உள்ள ஆசையை அறவே விடல் தநுமானசி. இது மூன்றாவது நிலை. திடுதிப்புன்னு விட முடியுமா? முதல்ல தனக்கு என்கிற ஆசைகளை ஒழிச்சு, அப்புறம் தன் குடும்பத்துக்கு, தன் உறவினர்களுக்கு, ஊருக்கு ன்னு இது வேணும், அது வேணும் என்கிறதை எல்லாம் விட்டு ஒழிக்கணும்.

4. மேற் கூறிய 3 பூமிகளின் அப்பியாச வலிமையால் சத்துவ வாசனை உடைய மனதினிடத்தில் உண்மை அறிவு உதித்தல் சத்துவாபத்தி. (சத்வ உபத்தி). அதாவது பிரபஞ்சம் கனவு போன்றது நிரந்தரம் இல்லைன்னு உணர்ந்து சத் ரூப பிரம்மமே தான் என அறிந்து பிரம்ம சாக்ஷாத்காரம் அடைய அப்பியாசித்தல்.