Pages

Thursday, September 24, 2009

சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா!



142
வீயாத சத்துமுன்னம் விளங்குவது தன்னாலோ வேறொன்றாலோ
வாயால்வே றெனிலதுவு மசத்தோசத் தோவசத்தேன் மலடி மைந்தன்
பேயாகா ரியஞ்செயுமோ சத்தெனவிப் படியதையும் பிரித்துச்சொன்னால்
ஓயாத வவத்தையாங் குதர்க்கவிகற் பங்களைவிட் டொழித்திடாயே.

வீயாத (மூன்று காலங்களிலும் நசியாத) சத்து முன்னம் (ஆதியில்) விளங்குவது (பிரகாசிப்பது) தன்னாலோ? வேறொன்றாலோ?
வாயால் வேறு எனில் அதுவும் அசத்தோ? சத்தோ? அசத்தேல் (அசத்து எனில்) மலடி மைந்தன் பேயா(க) காரியஞ் செயுமோ? சத்தென இப்படி அதையும் பிரித்து (வேறொன்றாக) சொன்னால், ஓயாத வவத்தையாம் (அனவஸ்தா தோஷம் உண்டாகும். ஒரு தீபம் மற்றொரு தீபத்தினால் பிரகாசிக்கிறது எனில் அந்த வேறொரு தீபம் எப்படி பிரகாசிபிக்கிறது? அது மற்றொரு தீபத்தினால் பிரகாசம் பெற்று பிரகாசிபிக்கிறது என வரிசையாக முடிவில்லாமல் போகும்) குதர்க்க விகற்பங்களை (வேறுபாடுகளை) விட்டொழித்திடாயே.
--
சத் எப்போதுமே இருந்து விளங்குகிறது. அதை விளக்க வேற ஒண்ணம் வேண்டாம். தேவை ன்னுஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டால் அதை விளங்கச்செய்வது எது? இன்னொரு சத்தா? அசத்தா?
அசத்து சத்தை விளங்கச் செய்ய முடியாது. அதாவது இல்லாத ஒண்ணு இருக்கிறதை சுட்டிக்காட்ட முடியாது.
சத்தா இருந்தால் அந்த சத்தை எது விளங்கச்செய்வது? இன்னொரு சத்து. அதை விளங்கச்செய்வது? இப்படி முடிவில்லாத கேள்விகள் எழும். அதனால அது தவறு.

143.
சுருதியுத்தி யொத்ததுபோல நுபவமுங் கேள்சுழுத்திச் சுகவாநந்தம்
மிருதிவடி வாதலிலவ் வாநந்த மேயறிவாம் வேறங் கில்லை
கருதுபிர ளயஞ்சுழுத்தி யிரண்டிலுநீ யிருந்திருளைக் காண்கிறாயே
இருதயத்திப் படிநோக்கி யேக பரிபூரணமா யிருந்தி டாயே

சுருதி யுத்தி ஒத்தது போல் அநுபவமும் (அநுபவ பிரமாணமும்) கேள். சுழுத்தி சுகவாநந்தம் (ஆனது) ஸ்மிருதி (நினைப்பு) வடிவு. (நித்திரையில் அஞ்ஞானத்தை அறிந்து ஒன்றையும் அறியாதிருந்தேன் என்ற நினைப்பு வெளிப்படுமாதலால்) ஆதலில் அவ்வாநந்தமே அறிவாம். வேறு அங்கில்லை. கருது[கின்ற] பிரளயம் சுழுத்தி இரண்டிலும் (2 அவஸ்தையிலும்) நீ [சத்தாக] இருந்து இருளைக் காண்கிறாயே. [ஆகவே சித்தான ஆநந்தமே சத்து] இருதயத்து இப்படி நோக்கி ஏக பரிபூரணமாய் இருந்திடாயே.
--
சுழுத்தியிலும் பிரலயத்திலும் ஆநந்தமே அஞ்ஞானத்தை அறிகிறது. அறிவது அதுவே ஆகையால் அதுவே சித்து. இருந்தே அறிய வேண்டுமாதலால் அதுவே சத்து.

அனுபவத்தால அறிந்து கொள்ள வழி சொல்கிறார்.
நல்லா தூங்கி சுழுத்தில ஆனந்தம் அனுபவிக்கிறோம். தூங்கி எழுந்ததும் ஆனந்தமா தூங்கினதா நினைக்கிறோம். இப்படியா ஆனந்தம் அறிவா ஆயிடுத்து. அதெப்படி ன்னா சுழுத்தில ஆனந்தத்தைத்தவிர விளக்கி வைக்க ஒண்ணும் இல்லையே.
அப்படி உணர்ந்ததும் நாமே. பின்னால் அதை நினைப்பதும் நாமே. அப்படின்னா இருப்பு அப்பவும் இருந்தது. இப்பவும் இருக்கு. ஆக சத் இருக்கு. ஆக நாம் சத் சித் ஆனந்தம். இந்த சத் சித் ஆனந்தமே பிரம்மம் என்பதால நாம் பிரம்மம்.
ஜாக்ரத்திலேயும் இதே போல சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா என்கிறார்.
அதாவது விழிப்பிலேயும் சுழுத்தில இருக்கிறாப்போல அகண்ட பரிபூரணமாக இருப்பாயாக என்கிறார்.


4 comments:

yrskbalu said...

ஜாக்ரத்திலேயும் இதே போல சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா

can some one comment - how we will do in our day to day life?

Geetha Sambasivam said...

அதானே, பாலு கேட்டிருக்கிறது தான் எனக்கும் தோணுது, விழிப்பிலேயும் எப்படி முடியும்??? குழப்பம் தான்! :(


ஒரு வழியா எல்லாத்தையும் படிச்சுட்டேன். புரிஞ்சுதா??? தெரியலை, திரும்பத் திரும்பப் படிக்கணும்! :(((((((

கிருஷ்ண மூர்த்தி S said...

வெல்லம் இனிக்கும், பாகற்காய் கசக்கும் என்பது அனுபவ ஞானம்.ஒவ்வொரு தடவையும் சாப்பிட்டுத் தான் தெரிஞ்சுக்கணும்னு இல்லே.

அது மாதிரி, உள்ளது எதுன்னு, விகாரமில்லாமல் இருப்பது எதுன்னு தெரிஞ்சுண்ட பின்னாடி,அதன் உண்மையான ஸ்வரூபத்திலேயே பார்க்கவும் தெரியணும்!

அம்புட்டுத்தேன்:-))

திவாண்ணா said...

கி.மூ சார் சொல்கிறது சரிதான். அனுபவத்திலேதான் பல விஷயங்கள் புரியும். இப்ப சும்மா தியரி கேட்டு வெச்சுக்கலாம். அவ்வளவே!